திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!
Published on

ஓவியம்: பத்மவாசன்

 பாகம்- 41

 அதிகாரம் கண்ணோட்டம் 58

கருமஞ்சிதையாமல் கண்ணோட வல்லார்க் 

குரிமை உடைத்திவ் வுலகு 

 கடமை தவறாமல், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போர்க்கு இந்த உலகமே உரிமை உடையதாகும்.

 (குழந்தையிலிருந்து தன் தம்பி அருண்மொழிவர்மனைக் கண்ணுக்குள் வைத்து வளர்ப்பவள் தமக்கை குந்தவை. அதுபோலவே தன் தமக்கை மேல் தன் உயிரினும் மேலாக பாசம் வைத்திருந்தார் அருள்மொழி வர்மர். தன் தந்தை மற்றும் தன் தம்பிகளின் உயிருக்கு தீங்குறும்படி வினையாற்றியது நந்தினி தேவிதான் எனத் தெரிந்த பின்பும்கூட நந்தினியைக் காப்பாற்ற பெரிய பழுவேட்டரையரிடம் இறைஞ்சும் சிறிய பிராட்டியின் உள்ளத்தை வியப்புடன் நோக்க வேண்டியிருக்கிறது. அதிலும் உண்மையெல்லாம் தெரிந்த பின் பெருஞ் சீற்றத்தோடும் குற்ற உணர்வோடும் தன்நிலை மறந்து அமர்ந்திருக்கும் பெரிய பழுவேட்டரையரிடம் தன்னிலை தாழ்த்தி நந்தினியின் உயிருக்காய் வேண்டி நிற்கும் குந்தவை நம் மனதில் உயர்ந்து  நின்று விடுகிறார். தன் தம்பியை காக்கும் பெரும் பணியுடன் தன் தமக்கைக் காகவும் போராடும் குந்தவைக்கு இவ்வுலகம் உடைத்தானதில் வியப்பேது...

(குடந்தை ஜோதிடர் இல்லத்தில்...)

இவ்வாறு பழுவேட்டரையர் கூறி வந்தபோது அவர் சற்றும் எதிர்பாராத ஒரு காரியத்தைக் குந்தவை செய்தாள். திடீரென்று அவர் காலடியில் விழுந்து வணங்கினாள். பழுவேட்டரையர் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோது, இளையபிராட்டி எழுந்து நின்று, "ஐயா! எனக்கு ஒருவரம் கொடுத்து அருள வேண்டும்!" என்றாள்.

       "இளவரசி! என்னைச் சோதிக்கிறாய் போலத் தோன்றுகிறது. வேண்டாம்! என்னுடைய பாவச் செயல்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை நன்கு உணர்ந்துகொண்டேன். அவற்றுக்கு என்ன பிராயச்சித்தம் செய்துகொள்வது என்றுதான் யோசித்துக் கொண்டி ருக்கிறேன். அதற்கு முன்னால், இன்றையக் கண்டத்திலிருந்து சோழ குலத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் தப்புவித்தாக வேண்டும். உன் தந்தைக்கும், சகோதரர்களுக்கும் இன்று தீங்கு ஒன்றும் நேரிடாமலிருக்க வேண்டும். அதற்கு எனக்கு உதவி செய். இன்று ஒருநாள் போகட்டும். நாளைக்கு நானே உன்னிடம் வந்து, “எனக்கு தண்டனை என்ன?” “பிராயச்சித்தம் என்ன?" என்று கேட்பேன்!" என்றார்.

"ஐயா! தங்களுக்குத் தண்டனை கொடுக்கவோ, பிராயச் சித்தம் சொல்லவோ, நான் முற்பட மாட்டேன். தாங்கள் என் பாட்டனாரின் ஸ்தானத்தில் உள்ளவர். என் தந்தையின் போற்றுதலுக்கு உரியவர். உண்மையாகவே, தங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன்..."

     "அப்படியானால், உடனே கேள் அம்மா? வெறும் பேச்சுப் பேசுவதற்கு இப்பொழுது நேரமில்லை" 

        "கொடுப்பதாக வாக்கு அளியுங்கள்!"

        "உனக்கும், உன் குடும்பத்துக்கும் நான் செய்துவிட்ட துரோகத்துக்கு நான் கொடுக்கக் கூடியது எதுவும் ஈடாகாது. நீ எது கேட்டாலும் கொடுக்கிறேன். சீக்கிரம் கேள்!"

"இளையராணி நந்தினி தேவியைத் தாங்கள் ஒன்றும்

செய்வதில்லை என்று வாக்கு அளிக்க வேண்டும். அதுதான் நான் கோரும் வரம்!"

              "அம்மா! இது என்ன விளையாட்டா? விளையாட இதுதானா சமயம்? என் முதுமைப் பிராயத்தில் நான் புத்தி கெட்டுப்போனது உண்மைதான், அதற்காக என்னை முழுப் பைத்தியக்காரனாக்கி விடப் பார்க்கிறாயா? அந்தச் சதிகாரிக்கு நான் தக்க தண்டனை கொடுக்காவிட்டால், மற்ற சதிகாரர்களை எப்படித் தண்டிக்க முடியும்? என் கையினால் அவளைக் கொன்றுவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன். என் மனத்திலுள்ளதையெல்லாம் சொல்லிவிட்டு, இந்தக் கிழவனை அவளால் கடைசி வரையில் ஏமாற்ற முடியவில்லை யென்பதை எடுத்துக் காட்டிவிட்டு, அவளை என் வாளினாலேயே வெட்டிக் கொல்லுவேன். அதற்குக் குறைந்த தண்டனை எதுவும் அவளுக்குக் கொடுத்தால் நியாயம் செய்தவனாக மாட்டேன். அதற்குப் பிறகு, எனக்கு என்ன நியாயமான தண்டனை என்பதையும் யோசிப்பேன். போ! அம்மா! போ! உன் தந்தையையும், தம்பியையும் இன்று வரப் போகும் கண்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு வேண்டிய பிரயத்தனம் செய்!..."

       "செய்கிறேன், ஐயா. ஆனால், என் சகோதரியைப் பாதுகாக்கவும் முயற்சி செய்ய வேண்டாமா? இளைய ராணி என் சகோதரி. அவருக்குத் தாங்கள் என்ன தீங்கு செய்தாலும், அதுவும் சோழ குலத்துக்குச் செய்த துரோகமாகும்!”

         பழுவேட்டரையர் எல்லைக் கடந்த திகைப்பில் "நான் இன்னமும் கனவு கண்டுகொண்டிருக்கிறேனா?" என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன.

 கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போர்க்கு இந்த உலகமே உரிமையுடையதாகும். உரித்தாயிற்று...)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com