திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

பாகம் – 26

ஓவியம்: பத்மவாசன்

எத்தனை யுகங்கள் கடந்தாலும் எக்காலத்தும் பொருந்தும் திருக்குறளின் 28 ஆம் அதிகாரம் கூடா ஒழுக்கம்.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியா ருடைத்து. 

புறத்தில் குன்றிமணியைப் போல செம்மையானவராய் காணப்பட்டாலும் அகத்தில் குன்றிமணியின் முனைப்போல் கருத்திருப்போரும் உலகில் உண்டு.

இக்குறள் காணும்கண் என் மனக்கண் முன் வந்தது சாட்சாத் நந்தினி தேவியேதான். செம்மையும் கருமையுமாய் இரு வேறு காட்சிகள்.முதலில் வந்தியத்தேவன் - நந்தினி சந்திப்பு...

  முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை - பனைமரச் சின்னம் உடை துணித் திரை-விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத்திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெரிந்தது. வந்தியத்தேவன் இனித் தான் குதிரை மேலிருப்பது தகாது என்று எண்ணி ஒரு நொடியில் கீழே குதித்தான். சிவிகையின் அருகில் ஓடி வந்து, 'இளவரசே! இளவரசே! பல்லக்குச் சுமக்கும் ஆட்கள்...” என்று சொல்லிக்கொண்டே அண்ணாந்து பார்த்தான். மீண்டும் உற்றுப் பார்த்தான்; கண்ணிமைகளை மூடித்திறந்து மேலும் பார்த்தான்; பார்த்த கண்கள் கூசின! பேசிய நாக்குழறியது. தொண்டையில் திடீரென்று ஈரம் வற்றியது. "இல்லை, இல்லை! தாங்கள்.... பழுவூர் இழவரசி!...பளுவூர் இரவளசி... உங்கள் ஆட்களின் குதிரை என் பல்லக்கை இடித்தது!..." என்று உளறிக் கொட்டினான்.

இதெல்லாம் கண்மூடித் திறக்கும் நேரத்துக்குள் நடந்தது. பல்லக்கின் முன்னும் பின்னும் சென்ற வேல்வீரர்கள் ஓடி வந்து வல்லவரையனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்படி அவர்கள் சூழ்ந்துகொண்டார்கள் என்பது வல்லவரையனுக்கும் தெரிந்தது. அவனுடைய கையும் இயல்பாக உறைவாளிடம் சென்றது. ஆனால் கண்களை மட்டும் பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில் ஒளிர்ந்த மோகனாங்கியின் சந்திர பிம்ப வதனத்தினின்றும் அவனால் அகற்ற முடியவில்லை!

          ஆம்; வல்லவரையன் எதிர்பார்த்ததற்கு மாறாக, இப்போது அப்பல்லக்கில் அவன் கண்டது ஒரு நிஜமான பெண்ணின் வடிவந்தான்! பெண் என்றாலும், எப்படிப்பட்ட பெண்! பார்த்தவர்களைப் பைத்தியமாக அடிக்கக்கூடிய இத்தகைய பெண்ணழகு இவ்வுலகில் இருக்கக்கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணியதே இல்லை.

         நல்லவேளையாக, அதே நிமிஷத்தில் வந்தியத் தேவனுடைய மூளை நரம்பு ஒன்று அசைந்தது. அதிசயமான ஒரு எண்ணம் அவன் உள்ளத்தில் உதயமாயிற்று. அதை உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான். 

ஒரு பெருமுயற்சி செய்து, தொண்டையைக் கனைத்து, நாவிற்குப் பேசும் சக்தியை வரவழைத்துக் கொண்டு, "மன்னிக்க வேண்டும்! தாங்கள் பழுவூர் இளையராணிதானே! தங்களை பார்ப்பதற்காகத்தான் இத்தனை தூரம் வந்தேன்!" என்றான். 

        பழுவூர் இளையராணியின் பால்வடியும் முகத்தில் இளநகை அரும்பியது. அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு சிறிது விரிந்து உள்ளே பதித்திருந்த வெண்முத்து வரிசையை இலேசாக புலப்படுத்தியது. அந்தப் புன்முறுவலின் காந்தி நமது இளம் வீரனைத் திக்குமுக்காடித் திணறச் செய்தது.

          பல்லக்கிலிருந்த பெண்ணரசி வந்தியத்தேவனை நோக்கினாள். வந்தியத்தேவனுடைய நெஞ்சில் இரண்டு கூரிய வேல் முனைகள் பாய்ந்தன.

        ''ஆமாம்; நான் பழுவூர் இளையராணிதான்!’’ என்றாள் அப்பெண்மணி.

       இவளுடைய குரலில் அத்தகைய போதை தரும் பொருள் என்ன கலந்திருக்க முடியும்? ஏன் இக்குரலைக்கேட்டு நமது தலை இவ்விதம் கிறுகிறுக்க வேண்டும்?

       "சற்று முன்னால் நீ என்ன சொன்னாய்? ஏதோ முறையிட்டாயே? சிவிகை சுமக்கும் ஆட்களைப்பற்றி?"

         காசிப்பட்டின்மென்மையும், கள்ளின் போதையும், காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும் ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா?... அவ்விதம் இதோ கலத்திருக்கின்றனவே!

  (ஆதித்த கரிகாலன் வாய்மொழி பார்த்திபேந்திரனிடம் ... ஆதித்த கரிகாலன்- நந்தினி சந்திப்பு...)

  "அதெல்லாம் உனக்குப் பிடிக்காதுதான்! அர்ச்சகர் வீட்டில் வளர்ந்தவள் பழுவூர் ராணி ஆகிவிட்டாய் அல்லவா?' என்றேன்.

         "இதோடு திருப்தியடைவதாக எண்ணம் இல்லை. சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் சக்கர வர்த்தினியாக வீற்றிருப்பதாக உத்தேசம். தங்களுக்கு இஷ்டமிருந்தால் சொல்லுங்கள். பழுவேட்டரையர் இருவரையும் கொன்றுவிட்டு, சுந்தரசோழரைச் சிறையில் அடைத்துவிட்டு, சக்கரவர்த்தியாகி

என்னைத் தங்கள் பட்டமகிஷியாக்கிக் கொள்கிறதாயிருந்தால் சொல்லுங்கள் "என்றாள்.

       "ஐயோ என்ன பயங்கரமான வார்த்தைகளைச் சொல்கிறாய்?"என்றேன். 

       'காயமடைந்து படுத்துக் கிடந்த பாண்டியனை என் கண் முன்னால் கொன்றது பயங்கரமான காரியமில்லையா?' என்று நந்தினி கேட்டாள். 

          'இளவரசே! எப்போதாவது தங்களுடைய மனத்தை மாற்றிக் கொண்டால் என்னிடம் திரும்பிவாருங்கள். என்னைச் சக்கரவர்த்தினியாக்கிக் கொள்ளத் தங்கள் மனம் இடம் கொடுக்கும்போது வாருங்கள்!' என்றாள். 

       அன்று அவளை விட்டுப் பிரித்தவன் பிறகு அவளைப் பார்க்கவே இல்லை!” என்றான் ஆதித்த கரிகாலன்.

       இதையெல்லாம் கேட்டுப் பயங்கரமும் திகைப்பும் அடைந்த பார்த்திபேந்திரன், ''அரசே! இப்படியும் ஒரு ராட்சஸி உலகில் இருக்கமுடியுமா? அவளைத் தாங்கள் மறுபடி சந்திக்காததே நல்லதாய்ப் போயிற்று !"என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.

"அவளை நான் போய்ப் பார்க்கவில்லை என்பது சரிதான்! ஆனால் அவள் என்னை விட்டபாடில்லை. பல்லவா! இரவும் பகலும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து என்னை வதைக்கிறாள். பகலில் நினைவிலே வருகிறாள். இரவில் கனவிலே வருகிறாள். ஒரு சமயம் முகத்தில் மோகனப் புன்னகையுடன் என்னைக்கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வருகிறாள். இன்னொரு சமயம் கையில் கூரிய கத்தியுடன் என்னைக் குத்திக் கொல்ல வருகிறாள். ஒரு சமயம் கண்களில் கண்ணீர் பெருக்கி விம்மிக் கொண்டு வருகிறாள். வேறொரு சமயம் தலைவிரி கோலமாய்க் கன்னங்களை கை விரல்களினால் பிறாண்டிக் கொண்டும் அலறி அழுதுகொண்டும் வருகிறாள். ஒரு சமயம் பைத்தியம் பிடித்தவளைப் போல் பயங்கரமாய்ச் சிரித்துக்கொண்டு வருகிறாள். இன்னொரு சமயம் அமைதியான முகத்துடன் ஆறுதல் சொல்ல வருகிறாள். கடவுளே ! அந்தப் பாதகி என்னை எப்படித்தான் வதைக்கிறாள் என்று சொல்லிமுடியாது. இன்று மாலை பாட்டன் கூறியது நினைவிருக்கிறதா ! நான் ஏன் தஞ்சை போக்கூடாது என்பதற்கு ஏதேதோ காரணம் கூறினார். உண்மையில் நான் தஞ்சை போகாமலிருப்பதற்கும் என் தந்தையைக் காஞ்சிக்கு வரவழைக்க விரும்புவதற்கும் காரணம் நந்தினிதான்...."

         "அரசே! கேவலம் ஒரு பெண்ணுக்குப் பயந்து கொண்டா தஞ்சைக்குப் போகாமலிருக்கிறீர்கள்? அப்படி அவள் என்னதான் செய்துவிடுவாள்! வஞ்சனையாக விஷம் வைத்துத் தங்களைக் கொன்றுவிடுவாள் என்று அஞ்சுகிறீகளா?...."

       "இல்லை. பார்த்திபா, இல்லை! இன்னமும் என்னை நீ நன்றாகப் புரிந்துகொள்ளவில்லை. அவள் என்னைக் கொன்று விடுவாள் என்பதற்காக நான் அஞ்சவில்லை. அவளுடைய இஷ்டப்படி என்னைச் செய்ய வைத்து விடுவாளோ என்றுதான் பயப்படுகிறேன். 'உன் தந்தையைச் சிறையில் போடு!' ‘உன் தங்கையை நாட்டைவிட்டுத் துரத்து? '  'இந்தக் கிழவனைக் கொன்று என்னைச் சிம்மாசனத்தில் ஏற்று ! ' என்று அந்த மாய மோகினி மறுமுறை சொன்னால், எனக்கு அப்படியெல்லாம் செய்யத் தோன்றி விடுமோ என்று பயப்படுகிறேன். நண்பா! ஒன்று, நந்தினி சாகவேண்டும் ;அல்லது நான் சாகவேண்டும்; அல்லது இரண்டு பேரும் சாகவேண்டும். இல்லாவிடில் இந்த ஜன்மத்தில் எனக்கு மன அமைதி கிடையாது" என்றான் கரிகாலன்.

       “அரசே! இது என்ன பேச்சு· தாங்கள் ஏன் சாகவேண்டும்? எனக்கு அனுமதி கொடுங்கள்! இலங்கைக்கு அப்புறம் போகிறேன். உடனே தஞ்சாவூர் சென்று அவளைக் கொன்று விட்டு வருகிறேன். ஸ்திரீஹத்தி தோஷம் எனக்கு வந்தால் வரட்டும்...."

           "அப்படி ஏதாவது செய்தால், உன்னை என் பரம வைரியாகக் கருதுவேன். நந்தினியைக் கொல்லத்தான் வேண்டுமென்றால், என்னுடைய இந்தக் கையினாலேயே அவளைக் கொல்லுவேன்! கொன்றுவிட்டு என்னையும் கொன்று கொண்டு மாளுவேன். வேறொருவர் அவளுடைய சுண்டு விரலின் நகத்துக்குக்கேடு செய்வதையும் என்னால் பொறுக்க முடியாது! நண்பா !"

 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலில் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்று செயலால் மனிதரை எடை போட வேண்டும்.

 எக்காலத்துக்கும் பொருந்தும்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com