திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்: பத்மவாசன்

பாகம் - 45        

பொருட்பாலின் அடுத்த இயல் ‘அமைச்சியல்’

அதிகாரங்கள் 64, 65 அமைச்சு, சொல்வன்மை

 

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 

அருவினையும் மாண்டத மைச்சு 

செயலுக்கு உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன்

 (அநிருத்த பிரம்மராயரின் முக்கியத்துவம் மற்றும் வெவ்வேறு காட்சிகளில் அவரின் அரசியல் செயல்பாடுகளைப் பொன்னியின் செல்வன் வழி காண்போம்...)

முக்கியத்துவம்: 

        "தற்கு முன்னால் அகப்பட்டிருந்த ஆனைமங்கலச் செப்பேடுகள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள் - ஆகிய வற்றில் கொடுத்திருந்த சோழ வம்சாவளியுடன் அன்பில் செப்பேடுகளில் கண்டது பெரும்பாலும் ஒத்திருந்தது. எனவே, அந்தச் செப்பேடுகளில் கண்டவை சரித்திர பூர்வமான உண்மை விவரங்கள் என்பது ஊர்ஜிதமாயிற்று. மற்ற இரண்டு செப்பேடுகளில் காணாத இன்னும் சில விவரங்களும் இருந்தபடியால் "அன்பிற் செப்பேடுகள்" தமிழ்நாட்டுச் சரித்திர ஆராய்ச்சித் துறையில் மிகப் பிரசித்தி அடைந்தன.

      எனவே, அநிருத்த பிரமராயர் என்பவர் சரித்திரச் செப்பேடுகளில் புகழ் பெற்ற சோழ சாம்ராஜ்ய மந்திரி...

 காட்சி -1 

          ராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழைமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய அமைச்சர் வேலையை நடத்துவதற்குரிய சாதனங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன. கணக்கர்கள், ஓலை எழுதும் திருமந்திர நாயகர்கள், அகப்பரிவாரக்காவலர்கள் முதலியோர் அவரவர்களுடைய இடத்தில் ஆயத்தமாக இருந்தார்கள்.

         அநிருத்தர் படகிலிருந்து இறங்கி வந்து அம்மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஆனதும், தம்மைப் பார்க்க வந்திருந்தவர்களை அழைக்குமாறு கட்டளையிட்டார்.

         ஐந்து பேர் முதலில் வந்தார்கள். அவர்களைப் பார்த்தால் செல்வச் செழிப்புள்ள வர்த்தகர்கள் என்று தோன்றியது.

        ஒரு தட்டில் நவரத்தின மாலை ஒன்றை வைத்துச் சமர்ப்பித்தார்கள். அதை அநிருத்தப் பிரம்மராயர் வாங்கிக் கணக்கரிடம் கொடுத்து, "செம்பியன் மகாதேவியின் ஆலயத் திருப்பணிக்கு என்று எழுதி வைத்துக்கொள்க!" என்றார்.

       "பிறகு, வந்தவர்களைப் பார்த்து "நீங்கள் யார்?" என்று கேட்டார்.

         ''நானா தேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் சார்பில் நாங்கள் வந்திருக்கிறோம்” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

        "சந்தோஷம்; பாண்டியநாட்டில் உங்களுடைய வாணிபம் செழிப்பாயிருக்கிறதல்லவா?"

        "நாளுக்கு நாள் செழிப்படைந்து வருகிறது!" 

     "பாண்டிய நாட்டு மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?”

       "பாண்டிய வம்ச ஆட்சியைக் காட்டிலும் சோழ குல ஆட்சியே மேலோனது என்று பேசிக்கொள்கிறார்கள். முக்கியமாக, இளவரசர் அருள்மொழிவர்மரின் வீர தயாளங்களைக் குறித்துச் சிலாகிக்கிறார்கள். இலங்கையில் நடப்பதெல்லாம் இந்தப் பக்கத்து மக்களிடையில் பரவியிருக்கிறது..."

      "கீழ்க்கடல் நாடுகளுடன் உங்கள் கப்பல் வாணிபம் இப்போது எப்படியிருக்கிறது?"

      ''சுந்தர சோழ சக்கரவர்த்தி ஆளுகையில் ஒரு குறைவும் இல்லை. சென்ற ஆண்டில் அனுப்பிய எங்கள் கப்பல்கள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன. ஒன்றுகூடச் சேதமில்லை.'' 

       "கடல் கொள்ளைக்காரர்களினால் தொல்லை ஒன்றுமில்லையே?".

       ''சென்ற ஆண்டில் இல்லை, மானக்க வாரத் தீவுக்கு அருகில் இருந்த கடற் கொள்ளைக்காரர்களை நம் சோழக் கப்பற் படை அழித்தபிறகு கீழைக்கடல்களில் கொள்ளை பயம் கிடையாது."

      ''நல்லது; நாம் கொடுத்தனுப்பிய ஓலை சம்பந்தமாக என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?"

       "கட்டளைப்படி செய்திருக்கிறோம். இலங்கைச் சைன்யத்துக்கு அனுப்ப ஆயிரம் மூட்டை அரிசியும், ஐந்நூறு மூட்டை சோளமும், நூறுமூட்டை துவரம் பருப்பும் இந்த இராமேசுவரத் தீவில் கொண்டு வந்திருக்கிறோம். இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்."

   ''உங்களுடைய கப்பல்களிலேயே ஏற்றி அனுப்ப முடியுமா?"

     "கட்டளையிட்டால் செய்கிறோம்."

காட்சி -2             

       முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் சில தினங்களாகத் தலைநகரிலேயே தங்கியிருந்தார். அவரைக் காண்பதற்கு அரசாங்க அதிகாரிகள், சிற்றரசர்கள், சேனைத் தலைவர்கள், அயல்நாட்டுத் தூதுவர்கள், வர்த்தக் குழுக்களின் பிரதிநிதிகள். ஆலய நிர்வாகிகள், தென்மொழி வடமொழி வித்வான்கள் முதலியோர் வந்தவண்ணமிருந்தார்கள். ஆதலின் அவருடைய மாளிகையில் ஜே,ஜே என்று எப்போதும் ஜனக் கூட்டமாக இருந்தது.

        அநிருத்தர் தமக்கெனத் தனியாக காவல் படை வைத்துக்கொள்ளவில்லை. பரிவாரங்களும் மிகக் குறைவாகவே வைத்துக்கொண்டிருந்தார். ஆகையால் பழுவேட்டரையர்களோடு அவருக்குத் தகராறு எழுவதற்குக் காரணம் எதுவும் ஏற்படாமலிருந்தது.

         ஆனபோதிலும், சின்னப் பழுவேட்டரையர் முணுமுணுத்துக்கொண்டிருந்தார். முதன் மந்திரி தஞ்சை நகரில் தங்க ஆரம்பித்ததிலிருந்து கட்டுக்காவல் குறைந்து போயிருந்தது. முதன் மந்திரியைக் காண வேண்டுமென்ற வியாஜத்தில் கண்டவர்கள் எல்லாம் கோட்டைக்குள் நுழைந்துகொண்டேயிருந்தார்கள். சக்கரவர்த்தியின் அரண்மனையை அடுத்து முதல் மந்திரியின் மாளிகை இருந்தபடியால், அரண்மனை வட்டாரத்திலும் ஜனக்கூட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது. முதன் மந்திரியின் பெயரைச் சொல்லிக்கொண்டும் அவருடைய இலச்சினையைக் காட்டிக்கொண்டும் அநேகம்பேர் அங்கே வந்து அவரைப் பார்த்த வண்ணமிருந்தார்கள்.

           இதையெல்லாம் ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்று சின்னப் பழுவேட்டரையர் விரும்பினார். ஆனால், நேரில் முதன் மந்திரியிடம் போய்ச் சண்டை பிடிப்பதற்கு வேண்டிய துணிச்சல் அவருக்கு இல்லை. பெரிய பழுவேட்டரையரும் இருந்தால், இருவருமாக யோசித்து ஏதேனும் செய்யலாம் இந்தச் சமயம் பார்த்துப் பெரிய பழுவேட்டரையரும் கடம்பூருக்குப் போய் விட்டதனால், சின்னவரான காலாந்த கண்டருக்கு ஒரு கை ஒடிந்ததுபோல் இருந்தது. 

          கோட்டைக்குள் ஜனக்கூட்டத்தைச் சேர்த்துக் கட்டுக் காவலுக்கு ஊறு விளைவிப்பது போதாது என்று, முதன் மந்திரி அநிருத்தர் அடிக்கடி ஏதாவது சின்னப் பழுவேட்டரையரிடம் உதவி கேட்கும் பாவனையில் அவருக்குக் கட்டளை அனுப்பிக்கொண்டிருந்தார். 

         சில நாளைக்கு முன்பு கோடிக்கரைக்கு அனுப்பு வதற்குச் சில வீரர்கள் வேண்டும் என்று கேட்டார். காலாந்தக கண்டரும் ஆட்களைக் கொடுத்து உதவினார். பிறகு நேற்றைக்கு உயர் குலத்துப் பெண்மணி ஒருவரைத் திருவையாற்றிலிருந்து அழைத்து வரவேண்டுமென்றும், அதற்குப் பழுவூர் அரண்மனையின் மூடு பல்லக்கு ஒன்றும், சிவிகை தூக்கிகளும் வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். சின்னப் பழுவேட்டரையர் இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றினார். ஆனால், மனத்திற்குள் 'இந்தப் பிரம்மராயன் ஏதோ சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான். அவ்விதம் மூடு பல்லக்கில் வைத்து வரவழைக்கக் கூடிய உயர் குடும்பத்துப் பெண்மணி யார்? எதற்காக இங்கே வருகிறாள். இதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில் தமையனார் இங்கே இல்லாமற் போய்விட்டாரே?' என்று அவர் மனசு சஞ்சலப்பட்டது.

காட்சி -3

           மௌனமாயிருந்த அரசிளங் குமரியைப் பார்த்து முதன் மந்திரி அநிருத்தர், "தாயே! ஏன் பேசாமலிருக் கிறாய்? வந்தியத்தேவனை இன்னமும் நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

           ''ஐயா! அமைச்சர் திலகமே! நான் என்ன சொல்லட்டும்? இன்னும் சற்று நேரம் தாங்கள் பேசிக் கொண்டே போனால் என்னை நானே சந்தேகிக்கும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்றாள் இளவரசி.

          "காலம் அப்படி இருக்கிறது, அம்மா! யாரை நம்பலாம். யாரை நம்பக்கூடாது என்று தீர்மானிப்பது இந்த நாளில் அவ்வளவு சுலபமில்லைதான். நாலாபுறமும் அவ்வளவு விரோதிகள் சூழ்ந்திருக்கிறார்கள்; அவ்வளவு மர்மமான சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன!'' என்றார் முதன் மந்திரி அநிருத்தர்.

             ''ஆனாலும் தங்களுக்குத் தெரியாத மர்மமும். தாங்கள் அறியாத சூழ்ச்சியும் இராது என்று தோன்றுகிறது. நான் அனுப்பிய தூதனைப் பற்றி அவ்வளவு விவரங்களையும் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டாள் குந்தவை தேவி.

             ''அம்மணி! நான் ஆயிரம் கண்களும், இரண்டாயிரம் செவிகளும் படைத்தவன். நாடெங்கும் அவை பரவியிருக்கின்றன. பழுவூர் அரண்மனையில் என் ஆட்கள் இருக்கிறார்கள். பழுவூர் இளையராணியின் மெய்க்காவலர்களிலே எனக்குச் செய்தி அனுப்புகிறவன் ஒருவன் இருக்கிறான். ஆழ்வார்க்கடியானைப் போல் ஊர் ஊராக அலைந்து திரிந்து செய்தி கொண்டு வருகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். சுற்றுப்புற நாடுகளிலோ நான் அறியாமல் எந்தக் காரியமும் நடைபெற முடியாது என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஆயினும், யார் கண்டது? என்னையும் ஏமாற்றக் கூடியவர்கள் இருக்கலாம். நான் அறியாத மர்மங்களும் நடைபெறலாம்!"

        இவ்வாறு முதன் மந்திரி சொன்னபோது, பொன்னியின் செல்வன் இப்போது சூடாமணி விஹாரத்தில் இருப்பதும் இந்தப் பொல்லாத மனிதருக்குத் தெரியுமோ என்ற எண்ணம் குந்தவைக்கு உண்டாயிற்று. அதை அவள் வெளியிடாமல் மிகுந்த சிரமத்துடன் அடக்கிக்கொண்டாள்.

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்ல தமைச்சு.

ஒரு செயலை தேர்ந்தெடுத்தலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிப்படச் சொல்லும் ஆற்றல் படைத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும். 

தெரிதலும் தேர்ந்து செயலும் ... அநிருத்த பிரம்மராயர்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com