திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 50

ஓவியம்; பத்மவாசன்

அதிகாரங்கள் 74 ,75  நாடு, அரண்

பாகமோ 50 அதிகாரமோ 75. இது சற்றே சிறப்பு வாய்ந்த பாகம் நண்பர்களே...

தள்ளா விளையுள்ளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வந்தருஞ் சேர்வது  நாடு.

குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தி உள்ள நாடே நாடாகும். 

தள்ளா விளையுள்ளும் -  தாழ்விலா செல்வந்தரும்:

( சோழ நாடும் அதன் வளமையும்...) 

        குடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன் முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான். வழியில் அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் சோழ நாட்டைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமாகவே அவனைப் பிரமிக்கச் செய்தன. எந்த இனிய காட்சியையும் முதல்முறை பார்க்கும்போது அதன் இனிமை மிகுந்து தோன்றுமல்லவா? பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்துகொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும், வெண் தாமரையும், நீலோத்பலமும், செங்கழு நீரும் கண் கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்ல உரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரே லென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்துகொண்டே, இனிய கிராமியப் பாடல்களைப் பாடினார்கள். 

கரும்புத் தோட்டங்களின் பக்கத்தில் கரும்பு ஆலைகள் அமைத்திருந்தார்கள். முற்றிய கருப்பங் கழிகளை வெட்டி அந்தக் கரும்பு ஆலைகளில் கொடுத்துச் சாறு பிழிந்தார்கள். கரும்புச் சாற்றின் மணமும், வெல்லம் காய்ச்சும் மணமும் சேர்ந்து கலந்து வந்து மூக்கைத் தொளைத்தன. 

        தென்னந்தோப்புகளின் மத்தியில் கீற்று ஓலைகள் வேயப் பட்ட குடிசைகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன. கிராமங்களில் வீட்டு வாசலைச் சுத்தமாக மெழுகிப் பெருக்கித் தரையைக் கண்ணாடி போல் வைத்திருந் தார்கள். சில வீடுகளின் வாசல்களில் நெல் உலரப் போட்டிருந்தார்கள். அந்த நெல்லைக் கோழிகள் வந்து கொத்தித் தின்றுவிட்டு, 'கொக்கரக்கோ!'' என்று கத்திக் கொண்டு திரும்பிப் போயின. நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக் கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. “கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது?" என்று அலட்சியத்துடன் அக்குழந்தைகள் சோழியும், பல்லாங்குழியும் ஆடிக்கொண்டிருந்தார்கள். குடிசைகளின் கூரைகளின் வழியாக அடுப்புப்புகை மேலே வந்துகொண்டிருந்தது. அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும் நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிச பட்சிணிகளாகவே இருந்தார்கள். வல்லவரையனும் அப்படித்தான். எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன. 

          ஆங்காங்கே சாலை ஓரத்தில் கொல்லர் உலைக் களங்கள் இருந்தன. உலைகளில் நெருப்புத் தணல் தகதகவென்று ஜொலித்தது. இரும்பைப் பட்டறையில் வைத்து அடிக்கும் சத்தம் டணார் டணார் என்று கேட்டது. அந்த உலைக்களங்களில் குடியானவர்களுக்கு வேண்டிய ஏர்க்கொழு, மண்வெட்டி. கடப்பாரை முதலியவற்றுடன், கத்திகள், கேடயங்கள், வில்கள், ஈட்டிகள் முதலியன குப்பல் குப்பலாகக் கிடந்தன. அவற்றை வாங்கிக் கொண்டு போகக் குடியானவர்களும் போர் வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு காத்திருந்தார்கள். 

         சிறிய கிராமங்களிலும் சின்னஞ்சிறு கோவில்கள் காட்சி அளித்தன. கோவிலுக்குள்ளே சேமக்கலம் அடிக்கும் சத்தமும். நகரா முழங்கும் சத்தமும், மந்திரகோஷமும், தேவாரப் பண்பாடலும் எழுந்தன. 

      மாரியம்மன் முதலிய கிராம தேவதைகளை மஞ்சத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு பூசாரிகள் கரகம் எடுத்து ஆடிக் கொண்டும், உடுக்கு அடித்துக் கொண்டும் வந்து நெல் காணிக்கை தண்டினார்கள். 

       கழுத்தில் மணி கட்டிய மாடுகளைச் சிறுவர்கள் மேய்ப்பதற்கு ஓட்டிப் போனார்கள்.

       குடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத்தீர மரத் தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். அப்போது செம்மறியாடுகளைச் சண்டைக்கு ஏவிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். 

       வீட்டுக்கூரைகளின் மேல் பெண் மயில்கள் உட்கார்ந்து கூவ, அதைக் கேட்டு ஆண் மயில்கள் தோகையைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஜிவ்வென்று பறந்துபோய் அப் பெண் மயில்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தன.

புறாக்கள் அழகிய கழுத்தை அசைத்துக்கொண்டு அங்கு மிங்கும் சுற்றின. 

தக்காரும்: 

(நந்தினிக்கும் வந்தியத்தேவனுக்கும் இடையேயான உரையாடல்)

         "ஐயா! நீர் முகஸ்துதி செய்வதில் சமர்த்த ராயிருக்கிறீர்கள்!அது எனக்கு பிடிப்பதேயில்லை." 

         ''அம்மணி! முகஸ்துதி என்றால் என்னவோ?'' 

           "முகத்துக்கு நேரே ஒருவரைப் புகழ்வதுதான்.'' 

          ''அப்படியானால் சற்றே நீங்கள் திரும்பி முதுகைக் காட்டிக் கொண்டு உட்காருங்கள்...."

         "எதற்காக?" 

         ''முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்துக்கொண்டு புகழ்ச்சி கூறுவதற்காகத்தான். அதில் ஒன்றும் தவறு இல்லையல்லவா?" 

           ''நீர் பேச்சில் மிக கெட்டிக்காரராயிருக்கிறீர்."

        "இப்போது தாங்கள் அல்லவா முகஸ்துதி செய்கிறீர்கள்?"

          'நீரும் உமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, முதுகைக் காட்டுவதுதானே?" 

       ''மகாராணி! போர்களத்திலாகட்டும், பெண்மணிகளிட மாகட்டும், நான் முதுகு காட்டுவது எப்போதும் கிடையாது. தாங்கள் தாராளமாய் என்னை முகஸ்துதி செய்யலாம்!"

         இதைக் கேட்டுவிட்டு நந்தினி 'கலீர்' என்று சிரித்தாள்! 

         ''நீர் மந்திரவாதிதான்; சந்தேகமில்லை. நான் இம்மாதிரி வாய்விட்டுச் சிரித்து வெகுகாலம் ஆயிற்று!” என்று சொன்னாள். 

         "ஆனால், அம்மணி! தங்களைச் சிரிக்கப் பண்ணுவது வெகு அபாயம்! தடாகத்தில் தாமரை சிரித்து மகிழ்ந்தது; தேன் வண்டு மயங்கி விழுந்தது!'' என்றான் வந்தியத்தேவன். 

          "நீர் மந்திரவாதி மட்டுமல்ல; கவியும் போலியிருக்கிறதே!" 

             ''நான் முகஸ்துதிக்கும் அஞ்சமாட்டேன்; வசவுக்கும் கலங்க மாட்டேன்," 

        ''உம்மை யார் வைதது?" 

       ''சற்றுமுன் என்னைக் கவி என்றீர்களே?'" 

       "அப்படியென்றால்?

         "நான் சிறுவனாயிருந்தபோது என்னைச் சிலர் 'குரங்கு மூஞ்சி!" என்று சொல்வதுண்டு. வெகு நாளைக்குப் பிறகு இன்றைக்குத்தான் தங்களுடைய பவளச் செவ்வாயினால் அதைக் கேட்டேன்." 

       "உம்மையா குரங்கு மூஞ்சி என்றார்கள்? யார் அப்படிப் பட்ட புத்திசாலிகள்?" 

        ''அவர்களில் யாரும் இப்போது உயிரோடில்லை." 

          "உம்மை நான் அவ்விதம் சொல்லவில்லை. கவிபாடக் கூடியவர் போலிருக்கிறதே என்று சொன்னேன். "  

          ''கொஞ்சம் கவியும் பாடுவேன். ஆனால் பகைவர் களுக்கு முன்னால்தான் பாடுவேன். வில்லம்பினால் சாகாதவர்கள், சொல்லம்பினால் சாகட்டும் என்று!"

**************************

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வ தரண்.

முற்றுகையிடும் வல்லமை மிக்க படையை எதிர்த்து உள்ளே இருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும் .

இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரைய னுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைத்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழநாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச்சுவர்களைப் போலவே வளைந்து சென்றன. 

          கோட்டை வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், அவற்றுக்குத் தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வெளிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. இதையெல்லாம் பார்த்த வல்லவரையனின் உள்ளத்தில் சிறிது தயக்கமும் துணுக்கமும் ஏற்பட்டன. 'ஏதோ இங்கே பெரிய விசேஷம் ஒன்று நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நாம் வந்து சேர்ந்தோமே' என்று எண்ணினான். நடக்கும் விசேஷம் என்னவென்பதைப் உள்ளபார்த்துத் தெரிந்துகொள்ளும் ஆவலும் ஒரு பக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாசற் கதவு திறந்து தானிருந்தது. ஆனால் திறந்திருந்த வாசலில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் யமகிங்கரர்களைப் போலிருந்தது. 

(சோழ நாட்டு பெருங்குடி தலைவர் வீட்டுக் கோட்டையின் காட்சி ஓர் உதாரணமாய் ....அப்படியே தஞ்சைக் கோட்டையின் அரணையும் அதன் பிரம்மாண்டத்தையும் காவலையும் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...)

          "நாடு" "அரண்" என்ற அதிகாரங்களுக்கு அடுத்து தொடரத்தான் நினைத்திருந்தேன். ஆனால், பாதுகாப்பான "அரண் - நம்நாடு" என அமர்ந்திருந்து திருக்குறளையும் பொன்னியின் செல்வனையும் சிந்திப்பது எவ்வளவு சுகமாய் இருக்கிறது. நீங்களும் கடந்து வந்த 50 பாகங்களையும் சற்றே சிந்தித்துக் கொண்டிருங்கள் நண்பர்களே... வெகு விரைவில் மீண்டும் சந்திப்போம்…

                               இடைவேளை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com