திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்: பத்மவாசன்

 பாகம் -29

ம்முறை திருக்குறள் எனும் முத்துச்சரத்தில் ஒரு குறள் முத்தெடுத்து அது தொடர்பான ஓர் கதாபாத்திரம் காண்போம்...

 அதிகாரம் 33 - கொல்லாமை:

 நல்லார் றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் 

கொல்லாமை சூழும் நெறி.

 நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால் எந்த உயிரையும் கொல்லாத அறத்தை போற்றும் நெறியாகும்.

 (நாகைப்பட்டினம் வெள்ளத்தில் மூழ்கியபோது படகோட்டியாக முருகையன். படகில் அருள்மொழிவர்மர், புத்தபிக்ஷு...)

  நந்தி மண்டபத்தின் உச்சியில் தாயைப் பிரிந்த கன்றுக் குட்டி ஒன்று எப்படியோ வந்து தொத்திக்கொண்டிருந்தது. அது நாலாபுறமும் பார்த்துப் பார்த்து மிரண்டு விழித்தது. உடம்பை அடிக்கடி சிலிர்த்துக்கொண்டது. அதன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. அந்தக் கன்று 'அம்மா' என்று எழுப்பிய தீனக்குரல் படகில் சென்று கொண்டிருந்தவர் களின் காதில் இலேசாக விழுந்தது. "ஐயோ பாவம்! தாயைப் பிரிந்த இந்தக் கன்றின் கதி என்ன ஆகுமோ!” என்று இளவரசர் எண்ணிய அதே சமயத்தில், ஒரு பெரிய தென்னை மரம் திடீரென்று முறிந்து மண்டபத்தின் பின்புறத்தில் விழுந்தது. சிறிது முன்பக்கமாக விழுந்திருந்தால், கன்றுக் குட்டியின் மேலேயே அது விழுந்திருக்கும்.

மரம் விழுந்த வேகத்தினால் தண்ணீரில் ஒரு பெரிய அலை கிளம்பி மண்டபத்தின் மேலே தாவி வந்தது. முன்னமே நடுங்கிக்கொண்டிருந்த கன்றுக்குட்டி அந்த அலையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி விழுந்தது. மண்டபத்தின் உச்சியிலிருந்து அலையினால் அது வெள்ளத்தில் உந்தித் தள்ளப்பட்டுத் தத்தளித்தது. 

 இளவரசர் இதுவரையில் புத்த பிக்ஷுவைத் தம் கரங்களினால் பிடித்துக்கொண்டிருந்தார். கன்றுக்குட்டி மண்டபத்தின் உச்சியிலிருந்து உந்தித் தள்ளப்பட்டதைப் பார்த்ததும் "ஆகா" என்று சத்தமிட்டுப் பிக்ஷவைப் பிடித்துக்கொண்டிருந்த பிடியை விட்டார். பிக்ஷு அக்கணமே வெள்ளத்தில் குதித்தார்.

 படகோட்டி முருகய்யன் துடுப்பைப் படகில் போட்டுவிட்டு இளவரசரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அவனை இளவரசர் கடுங்கோபத்துடன் பார்த்துவிட்டு "விடு!" என்று கையை உதறினார். அதற்குள் பிக்ஷு இரண்டு எட்டில் நீந்திச் சென்று கன்றுக்குட்டியின் முன்னங்கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். கன்றுக் குட்டியும் உயிர் மீதுள்ள இயற்கையான ஆசையினால் தலையை மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக்கொண்டிருக்க பிரயத்தனப்பட்டது. பிக்ஷு கன்றுக் குட்டியை பிடித்து இழுத்துக்கொண்டு படகை நோக்கி வந்தார். இளவரசர் அவருக்குக் கை கொடுத்து உதவினார். இருவருமாகச் சேர்ந்து முதலில் கன்றுக்குட்டியை படகில் ஏற்றினார்கள். பின்னர் இளவரசரின் உதவியினால் ஆச்சாரிய பிஷூவும் படகில் ஏறிக்கொண்டார்.

அதிகாரம் 34 - நிலையாமை:

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 

அற்குப ஆங்கே செயல்.

நிலையாத இயல்பினை உடையது செல்வம் .அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

("இளைய பிராட்டி குந்தவை தேவி வாழ்க!" "சுந்தரச் சோழரின் செல்வத் திருமகள் வாழ்க!" என்றெல்லாம் சோழ மக்கள் வாழ்த்தி மகிழும் குந்தவை தேவியைத் தொடர்வோம் வாருங்கள்...)

 அப்படை வீடுகளில், இலங்கைக்குப் போர் புரியச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகளும் பெற்றோர்களும் அச்சமயம் வசித்து வந்தார்கள் என்பதை முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களுடைய நலத்துக்காக ஒரு
மருத்துவசாலையைக் குந்தவை தன் சொந்த நிலமான்யங்களின் வருமானத்தைக் கொண்டு ஸ்தாபித்திருந்தாள். சோழ குலத்தாரிடம் தம் முன்னோர் களைப் போற்றும் வழக்கம் சிறப்பாக இருந்துவந்தது. குந்தவையின் மூதாதைகளில் அவளுடைய பாட்டனாரின் தந்தையான முதற் பராந்தக சக்கரவர்த்தி மிகப் பிரசித்தி பெற்றவர். அவருடைய பெயர் விளங்கும்படி குந்தவை தேவி இந்தப் 'பராந்தகர் ஆதுர சாலை'யை ஸ்தாபித்து நடத்தி வந்தாள். அடிக்கடி அந்த வைத்தியசாலைக்கு வரும் வியாஜத்தை வைத்துக்கொண்டு போர் வீரர்களின் குடும்பத்தாருடைய க்ஷேம லாபங்களைப் பற்றி அவள் விசாரிப்பது வழக்கம்.

ஆதுரசாலைக்கு அருகில் வந்து சேர்ந்ததும் யானை நின்றது. முன்னங்கால்களை முதலில் மடித்துப் பிறகு பின்னங் கால்களையும் மடித்து அது தரையில் படுத்துக்கொண்டது. பெண்ணரசிகள் இருவரும் யானை மேலிருந்து பூமியில் இறங்கினார்கள்.

 யானை சிறிது நகர்ந்து அப்பால் சென்றதும் ஜனக் கூட்டம். முக்கியமாகப் பெண்கள் - குழந்தைகளின் கூட்டம், தேவிமார்களை நெருங்கிச் சூழ்ந்துகொண்டது.

 ஆதுரசாலை உங்களுக்கெல்லாம் உபயோக மாயிருக்கிறதல்லவா? வைத்தியர்கள் தினந்தோறும் வந்து தேவையானவர்களுக்கு மருந்து கொடுத்துவருகிறார்கள் அல்லவா?'' என்று இளவரசி கேட்டாள்.

  'ஆம், தாயே! ஆம்!' என்று பல குரல்கள் மறுமொழி கூறின.

 "மூன்று மாதமாக இருமலினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் வைத்தியரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டதில் குணமாகிவிட்டது!” என்றாள் ஒரு பெண்மணி.

  "அம்மா! என் மகன் மரத்தின்மேல் ஏறி விழுந்து காலை ஒடித்துக்கொண்டான். வைத்தியர் கட்டுப் போட்டுவிட்டுப் பதினைந்து நாள் மருந்து கொடுத்தார். சுகமாகிவிட்டது. இப்போது துள்ளி ஓடி விளையாடுகிறான். மறுபடி மரத்தின் மேல் ஏறவும் ஆரம்பித்து விட்டான்!" என்றாள் இன்னொரு ஸ்திரி.

 "என் தாயாருக்கு கொஞ்ச காலமாக கண் மங்கலடைந்து வந்தது. ஒரு மாதம் இந்த ஆதுரச்சாலைக்கு வந்து மருந்து போட்டுக்கொண்டு வந்தாள். இப்போது கண் அவளுக்கு நன்றாய்த் தெரிகிறது.!" என்றாள் இளம் பெண் ஒருத்தி.

« « «

 அதிகாரம் - 35 துறவு:

 வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் 

ஈண்டியற் பால் பல.

 பொருட்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல. இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

 (சோழநாட்டு அரசர்களும் குடிமக்களும் பயபக்தியோடு மரியாதை செலுத்தும் செம்பியன் மாதேவி...)

சோழ மாளிகைகளிலே செம்பியன் மாதேவி வசித்த மாளிகை நடுநாயகமாக இருந்தது. அதன் சபா மண்டபத்தில், பொன்னால் செய்து நவரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அந்தப் பெருமூதாட்டி அமர்ந்திருந்தார். காரைக்காலம்மையார், திலகவதியார் முதலான பரமசிவ பக்தர்களின் வழித்தோன்றிய அப்பெண்மணி, வெண்பட்டாடை உடுத்தி, விபூதியும், ருத்ராட்ச மாலையும் தரித்து, வேறு எவ்வித ஆபரணங்களும் பூணாமல், அளவற்ற செல்வங் களுக்கிடையில், - அஷ்ட ஐசுவரியங்களுக்கு மத்தியில், - வைராக்கிய சீலையாக வாழமுடியும் என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தாள். தலையில் மணி மகுடமும் வேறு ஆபரணங்களும் அணியாதிருந்த போதிலும் அவருடைய கம்பீரத் தோற்றமும் சுயம் பிரகாசமான முகமும் அரச குலத்தில் பிறந்து அரசகுலத்தில் புகுந்த அரசர்க்கரசி என்பதைப் புலப்படுத்தின. சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் விதிவிலக்கின்றி இந்தப் பெரு மூதாட்டியைத் தெய்வமாக மதித்துப் பாராட்டிக் கொண்டாடி அவருடைய விருப்பத்துக்கு மாறாக எதுவும் சொல்லாமல் நடந்து வந்ததில் யாதொரு வியப்பும் இல்லை என்றே நினைக்கத் தோன்றும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை 

பற்றுக பற்று விடற்கு 

பற்று இல்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும். உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அப்பற்றைப் பற்ற வேண்டும். "பற்றுக பற்றற்றான் பற்றினை" துறவைத் தொடர்ந்து,  "ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவருக்கு, அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்" அடுத்த அதிகாரம் மெய்யுணர்தல் வழி இவ் விளக்கத்தை உணர்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com