திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் 33.  அதிகாரங்கள் 41, 42

கல்லாமை  (41)

நுண்மாண் நுழைப்புல மில்லான் எழினலம் 

மண்மான் புனைபாவை யற்று 

நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும், அழகும் மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

(நமது பொன்னியின் செல்வன் புதினத்தில் சுந்தர சோழரின் அழகுக்கு நிகரான அழகு கொண்டவர் மதுராந்தகர் என பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனாலும் வந்தியத்தேவனை  மதுராந்தகர் நிமித்தக்காரனாய் பார்ப்பதும் வந்தியத்தேவனிடம் தன் வருங்காலத்தைப் பற்றிய கணிப்பை கேட்பதும்  சிரிப்பை வரவழைப்பதோடு மண்மான் புனைப்பாவையோ... யோசிக்கவும் வைக்கிறது)

வந்தியத்தேவன் தன்னை "நிமித்தக்காரா!" என்று மதுராந்தகர் அழைத்ததும் திடுக்கிட்டான். இளவரசர் மேலும் தன்னை என்னென்ன கேள்விகள் கேட்பாரோ தெரியவில்லை. அவற்றுக்கெல்லாம் சாமர்த்தியமாகத் தக்க விடை கூறிச் சமாளித்துக் கொள்ளவேண்டும். கடவுளே! இங்கிருந்து, இவரிடமிருந்து தப்பித்துச் செல்வது எப்படி? இளவரசியைத் தனியாகச் சந்தித்துப் பேசுவது எப்படி...?

            "வேறு யோசனை ஒன்றுமில்லை, ஐயா! நான் நிமித்தக்காரனாயிருப்பதைக் காட்டிலும் இப்போது சபையில் பார்த்த பிள்ளையைப்போல் நாலு பதிகங்களைக் கற்றிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! எனக்கும் எவ்வளவு உபசார மரியாதையெல்லாம் நடக்கும் என்றுதான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்!'' என்றான்.

           "யார் வேண்டாம் என்றார்கள்! நீயும் தேவாரத் திருப்பதிகம் கற்றுக்கொண்டு பாடுவதுதானே!"

          "இன்னாருக்கு இன்னபடி என்று எழுதியிருப்பது போலத்தானே நடக்கும் இளவரசே! வீண் ஆசைப்பட்டு என்ன பயன்?"

          ”பதிகம்  பாடிய அந்தப் பிள்ளையைப்பற்றி உனக்கு என்ன தோன்றுகிறது? அவனுடைய யோகம்..."

         "மிக உயர்ந்த யோகம். சிவ யோகமும், இராஜயோகமும். கலந்தது. மன்னர்களும், மகாராணிகளும் அந்தப் பிள்ளைக்கு மரியாதை செய்வார்கள். மகான்களுடைய பெயருடனே அவருடைய பெயரும் சேர்ந்து இப்பூவுலகத்தில் நெடுங்காலம் விளங்கும்."

வல்லவரையன் ஏதோ குருட்டாம் போக்காக இவ்விதம் கூறினான். ஆனால், மதுராந்தகருடைய மனத்தில் அவனுடைய வார்த்தைகள் பெருங் கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன. 

        "என்னுடைய யோகம் எப்படி என்று சொல், பார்க்கலாம்!"

         ''அவனுடைய யோகத்தைப் போலவே தங்கள் யோகமும் சிவ யோகமும் இராஜ யோகமும் கலந்தது. ஆனால், இன்னும் மேன்மையானது!''

          ''அப்பனே! கொஞ்சம் விவரமாகச் சொல், பார்க்கலாம்."

         வல்லவரையன் என்ன சொல்வது என்று யோசிக்க அவகாசம் வேண்டினான். ஆகையால், "இப்படியெல்லாம் அவசரப் பட்டால் முடியுமா? விவரமாகச் சொல்ல வேண்டுமானால், தீபம் ஏற்றி, வைத்து அகிற் புகை போடச் சொல்லவேணும், தாங்களும் தீபத்துக்குப் பின்னால் உட்கார்ந்து கொள்ளவேணும். அப்போது வருங்கால நிகழ்ச்சிகளை நடக்கப் போகிறபடியே பார்த்துச் சொல்வேன்."

        மதுராந்தகர் பரபரப்பு அடைந்து தீபம் ஏற்றி வைக்கும் படியும் அகிற் புகை போடும்படியும் கட்டளையிட்டார்.

      தீபத்துக்கு முன்னாலும் பின்னாலும் இரண்டு மணைகளும் போடப்பட்டன. மதுராந்தகர் ஒரு மணையில் உட்கார்ந்த பின்னர் அவருக்கெதிரே வந்தியத்தேவனும் உட்கார்ந்தான்.

   கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். அவனுடைய வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தது.

   பிறகு அவன் உடம்பை ஒரு குலுக்கு குலுக்கிக்கொண்டு ஆவேசம் வந்தவனைப் போல் நடித்தான். வெறியாட்டக் காரனைப் போல் அவன் உடல் நடுங்கிற்று. 

        பின்னர், கண்களை அகலத் திறந்தான். எதிரில் இருந்த

தீபத்தின் பிழம்பை உற்றுப் பார்க்கலானான்.

      சற்று நேரம் பார்த்துவிட்டு மதுராந்தகத் தேவரை நோக்கி, "ஐயா! தங்களைப்பற்றி அலட்சியமாக நான் ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்க வேண்டும். தங்களுடைய யோகம் சாதாரண யோகம் அல்ல. அங்கே சபையில் உட்கார்ந்து பாட்டுப் படித்த பிள்ளையின் யோகத்துக்கும், தங்கள் யோகத்துக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை. அந்தப் பிள்ளையின் யோகம் அரசர்களின் ஆதரவினால் ஏற்படும் ராஜயோகம்; தங்களுடைய யோகத்தைப் பற்றி இந்தத் தீபத்திலே நான் காண்பது - ஆகா என்னையே பிரமிக்கச் செய்கிறது!" என்றான்.

       "அப்படி என்ன காண்கிறாய்? சொல்! சொல்!'' என்றார் மதுராந்தகர்.

       "ஆகா! எப்படிச் சொல்வேன்? சொல்வதற்கு வார்த்தைகள் எனக்குக் கிடைக்கவில்லை! கண்ணுக் கெட்டிய தூரம் மணிமுடி தரித்த மன்னர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள். மந்திரிகளும், சாமந்தர் களும், அதிகாரிகளும் வரிசை வரிசையாக நிற்கிறார்கள். அவர்களுக்கு அப்பால், முடிவில்லாத கடலைப்போல், சேனா வீரர்கள் அலைமோதிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்கள் கையில் பிடித்த வேல்களும், வாள்களும், மார்பில் தரித்த கவசங்களும் ஒளி வீசிக் கண்ணைப் பறிக்கின்றன. தூரத்திலுள்ள மாட மாளிகைகளின் மேல் ஜனங்கள் நின்று ஆர்ப்பரிக்கிறார்கள். கோட்டை கொத்தளங்கள் மீதெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாய் நிற்கின்றனர். அவர்கள்.... அவர்கள்...ஏதேதோ கோஷம் செய்கிறார்கள்!" 

"சொல், சொல்! மக்கள் என்ன கோஷமிடுகிறார்கள்"

(நம் கதாநாயகன் வந்தியத்தேவன்  "நிமித்தகாரனாய்"...  நினைத்தாலே சிரிப்பு வருகிறது அல்லவா நண்பர்களே...) 

கேள்வி (42)

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை 

கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும். அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானது ஆகும்.

         (அரண்மனை மேன் மாடத்தில் குந்தவை, வானதி, பூங்குழலி, செம்பியன் மாதேவி, அவரின் புதல்வர் சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர், அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்...) 

         "அன்னையே! மகிஷாசுரனைப் பற்றிச் சொல்ல வந்தீர்கள்!” என்று பூங்குழலி ஞாபகப்படுத்தினாள்

          "ஆம்; நல்லவேளையாக ஞாபகப்படுத்தினாய், மகளே! அசுர சக்திகள் இரண்டு வகையானவை. ஒன்று மௌடீக அசுர சக்திகள். இன்னொன்று மதி நுட்பம் வாய்ந்த அசுர சக்திகள். மௌடீக அசுர சக்தியையே மகிஷாசுரனாக நமது முன்னோர்கள் உருவகப் படுத்தினார்கள். காட்டெருமைக்கு வெறிவந்து தெறி கெட்டு ஓடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்போது அந்த எருமை யானையைவிட அதிக பலம் பெற்று விடுகிறது. எதிர்ப்பட்ட பிராணிகள் எல்லாவற்றையும் சின்னா பின்னப்படுத்தி விடுகிறது. மௌடீகமும் வெறி கொண்ட காட்டு எருமையைப் போல் வலிமைகொண்டது. மௌடீகம் சில சமயம் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் மகிஷாசுரனுடைய ஆட்சி என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். மகிஷாசுரன் தேவலோகச் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தத் தொடங்கியபோது, மூன்று உலகங்களிலும் அல்லோல கல்லோலமுண்டாயிற்று. அறிவுவேண்டாம். அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம். இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம் ஒன்றும் வேண்டாம் - எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடு நடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும் மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீகத்தோடு அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஒலமிட்டார்கள். அசுரர்களுங் கூடச் சேர்ந்து அலறினார்கள். துர்க்கா பரமேசுவரி அப்போது கண் திறந்தாள். மாகாளி வடிவங் கொண்டு வந்து மகிஷாசுரனை வதஞ் செய்தாள். மௌடீக சக்தியைத் தெய்வீக சக்தி வென்றது. மூன்று உலகங்களும் மௌடீக அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றன. தேவர்களும் முனிவர்களும் அசுரர்களுங்கூடப் பெருமூச்சு, விட்டுத் துர்க்கா பரமேசுவரியை வாழ்த்தி வணங் கினார்கள். குழந்தைகளே இப்போதுங்கூட இவ்வுலகில் மௌடீக அசுர சக்திகள் இல்லாமற் போகவில்லை. இந்தப் புண்ணிய பரத கண்டத்தில் வடமேற்குத் திசைக்கு அப்பால் மௌடீக அசுர சக்திகள் சில தோன்றி யிருப்பதாக அறிகிறேன். அவர்கள் மூர்க்காவேசத்துடன் போர் புரிந்து நகரங்களைச் சூறையாடிக் குற்றமற்ற மக்களைக் கொன்று கோயில்களையும் விக்கிரங்களையும் உடைத்துத் தகர்த்து நாசமாக்குகிறார்களாம். அவர்களைத் தடுத்து நிறுத்தக்கூடிய பெரிய சக்கரவர்த்திகள் இப்போது வடநாட்டில் யாரும் இல்லையாம். இந்தத் தெய்வத் தமிழ்நாட்டுக்கு அத்தகைய கதி நேராதிருக்கட்டும். அப்படி நேர்வதாயிருந்தால், வீரமறக்குலத்தில் பிறந்த நீங்கள் அந்த அசுர சக்திகளுடன் போராடச் சித்தமாயிருக்க வேண்டுமல்லவா?"

"கட்டாயம் சித்தமாயிருப்போம், தாயே!  மற்றொரு அசுர சக்திகளைப்பற்றியும் சொல்லுங்கள்!" என்று  வந்தியத்தேவன் கேட்டான்.

       "மற்றொரு வகை அசுரர்கள் அறிவுக் கூர்மையுள்ள வர்கள் அந்த அறிவைக் கெட்ட காரியங்களில் பயன் படுத்துகிறவர்கள். அவர்கள் தவம் செய்து வரம் பெறுவார்கள். அதையும் துஷ்ட காரியங்களுக்கே பயன்படுத்துவார்கள். திரிபுரர்கள் என்ன செய்தார்கள்? ஒவ்வொருவரும் ஓர் உலகத்தையே உண்டாக்கிக் கொண்டார்கள். வானத்தில் பறந்து சென்று நாடு நகரங்களின் மீது இறங்கி நிர்மூலமாக்கினார்கள். சூரபத்மன் எத்தனை தடவை அவனுடைய தலையைக் கொய்தாலும் புதிய தலை அடையும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இராவணன், இந்திரஜித்து முதலிய ராட்சதர்கள் வானத்தில் மேகங்களில் மறைந்துகொண்டு கீழே உள்ளவர்கள் மீது அஸ்திரங்களைப் பொழியும் சக்தி பெற்றிருந்தார்கள். இத்தகைய சூழ்ச்சித் திறமை வாய்ந்த அசுரசக்திகளையே 'முயலகன்' என்னும் அசுரனாக நம் முன்னோர்கள் உருவகப் படுத்தியிருகிறார்கள். இறைவன் ஆனந்த நடனம் புரியும்போதெல்லாம் தம்முடைய காலடியில் அடக்கி வைத்திருக்கும் முயலகன் மீதும் சிறிது ஞாபகம் வைத்துக்கொள்ளுகிறார். கொஞ்சம் கவனக் குறைவாயிருந்தால் முயலகன் கிளம்பி விடுவான். சிருஷ்டியின் ஆரம்பகாலத்தில் இருந்து அசுர சக்திகளுடன் தெய்வீக சக்திகள் போராடி வருகின்றன என்பதையே முயலகன் நமக்குத் தெரியப்படுத்துகிறான். ஆகையால், என் அருமை மக்களே! யுத்தமேகூடாது என்று நாம் எப்படிச் சொல்லி விட முடியும்?"

       "தேவி! இதுவரையில் எங்களுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்களை இன்று தெரிந்துகொண்டோம். எங்களுக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள்?என்று பொன்னியின் செல்வர் கேட்டார்.

      "குழந்தைகளே! நீங்கள் எப்போதும் தெய்வீக சக்திகளின் பக்கம் நின்று போராடுங்கள் என்று மட்டுமே நான் சொல்ல முடியும். உங்களுக்குக் கட்டளையிட முடியாது. உங்களுடைய அந்தராத்மாதான் உங்களுக்குக் கட்டளையிட முடியும். அந்தக் கட்டளையைக் கேட்டு நடவுங்கள்.

 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை 

 நூல்களை கற்கவில்லை ஆயினும் கற்று அறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும். அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும். 

இங்கே கற்றில னாயினும் கேட்டு பெற்றுக் கொள்கிறார்கள். இனி நாமும்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com