திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்; பத்மவாசன்

பாகம் - 34

திருக்குறளின் 43 ஆம் அதிகாரம் அறிவுடைமை.

சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ

நன்றின்பா லுய்ப்ப தறிவு

மனம் போகும் வழியெல்லாம் போகவிடாமல் தீய வழிகளை தள்ளிவிட்டு நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

 (பொக்கிஷ நிலவறையில் வந்தியத்தேவன்) 

           "அது ஒரு விசாலமான மண்டபம். கல்லைக் குடைந்து எடுத்து அமைத்த நிலவறை மண்டபம். அதனாலேதான் தலையை இடித்து விடும்போல் அவ்வளவு தாழ்வான சம மட்டமான மேல் தளம் அமைந்திருக்கிறது. அந்த நிலவறையில் குடிகொண்டுள்ள மங்கிய நிலவொளி யானது வெளியிலிருந்து வருவது அல்ல; கூரை வழியாகவோ, பலகணி வழியாகவோ வருவதும் அல்ல. அங்கங்கே அந்த நிலவறையில் குப்பல் குப்பலாகவும் சிலவிடங்களில் பரவலாகவும் கிடக்கும் பொருள் களிலிருந்து வருகிறது. ஆ! அப்படி நிலவொளி வீசும் அப்பொருள்கள் எத்தகைய பொருள்கள்! ஒரு மூலையில் மணி மகுடங்கள்; முத்தும் மணியும் வைரமும் பதித்த மகுடங்கள்; இன்னொரு பக்கத்தில் ஹாரங்கள்; முத்து வடங்கள்; நவரத்தின மாலைகள் அதோ அந்த வாயகன்ற அண்டாவில் என்ன? கடவுளே! அவ்வளவும் புன்னை மொட்டுக்களைப் போன்ற வெண் முத்துக்கள்! குண்டு குண்டான கெட்டி முத்துக்கள்! அதோ அந்தப் பானையில் பளபளவென்று மஞ்சள் வெயில் வீசும் பொற்காசுகள். இதோ இங்கே குவிந்து கிடப்பவை தங்கக் கட்டிகள். தஞ்சை அரண்மனையின் நிலவறைப் பொக்கிஷம் இதுதான் போலும்! தனாதிகாரி பழுவேட்டரையரின் மாளிகையையொட்டி இந்த இருள் மாளிகையும் அதில் இந்தப் பொக்கிஷ நிலவறையும் இருப்பதில் வியப்பில்லையல்லவா? அம்மம்மா! இந்த நிலவறைக்குள் நாம் வந்துசேர்ந்தோமே? இந்த நம்முடைய பாக்கியமேயல்லவா? பாக்கியலக்ஷ்மியும் அதிர்ஷ்ட தேவதையும் சேர்ந்தல்லவா நம்மை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள்? எப்படிப்பட்ட அதிசயமான, அபூர்வமான இரகசியத்தை, நம்முடைய முயற்சி ஒன்றும் இல்லாமலே நாம் தெரிந்துகொண்டோம்! இதை எப்படிப் பயன்படுத்துவது? பயன்படுத்துவது அப்புறம் இருக்கட்டும்; இங்கிருந்து போவதற்கே மனம் வராது போலிருக்கிறதே! இங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கலாம் போலத் தோன்றுகிறதே! இங்கேயே இருந்தால் பசி, தாகம் தெரியாது! உறக்கம் அருகிலும் அணுகாது! நூறு வருஷ காலமாகச் சோழ நாட்டு வீரச் சைன்யங்கள் அடைந்த வெற்றிகளின் பலன்கள் எல்லாம் இங்கே இருக்கின்றன. நவநிதி என்று சொல்வார்களே! அவ்வளவும் இங்கே இருக்கிறது! குபேரனுடைய பொக்கிஷத்தையும் தோற்கடிக்கும் செல்வக் களஞ்சியம் இங்கே இருக்கிறது! இதைவிட்டு எதற்காகப் போகவேண்டும்!.

(முத்தும் மணியம் வைரங்கள் மற்றும் நவரத்தினங்களைக் கண்டு மேற்கூறியபடி எல்லாம் அலைந்த மனதை கடிவாளம் இட்டு திருப்பிய வந்திய தேவன் பிறகு சிந்திப்பதை பாருங்கள்...) 

            "மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளின் இயல்பையும் இன்று ஒரே நாளில் நாம் அநுபவித்தாகிவிட்டது. நந்தினி என்னும் பழுவூர் இளைய ராணி தன்னுடைய வலையில் நம்மை அகப்படுத்தப் பார்த்தாள். பழைய வாணர் குல ராஜ்யத்தை அடையலாம் என்னும் மண்ணாசையும் காட்டினாள். கடைசியாக, இங்கே இந்தப் பயங்கரமான பொன்னாசைப் பூதம் நம்மை அடியோடு விழுங்கப் பார்க்கிறது. முதல் இரண்டிலிருந்தும் தப்பினோம். இந்த மூன்றாவது அபாயத்திலிருந்தும் தப்ப வேண்டும். நமக்கு எதற்காக இந்த வம்பெல்லாம்? இராஜ்யம் எதற்கு? செல்வம் எதற்கு? பெண்களின் கூட்டுறவுதான் எதற்கு? 

         "ஊர்ஊராகப் போகவேண்டியது; புது வெள்ளம் பொங்கிவரும் நதிகளையும், புதிய இலைகள் தளிர்த்து விளங்கும் மரங்களையும், பல வர்ணப்பட்சிகளையும், மான்களையும், மயில்களையும், மலைகளையும் மலைச் சிகரங்களையும், வானத்தையும் மேகத்தையும், கடலையும் கடல் அலைகளையும் பார்த்துக் களிக்க வேண்டியது; பசிக்கு உணவு கிடைக்கும் இடத்தில் உண்ண வேண்டியது! உறக்கம் வந்த இடத்தில் உறங்க வேண்டியது! ஆகா! இதுவல்லவா இன்ப வாழ்க்கை! எளிதில் கிடைக்கக்கூடிய இத்தகைய ஆனந்த வாழ்க்கையை விட்டுவிட்டு, தொல்லைகளும், சூழ்ச்சிகளும், ஆசைகளும், அபாயங்களும் நிறைந்த வாழ்க்கையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? எப்படியாவது இந்த நிலவறையை விட்டு இப்போது வெளியேறிவிட்டால் போதும்; பிறகு இந்த இருள் மாளிகையையும் இந்தத் தஞ்சாவூர்க் கோட்டையையும் விட்டு வெளியேறிவிட வேண்டும். பின்னர் இத்தகைய தொல்லைகளில் அகப்பட்டுக் கொள்ளவே கூடாது...."

       (நம் பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கி அவர்கள் பல இடங்களில் மிகச் சிறப்பாக பல  திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதி இருப்பார். அப்படி அவரே மேற்கோள் காட்டிய திருக்குறளுடன் புதினத்தின் ஒரு காட்சி... பாட்டனுக்கும் (மலையமான்) பேரனுக்குமான( ஆதித்த கரிகாலன்) உரையாடல்...) 

         "கரிகாலா! நீ வீராதி வீரன். உன்னைப் போன்ற பராக்கிரமசாலி இந்த வீரத் தமிழகத்திலேகூட அதிகம் பேர் பிறந்ததில்லை. என்னுடைய எண்பது பிராயத்துக்குள் நானும் எத்தனையோ பெரிய யுத்தகளங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதிரிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே புகுந்து சென்று உன்னைப்போல் சண்டையிட்ட இன்னொரு வீரனைப் பார்த்ததில்லை. சேவூர்ப் பெரும்போர் நடந்தபோது உனக்குப்  பிராயம் பதினாறுகூட ஆகவில்லை. அந்த வயதில் பகைவர் களின் கூட்டத்தில் புகுந்து சென்ற வேகத்தையும், இடசாரி வலசாரியாக உன் வாள் சுழன்ற வேகத்தையும், பகைவர்களின் தலைகள் உருண்ட வேகத்தையும்போல் நான் என்றும் பார்த்த தில்லை. இன்னும் என் கண் முன்னால் அந்தக் காட்சி நின்று கொண்டிருக்கிறது. உன்னைப் போலவே உன் சிநேகிதன் பார்த்திபேந்திரனும் வீராதிவீரன்தான். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் பதட்டக்காரர்கள்; முன்கோபம் உள்ளவர்கள். அதனால் உங்களுக்கு யோசிக்கும் சக்தி குறைந்துவிடுகிறது. எது செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறான காரியத்தைச் செய்யத் தோன்றிவிடுகிறது..." 

"தாத்தா! இம்மாதிரி உபதேசம் தாங்கள் இதற்குமுன் எத்தனையோ தடவை செய்திருக்கிறீர்கள்..." 

        "செய்திருக்கிறேன்; ஆனால் ஒன்றும் பயன்படவில்லை என்கிறாயா? பேசாமல் என்னை ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லுகிறாயா?"

       "இல்லை, இல்லை! இப்போது நடக்கவேண்டிய காரியம் என்னவென்று சொல்லுங்கள்.'' 

        "உன் சகோதரன் அருள்மொழியை உடனே இவ்விடத்துக்கு அழைத்துக்கொள்ள வேண்டும். நீயும் உன் சகோதரனும் பிரிந்திருக்கவே கூடாது..." 

         ''தாத்தா! இது என்ன யோசனை? அருள்மொழி இங்கு வந்துவிட்டால் இலங்கை யுத்தம் என்ன ஆகிறது?"

         "இலங்கை யுத்தம் இப்போது ஒரு கட்டத்திற்கு வந்திருக்கிறது. அநுராதபுரத்தைப் பிடித்தாகிவிட்டது. இனி அங்கே மழைக்காலம். இனி நாலு மாதத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது.பிடித்த இடத்தை விட்டுக்கொடாமல் பாதுகாத்து வரவேண்டியதுதான். இதை மற்றத் தளபதிகள் செய்வார்கள். அருள்மொழி இச்சமயம் இங்கே இருக்கவேண்டியது மிகவும் அவசியம். கரிகாலா! உண்மையை மூடிமூடி வைப்பதில் பயன் என்ன? விஜயாலய சோழரின் குலத்துக்கும் அவர் அடிகோலிய சோழ சாம்ராஜ்யத்துக்கும் பேராபத்து வந்திருக்கிறது. நீயும் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது ஒரே இடத்தில் தங்கி சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நம்முடைய பலத்தையெல்லாம் திரட்டி வைத்துக்கொள்ளவும் வேண்டும். எப்போது என்ன விதமான அபாயம் வரும் என்று சொல்ல முடியாது..."   

       "தாத்தா! இது என்ன? இப்படி என்னை பயமுறுத்து கிறீர்கள்? என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம்? எப்படிப்பட்ட அபாயம் வந்தால்தான் என்ன? தன்னத் தனியாக நின்று சமாளிப்பேன். எத்தகைய அபாயத்துக்கும் நான் பயப்படுகிறவன் அல்ல..." 

    ''பிள்ளாய்!  நீ எப்படிப்பட்ட தைரியசாலி என்று எனக்குச் சொல்ல வேண்டுமா?ஆயினும் திருவள்ளுவர் பெருமான் சொல்லியிருப்பதையும் சில சமயம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

            'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது 

            அஞ்சல் அறிவார் தொழில்!"

என்று மகான் சொல்லியிருக்கிறார். போர்க்களத்தில் பகைவர்களுக்கு எதிரெதிரே நின்று போரிடும்போது அச்சம் கூடாது. பயப்படுகிறவன் கோழை. அவ்விதம் பயப்படுகிற பிள்ளை பிறந்தால் அவனை நானே இந்தக் கிழடாய்ப்போன வலுவிழந்த கையினால் வெட்டிப் போட்டு விடுவேன். ஆனால் மறைவில் நடக்கிற சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் கண்ணுக்குத் தெரியாத அபாயங்களுக்கும் பயப்பட்டேயாக வேண்டும். பயப்பட்டு, அந்தந்த நிலைமைக்குத் முன் ஜாக்கிரதையும் செய்துகொள்ள வேண்டும்.

அரச குலத்தில் பிறந்து சிம்மாசனத்துக்கு உரியவர்கள், இது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. இருந்தால் நாட்டுக்கே நாசம் விளையும்."

 "அஞ்சுவது அஞ்சல்..."  இன்று நமக்கும் பொருந்தும்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com