திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்: பத்மவாசன்

பாகம் - 30

அதிகாரம் 36 - மெய்யுணர்தல் :

 பின்னர் சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர்

அந்தப் பதிகத்தைத் தமது இனிய குரலில் பாடினார்: 

 

"மாதர்ப் பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும்பாடிப் போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர் பின்புகுவேன்

யாதுஞ் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்றபோது 

காதல்மடப் பிடியோடுங் களிறு வருவன கண்டேன்! 

கண்டேனவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!" 

     இந்த அடியுடன் தொடங்கிப் பின் வரும் பத்து அடிகளையும் மதுராந்தகர் தம்மை மறந்த நிலையில் பாடினார்.

      கேட்டுக் கொண்டிருந்தவர்களும் தங்களை மறந்திருந்தார்கள். அன்று அப்பர் பெருமான் கண்ட காட்சிகளையெல்லாம் அவர்களும் கண்டார்கள். 

        பாடல் முடிந்து, சிறிது நேரம் வரையில் அங்கே மௌனம் குடி கொண்டிருந்தது. பின்னர், குந்தவை செம்பியன் மாதேவியைப் பார்த்து, "அம்மா! அப்பர் இந்தப் பதிகம் பாடிய வரலாற்றை முன்னொரு முறை எனக்குச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது இன்னொரு தடவை சொல்லுங்கள், இவர்களும் கேட்கட்டும்!" என்றாள். 

       மற்றவர்களும் வற்புறுத்திக் கேட்டதன் பேரில் பெரிய பிராட்டி மாதேவி அந்த வரலாற்றைக் கூறினார்:

அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சி யுற்றிருந்த  சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார். நெடுந்தூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு பெரியவர் அங்கே  தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீர் எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்” என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப் பதற்காகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும் சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெட்டையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது. அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன; பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன; இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக் கண்ணுக்குப் புலனாயின, உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாஸம்; தனியாக வேறு கைலாஸமில்லை" என்று உணர்ந்தார். இத்தகைய மெய் ஞான உணர்ச்சியோடு மேலே சென்ற போது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாஸ வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார்.தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அநுபவித்ததை யெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும், அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் " கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.

       முதிய எம்பிராட்டியார் கூறி வந்த இந்த வரலாற்றை எல்லோரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டு வந்தார்கள். 

அப்பர் பெருமானின் இக்கைலாய காட்சி நிகழ்வினை உண்ர்த்தும் குறள்; 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

 அதிகாரம் 37 - அவாவறுத்தல் :

(கோடியக்கரையில் பூங்குழலி... சுந்தரமூர்த்தி நாயனாரையும் குழகரையும் சிந்தித்தபடி கடற்கரையில்...)

 பூங்குழலி கானத்தை நிறுத்தினாள், படகின் துடுப்பை நாலு தடவை வலித்தாள். படகு கரை அருகில் வந்து சேர்ந்தது. பூழங்குழலி படகிலிருந்து துள்ளிக்குதித்துக் கரையில் இறங்கினாள். படகைக் கரையில் இழுத்துப் போட்டாள். கரையில் சில கட்டு மரங்கள் குப்பலாகக் கிடத்தன. அவற்றின் மீது படகு சாய்ந்து நிற்கும்படி தூக்கி நிறுத்தினாள். சாய்ந்து நின்ற படகில் தானும் சாய்ந்து கொண்டு ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தாள். 

         அதோ கலங்கரை விளக்கின் உச்சி மண்டபத்தில் தீ மூட்டியாகி விட்டது. தீ ஜூவாலைவிட்டு எரிகிறது. இனி இரவெல்லாம் அந்த ஜோதி எரிந்து கொண்டிருக்கும். கடலில் செல்லும் மரக்கலங்களுக்கு அது "அருகில் நெருங்க வேண்டாம்!" என்று எச்சரித்துக் கொண்டிருக்கும். கோடிக்கரை ஓரத்தில் கடலில் ஆழமே கிடையாது. கட்டு மரங்களும், சிறிய படகுகளும்தான் அந்தப் பகுதியில் கரையோரமாக அணுகி வரலாம். மரக்கலமும் நாவாயும் நெருங்கி வந்தால் தரைதட்டி மணலில் புதைந்து விடும். வேகமாகத் தரையில் மோதினால் கப்பல் பிளந்து உடைந்தும் போய்விடும். ஆதலின், கோடிக் கரையில் உள்ள கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளுக்கு மிகவும் அவசியமான உதவியைச் செய்து வந்தது. மற்றொரு பக்கத்தில் குட்டை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவில் கோபுரம் ஒன்று தலை தூக்கி நின்றது. அதனடியில் கோடிக்கரைக் குழகர், கோயில் கொண்டிருந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் இந்தக் கோடிக்கரைக்கு வந்தார். காட்டின் மத்தியில் தன்னந்தனியே கோயில் கொண்டிருந்த குழகரைத் தரிசித்தார். 

        "அந்தோ! இறைவா! இப்படி இந்தக் கடற்கரைக் காட்டின் மத்தியில் துணையின்றித் தனியே இருக்கீரே? இருக்க வேறு இடமாயில்லை ? பக்தர்கள் கூட்டமாக உமது புகழைப் பாடிக்கொண்டிருக்கும் ஸ்தலங்கள் எத்தனையோ இருக்க, இந்தக் கோடிக்கு வந்து பயங்கரக் காட்டிலே தனியே கோயில் கொண்டிருப்பதேன் ?இக்கொடியேனுடைய கண்கள் இந்தக் காட்சியையும் காண நேர்ந்ததே !"என்று மனமுருகப் பாடினார். 

"கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல் 

குடிதானயலே இருந்தாற் குற்றமாமோ? 

கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர் 

அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே?”

 

"மத்தம் மலிசூழ் மறைக்காடதன் றென்பால் 

பத்தர் பலர் பாடவிருந்த பரமா! 

கொத்தார் பொழில் சூழ்தருகோடிக் குழகா 

எத்தாற் றனியே யிருந்தாய்? எம்பிரானே!”

 சுந்தரமூர்த்தி நாயனார் வந்து தரிசித்துவிட்டுப் போன   இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கோடிக்கரைக் குழகர் அதே நிலையில்தான் இருந்தார் . சுற்றிலும் இன்னும் கொஞ்சம் காடுகள் மண்டிப் போயிருந்தன. அக்காடுகளில் பொந்துகளில் ஆந்தைகளும்  கூகைகளும் குழறின. பார்ப்பதற்குப் பயங்கரமான வேடுவர்கள் சிலர்தான் காட்டின் மத்தியில் ஆங்காங்கு குடிசை போட்டுக் கொண்டு வசித்தார்கள். 

ஆம் ஒரே  வித்தியாசம் இருந்தது. ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் இங்கு போது கலங்கரை விளக்கம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, முதற்பராந்தகரின் காலத்திலேயே தான் அது கட்டப்பட்டது.கலங்கரை விளக்கத்தில் பணிசெய்வோருக்கென்று சில ஓட்டு வீடுகள் அதைச் சுற்றிக் கட்டப்பட்டன. கோடிக்கரைக் குழகர் கோயிலில் பூஜை செய்யும் பட்டரும் அங்கே குடியேறினார். 

         பூங்குழலிகடற்கரை ஓரத்தில் படகின் மீது சாய்ந்த வண்ணம் நாற்புறமும் பார்த்தாள். கலங்கரை விளக்கத்தைப் பார்த்து அந்தப் பக்கம் போகலாமா என்று யோசித்தாள்.பிறகு குழகர்  கோயிலில் சேமங்கலம் அடிக்கும் ஓசை கேட்கவே, பூங்குழலி ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அதற்குள் வீட்டுக்குப் போய் என்ன செய்வது? கோயிலுக்குப் போகலாம்! பட்டரைத் தேவாரம் பாடச் சொல்லி கேட்கலாம். பிறகு பிரசாதமும் வாங்கிக் கொண்டு வரலாம். 

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும். 

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லாதிருத்தலே ஆகும்.  அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும். 

சுந்தரமூர்த்தி நாயனார் இறை மீது கொண்ட பக்தியும் அளவிலாத காதலும் ,மெய்பொருளை விரும்பும் தன்மையின் உச்சம் எனலாம்... பக்தியில் முழ்கி இறைமையில் கரைவோம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com