திருக்குறளும் பொன்னியின் செல்வனும்.

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்.

ஓவியம்: பத்மவாசன்

பாகம் - 24

பெருநாவலர் திருக்குறளின் 25, 26 ஆம் அதிகாரங்கள் முறையே அருளுடைமை மற்றும் புலால் மறுத்தல்.

மன்னுயி  ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப 

தன்னுயி ரஞ்சும் வினை 

நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்கு தன் உயிரைப் பற்றிய பயம் வராது

(பொக்கிஷ நிலவறைக் கடந்து சுரங்கப்பாதை முடிவில் கந்தமாறன் முதுகில்  காவலன் கத்தியால் குத்தி விட துடித்துப்போன வந்தியத்தேவன் தன்னுயிரையும் பொருட்படுத்தாது...)

வந்தியத்தேவன் தான் பின்னால் ஒதுங்கியிருந்த

இடத்திலிருந்து வெளிவந்தான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்! அந்தச் சத்தத்தைக் கேட்டுக் காவலன் திரும்பினான்! தீவர்த்தியின் ஒளி வந்தியத்தேவன் முகத்தில் விழுந்தது!

வந்தியத்தேவனுடைய முதல் எண்ணம், எப்படியாவது கந்தன் மாறனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அவனைக் காப்பாற்றும் பிரயத்தனம் முதலில் செய்தால், அவனுடைய கதிதான் நமக்கும் ஏற்படும். ஆகையால் இந்தக் கொடூரக் காவலனை முதலில் சரிப்படுத்த வேண்டும். எனவே, பாய்ந்து சென்றவன் காவலனுடைய கழுத்தில் தன்னுடைய ஒரு கையைச் சுற்றி வளைத்துக்கொண்டான். இன்னொரு கையால் தீவர்த்தியைத் தட்டி விட்டான். தீவர்த்தி தரையில் விழுந்தது. அதன் ஒளிப்பிழம்பு சுருங்கிப் புகை அதிகமாயிற்று. காவலனுடைய கழுத்தை ஒரு இறுக்கு இறுக்கி வந்தியத்தேவன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அவனைக் கீழே தள்ளினான். காவலனுடைய தலை சுரங்கப் பாதையின் சுவரில் மோதியது. அவன் கீழே விழுந்தான். வந்தியத்தேவன் தீவர்த்தியை கொண்டு அவன் அருகில் சென்று பார்த்தான் செத்தவனைப் போல் அவன் கிடந்தான். ஆயினும் முன் ஜாக்கிரதையுடன் அவன் அங்கவஸ்திரத்தை எடுத்து இரண்டு கையையும் சேர்த்து இறுக்கிக் கட்டினான். இவ்வளவையும் சில விநாடி நேரத்தில் செய்து விட்டுக் கந்தன்மாறனிடம் ஓடினான். அவன் முதுகில் குத்திய கத்தியுடன் பாதி உடம்பு சுரங்கப்பாதையிலும் பாதி உடல் வெளியிலுமாகக் கிடப்பதைக் கண்டான். அவனுடைய வேலும் பக்கத்தில் விழுந்து கிடந்தது. வந்தியத்தேவன் வெளியில் சென்று கத்தன்மாறனைப் பிடித்து இழுத்து வெளியேற்றினான். வேலையும் எடுத்துக்கொண்டான். உடனே கதவு தானாகவே மூடிக்கொண்டது. சுவர் அந்தப் பெரும் இரகசியத்தை மறைத்துக் கொண்டு இருள் வடிவமாக ஓங்கி நின்றது. ஓங்கி அடித்த காற்றிலிருந்து கோட்டைக்கு வெளியே வந்தாகிவிட்டது என்பதை வந்தியத்தேவன் அறிந்துகொண்டான். அடர்ந்த மரங்களும் கோட்டைச்சுவர் கொத்தளங்களும் சந்திரனை மறைத்துக் கொண்டிருந்தபடியால் நிலா வெளிச்சம் மிக மிக மங்கலாகத் தெரிந்தது.

கந்தன்மாறனைத் தூக்கி வந்தியத் தேவன் தோளில் போட்டுக் கொண்டான். ஒரு கையில் கந்தன் மாறனின் வேலையும் எடுத்துக்கொண்டான். ஒரு அடி எடுத்து வைத்தான். சடசட வென்று மண் சரிந்து செங்குத்தாகக் கீழே விழும் உணர்ச்சி ஏற்பட்டது. சட்டென்று வேலை ஊன்றிக் கொண்டு பெரு முயற்சி செய்து நின்றான். கீழே பார்த்தான். மரங்களும் கோட்டைச் சுவரும் அளித்த நிழலில் நீர்ப்பிரவாகம் தெரிந்தது. அதிவேகமாகப் பிரவாகச் சுழல்கள் சுழிகளுடன் சென்று கொண்டிருந்ததும் ஒருவாறு தெரிந்தது. நல்ல வேளை! கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம். கடவுள் காப்பாற்றினார்! அந்தக் கொடும் பாதகக் காவலன்- ஆனால் அவனை நொந்து என்ன பயன்? எஜமான் கட்டளையைத்தானே அவன் நிறைவேற்றியிருக்க வேண்டும்! வாசற்படியில் முதுகில் குத்தி அப்படியே இந்தப் பள்ளப் புனல் வெள்ளத்தில் தள்ளிவிட உத்தேசித்திருக்க வேண்டும். நம்முடைய கால் இன்னும் சிறிது சறுக்கி விட்டிருந்தால் இரண்டு பேரும் இந்த ஆற்று மடுவில் விழுந்திருக்க நேர்ந்திருக்கும். நாம் ஒருவேளை தப்பிப் பிழைத் தாலும் கந்தன்மாறன் கதி அதோகதிதான்! தஞ்சைக் கோட்டைச் சுவரை ஓரிடத்தில் வடவாறு நெருங்கிச் செல்வதாக வந்தியத்தேவன் அறிந்திருந்தான். இது வடவாறாகத்தான் இருக்க வேண்டும். வடவாற்றில் அதிக வெள்ளம் அப்போது இல்லையென்றாலும் இந்தக் கோட்டை ஓரத்தில் ஆழமான மடுவாக இருக்கலாம். யார் கண்டது? வேலைத் தண்ணீரில் விட்டு ஆழம் பார்த்தான் வந்தியத்தேவன். வேல் முழுவதும் தண்ணீருக்குள் சென்று முழுகியும் தரை தட்டுப் படவில்லை! ஆகா] என்ன கொடூரமான பாதகர்கள் இவர்கள்!....அதைப் பற்றி யோசிக்க இது சமயமில்லை. நாமும் தப்பி, கந்தன் மாறனையும் தப்புவிக்கும் வழியைத் தேட வேண்டும். வெள்ளப் பிரவாகத்தின் ஓரமாகவே கால்கள் சறுக்கி விடாமல் கெட்டியாக அழுத்திப் பாதங்களை வைத்து வந்தியத்தேவன் நடந்தான். தோளில் கந்தன்மாறனுடனும் கையில் அவனுடைய வேலுடனும் நடந்தான். கந்தன்மாறன் இரண்டு மூன்று தடவை முக்கிமுனகியது அவனுடைய நண்பனுக்குத் தைரியத்தையும் மன உறுதியையும் அளித்தது. கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது. கரையோரத்தில் காடு தென்பட்டது. கீழே முட்கள் நிறைய கிடந்தபடியால் கால் அடி வைப்பதும் கஷ்டமாயிருந்தது. ஆகா! இது என்ன? ஒரு மரம் ஆற்றில் விழுந்து கிடக்கிறதே! நல்ல உயரமான மரமாயிருந்திருக்க வேண்டும். வெள்ளம் அதனுடைய வேரைப் பறித்து விட்டது போலும்! பாதி ஆறு வரையில் விழுந்து கிடக்கிறது. அதில் ஏறித் தட்டுத்தடுமாறி நடந்தான். வெள்ளத்தின் வேகத்தில் மரம் அசைந்து கொண்டிருந்தது. மரத்தின் கிளைகளும் இலைகளும். தண்ணீரில் அலைப்புண்டு தவித்தன. காற்றோ அசாத்தியமாக அடித்துக்கொண்டிருந்தது. மரத்தின் நுனிக்கு வந்ததும் வேலை விட்டு ஆழம் பார்த்தான். நல்லவேளை! முருகன் காப்பாற்றினான். இங்கே அவ்வளவு பள்ளமில்லை! வந்தியத்தேவன் மரத்திலிருந்து நதியில் இறங்கிக் கடந்து சென்றான். அங்கங்கே பள்ளம் மேடுகளைச் சமாளித்துக்கொண்டு சென்றான். வெள்ளத்தின் வேகத்தையும் காற்றின் தீவிரத்தையும் தன் மன உறுதியினால் எதிர்த்துப் போராடிக்கொண்டு சென்றான். அவன் உடம்பு வெட வெட என்று சில சமயம் நடுங்கியது. தோளில் கிடந்த கந்தன்மாறன் சில சமயம் நழுவி விழுந்துவிடப் பார்த்தான். இந்த அபாயங்களுக்கெல்லாம் தப்பி வந்தியத்தேவன் அக்கரையை அடைந்தான். கொஞ்சதூரம் இடுப்புவரை நனைந்த ஈரத் துணியுடன் ஆஜானுபாகுவான கந்தன்மாறனுடைய கனமான உடலைத்தூக்கிக்கொண்டு தள்ளாடிச் சென்ற பிறகு,மர நிழலில் சிறிது இடை வெளி ஏற்பட்ட ஓரிடத்தில் கந்தன் மாறனைக் கீழே மெதுவாக வைத்தான். முதலில் சிரம பரிகாரம் செய்து கொள்ள விரும்பினான். அத்துடன் கந்தன் மாறனுடைய உடம்பில் இன்னும் உயிர் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்பினான். உயிரற்ற உடலைச் சுமந்து சென்று என்ன உபயோகம்? அதைக்காட்டிலும் அக்காவலன் உத்தேசித்ததுபோல் வெள்ளத்திலேயே விட்டுச்செல்லலாம். இல்லை ! இல்லை! உயிர் இருக்கிறது. பெருமூச்சு வருகிறது. நாடி வேகமாக அடித்துக் கொள்கிறது.நெஞ்சு விம்முகிறது. இப்போது என்ன செய்யலாம்? முதுகிலிருந்து கத்தியை எடுக்கலாமா? எடுத்தால் ரத்தம் பீறிட்டு அடிக்கும். அதனால் உயிர் போனாலும் போய்விடும். காயத்துக்கு உடனே சிகிச்சை செய்து கட்டுக் கட்ட வேண்டும். ஒருவனாகச் செய்யக்கூடிய காரியமல்லவே? வேறு யாரை உதவிக்குத் தேடுவது?. சேந்தன் அமுதனுடைய நினைவு வந்தது. அவனுடைய தோட்டமும், வீடும் வடவாற்றின் கரையிலேதான் இருக்கிறது. இங்கே சமீபத்திலேயே இருக்கக் கூடும். எப்படியாவது சேந்தன் அமுதனுடைய வீட்டுக்கு தூக்கிக் கொண்டுபோய்ச் சேர்த்தால் கந்தன்மாறன் பிழைக்க வழியுண்டு.ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்.

( நம் பொன்னியின் செல்வனில் பரிமாறப்படும் உணவுகளை ஒருமுறை ருசித்தால் புலால் மறுத்தலும் புரியவரும் நண்பர்களே...)

நாம் ஏற்கனவே பாகம் 9 விருந்தோம்பல் அத்தியாயத்தில்  கண்ட, சேந்தன் அமுதன் வீட்டு மெனு: இடியாப்பம் இனிப்பான தேங்காய்ப் பாலும், புளிக் கறியும் சோளமா பணியாரமும், அரிசிச் சோறும் தயிரும்...

கடற்கரையில் மந்தாகினி தேவியின் நளபாகம்: வரகரிசி சோறும் வள்ளி கிழங்கும்...

இலங்கை மண்ணில் சோழ வீரர்களுடனான விருந்து: பொங்கலும் கறியமுதும்...

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 

எல்லா உயிருந் தொழும் 

புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

வாழட்டும் உயிர்கள். வணங்கட்டும் மானுடர்தமை.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com