திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்: பத்மவாசன்

பாகம் - 31

 

அதிகாரம் 38 - ஊழ்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந்  துறும் 

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன. ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன்வந்து நிற்கும்.

(நேராக பொன்னியின் செல்வன் காட்சிக்குள் சென்று விடுவோம். சுந்தர சோழரும் குந்தவையும்...) 

         "சில சமயம் எனக்குப்பூர்வ ஜன்ம நினைவுகள் வருகின்றன. மகளே! அவற்றைக் குறித்து இதுவரையில் யாரிடமும் சொல்ல வில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள்; புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். எனக்கு உடல் நோயுடன் சித்தப் பிரமையும் பிடித்திருப்பதாகச் சொல்வார்கள். வைத்தியர்களை அழைத்துவந்து தொந்தரவு கொடுப்பது போதாது என்று மாந்திரீகர் களையும் அழைத்துவரத் தொடங்குவார்கள்...." 

       ''ஆம்; தந்தையே! இப்போதே சிலர் அப்படிச் சொல்கிறார்கள். தங்கள் நோய், மருத்துவத்தினால் தீராது; மாந்திரீகர்களை அழைக்க வேண்டும் என்கிறார்கள்....." 

      ''பார்த்தாயா? நீ அப்படியெல்லாம் நினைக்க மாட்டாயே? நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மாட்டாயே?” என்றார் சக்கரவர்த்தி. 

     "கேட்கவேண்டுமா, அப்பா! உங்களுடைய மனம் எவ்வளவு நொந்திருக்கிறது என்று எனக்குத் தெரியாதா? தங்களைப் பார்த்து நான் சிரிப்பேனா?" என்று குந்தவை கூறினாள். அவளுடைய கண்ணில் நீர் மல்கிற்று. 

      "எனக்குத் தெரியும், மகளே! அதனாலேதான் மற்ற யாரிடமும் சொல்லாததை உன்னிடம் சொல்கிறேன். என்னுடைய பூர்வ ஜன்ம நினைவுகளில் சிலவற்றைச் சொல்லுகிறேன். கேள்!'' என்றார் சுந்தர சோழர். 

         அந்த வாலிபன் இராஜ குலத்தில் பிறந்தவன், ஆனால் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவன் அல்ல; இராஜ்யம் ஆளும் ஆசையும் அவனுக்குக் கிடையாது. அவனுடைய தகப்பனாருக்கு முன்னால் பிறந்த மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஆகையால் இராஜ்யம் ஆளுவதைப் பற்றி அவன் கனவிலும் நினைக்கவில்லை.ஆசை கொள்ளவும் இல்லை. கடல் கடந்த நாட்டுக்குப் போருக்குச் சென்ற சைன்யத்தோடு அவனும் போனான். ஒரு சிறிய படையின் தலைமை அவனுக்கு அளிக்கப் பட்டிருந்தது. போரில் அவனுடைய சைன்யம் தோல்வியுற்றது. கணக்கற்றவர்கள் மாண்டார்கள். வாலிபன் தலைமை வகித்த படையிலும் எல்லாரும் மாண்டார்கள். அந்த வாலிபனும் போரில் உயிரைவிடத்துணிந்து எவ்வளவோ சாஹஸச் செயல்கள் புரிந்தான். ஆனாலும் அவனுக்குச் சாவு நேரவில்லை. தோற்று ஓடிய சைன்யதில் உயிரோடு தப்பிப் பிழைத்தவர்கள் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். திரும்பித் தாய்நாடு செல்லுவதற்கு அவர்கள் ஆயத்தமானார்கள். திரும்பிப் போவதற்கு அந்த வாலிபன் மட்டும் விரும்பவில்லை. தன் கீழிருந்த படை வீரர்கள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு அவன் தாய்நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் வீரர்கள் எனப் புகழ் பெற்றவர்கள். அந்தப் புகழுக்குத் தன்னால் அபகீர்த்தி நேருவதை அவன் விரும்பவில்லை. ஆகையால், கப்பல் போய்க்கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் அழகிய தீவு ஒன்று தெரிந்தபோது, வாலிபன் மற்ற யாரும் அறியாமல் கடலில் மெள்ளக் குதித்தான். நீந்திக் கொண்டே போய்த் தீவில் கரை ஏறினான். 

(மனிதசஞ்சாரமற்ற அத்தீவில் தன்னைக் கரடியிடமிருந்து காப்பாற்றிய  பெண்ணுக்கு நன்றி தெரிவிக்க நினைக்கும் பொழுது அவளுடன் அவளின் தந்தையைச் சந்திக்கிறான்...) 

     இதைக்கேட்டதும் அந்த வாலிபனுக்கு எப்படி யிருந்திருக்கு மென்று சொல்லவும் வேண்டுமா? தன்னைக் காப்பாற்றிய பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவளோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை. அவளிடம் வாலிபன் கூறியதற்கெல்லாம் அவளுடன் வந்த மனிதனே மறுமொழி கூறினான். இது வாலிபனுக்கு முதலில் வியப்பாயிருந்தது. உண்மை இன்னதென்று அறிந்ததும், வியப்பு மறைந்தது. அந்தப் பெண் பேசத் தெரியாத ஊமை. அவளுக்கு காதும் கேளாது என்று அறிந்து கொண்டதும், அவ்வாலிபனுடைய பாசம் பன்மடங்காகியது. பாசம் வளர்ந்து தழைப்பதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் துணை செய்தன. காது கேளாததும் பேசத் தெரியாததும் ஒரு குறையாகவே அவ்வாலிபனுக்குத் தோன்றவில்லை. வாயினால் சொல்ல முடியாத அற்புதமான உண்மைகளையும், அந்தரங்க இரகசியங்களையும் அவளுடைய கண்களே தெரியப்படுத்தின. அந்த நயனபாஷைக்கு ஈடானாவை இந்த உலகத்தில் வேறு என்ன உண்டு? அது போலவே காது கேளாததற்கு ஈடாக அவளுடைய நாசியின் உணர்ச்சி 

அதிசயமான சக்தி வாய்ந்ததாயிருந்தது. அடர்ந்த காட்டின் மத்தியில் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் காட்டு மிருகம் இன்னதென்பதை அவளுடைய முகர்தல் சக்தியைக் கொண்டே கண்டு பிடிக்க அவளால் முடிந்தது. ஆனால் இதெல்லாம் என்னத்திற்கு? இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை? அந்த வாலிபனுக்கு அத்தீவு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாட்கள், மாதங்கள், வருஷங்கள், இவ்விதம் சென்றன. எத்தனை நாள் அல்லது வருஷம் ஆயிற்று என்பதைக் கணக்குப் பார்க்கவே அவன் மறந்துவிட்டான். 

வாலிபனுடைய இந்த சொர்க்க வாழ்வுக்குத் திடீரென்று ஒருநாள் முடிவு நேர்ந்தது. கப்பல் ஒன்று அந்தத் தீவின் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து படகிலும் கட்டு மரங்களிலும் பலர் இறங்கி வந்தார்கள். அவர்கள் யார் என்று பார்க்க வாலிபன் அருகில் சென்றான். தன்னைத் தேடிக் கொண்டுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அறிந்தான். அவனுடைய நாட்டில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்து விட்டன. அவனுடைய தந்தைக்கு மூத்த சகோதரர்கள் இருவர் இறந்துபோய் விட்டார்கள். இன்னொருவருக்குப் புத்திர சந்தானம் இல்லை. ஆகையால் ஒருபெரிய சாம்ராஜ்யம் அவனுக்காகக் காத்திருக்கிறது என்று தெரிந்து கொண்டான். அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பூசல் ஏற்பட்டது. அந்த அழகிய தீவையும் அதைச் சொர்க்க பூமியாக்கிய ஊமைப் பெண்ணையும் விட்டுப்போக அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில் ஊரையும் உற்றார் உறவினரையும் பார்க்கும் ஆசை ஒரு பக்கத்தில் அவனைக் கவர்ந்து இழுத்தது. அவன் பிறந்த நாட்டை நாலாபுறமும் அபாயம் சூழ்ந்திருக்கிறதென்றும் அறிந்தான். யுத்த பேரிகையின் முழக்கம் மிக மிகத் தொலைவிலிருந்து அவன் காதில் வந்து கேட்டது. இது அவன் முடிவு செய்வதற்குத் துணை செய்தது. 

         ''திரும்பி வருகிறேன்; என்கடமையை நிறைவேற்றி விட்டு வருகிறேன்.'' என்று அப் பெண்ணிடம் ஆயிரம் முறை உறுதி மொழி கூறிவிட்டுப் புறப்பட்டான். காட்டில் பிறந்து வளர்ந்த அந்த ஊமைப்பெண் நாட்டிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கு மத்தியில் வருவதற்கே விரும்பவில்லை .வாலிபன் படகில் ஏறிய போது அவள் சற்று தூரத்தில் அந்தப் பழைய வளைந்த தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இரு கண்களும் அப்போது இரண்டு கண்ணீர் கடல்களாக வாலிபனுக்கு தோன்றின.ஆயினும் அவன் தன் மனதை கல்லாக செய்து கொண்டு படகில் ஏறிச் சென்று கப்பலை அடைந்தான். 

(சோழ நாட்டின் மேன்மையை நிலை நாட்டுவதே என் வாழ்க்கையின் லட்சியமாய் இருக்க வேண்டும் என்று சொல்லி பாட்டனாரிடம் சத்திய வாக்குறுதியும் தந்துவிட,  நாட்டின் நிலைமையும் சோழ மக்களின் பிரியமும் சேர்ந்து சுந்தரசோழருக்கு ராஜபட்டாபிஷேகம் நடந்துவிட.. பின்னர் அத்தீவில் வாழும் ஊமைப் பெண்ணை கண்டுபிடித்து வர ஆட்களை அனுப்புகிறார் சுந்தரச் சோழர்) 

       நாங்கள் அனுப்பிய ஆட்கள் திரும்பிச்சென்ற மறுநாள் அந்தப்பெண் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறினாளாம். அன்று அமாவாசை. காற்று பலமாக அடித்தது. கடல் பொங்கிக்கொந்தளித்து வந்து கலங்கரை விளக்கைச் சூழ்ந்து கொண்டது. அந்தப் பெண் சிறிதுநேரம் கொந்தளித்த அலை கடலைப் பார்த்துக் கொண்டே நின்றாளாம். அப்படி அவள் அடிக்கடி நிற்பது வழக்கமாதலால் யாரும் அதைப் பொருட்படுத்த வில்லையாம்! திடீரென்று `வீல்` என ஒரு சத்தம் அலை கடலின் முழக்கத்தையும் மீறிக்கொண்டு கேட்டதாம். பிறகு அவளைக் காணோம்! பெண் உருவம் ஒன்று விளக்கின் உச்சியிலிருந்து கடலில் தலை கீழாக விழுந்ததை இரண்டொருவர் பார்த்தார்களாம். படகுகளைக் கொண்டு வந்து ஆன மட்டும் தேடிப்பார்த்தும் பயன்படவில்லை. கொந்தளித்துப் பொங்கிய கடல் அந்தப் பெண்ணை விழுங்கிவிட்டது என்றே தீர்மானிக்க வேண்டியிருந்ததாம்." 

         "இந்தச் செய்தியைக் கேட்டதும் என நெஞ்சில் ஈட்டியினால் குத்துவது போன்ற வலியும் வேதனையும் உண்டாயின. " 

              "ஆனாலும், மகளே! செத்துப்போன அந்தப் பாவியை என்னால் அடியோடு மறக்க முடியவில்லை. சிற்சில சமயம் என் கனவிலே அந்தப் பயங்கரக்காட்சி, - நான் கண்ணால் பாராத அந்தக் காட்சி, தோன்றி என்னை வருத்திக்கொண்டிருந்தது. கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ஒரு பெண் உருவம் தலைகீழாகப் பாய்ந்து அலை கடலில் விழும் காட்சி என் கனவிலும் கற்பனை யிலும் தோன்றிக்கொண்டிருந்தது. கனவில் அந்தப் பயங்கரக் காட்சியைக் காணும்போதெல்லாம் நான் அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருப்பேன். பக்கத்தில் படுத்திருப்பவர்கள் 'என்ன? என்ன? என்று கேட்பார்கள். உன் தாயார் எத்தனையோ தடவை கேட்டதுண்டு ஆனால் நான் உண்மையைக் கூறியதில்லை.'ஒன்றுமில்லை' என்று சில சமயம் சொல்வேன். அல்லது போர்க்கள பயங்கரங்களைக் கற்பனை செய்து கூறுவேன். நாளடைவில் காலதேவனின் கருணையினால் அந்தப் பயங்கரக் காட்சி என் மனத்தை விட்டு அகன்றது; அவளும் என் நினைவிலிருந்து அகன்றாள்; அகன்று விட்டதாகத்தான் சமீப காலம் வரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உயிரோடிருப்பவர்களைக் காட்டிலும் செத்துப் போனவர்கள் அதிக் கொடுமைக் காரர்கள் என்று தோன்றுகிறது. மகளே! ஊமைச்சியின் ஆவி என்னை விட்டு விடவில்லை. சில காலமாக அது மீண்டும் தோன்றி என்னை வதைக்க ஆரம்பித் திருக்கிறது! என் மகளே! மாண்டவர்கள் மீண்டு வருவார்கள் என்று நீ நம்புகிறாயா...?"

ஊழிற் பெருவலி யாவுள...

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com