தோழி-23

தோழி-23

ஓவியம்: தமிழ்

வெள்ளை சிமெண்டுதான்.ஆனால் அதை பளிங்கு போல் மெருகேற்றி அடித்திருந்தார்கள். முன்னால் விரிந்திருந்த பச்சைப் புல்வெளி அந்த வெள்ளையை மேலும் பொலியச் செய்தது.பிரதமருக்குத் தோட்டக்கலையில் ஆர்வம் உண்டு என்று எங்கோ படித்திருந்தாள். அது உண்மைதான் போலிருக்கிறது என்று நினைத்தாள் வித்யா. இப்போதெல்லாம் யாரைப் பற்றி எழுதப்படுவதிலும் முழு உண்மை இருப்பதில்லை. கண்ணால் காண்பதே மெய்.

அவளது பூர்வீகத் தஞ்சாவூர் வீடுபோல இரண்டு கட்டு இருந்தது பிரதமர் இல்லம். போர்டிகோவில் போய்க் காரில் இறங்க முடியாது. வி.ஐ.பியாக இருந்தாலும்தான். முன்னூறு அடிக்கு முன்னால் நிறுத்திவிட்டு நடக்கத்தான் வேண்டும். நுழைவு வாயிலுக்கு முன் இன்னொரு மரத்தால் ஆன வாயில். அருகே திரைகளால் மூடப்பட்ட ஓரு சிறு அறை. காவலர் விறைப்பாக அந்த அறையை நோக்கிக் கையை நீட்டினார். கனிவு என்பது அவரிடம் மருந்துக்கும் இல்லை. ஆனால் அந்தச் சிறு அறைக்குள் இருந்த பெண் காவலர் சினேகமாகவே இருந்தார். வளையம் கொண்டு உடலைத் தடவினார். கைப்பையை ஸ்கேனரில் போட்டார். பின் அதைத் திறந்து உள்ளிருந்து பேனாவை எடுத்தார். “ஸாரி, இதை நீங்கள் உள்ளே எடுத்துப் போக முடியாது மேடம்” என்றார்.

“ஏன்?”

“எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆணை அதுதான்”

 திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்த போது வெள்ளை நிறச் சூடிதாரும் சிவப்புத் துப்பட்டாவும் அணிந்த இளம் பெண் ஒருவர் கை குவித்தார்.

“வணக்கம் மேடம்” என்று கை குவித்தார்

அது அப்படியொன்றும் வித்யாவிற்கு ஆச்சரியமளிக்க வில்லை. இப்போதெல்லாம் வட இந்தியர்கள் தமிழரைப் பார்த்தால் முதல் வார்த்தையாக வணக்கம் என்று சொல்லக் கற்றுக் கொண்டு விட்டார்கள்.

“அந்தப் பேனா விரைவில் மீண்டும் உங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார் தமிழில்.

வித்யா புருவத்தை உயர்த்தி அந்த இளம் பெண்ணைப் பார்த்தாள். “இப்போதெல்லாம் பேனா வடிவத்தில் கூட குண்டுகள் வருகின்றன, அதனால்...”

“புரிகிறது. நீங்கள் யார்?”

“ஓ! ஸாரி. என் பெயர் குமுதா. நான் இங்கே ஜாயிண்ட் செகரட்டரி. நீங்கள் வருவீர்கள், வரவேற்க வேண்டும் என்று பிரதமர் சொல்லியிருந்தார். நீங்கள் சற்று முன்னதாக வந்து விட்டீர்கள்!”

“அப்படியா?”

“அல்லது நான் சற்று தாமதமாக வந்து விட்டேன். அப்படி வைத்துக் கொள்ளலாமா?” கலகலவென்று சிரித்தாள் குமுதா.

அந்த சாமர்த்தியம் வித்யாவிற்குப் பிடித்திருந்தது.  வித்யாவை அழைத்துச் சென்று குளிர்பதனம் செய்யப்பட்டிருந்த அறைக்குள் உட்கார்த்தி வைத்தாள் அங்கிருந்த சோபாக்களுக்கு பால் வெள்ளை நிறத்தில் உறைகள் போடப்பட்டிருந்தன.

“பிரதமருக்குப் பிடித்த நிறம் வெள்ளையா?” என்றாள் வித்யா.

“அப்படியில்லை. அறையின் நிறத்திற்குக் காண்ட்ராஸ்ட்டாக சோபாக்களுக்கு உறை போடுகிறார்கள்” என்றாள் குமுதா.

“நான் உன், ஸாரி, உங்கள், உடையைச் சொன்னேன்!”

மீண்டும் கலகலவென்று சிரித்தாள் குமுதா

“என்னை நீ என்றே சொல்லலாம் மேடம். சின்ன வயசிலிருந்தே உங்களைப் பார்த்துதான் எப்படி உடுத்த வேண்டும் என்பதையே கற்றுக் கொண்டேன்”

வித்யா புன்னகைத்தாள். இப்படி எத்தனையோ முறை எத்தனையோ பேர் சொல்லக் கேட்டாயிற்று.

ஒரு பணியாள் அலங்காரமான ஒரு சிறிய டிரேயில் பேனாவை வைத்துக் கொண்டு வந்தான். குமுதா அதை வாங்கி வித்யாவிடம் நீட்டினாள்

“அது உன்னிடமே இருக்கட்டும். என் விசிறிக்கு நான் அளிக்கும் நினைவுப் பரிசு! ஆனால் உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன், அதற்குள் வெடிகுண்டு இருக்கிறது” 

“மேடம்!” திகைத்தாள் குமுதா.

“என் அரசியல் எதிரிகளை விமர்சிக்கும் அறிக்கைகளை நான் அந்தப் பேனாவில்தான் எழுதுகிறேன். அதை என் விசிறிகள் வெடிகுண்டு என்றுதான் சொல்கிறார்கள்”

குமுதா மெல்லப் புன்னகைத்தாள். “வாசித்திருக்கிறேன் மேடம். ஆனால் அபிப்பிராயம் சொல்ல எனக்கு வயது பத்தாது”

“ வயசிற்கும் அறிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை”

“நானும் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன் மேடம், எனக்கு அரசியல் பிடிக்கும். ஆனால் இங்கு பேச எங்களுக்கு அனுமதி இல்லை”

“விருந்தாளிகளுக்குக் காபி கொடுக்கக் கூட அனுமதி இல்லையா?”

“ஓ! ஸாரி மேடம்! பேசிக் கொண்டிருந்ததில் மறந்தே போனேன்!”

அவள் அவசரமாக வெளியேறத் திரும்பிய போது ஒரு பணியாள் வந்து வணங்கினார்

“மேடம் ஆப் கோ புலா ரஹி ஹைன்” என்றார்

“அழைப்பு உங்களுக்குத்தான் என்று வித்யாவைப் பார்த்துப் புன்னகைத்தாள் குமுதா.

நூலகம் போன்ற ஓர் அறையில் பிரதமர் அமர்ந்திருந்தார். சுவர் நீளத்திற்கு நீண்ட அலமாரியில் சீராக நூல்கள் அடுக்கியிருந்தன. அவை அலங்காரத்திற்காக அங்கே அடுக்கப்பட்டிருக்கிறதா, அல்லது அது பிரதமரின் வாசிப்பறையா என்று வித்யாவிற்குக் கேள்வி எழுந்தது. நடுநாயகமாக மேசையில் குனிந்து எழுதும் அவரது தந்தையின் படம் இருந்தது. எதிர் எதிர் சுவர்களை மொகலாயர் பாணி ஓவியங்கள் அலங்கரித்திருந்தன. நீல வண்ண ஆர்கிட் பூக்கள் செருகப்பட்ட, மூணடி உயரமுள்ள வெள்ளைப் பீங்கான் ஜாடி ஒரு மூலையில் நின்றிருந்தது. தரை முழுவதையும் கம்பளம் மூடியிருந்தது.

இரண்டே இரண்டு சோபாக்கள் மட்டுமிருந்தன. ஒவ்வொன்றின் இடப்புறத்திலும்  காபியோ, பானங்களோ, புத்தகங்களோ வைத்துக் கொள்ள ஏதுவாகச் சதுரமாக சிறு மேசை போடப்பட்டிருந்தது.

பிரதமரை வணங்கி விட்டு, வித்யாவை அமரச் செய்தபின், குமுதா அறையிலிருந்து வெளியேற எத்தனித்தாள். ”குமுதா தர்வாஸ் பந்த் கரோ” என்றார் பிரதமர். “ஜீ!” என்று தலையசைத்த குமுதா கதவைச் சாத்திவிட்டு வெளியேறினாள்.

பிரதமர் கேட்ட முதல் கேள்வியே வித்யாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது.

எடுத்த எடுப்பிலேயே “ எப்படி இருக்கிறார் அருட்செல்வன்?” என்றார் பிரதமர்.

பெரியவரையும் அவரது அரசியல் எதிரியையும் பிரதமர் போட்டுக் கொண்டு குழப்பிக் கொண்டு விட்டாரோ என்று வித்யா ஒரு கணம் திகைத்தாள்.

“பெரியவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகத்தான் சொன்னார்கள். அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்திருக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்”

“உங்கள் தலைவர் பற்றி எனக்கு தூதரகத்திலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தகவல் சொல்வதற்காகவே பால்டிமோரில் உள்ள ஒரு பேராசிரியர் பணிக்கப்பட்டிருக்கிறார். நான் கேட்டது அருட்செல்வன் பற்றி”

அருட்செல்வனைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறார் என்ற கேள்வி வித்யாவின் கண்களில் தெரிந்தது.

“வித்யா நண்பர்களை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். எதிரிகள் மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும் இதுதான் அரசியல்” என்ற பிரதமர் தொடர்ந்து பேசினார்.”குதிரைப் பேரம் நடப்பதாக எனக்குச் செய்தி வந்திருக்கிறது. இருபது எம்.எல்.ஏக்கள் வரை இழுப்பதில் அருட்செல்வன் முகாம் முனைந்திருக்கிறது என்று உளவுத் துறை சொல்கிறது. நான் உளவுத் துறையை முழுவதும் நம்புவதில்லை. ஏன், நான் யாரையுமே முழுவதுமாக நம்புவதில்லை. என்னைக் கூட” என்ற பிரதமர் சிரித்தார். இந்தப் பேரம் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?”

“தெரியாது மேடம். ஆனால் அதற்கு சாத்தியமில்லை”

“ஏன்?”

“எனக்குக் கட்சியில் எதிரி என்று இருந்தவர் முருகய்யன்தான். ஆனால் அவர் இப்போது மனம் மாறிவிட்டார்”

“ ஹ ஹா” என்ரு சிரித்த பிரதமர் “ஹூம்... தேவிமகாத்மியம் படித்திருக்கிறாயா?” என்றார். பதிலுக்குக் காத்திராமல் அவரே தொடர்கிறார்

 “தினவு கொண்டு திமிறி நிற்கிறான் ரக்த பீஜன்! துர்காவின் கணை அவனைத் துளைக்கிறது,ரத்தம் சொட்டச் சொட்டச் சரிகிறான். போர் முடிந்தது என நினைக்கிறாள் துர்கா. ஆனால்...! என்ன அதிசயம்! ரக்தபீஜன் உடலில் இருந்து சொட்டும் ஒவ்வொரு ரத்தத் துளியிலிருந்தும் ரக்த பீஜன்கள் முளைக்கிறார்கள்!

இதைச் சொல்லும் போது அவரையறியாமல் கண்கள் மூடுகின்றன.  அவரே துர்க்கையாகிவிட்டது போல குரல் உக்கிரம் பெறுகிறது. முகம் சிவக்கிறது. அவரது அனுபவத்திலிருந்து பேசுகிறார் போலும். அரை நிமிடத்திற்குள் அமைதியாகிறார். பின் பாடம் எடுப்பது போலச் சொல்கிறார் “அரசியலில் எதிரிகள் இருந்து கொண்டே இருப்பார்கள். ஒருவர் போனால் இன்னொருவர். எதிரிகள் இல்லாவிட்டால் அரசியலே இல்லை.”

வித்யா கண்கள் மூடுவதையும், குரல் உயர்வதையும், முகம் மாறுவதையும் ஒரு நாடகம் பார்ப்பது போல் பார்த்து பிரமிக்கிறாள்.

“ம். சொல்லு எதையோ சொல்ல வந்த”

“சாத்தியமில்லை என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது மேடம். இருபது எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது. குறைந்தது முப்பதாவது வேண்டும்”

“ ஆட்சி அமைப்பது அவர்கள் நோக்கமல்ல என்று நினைக்கிறேன்.  ஆட்சியைக் கவிழ்ப்பது அவர்கள் நோக்கமாக இருக்கலாம். ஆளும் கட்சி பிளவு பட்டுவிட்டது, பிளவுபட்டுவிட்டதால் பலவீனமாகிவிட்டது என்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துவது என்பது திட்டமாக இருக்கலாம். உங்களது பலவீனம் அவர்களது பலம்.”

வியப்பில் புருவங்களை உயர்த்தினாள். “பலத்தால் வெல்ல முடியாத எதிரிகளை .அவர்களது பலவீனத்தால் வீழ்த்த முடியும்”என்ற காந்தாரியின் வரிகள் மனதில் ஓடி மறைந்தன. அது தன்னைத் தவிர மற்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது என்றும் தோன்றிய போது வறண்ட புன்னகை இதழில் நெளிந்தது..

“என்ன செய்யப்போகிறாய்?”

அரை நிமிடம் ஏதும் பேசாமல் மெளனமாக இருந்தாள் வித்யா. மனதில் ஓர் யோசனை மின்னி மறைந்தது. ஆனால் சொல்லலாமா என்றொரு தயக்கமும் எழுந்தது

“ஓகே! ஐ தாட் ஐ ஷுட் அலர்ட் யூ!”

பேச்சு முடிந்தது என்று பிரதமர் எழுந்து கொள்ளப் போகிறார் என்று தோன்றியது.சொல்வதாக இருந்தால் இப்போதே சொல்லிவிட வேண்டும்.

“எனக்கு ஒன்று தோன்றுகிறது. நீங்கள் ஒரு நிமிடம் கொடுத்தால் சொல்ல முயற்சிக்கிறேன்”

“சொல்லு!”

“ எங்கள் ஆட்சியைக் கலைத்து விடுங்கள்!”

“வாட்!” பிரதமரின் புருவம் உயர்ந்தது. குரலில் ஆச்சரியம் தொனித்தது. “கம் எகையன்!”

“அவர்கள் கவிழ்க்கும் முன்னால் நீங்கள் கலைத்துவிடுங்கள். நாம் முந்திக் கொள்வோம்.  வீ கேன் பிரிஎம்ப்ட் தேர் மூவ். ஆட்சியே இல்லை என்றால் எதைக் கவிழ்ப்பார்கள்? சட்டமன்றமே இல்லை என்றால் யாரை வாங்குவார்கள்?”

“ம்...” என்று ஒரு சில நிமிடங்கள் யோசித்த பிரதமர், “உயிரைக் காப்பதற்காக காலை வெட்டுவது சரிதான். ஆல்ரைட். உங்கள் அமைச்சரவையை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். நான் கவர்னரிடம் பேசுகிறேன்”

“இந்தச் சூழ்நிலையில் ராஜினாமாச் செய்யச் சொல்வது சரியாக வராது என்று தோன்றுகிறது மேடம். குதிரைப் பேரம் அதிகமாகலாம்”

“தென்?”

“நீங்களே கலைத்து விடுங்கள்”

“அப்படியெல்லாம் மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசை பெரும்பான்மை இருக்கும் வரை கலைத்து விட முடியாது.பார்லிமெண்ட்க்கும் பத்திரிகைகளுக்கும் பதில் சொல்லி மாளாது ”

வித்யாவிற்கு  இது நொண்டிச் சாக்கு எனப் புரிந்தது. எத்தனை எதிர்க்கட்சிகளுடைய அரசுகளை இவர்கள் கலைத்திருக்கிறார்கள்! இந்த நியாயங்கள் எல்லாம் அப்போது எங்கே போயின? பிரதமர் ஒரு வேளை தன்னை ஆழம் பார்க்கிறாரோ?

“என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“உன்னுடைய யோசனை அவ்வளவு மோசமானது அல்ல. ஆனால் ரிஸ்க் அதிகம். ஆனால் ஜனாதிபதி ஆட்சி வந்தால் உனக்கு ஆறுமாசம் அவகாசம் கிடைக்கும் என்று நினைக்கிறாய். அப்படித்தானே?”

வித்யா அப்படியெல்லாம் நினைத்திருக்கவில்லை.  ஆனால் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்

“நியாயம்தான். எல்லாம் சரியாகப் போனால் உங்கள் தலைவர் மூன்று மாதத்திலேயே நலம் பெற்றுத் திரும்ப சாத்தியமுண்டு!”

“ஆனால் அதற்கு நீ ஒன்று செய்ய வேண்டும்?”

“சொல்லுங்கள், என்ன செய்ய வேண்டும்?”

“கலவரம்!”

“என்ன!” வித்யாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது

“பதறாதே! ஆட்சியைக் கலைக்க வேண்டுமானால் எனக்கு அதற்கு ஒரு காரணம் வேண்டும். முகாந்திரம் வேண்டும்.” பிரதமர் சிரித்தார். நீங்கள் ஆளும் கட்சி. உங்கள் மீது நீங்களே ஊழல் புகார் கொடுக்க முடியாது. ராஜினாமாவும் செய்யமாட்டீர்கள் அப்போது சட்டம் ஒழுங்கு கெடுவதுதான் வழி. கலவரம் என்றால் ஊர் எரிய வேண்டாம். சட்டசபையில் உங்கள் ஆட்கள் கலாட்டா பண்ணமாட்டார்களா?”

“எனக்குக் குழப்பமாக இருக்கிறது மேடம். யோசிக்கிறேன்”

“புரிகிறது. நீ இந்த இடத்திலேயே முடிவெடுக்க முடியாது. யோசி. ஒரு திட்டத்தோடு வா. மீண்டும் சந்திப்போம். ஆனால் இங்கு வேண்டாம்.  அடுத்தவாரம் மைசூரில் ‘ஜனநாயகத்தில் பெண்களின் பங்கு’ என்றொரு கருத்தரங்கு. துவக்கி வைக்க நான் அங்கு வருகிறேன்.  உனக்கும் அழைப்பு வரும். பேசலாம்”

வித்யா சிரித்தாள்

“என்ன சிரிப்பு?”

“ஜனநாயகத்தில் பெண்கள் பங்கு கருத்தரங்கில் சந்திக்கிறோம். அங்கு நமக்குள் ஆட்சிக் கலைப்பைப் பற்றி விவாதிக்கிறோம் என்பதை நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது!”

“அதுவும் சொந்தக் கட்சியின் ஆட்சிக் கலைப்பு!” என்று பிரதமரும் சிரித்தார்.

விடை பெற்றுக் கொள்வதற்காக வித்யா எழுந்து நின்று கை கூப்பினாள்

“ஒரு நிமிஷம் இரு.” என்ற பிரதமர் எழுந்து நூலகத்தின் இடது கோடி மூலைக்குப் போனார்.மேலிருந்து மூன்றாவது தட்டில் கூர்ந்து பார்த்து எதையோ தேடினார். பின் நுனிக்காலில் எம்பி ஒரு புத்தகத்தை உருவினார்

“இது உனக்கு, என் எளிய பரிசு.!” என்றார்

கன்றுக் குட்டி தோலில் மெத்தன்று பைண்ட் செய்யப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தாள் வித்யா

‘தி பிரின்ஸ் –நிக்கோலோ மாக்கியவில்லி’ என்றது தலைப்பு

“படிச்சிருக்கியா?”

“படிக்கனும்னு நினைச்சிருக்கேன்.”

“படி. பல கதவுகள் திறக்கும். ஆள்பவன் நல்லவனாக இருக்க வேண்டியதில்லை ஆனால் செயல் திறமுள்ளவனாக இருக்க வேண்டும். என்கிறான் மாக்கியவில்லி.ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆம் என்ன வேண்டுமானலும். ஏமாற்று, கட்டாயப்படுத்துதல், ஏன் வன்முறை கூட!  அதிர்ச்சியாக இருக்கிறதா?

“ம்” என்று தலையை ஆட்டினாள் வித்யா.

“நிதானமாக யோசித்துப் பார் வரலாற்றில் நிலை பெற்ற தலைவர்கள் எல்லோரும் இதை அல்லது இதில் ஏதேனும் ஒன்றையாவது  செய்திருக்கிறார்கள். மாக்கியவில்லி இன்னொன்றும் சொல்கிறான்: ‘பழைய ராஜாவை விட புதிய இளவரசனுக்கு சவால்கள் அதிகம்”

“கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள்!”

“அந்த வம்பே வேண்டாம்.  நான் திருத்த முடியாத ஜனநாயகவாதி. இன்காரிஜிபிள் டெமாக்ரெட். அப்படித்தான் நினைக்கிறார்கள்  ஹா ஹா! நீ ‘கெட்டுப் போக’ நான் காரணமாக இருந்தேன் என்ற அவப்பெயர் எனக்கு வேண்டாம்!” பிரதமர் தன் நகைச்சுவையைத் தானே ரசித்து சிரித்தார்

நகைச்சுவையாகத்தான் சொன்னாரோ, அல்லது தீர்க்க தரிசனமோ, வித்யா கெட்டுப் போவது அங்கேதான் தொடங்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com