திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

ஓவியம்: பத்மவாசன்

பாகம் -28

ம் ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளில் 31 மற்றும் 32 ஆம் அதிகாரங்கள் வெகுளாமை, இன்னா செய்யாமை.  இவற்றின் தொடர்புடைய பின்வரும் காட்சிகளைப் பொன்னியின் செல்வனில் கண்டு களியுங்கள்...

 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்லதனின் தீய பிற .

பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதைவிடத் தீமை வேறு இல்லை.

 (தஞ்சை அரண்மனை வாசலில் காலாந்த கண்டர்...)

 பொன்னியின்செல்வர் அரண்மனைக்கு உள்ளே சென்ற பிறகு, காலாந்தக கண்டர் அரண்மனை வாசலில் வந்து சேர்ந்து கொண்டிருந்த வேளக்காரப்படை வீரர்களை நெருங்கினார்.  

     " இது என்ன கூச்சல்? அரண்மனைக்குள்ளே சக்கரவர்த்தி நோயுடன் படுத்திருப்பது உங்களுக்குத் தெரியாதா? கோட்டையைச் சுற்றிப் பகைவர் படை சூழ்ந்திருப்பது தெரியாதா?” என்று கடுமை தொனிக்கும் குரலில் கேட்டார்.

வேளக்காரப் படையின் தலைவன், "ஐயா! கோட்டையைச் சூழ்ந்திருப்பவர்கள் பகைவர்கள்தானா? கொடும்பாளூர்ப் பெரிய வேளார் நமக்குப் பகைவர் ஆனது எப்படி?” என்று கேட்டான். 

சின்னப் பழுவேட்டரையர் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, "அதை அவரிடந்தான் கேட்க வேண்டும்;

பகைவர் இல்லையென்றால், எதற்காகச் சைன்யத்துடன் கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார்?” என்று கேட்டார்.

“சின்ன இளவரசரைச் சிம்மாசனத்தில் ஏற்றி முடிசூட்டு வதற்காக என்று கேள்விப்படுகிறோம்" என்றான் வேளக்காரப் படைத்தலைவன்.

"அது உங்களுக்கெல்லாம் சம்மதமா?” என்று சின்ன பழுவேட்டரையர் கேட்டார்.

        வேளக்காரப் படைத் தலைவன் தன் வீரர்களைத் திரும்பிப் பார்த்து, “நீங்களே சொல்லுங்கள்!” என்றான்.

         வீரர்கள் உடனே "சம்மதம்! சம்மதம்" பொன்னியின் செல்வர் வாழ்க! ஈழங்கொண்ட இளவரசர் வாழ்க!" என கோஷித்தார்கள்.

      இம்முறை அந்தக் கோஷம் முன்னைவிட அதிக வலுவுடையதாயிருந்தது. 

      சின்னப் பழுவேட்டரையரின் முகம் சிவந்தது. மீசை துடித்தது. ஆயினும் பல்லைக் கடித்துக் கொண்டு, "முடி சூட்டுவது பெரிய வேளாரின் இஷ்டத்தைப் பொறுத்ததா? அல்லது உங்கள் விருப்பத்தைப் பொறுத்ததா? சக்கர

வர்த்தியின் விருப்பத்துக்கு மதிப்பு ஒன்றும் இல்லையா?" என்று கேட்டார். 

          வீரர்களில் ஒருவன், "தளபதி! சக்கரவர்த்தி சௌக்கியமாயிருக்கிறாரா! நிச்சயந்தானா” என்று கேட்டான். 

       “இது என்ன கேள்வி ?” என்று காலாந்தகர் சீறினார். 

          “சக்கரவர்த்தியைப் பற்றி ஊரில் ஏதேதோ வதந்தி பரவியிருக்கிறது. நாங்களும் அவரை இன்று பார்க்க முடிய வில்லை! அதனால் அவருடைய சுகத்தைப் பற்றி எல்லாரும் மிக்க கவலை அடைந்திருக்கிறோம்!" என்று வேளக்காரப் படை வீரர்களின் தலைவன் கூறினான். 

       “சக்கரவர்த்தியை நீங்கள் பார்க்க முடியாத காரணம் முன்னமே நான் சொல்லவில்லையா? சக்கரவர்த்தியின் மனக் குழப்பம் இன்று அதிகமாயிருந்தது. யாரையும் பார்ப்பதற்கு அவர் விரும்பவில்லை. சபாமண்டபத்திற்கு வருவதற்கும் மறுத்துவிட்டார்..." 

        “சக்கரவர்த்தியின் மனக்குழப்பத்திற்குக் காரணம் என்ன? ஏன் எங்களுக்குத் தரிசனம் அளிப்பதற்கு மறுக்க வேண்டும்? நாங்கள் அதையாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா?"

         "நல்லது ; சொல்லுகிறேன். ஈழத்துக்குச் சென்றிருந்த இளவரசரைப் பற்றி ஒன்றும் தெரியாமலிருந்ததுதான் சக்கரவர்த்தியின் கவலை அதிகமானதற்குக் காரணம் இப்போது இளவரசரே வந்து விட்டபடியால் ..."  

         "இளவரசரை நாங்கள் பார்க்கவேண்டும். நன்றாக வெளிச்சத்தில் பார்க்க வேண்டும்!" என்று அந்தப் படையினரில் ஒரு வீரன் கூறினான். 

         "ஆமாம்; பார்க்க வேண்டும்! ஈழங்கொண்ட இளவரசர் வாழ்க!" என்று எல்லாரும் சேர்ந்து கூவினார்கள்.  

            "இளவரசர் முதலில் சக்கரவர்த்தியைத் தரிசிக்க வேண்டும் அல்லவா? பிறகு இஷ்டப்பட்டால் உங்களையும் வந்து பார்ப்பார்!"\ 

           “நிச்சயந்தானா? ஒரு வேளை பாதாளச் சிறைக்கு அனுப்பப்படுவாரா?"

        வேறொரு நாளாக, வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால், வேளக்காரப் படையினர் இவ்வளவ துடுக்காகப் பேசியதற்குச் சின்னப் பழுவேட்டரையரின் வீரர்கள் அவர்கள் மீது போர் தொடுத்திருப்பார்கள்; பெரிய ரகளையாகப் போயிருக்கும். ஆனால் இளவரசரின் திருமுகத்தைச் சற்றுமுன் பார்த்த காரணத்தினாலோ, என்னமோ, காலாந்தக கண்டரின் வீரர்களும் மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள். 

      சின்னப் பழுவேட்டரையருடைய  கை அவருடைய உடைவாளை நாடியது. மேற்கண்டவாறு கேட்ட வீரனை ஒரே வெட்டில் வெட்டிக் கொன்றுவிட வேண்டுமென்று ஒரு கணம் எண்ணினார். உடனே அந்தக் கோபத்தைச் சமாளித்துக் கொண்டு உரத்துச் சிரித்தார்.

(செல்லிடத்துச் சினமும் தீயது  புரிந்து கொண்டார் காலாந்த கண்டர்...) 

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய் 

தன்நோய்போற் போற்றாக் கடை  

அடுத்த உயிருக்கு வரும் துன்பத்தை தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால் அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன? 

(இங்கு "பிறிதின் நோய் தன் நோய் போற் போற்றியவர்கள்" மந்தாகினி தேவியா, அருண்மொழிவர்மரா, பூங்குழலியா, வானதியா ,காலாந்தகண்டரா... நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே.) 

அருள்மொழிவர்மர் :   

  "பூங்குழலி! உன் அத்தை இறந்து விட்டால் நீ அனாதை ஆகிவிடுவாய் என்று அஞ்ச வேண்டாம். நீ இன்று செய்த உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன். உன்னிடம் என்றென்றும் நன்றியுள்ளவனாயிருப்பேன். நான் ஒரு வேளை மறந்து விட்டாலும், சின்னப் பழுவேட்டரையர் மறக்க மாட்டார். உன் அத்தையும், நீயும் இன்று அவருக்கு எத்தகைய உதவி செய்தீர்கள்! சக்கரவர்த்தியின் மீது வேலோ, கத்தியோ பாய்ந்திருந்தால் உலகம் என்ன சொல்லியிருக்கும்? தஞ்சைக் கோட்டைத் தளபதியான பழுவேட்டரையரையும் அந்தப் பாதகச் செயலுக்கு உடந்தை என்றுதான் ஊரார், உலகத்தார் சொல்லுவார்கள். கோட்டை வாசலில் கொடும்பாளூர் வேளார் வேறு காத்திருக்கிறார். பழுவூர்க் குலத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கு அவருக்கு வேண்டிய காரணம் கிடைத்திருக்கும். அவ்வளவு ஏன்? இன்றைக்கு நான் உன் உதவியினால் கோட்டைக்குள் வராதிருந்தால், கோட்டைத் தளபதியின் மேல் எனக்குக் கூடத்தான் சந்தேகம் உதித்திருக்கும். ஆகையால் சின்னப் பழுவேட்டரையர் மற்ற எல்லோரையும்விட உன்னிடம் அதிக நன்றி செலுத்த வேண்டும். அவரிடம் நீ என்ன பரிசு கேட்டாலும் கொடுப்பார். அவருடைய சொத்திலே பாதியைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்!"

 பூங்குழலி:

         "இளவரசே! எனக்கு யாருடைய நன்றியும் தேவையில்லை. பரிசும் வேண்டியதில்லை. எனக்குத் தஞ்சம் அளிக்க சமுத்திர ராஜா இருக்கிறார். என் படகும் கால்வாய் முனையில் பத்திரமாயிருக்கிறது. இதோ நான் புறப்படுகிறேன். ஒரு வேளை என் அத்தை உயிர் பிழைத்தால்?... இல்லை ,அது வீண் ஆசை! காலையிலே என் அத்தை சொல்லிவிட்டாள் வரப்போவதை உணர்ந்துதான் சொன்னாள். இனி அவள் பிழைக்கப் போவதில்லை. எனக்கு இங்கே வேலையும் இல்லை. என்றாவது ஒருநாள் தாங்களும் கொடும்பாளூர் இளவரசியும் கோடிக்கரைக்கு வந்தால்..." என்று கூறிப் பூங்குழலி வானதி இருந்த இடத்தை நோக்கினாள்.

 வானதி:

      துவரையில் திக்பிரமை கொண்டவளைப் போல் நின்றிருந்த வானதிக்கு அப்போதுதான் சிறிது தன்னுணர்வு வந்தது. அவள் பூங்குழலியின் அருகில் வந்து, "என் அருமைத்தோழி! நீ எங்கே போகிறாய் ?நானும் உன்னைப் போல் அனாதை தான்!....."

 காலாந்தகண்டர்:

        வாசற்படிக்கு அருகில் சின்னப் பழுவேட்டரையர் மறுபடியும் அவளை வழிமறித்து நிறுத்தினார்.

"பெண்ணே! பொன்னியின் செல்வர் கூறியதை யெல்லாம் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூறியது முற்றும் உண்மை. பழுவூர்க் குலத்துக்கு அழியாத அபகீர்த்தி உண்டாகாமல் நீ காப்பாற்றினாய், உனக்கு நான் அளவில்லாத நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். நீ என்ன பரிசு வேண்டுமென்று கேட்டாலும் தருகிறேன்" என்றார்.

 (தன் உயிருக்கு இணையான  தனது அத்தையை பிரிந்து நின்ற பூங்குழலிக்காக அனைவரும்  "பிறிதின் நோய் தன் நோய்  போல்" போற்றியதை நன்றாகவே காண முடிந்தது அல்லவா  நண்பர்களே...)

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com