திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்: பத்மவாசன்

பாகம் -39

 அதிகாரங்கள் 53, 54 சுற்றந்தழால், பொச்சாவாமை

கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய 

சுற்றத்தால் சுற்றப் படும் 

 வள்ளல் தன்மையும் வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்த சுற்றத்தார் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

 (இங்கு உதாரணமாக என் மனக்கண்ணில் தோன்றுவது இரண்டு பிம்பங்கள். வறுமை நிலையில் இருந்தாலும் வள்ளல் தன்மையுடன் வந்தியத்தேவனுக்கு உதவிகள் செய்தும் வாஞ்சை மிகுச் சொல்லால் தாங்கியும் சிறைச்சென்ற சேந்தன் அமுதன்... இந்த பிம்பம் மாறி ஒருநாளும் இறைப் பதங்களை மறவாமல் எடுத்த செயல்களில் அக்கறையுடன் செயல்பட்டு நிறைவாக சோழ நாட்டின் உன்னத மணிமகுடத்தைத் தாங்கிய மன்னனாக அதே சேந்தன் அமுதன் எனும் மதுராந்தக உத்தமச் சோழன்...)

(பாதாளச் சிறையில் சேந்தன் அமுதனைச் சந்திக்கும் குந்தவை மற்றும் வானதி...) 

       ண்டபத்தின் ஒரு மூலைக்கு இதற்குள் அவர்கள் வந்திருந்தார்கள். அங்கிருந்த புலிக்கூண்டு ஒன்றைக் காவலர்கள் அப்பால் நகர்த்தினார்கள். அங்கே தரையில் பதித்திருந்த கதவு ஒன்று காணப்பட்டது. இரண்டு ஆட்கள் குனிந்து கதவை வெளிப்புறமாகத் திறந்தார்கள். உள்ளே சில படிக்கட்டுகள் காணப்பட்டன. அவற்றின் வழியாக ஒவ்வொருவராக இறங்கிச் சென்றார்கள். இருள் அதிக மாயிற்று. இரு சேவகர்கள் பிடித்திருந்த இரண்டு தீவர்த்திகளிலிருந்து புகையினால் மங்கிய வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற குறுகிய பாதைகளின் வழியாக அவர்கள் ஒற்றை வரிசையில் போக வேண்டியிருந்தது.

         அங்கே புலிகளின் பயங்கர உறுமல் ரோமம் சிலிர்க்கச் செய்தது என்றால், இங்கே நாலுபுறத்திலும் எழுந்த தீனமான, சோகமயமான மனிதக் குரல்கள் உள்ளம் பதறி உடல் நடுங்கச் செய்தன.

ஆனால், அந்தத் தீனக்குரல்களுக்கு மத்தியில், விந்தை! விந்தை! - ஓர் இனிய குரல் இசைத்ததும் கேட்டது!

         "பொன்னார் மேனியனே!

                        புலித்தோலை அரைக்கசைத்து 

          மின்னார் செஞ்சடை மேல் 

                      மிளிர்கொன்றை அணிந்தவனே!”

அந்தப் பாதாளச் சிறையில் இருந்த அறைகள் ஒரு வரிசையாக இல்லை. முன்னும் பின்னும் கோணலும் மாணலுமாக இருந்தன. ஒவ்வொரு அறை வாசலிலும் சென்று காவலன் தீவர்த்தியை உயர்த்திப் பிடித்தான். சில அறைகளில் உள்ளே ஒருவனே இருந்தான். சிலவற்றில் இருவர் இருந்தார்கள். சில அறைகளில் இருந்தவர்களைச் சுவரில் அடித்திருந்த ஆணி வளையத்தில் சேர்த்துச் சங்கிலியால் கட்டியிருந்தது. சில அறைகளில் அவ்விதம் கட்டாமல் சுயேச்சையாக விடப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு அறையிலும் இருந்தவர்களின் முகம் தெரிந்ததும் குந்தவைதேவி தலையை அசைக்க எல்லாரும் மேலே சென்றார்கள்.

இதற்குள்ளாக, "பொன்னார் மேனியனே!” பாட்டு மிகச் சமீபத்தில் கேட்கத் தொடங்கியிருந்தது. அந்த அறையில் சென்று தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தபோது அங்கே ஒரு சிறுபிள்ளை இருப்பது தெரிந்தது. ஏற்கெனவே நமக்குத் தெரிந்த பிள்ளைதான் அவன்; சேந்தன் அமுதன்.

        அவனுடைய குற்றமற்ற பால்வடியும் பச்சைப் பிள்ளை முகம் இளவரசிகளுடைய கவனத்தை கவர்ந்தது.

         அவனைக் குந்தவை பார்த்து, “பாடிக் கொண்டிருந்தது நீதானா!" என்று கேட்டாள்.

       "ஆம், தாயே!" என்றான்.

      ''உற்சாகமாயிருக்கிறாய் போலிருக்கிறது!”

         "உற்சாகத்துக்கு என்ன குறைவு, அம்மா! எங்கும் நிறைந்த இறைவன் இங்கேயும் என்னுடன் இருக்கிறார்!"

        "பெரிய ஞானி போலப் பேசுகிறாயே? நீ யார் அப்பா?

வெளியில் என்ன செய்துகொண்டிருந்தாய்?”

          "நான் பெரிய ஞானியுமில்லை. சின்ன ஞானியுமில்லை.

அம்மா! வெளியில் இருக்கும்போது பூமாலை புனைந்து

இறைவனுக்குச் சமர்ப்பித்துக்கொண்டிருந்தேன். இங்கே

பாமாலை புனைந்து மனத் திருப்தியடைகிறேன்!”

         "நீஞானி மட்டுமல்ல; புலவன் என்றும் தெரிகிறது. இந்த ஒரு பாடல்தான் உனக்குத் தெரியுமா? இன்னும் பலவும் தெரியுமா?"

        "இன்னும் சில பாடல்களும் வரும். ஆனால், இங்கு வந்தது முதல் இதையே பாடிக்கொண்டிருக்கிறேன்."

            "ஏன்?"

        "இங்கு வரும்போது தங்கசாலையின் வழியாக வந்தேன். இதுவரை நான் பாத்திராத பத்தரை மாற்றுப் பசும்பொன் திரளைப் பார்த்தேன். அது 'பொன்னார் மேனியன்' திருஉருவத்தை எனக்கு நினைவூட்டியது..."

                "அதிர்ஷ்டசாலி நீ! பொன்னைப் பார்த்தால் பலருக்குப் பலவித ஆசைகள் உண்டாகின்றன. உனக்கு இறைவனின் திருமேனியின் பேரில் நினைவு சென்றது. உனக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லையா அப்பா?"

          தாயார் மட்டும் இருக்கிறாள். தஞ்சைக் கோட்டைக்கு வெளியில் தாமரைக் குளத்தருகில் இருக்கிறாள்."

     "அந்த அம்மாள் பெயர்?"

                        "வாணி அம்மை."

           "நான் அந்த அம்மாளைப் பார்த்து நீ இங்கே உற்சாகமாயிருக்கிறாய் என்று சொல்கிறேன் "

         "பயனில்லை. அம்மா! என் தாய்க்குக் காதும் கேளாது; பேசவும் முடியாது...."

         "ஓகோ! உன் பெயர் சேந்தன் அமுதனா?" என்று இளையபிராட்டி வியப்புடன் கேட்டாள்.

        "ஆம். அம்மா இந்த ஏழையின் பெயர் தங்களுக்குத் தெரிந்திருக்கிறதே?"

         "என்ன குற்றத்துக்காக உன்னை இங்கே கொண்டு வந்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள்?"

          "நேற்றுவரை நான் செய்த குற்றம் இன்னதென்று எனக்கும் தெரியாமலிருந்தது. இன்றைக்குத்தான் தெரிந்தது."

           "என்னவென்று தெரிந்தது?"

           "ஒற்றன் ஒருவனுக்கு உதவி செய்த குற்றத்துக்காக என்னைப் பிடித்து வந்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தது."

       "அது என்ன?" எந்த ஒற்றனுக்கு நீ உதவி செய்தாய்?"

      "தஞ்கைக்கோட்டை வாசலில் ஒருநாள் வெளியூரிலிருந்து வந்த பிரயாணி ஒருவனைச் சந்தித்தேன். அவன் இரவில் தங்க இடம் வேண்டும் என்று சொன்னான். என் வீட்டுக்கு அழைத்துப் போனேன். ஆனால், அவன் ஒற்றன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..."

"அவன் பெயர் என்னவென்று தெரியுமா?"

            தன் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன் என்று அவன் சொன்னான். பழைய வாணர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறினான்..."

*****************

அரியவென் றாகாத வில்லை பொச்சாவாக்ற

கருவியாற் போற்றிச் செயின் 

மறதி இல்லாமலும் அக்கறையுடனும் செயல்பட்டால் முடியாதது என்று எதுவுமே இல்லை.

              இவ்விதம் பொன்னியின் செல்வர் சொல்லிக் கொண்டே சக்கரவர்த்தியின் மறுபக்கத்தில் வீற்றிருந்த மதுராந்தகரின் அருகிலே சென்று அவர் சிரஸில் கிரீடத்தை வைத்தார்.

         மகுடத்தை வைக்குங்கால் மதுராந்தகர் அதைத் தடுக்காமலிருக்கும் பொருட்டு வந்தியத்தேவன் முன் ஜாக்கிரதையாக அவர் பின்னால் நின்று அவருடைய தோள்கள் இரண்டையும் நட்புரிமையுடன் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தான்,

         ஆனால், மதுராந்தகரோ அப்படி ஒன்றும் செய்ய முயலவில்லை. அவர் மெய்மறந்து தன் வசமிழந்து உண்மையிலேயே பித்துப் பிடித்தவர் போல் நாலுபுறமும் வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தார்.

        மணிமகுடத்தைச் சூட்டியதும் பொன்னியின் செல்வர். "கோப் பரகேசரி மதுராந்தக உத்தமச் சோழதேவர் வாழ்க!" என்று முழங்கினார். “சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உத்தமச் சோழர் வாழ்க! வாழ்க!" என்று வந்தியத்தேவன் பெருங் குரலில் கூவினான்.

இத்தனை நேரமும் பிரமித்துப் போய் நின்ற முதன் மந்திரி அநிருத்தர் முதலியவர்கள் அனைவரும் இப்போது "கோப்பரகேசரி மதுராந்தக உத்தமச் சோழர் வாழ்க!" என்று முழங்கினார்கள்.

         சுந்தர சோழச் சக்கரவர்த்தி உணர்ச்சி மிகுதியால் பேசும் சக்தியை அடியோடு இழந்திருந்தபடியால் தம் கையிலிருந்த பல நிற மலர்களை மதுராந்தக உத்தமச் சோழர் மீது தூவினார்.

         அரண்மனைப் பெண்மணிகளும் சக்கரவர்த்தியைப்

பின்பற்றி மதுராந்தகர் மீது மலர் மாரி பொழிந்தார்கள். 

         மதுராந்தகர் சிறிது திகைப்பு நீங்கியதும் எழுந்து நேரே செம்பியன் மாதேவியிடம் சென்று கும்பிட்டு நின்றார். அந்த மூதாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோலப் பொங்கிப் பொழிந்துகொண்டிருந்தது.

          "மகனே! இறைவனுடைய திருவுள்ளம் இவ்வாறு இருக்கிறது! நீயும் நானும் அதற்கு எதிராக நடப்பது எப்படிச் சாத்தியம்?" என்றார்.

            பொன்னியின் செல்வர், சபையில் கூடியிருந்த மற்றப் புலவர் பெருமக்கள், பட்டர்கள், பிக்ஷுக்கள் ஆகியவர்களைப் பார்த்து, “நீங்கள் இனி உங்கள் வாழ்த்துக் கவிதைகளை உசிதப்படி மாற்றிக்கொண்டு சொல்லுங்கள்!" என்றார்.

           அவர்களும் அவசர அவசரமாக வாழ்த்துக் கவிதைகளை மாற்றி அமைத்துக்கொண்டு பாடத் தொடங்கினார்கள்.

அரியவென் றாகாதது இல்லை...

புரிகிறது...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com