திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

பாகம் - 27

ஓவியம்: பத்மவாசன்

நான்முகனார் திருக்குறளின் 29 மற்றும் 30ஆம் அதிகாரங்கள் கள்ளாமை, வாய்மை.

நண்பர்களே உங்களுக்கெல்லாம் ஒரு பழைய பழமொழி தெரியும்...
‘ஆமை புகுந்த வீடு...’ வேண்டாத ஆமைகள் பல உண்டு.
அவை கல்லாமை, இயலாமை, முயலாமை போன்றவை.
அதேசமயம் வேண்டிய ஆமைகளும் பல உண்டு! கள்ளாமை, வாய்மை, வெகுளாமை. எனவே, வீட்டினுள் புகும் ஆமைகளைப் பொறுத்துத்தான் அவ்வீட்டின் நிலையைக் கணிக்க முடியும்.

        ஆக மொத்தம் நிலையாமை எனும் ஆமை மேல் அமர்ந்திருக்கிறோம். நிதானமாகச் சிந்தித்து, எந்தெந்த ஆமைகள் வேண்டும்; எவை வேண்டாம் என முடிவு செய்ய வேண்டியது நாம்தான் நண்பர்களே...

எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு 

பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன் எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன்நெஞ்சைக் காக்க வேண்டும் .

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்

தீமை  இலாத சொலல் 

வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவருக்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச்  சொல்லுவதே ஆகும்.

        ராந்தகச் சக்கரவர்த்தி ராஜ்யத்துக்கு நேர்ந்த பல விபத்துக்களினாலும் மூத்த புதல்வன் இராஜாதித்தரின் போர்முனை  மரணத்தினாலும் மனம் நொந்து மரணத்தை எதிர்பார்த்திருந்த வேளையில், இராஜ்யபாரத்தை தனது இரண்டாவது புதல்வரான சிவநேசச் செல்வரான கண்டராதித்த சக்கரவர்த்தியிடம் ஒப்படைக்க, மரணத் தருவாயில் இருக்கும் தன் தந்தை மனம் புண்படாமல் இருக்க, ராஜ்யத்தை ஏற்றுக்கொள்கிறார் கண்டராதித்தர். பராந்தகச் சக்ரவர்த்தி தனது இளைய மகன் அருஞ்சயச் சோழரின் மகன்  சுந்தரசோழர் மேல் அளவில்லாத பிரியம் வைத்திருந்தார். பெரியோர் பலர் சுந்தரசோழரின் மூலமாய் சோழர் குலம் மகோன்னதம் அடையப்போகிறது என்று சொல்லி இருந்ததை நினைவில் கொண்டு, தனது பேரன் குழந்தையாயிருந்த நாளிலிருந்தே மடியில் வைத்து தாலாட்டி, பாராட்டி வளர்த்து வந்தார். 

   பராந்தகச் சக்கரவர்த்தி கண்டராதித்தரிடம்  சுந்தர சோழருக்கு இளவரசு பட்டம் கட்டவேண்டும் என்றும், அவருடைய வாரிசுகள்தான் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்றும் சொல்லிவிட்டு சிவப்பதம் அடைந்தார்.

     பராந்தக சக்கரவர்த்தியின் விருப்பப்படியே சுந்தரசோழர் சோழ சாம்ராஜ்ய சிம்மாசனத்தில் அமர, இப்போது  அந்த ஒரே ஒரு சிம்மாசனம் பாட்டனாரின் விருப்பப்படியும் சோழ சாம்ராஜ்ய மக்களின் ஆசைபடியும் ஆதித்த கரிகாலனுக்கும் அருள்மொழிவர்மனுக்காகவும் காத்திருக்க... 

கண்டராத்தரின் புதல்வர் மதுராந்தகர்  சிவபக்தியில் வளர்க்கப்பட்டு, சிவநெறியில் திளைத்து வாழ்ந்து வர, அவரின் மனதை பலரும் குழப்பி விட, அந்த ஒரே ஒரு ராஜ சிம்மாசனத்தின் மேல் மதுராந்தகருக்கும் ஆசை திரும்ப...

(இப்போது செம்பியன் மாதேவியாருக்கும் மதுராந்தகருக்கும் இடையேயான உரையாடலைக் கேளுங்கள்.  “கள்ளாமைக் காக்கத் தன் நெஞ்சு” மதுராந்தகர் மூலமாயும், “யாதென்றும் தீமையிலாத சொலல்”  செம்பியன் மாதேவியின் சொற்களும் விளக்கும்...)

'அவன் சத்தமிட்டு ஓய்ந்தபிறகு, தன் கண்களைத் திறந்து பார்த்தாள். குரலின் சாந்தத்தில் சிறிதும் மாறுதல் இல்லாமல், "மகனே! சற்று அமைதியாயிரு... நான் வஞ்சக அரக்கியாகவே இருந்தாலும், என் வார்த்தைகளைச் சற்று செவிசாய்த்துக் கேள்!" என்றாள்.

       மதுராந்தகன் அந்தக் குரலைக் கேட்டுச் சிறிது அடங்கினான். "நன்றாய் கேட்கிறேன், கேட்கமாட்டேன் என்று மறுக்கவில்லையே!” என்றான்.

        "தாயின் இயல்பைக் குறித்து நீ குறிப்பிட்டாய், பொல்லாத அரக்கியாயிருந்தாலும் தன் குழந்தைக்குத் துரோகம் செய்யமாட்டாள். துஷ்ட மிருகங்களும் தங்கள் குட்டிகளை மற்ற துஷ்ட மிருகங்களிடமிருந்து காப்பாற்ற முயலுகின்றன. அது போலவேதான் நானும் உன்னைக் காப்பாற்ற முயல்கிறேன். நீ இராஜ்யத்துக்கு ஆசைப்படவேண்டாம் என்று நான் சொல்லுவதற்கு, முன்னே கூறியதைத் தவிர வேறு காரணமும் இருக்கிறது. இராஜ்ய ஆசையினால் உன் உயிருக்கே ஆபத்து வரும். பெற்று வளர்த்த தாய் தன் மகன் உயிரோடிருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் குற்றம் உண்டா? நீ இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டால், சுந்தர சோழரின் புதல்வர்களுக்கு எதிரியாவாய்.

ஆதித்த கரிகாலனும், அருள்மொழிவர்மனும் வீராதி வீரர்கள், நீயோ ஆயுதம் எடுத்து அறியாதவன். சோழ நாட்டுச் சைன்யம் முழுதும் சுந்தர சோழருடைய புதல்வர்களின் கட்சியிலேயே இருக்கும். படைத் தலைவர்களும் அவர்களுக்குச் சார்பாக இருப்பார்கள். அக்கம் பக்கத்து நாடுகளிலும் அவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். உனக்குத் துணைவர்கள் யார்? யாரை நம்பி நீ அவர்களுடன் போர் தொடங்குவாய்? மகனே! சில நாளாக வானத்தில் தூமகேது தோன்றியிருப்பதை நீ அறிவாய். வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் அரச குலத்தினர் உயிருக்கு அபாயம் என்பது உலகம் கண்ட உண்மை. அப்படி நேரும் விபத்து உனக்கு நேராமலிருக்க வேண்டுமே என்றுதான் நான் கவலைப்படுகிறேன். குழந்தாய் என் ஏக புதல்வன் உயிரோடிருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவது தவறா? அது உனக்கு நான் இழைக்கும் துரோகமா?"

      இவ்வார்த்தைகளினால் மதுராந்தகனுடைய ஆத்திரம் சிறிது தணிந்தது. அவன் உள்ளம் கனிவடைந்தது.

         "அன்னையே! மன்னியுங்கள்! தங்களுடைய கவலை இதுதான் என்று முன்னமே சொல்லியிருக்கலாமே? ஒரு நொடியில் தங்கள் கவலையைத் தீர்த்திருப்பேனே! நான் அப்படியொன்றும் துணைவர்கள் இல்லாத அநாதையல்ல. சோழ சாம்ராஜ்யத்தில் மிகச் செல்வாக்கு வாய்ந்த சிற்றரசர்களும், பெருந்தரத்து அதிகாரிகளும் என் பக்கம் இருக்கிறார்கள். பழுவேட்டரையர்கள் என் கட்சியில் இருக்கிறார்கள். கடம்பூர்ச் சம்புவரையர் என் பக்கம் இருக்கிறார். தங்கள் சகோதரரும் என் மாமனுமான மழவரையரும் என் கட்சியில் இருக்கிறார். மற்றும் நீல தங்கரையரும், இரட்டைக்குடை இராஜாளியாரும், குன்றத்தூர்ப்பெருங்கிழாரும் தங்களுடைய பூரண பலத்துடன் என்னை ஆதரிக்கிறார்கள். என்னை ஆதரித்து நிற்பதாகச் சத்தியம் செய்துகொடுத்திருக்கிறார்கள்..."

         "மகனே! இவர்கள் செய்துகொடுக்கும் சத்தியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. சுந்தர சோழச் சக்கரவர்த்திக்கும், அவருடைய சந்ததிகளுக்கும் உண்மையுடன் நடப்பதாக இவர்கள் ஒருகாலத்தில் சத்தியம் செய்து கொடுத்தார்கள். அவர்கள் உனக்கு உண்மையாக நடப்பார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். இவர்களிடம் உள்ள சைன்யம் வெகு சொற்பம் என்பது உனக்குத் தெரியாதா? வடக்கேயுள்ள சைன்யம் ஆதித்த கரிகாலனுடைய தலைமையில் இருக்கிறது. தென்திசைச் சேனையோ கொடும்பாளூர் வேளாரின் தலைமையில் இருக்கிறது..."

       ''தாயே! என் கட்சியை ஆதரிக்கும் சிற்றரசர்கள் எந்த நேரத்திலும் தலைக்குப் பதினாயிரம் வீரர்களைச் சேர்த்துக்கொண்டு வரக்கூடியவர்கள்."

      ''சைன்யம் ஒரு பக்கம் இருக்கட்டும். மக்களைப் பற்றி என்ன? சோழநாட்டு மக்கள் சுந்தர சோழரின் புதல்வர்களிடம் எவ்வளவு அபிமானம் கொண்டவர்கள் என்பது உனக்குத் தெரியாதா! இன்றைக்கு நீயே பார்த்தாய். இந்தப் பழையாறை நகருக்கு இன்று அருள்மொழிவர்மனோ, ஆதித்த கரிகாலனோ

வந்திருந்தால் மக்கள் எப்படித் திரண்டு கூடி வரவேற்றிருப்பார்கள்? இந்த ஊர் மக்கள் ஒரு காலத்தில் உன்னிடமும் அன்புடனேதான் இருந்தார்கள். பழுவேட்டரையர்களுடன் நீ உறவு பூண்டதிலிருந்து உன்னை வெறுக்கவே தொடங்கி விட்டார்கள்..." 

        "தாயே! மக்களின் அபிமானத்தைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களின் அபிமானம் என்னத்துக்கு ஆகும்? மக்கள் ஆளப்படவேண்டியவர்கள். சிம்மாசனத்தில் யார் வீற்றிருந்து அரசு செலுத்துகிறார்களோ, அவர்களிடம் மக்கள் பக்தி செலுத்த வேண்டியவர்கள்!" 

       "மகனே! உனக்குப் போதனை செய்திருப்பவர்கள் அரசியல் நீதியின் ஆரம்பத் தத்துவத்தைக்கூட உனக்கு உணர்த்தவில்லை. மக்களின் அபிமானம் இல்லாமல் எந்த அரசனும் நீடித்து அரசு செலுத்த முடியாது. அப்படி அரசு புரிவதில் புண்ணியமும் இல்லை..!" 

        இவ்வாறு அந்தப் பெருமூதாட்டி சொல்லிக் கொண்டிருந்தபோது, அரண்மனை வாசலில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது. ஓலக்குரலும், சாபக்குரலும், கோபக்குரலும், கேள்விக் குரலும் ஆயிரக்கணக்கான மனித கண்டங்களிலிருந்து எழுந்து, பெருங்காற்று அடிக்கும்போது சமுத்திரத்தில் உண்டாகும் பேரொலியாகக் கேட்டது.

        ''மகனே! சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதோ பெரும் விபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதன் முதல் அறிகுறிதான் இது. நான் அரண்மனைக்கு வெளியே சென்று, என்ன விஷயம் என்று தெரிந்து வருகிறேன். அதுவரையில் நீ இங்கேயே இரு!" என்றாள் அன்னை.

 (மதுராந்தகத்தேவருடன் நாமும் காத்திருப்போம்… அடுத்த அதிகாரம் ‘வெகுளாமை’. கோபம் கொள்ளாமல் அடுத்த சில நாட்கள் காத்திருப்போம்...)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com