திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 36 

 அதிகாரம் 46 ,47 சிற்றினஞ்சேராமை ,தெரிந்து செயல்வகை

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு  இனநலம் ஏமாப் புடைத்து 

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரை பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும்.

 (பழுவூர் வம்சத்தினர் இக்குறளுக்கோர் சரியான உதாரணம்.)

விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தரசோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய மஹா வீரர்கள்! உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும் பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள்! கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்ட தில்லையே? இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழநாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம். 

         மேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்திரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத் தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தலைசிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத்தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள். 

        முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும், தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர். பராந்தக சக்ரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக்கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம் பட்டு விழும்போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின்

மீது போட்டுக்கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!"  என்ற செய்தியைத் தெரிவித்தார். அவ்விதமே அரிஞ்சயருக்கும், சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தான். 

        வல்லவரையன் முடியாத வியப்பில் ஆழ்ந்தான். அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சுந்தரசோழர்  எந்த ஒரு விஷயத்திற்கும் அவர் களுடைய யோசனையைக் கேட்டு நடப்பதிலும் வியப்பில்லை.  

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும் . 

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாக செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

(நம் புவனமோகினி சுந்தராங்கி நந்தினி தேவியார் ரவிதாசன், சோமன் சம்பவன், இடும்பன் காரி என பலருடன் சேர்ந்து சோழ நாட்டுக்கு பெருந்தீங்கு செய்யும் முயற்சிகளையும் அதன் முடிவையும் பார்க்கும் பொழுது...) 

(முயற்சி ....)

 “கடம்பூரில் எல்லாம் கோலாகலமாகத்தான் இருந்து வருகிறது. கலியாணப் பேச்சும், காதல் நாடகங்களுமா யிருக்கின்றன. நீ என்னமோ அந்தப் பழுவூர் ராணியை நம்பியிருப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை.." 

       "பழுவூர் ராணியா அவள்? பாண்டிமாதேவி என்று சொல்! வீர பாண்டியர் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னால் அவளைத் தம் பட்ட மகிஷியாக்கிக் கொண்டதை மறந்து விட்டாயா? வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்து விட்டாயா? ஒரு வாரத்துக்கு முன்னால் இதே இடத்தில் அவள் பாண்டிய குமாரன் கையிலிருந்து பாண்டிய குலத்து வீரவாளைப் பெற்றுக் கொள்ளவில்லையா..?” 

(முடிவு....) 

         ஓடி வந்த குதிரைகளைப் பார்த்து வியந்தவர்களில் முதலில் சுய உணர்வு பெற்றவன் ரவிதாஸன்தான்.

        "தேவி! இந்தப் போலி வைஷ்ணவன் தன் வேலைத் தனத்தைக் காண்பித்துவிட்டான். 'இவன் ஒற்றன், இவனை நம்ப வேண்டாம்!" என்று எத்தனையோ தடவை தங்களுக்கு நான் எச்சரித்திருக்கிறேன். நம்மைப் பிடிப்பதற்கு இவன் தன் ஆட்களைக் கொண்டு வந்திருக்கிறான். ஆனால் இவனால் நம்மைப் பிடிக்க முடியாது. இவனுடைய தெய்வமாகிய நாராயணனே வந்தாலும் முடியாது. வாருங்கள் போகலாம்.

குதிரைகள் வருவதற்குள் மலைமேல் ஏறிவிடலாம்!" என்றான் மந்திரவாதி . 

        ஆழ்வார்க்கடியான், "நந்தினி! இந்தப் பாதகர்களுடன் நீ போகாதே! இவர்களுடன் நீ சேர்ந்ததினால் நேர்ந்த விபத்துக்கள் எல்லாம் போதும்!" என்றான். 

      நந்தினி ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "திருமலை! வெகு நாளாக ஒன்று கேட்டுக்கொண்டிருந்தேன். அது நினைவு இருக்கிறதா? என் அன்னையிடம் அழைத்துப் போகும்படி உன்னை வேண்டிக் கொண்டிருந்தேன். இப்போதாவது என்னை நீ என் தாயிடம் அழைத்துப் போவதாக வாக்களித்தால் உன்னுடன் வருகிறேன். இல்லா விடில் இவர்களுடன் போகிறேன்" என்றாள். 

      "நந்தினி! இனி என்னால் அது இயலாத காரியம்...!” என்று திருமலை சொல்வதற்குள் ரவிதாஸன் குறுக்கிட்டு, ’’இவன் என்ன அழைத்துப் போவது? நான் அழைத்துப் போகிறேன், வாருங்கள்!" என்றான். 

      "ஆமாம். ஆமாம்; இவன் உன்னை உன் அன்னையிடம் யமலோகத்துக்கு அழைத்துப் போவான்! உன் அன்னையைக் கொன்றது போல், உன்னையும் கொன்று யமலோகத்துக்கு அனுப்பிவைப்பான்! நந்தினி! இந்தப் பாதகர்களுடைய சகவாசம் இனியும் உனக்கு வேண்டாம். இவர்களில் ஒருவன் உன் தாயைக் கொன்றவன்! மந்திரவாதியின் முகத்தைப் பார்! கொலைகாரன் என்று எழுதியிருக்கிறது!” என்று சொன்னான் ஆழ்வார்க்கடியான். 

       ரவிதாஸன் முகத்தில் கொந்தளித்த கோபத்துடன், ”பொய்! பொய்!" என்று கத்தினான். 

       சற்றுமுன் சாந்தம் குடிகொண்டிருந்த நந்தினியின் கண்களின் வெறியின் அறிகுறி காணப்பட்டது. 

      "திருமலை! இது உண்மையா? என் அன்னை உண்மையிலேயே இறந்துவிட்டாளா? அவளை இனி நான் பார்க்க முடியாதா?" என்றாள். 

      "சந்தேகமிருந்தால், இதோ இந்தப் பெண்ணைக் கேட்டுத் தெரிந்துகொள். இவர்களில் ஒருவனான சோமன் சாம்பவன்தான்  வேல் எறிந்து உன் அன்னையைக் கொன்றவன். இவள் நேரில் பார்த்தாள். அத்தையைக்

கொன்றவனைப் பின் தொடர்ந்து வந்தாள்! பூங்குழலி! சொல்!" என்றான் ஆழ்வார்க்கடியான். 

      "ஆமாம்! நானே என் கண்ணால் பார்த்தேனே! அத்தையைக் கொன்றவனைப் பழி வாங்கவே இங்கு வந்தேன்!" என்றாள் பூங்குழலி.  

      நந்தினி பைத்தியம் பிடித்தவள்போல் வெறி கொண்ட சிரிப்புச் சிரித்தான். "பழி வாங்க வந்தாயா? பழி! பழி! நான் ஒருத்தி பழிவாங்கிய இலட்சணம் போதாதா?" என்று சொல்லி விட்டு ரவிதாஸனைப் பார்த்து, "துரோகி! சண்டாளா! இப்படியா செய்தாய்?" என்றாள்.

        "ராணி! நீ நினைப்பது தவறு! நான் ஒரு துரோகமும் செய்யவில்லை. சோமன் சாம்பவன் சக்கரவர்த்தியின் மீது வேலை எறிந்தான். அந்த ஊமைப் பைத்தியக்காரி குறுக்கே விழுந்து செத்தாள்! அவள் தலைவிதி! இப்போது நீ என்ன சொல்கிறாய்? எங்களுடன் வரப் போகிறாயா, இல்லையா? அதோ குதிரைகள் நெருங்கி வந்துவிட்டன!" என்றான். 

      அவனுடைய வார்த்தைகளை நந்தினி காதில் வாங்கிக் கொண்டதாகத் தோன்றவில்லை. திடீரென்று கீழே உட்கார்ந்து கொண்டாள். இரண்டு கண்களையும், இரண்டு கரங்களால் பொத்திக் கொண்டாள். அவள் உடம்பெல்லாம் குலுங்கும்படி விம்மி அழுதாள். அழுகையுடன் வெறிச் சிரிப்பும் கலந்து வந்தது.

        ரவிதாஸன் தன் ஆட்களைப் பார்த்து, "ஓடுங்கள்! ஓடிப் போய் மலையிலேறிக் கொள்ளுங்கள்! இனி, ராணியை நம்புவதில் பயனில்லை" என்றான்.

 எல்லோரும் ஓடினார்கள்.

 ஆற்றின் வருந்தா வருத்தம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com