திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்: பத்மவாசன்

 பாகம் 38

அதிகாரங்கள் 51, 52  தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல்

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 

நாணுடையான் கட்டே தெளிவு.

நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கி பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற ஞானம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

 (அநிருத்த பிரம்மராயருக்கும் ஆழ்வார்க்கடியானுக்கும் இடையேயான உரையாடல்...)

”வடவேங்கடத்திலிருந்து வரும் வழியில் வீர நாராயணப் பெருமாள் சன்னிதியில் ஆழ்வார் பாசுரங்கள் சிலவற்றைப் பாடினேன். அந்தச் சன்னிதியில் கைங்கரியம் செய்யும் ஈசுவரபட்டர் என்னும் பெரியவர் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார்...”

       "ஈசவரபட்டர் மகா பக்திமான்; நல்ல சிஷ்டர்."

      "அவருடைய இளம் புதல்வன் ஒருவனும் அவர் அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்தான். அந்த இளம் பாலகனின் பால்வடியும் முகம் ஆழ்வார் பாசுரத்தைக் கேட்டுப் பூரண சந்திரனைப்போல் பிரகாசித்தது. 'மற்றப் பாடல்களும் தெரியுமா? என்று அந்தச் சின்னஞ்சிறு பிள்ளை பால் மணம் மாறாத வாயினால் கேட்டான். 'தெரியாது' என்று சொல்ல எனக்கு வெட்கமாயிருந்தது. ஆழ்வார்களின் தொண்டுக்கே ஏன் இந்த நாயேனை அர்ப்பணம் செய்து விடக்கூடாது என்று அப்போதே தோன்றியது. இன்றைக்கு அந்த எண்ணம் உறுதிப்பட்டு விட்டது...”

      “அவரவர்களும் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கீதாச்சாரியார் அருள்புரிந்திருக்கிறார். அல்லவோ?"    

     "ஆம். குருவே!"

     "ஆழ்வார்களின் பாசுரங்களைச் சேகரிப்பதற்கும் பரப்புவதற்கும் மகான்கள் அவதரிப்பார்கள். அதுபோலவே ஆழ்வார்களுடைய பாடல்களில் உள்ள வேத சாரமான தத்துவங்களை நிரூபணம் செய்து, வடமொழியின் மூலம் பரத கண்டமெங்கும் நிலை நாட்டக்கூடிய அவதார மூர்த்திகளும் இந்நாட்டில் ஐனிப்பார்கள். நீயும் நானும் இராஜ்ய சேவையை நமது ஸ்வதர்மமாகக் கொண்டவர்கள். சோழ சக்கரவர்த்தியின் சேவையில் உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்வதாக நாம் சபதம் செய்திருப்பதை மறந்தனையா?."

"மறக்கவில்லை, குருவே! ஆனால் அது உசிதமா என்ற சந்தேகம் தோன்றி என் உள்ளத்தை அரித்து வருகிறது. முக்கியமாக, தங்களைப் பற்றிச் சில இடங்களில் பேசிக் கொள்வதைக் கேட்டால்..."

    "என்ன பேசிக்கொள்கிறார்கள்?"

       "தங்களுக்குச் சக்கரவர்த்தி பத்து வேலி நிலம் மானியம் விட்டு அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்தி ருப்பதால் தாங்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தை விட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். ஜாதிதர்மத்தைப் புறக்கணித்துக் கப்பல் பிரயாணம் செய்ததாகவும் கூறுகிறார்கள்...."

       ''அந்தப் பொறாமைக்காரர்கள் சொல்வதை நீ பொருட்படுத்த வேண்டாம். சக்கரவர்த்தி எனக்குப் பத்து வேலி நிலம் மானியம் கொடுத்திருப்பது உண்மைதான். அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு நாலு வருஷங்களுக்கு முன்பே சக்கரவர்த்திக்கு நான் மந்திரியானேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?"

ஆழ்வார்க்கடியான் மௌனமாயிருந்தான்!

          "சக்கரவர்த்திக்கும் எனக்கும் எப்போது நட்பு ஏற்பட்டது. என்றாவது உனக்குத் தெரியுமா? நாங்கள் இருவரும் இளம் பிராயத்தில் ஒரே ஆசிரியரிடம் பாடங்கற்றோம். செந்தமிழும் வடமொழியும் பயின்றோம். கணிதம், வான சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் எல்லாம் படித்தோம். அப்போதெல்லாம் சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறப் போகிறார் என்று யாரும் கனவிலும் எண்ணிய தில்லை. அவராவது, நானாவது அதைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. இராஜாதித்தரும் கண்டராதித்தரும் காலமாகி அரிஞ்சய சோழர் பட்டத்துக்கு வருவார் என்று யார் நினைத்தது? அரிஞ்சயருக்கு அவ்வளவு விரைவில் துர்மரணம் சம்பவித்துச் சுந்தர சோழர் பட்டத்துக்கு வரும்படியிருக்கும் என்றுதான் யார் நினைத்தார்கள்? சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறியபோது அதனால் பல சிக்கல்கள் விளையும் என்று எதிர்பார்த்தார். உடனிருந்து நான் உதவுவதாயிருந்தால் பட்டத்தை ஒப்புக் கொள்வதாகவும் இல்லாவிட்டால் மறுத்து விடுவதாகவும் கூறினார். இராஜ்ய நிர்வாகத்தில் அவருக்கு உதவுவதாக அப்போது வாக்களித்தேன். அந்த வாக்குறுதியை இன்றளவும் நிறைவேற்றி வருகிறேன். இதெல்லாம் உனக்குத் தெரியாதா. திருமலை"

      "எனக்குத் தெரியும், குருதேவா! என் ஒருவனுக்கு மட்டும் தெரிந்து என்ன பயன்? ஜனங்களுக்குத் தெரியாதுதானே? நாட்டிலும் நகரத்திலும் வம்பு பேசுகிறவர்களுக்குத் தெரியாதுதானே"

         " வம்பு பேசுவது பற்றி நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம்...

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும் 

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்பும் இயல்புடையவர்கள் எப்பணியினையும் ஆற்றிடத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

 (அநிருத்த பிரம்மராயருக்கும் குந்தவைக்கும் இடையேயான உரையாடல்...)

"இறந்து போனவளின் ஆவி வந்து தந்தையைத் தொந்தரவுபடுத்துவது சித்தப் பிரமையாயிருக்கலாம் என்று நினைத்தேன். பிறகு யோசித்துப் பார்க்கப் பார்க்க வேறு சில ஐயங்கள் உண்டாயின. வானதி ஒரு நாள் இரவு, சக்கரவர்த்தியின் கூக்குரலைக் கேட்டுப் போய்ப் பார்த்தாள். பழுவூர் இளையராணி மாதிரி ஓர் உருவம் மன்னரின் எதிரில் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு மூர்ச்சித்து விழுந்தாள். அதுமுதல் அந்தக் கரையர் மகளுக்கும், இந்தப் பழுவூர் இளையராணிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. வல்லவரையரும், அருள்மொழியும் கூறியதிலிருந்து அது உறுதியாயிற்று. ஐயா! நந்தினி தேவி ஒருவேளை அந்த கரையர் மகளின் புதல்வியாயிருக்க முடியுமா?"

"தங்களைப் போலவே நானும் ஊகிக்கத்தான் முடியும், தாயே! உருவ ஒற்றுமையைப் பார்த்தால் அப்படித்தான் கருதவேண்டியிருக்கிறது. ஆனால், அதிலிருந்து மட்டும் நிச்சயிக்க முடியுமா? ஒரு வேளை கரையர் மகளின் கடைசித் தங்கையாகக் கூட நந்தினிதேவி இருக்கலாம். இதையெல்லாம் பற்றி நிச்சயமாகத் தெரிந்தவர்கள் இப்போது மூன்று பேர்தான் இருக்கிறார்கள்.."

      "அவர்கள் யார், சுவாமி!"

        “ஒருவர்தான் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி. அவருடைய உள்ளத்தில் ஏதோ ஒரு இரகசியம் இருந்து வேதனை செய்து வருகிறது. ஆனால், அது இன்ன தென்பதை அவராகச் சொன்னாலொழிய, நாம் கேட்டுத் தெர்ந்துகொள்ள இயலாது. மகானாகிய கண்டராதித்தர் காலமாகும் தருவாயில் பெரிய பிராட்டி அதை அவரிடம் கூறினார் என்பது எனக்குத் தெரியும். கண்டராதித்தர் என்னிடம் சொல்லத் தொடங்கினார். இரண்டு வார்த்தை சொல்லதற்குள் அவருடைய மூச்சு நின்றுவிட்டது..."

     "மற்ற இருவரும் யார், ஐயா?"

          "மற்ற இருவரும் பேசத் தெரியாத ஊமைகள். சேந்தன் அமுதனின் அன்னையும், பெரியன்னையுந்தான். இவர்களில் அமுதனுடைய அன்னையிடமிருந்து நாம் ஒன்றும் தெரிந்துகொள்ள இயலாது. செம்பியன் மாதேவியிடம் அவள் அளவிலாத பக்தி உள்ளவள். அந்தத் தேவி உயிரோடிருக்கும் வரையில் இவள் ஒன்றும் தெரிவிக்க மாட்டாள். ஆகையினால் தான் அவளுடைய தமக்கை மந்தாகினியை ஈழநாட்டிலிருந்து அழைத்து வருவதற்கு நான் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன்..."

       "ஆகா! அந்தக் கரையர் மகளின் பெயர் மந்தாகினியா? அவள் உயிரோடிருப்பது தங்களுக்கு எப்போது தெரிந்தது. 

            "தேவி! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக

எனக்குத் தெரிந்த விஷயந்தான்." 

           "இருபத்தைந்து வருஷங்களாகத் தெரிந்துமா என் தந்தையிடம் தாங்கள் சொல்லவில்லை? ஐயா! அவள் இறந்துவிட்டாள் என்ற எண்ணத்தினால் என் தந்தை எத்தனை மனோவேதனைக்கு உள்ளானார் என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியாதா?"

"தெரியும் தாயே! தெரியும்."

"தெரிந்துமா அவரிடம் உண்மையைச் சொல்லா திருந்தீர்கள்?”

       அநிருத்தர் ஒரு நெடிய பெருமூச்சுவிட்டார். அவர் உள்ளத்தில் ஒரு போராட்டம் நிகழ்ந்தது என்பதை அவருடைய முகம் எடுத்துக்காட்டியது. பின்னர் அவர் கூறினார்:-

           "தேவி! இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நான் ஒரு குற்றம் செய்தேன். முதன்முதலாக அதை இப்போது தங்களிடந்தான் சொல்லுகிறேன். கரையர் மகளைத் தேடி வரும்படி தங்கள் தந்தை என்னை அனுப்பினார் அல்லவா? விரைவாகக் குதிரைமீது செல்லும் ஆட்களுடன் நானும் போனேன். கோடிக்கரை போய்ச் சேர்ந்தோம். அங்கே கொந்தளித்துக்கொண்டிருந்த கடலில் அவள் கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து விழுந்துவிட்டாள் என்பதை அறிந்தோம். அந்தப் பயங்கரக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள். தியாகவிடங்கரே நடுங்கிய குரலில் நாக்குழறக் கூறினார். அதைத்தான் நானும் தஞ்சாவூருக்கு வந்து என் நண்பரிடம் தெரிவித்தேன்.."

       "இதில் தங்கள் குற்றம் என்ன, ஐயா?" என்றாள் குந்தவை.

         "குற்றம் இதுதான்: கரையர் மகள் கடலில் விழுந்தாளே தவிர, அதிலே முழுகிச் சாகவில்லை. அந்தக் கொந்தளித்த கடலில் படகு விட்டுக்கொண்டு வந்த வலைஞன் ஒருவன் அவளைக் கண்டெடுத்துப் படகில் ஏற்றிக் காப்பாற்றி விட்டான். கோடிக்கரைக்கு வெகு தூரத்துக்கு அப்பால் அவள் வந்து கரையேறினான். திரும்பி வரும் வழியில் நான் அந்தக் கரையேறும் படகைப் பார்த்தேன். அதில் இருந்த பெண் யார் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்தப் படகுக்காரனிடம் நிறையப் பணம் கொடுத்து அவளைப் பத்திரமாக இலங்கைக்குக் கொண்டு போய்ச்சேர்க்கும்படியும் அங்கேயே இருக்கும்படியும் கூறினேன். அவனும் சம்மதித்துச் சென்றான். நான் திரும்பித் தஞ்சைக்கு வந்து கரையரின் மகள் கடலில் விழுந்து மாண்டுவிட்டதாகக் கூறினேன். தங்கள் தந்தைக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டுதான் மனமறிந்து அத்தகைய குற்றத்தைச் செய்தேன்...

 நலம் புரிந்த தன்மையால் ஆளப்படும்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com