தோழி -24

தோழி -24

ரவு எத்தனை நேரம் கழித்து உறங்கப் போனாலும் சிவகுருநாதனுக்குக் காலையில் ஐந்தரை மணிக் கெல்லாம் விழிப்பு வந்துவிடும். அலாரம் கிலாராம் எதுவும் தேவையில்லை.உடம்பில் ஓடும் உயிர்க் கடிகாரம் விடியப் போகிறது என உணர்த்தி எழுப்பி உட்கார்த்திவிடும்.

விழிப்பு வந்தவுடன் ஜில் என்ற பச்சைத் தண்ணியில் கண்களைக் கழுவுவார். அந்தக் குளிர்ச்சி அவருக்கு ஓர் இதம். ஓம் நமச்சிவாய எனச் சொல்லிக் கொண்டு எழுந்திருப்பார். படுக்கைக்குத் திரும்பி  அதிலேயே கால்களைக் குறுக்காக மடக்கிச் சம்மணம் போட்டு உட்கார்ந்து கண்ணை மூடிக் கொள்வார். அது  தியானம் என்று அவருக்கு நினைப்பு.

அவர் 25 வருடத்திற்கு முன்பு பத்திரிகை வேலையில் சேர்ந்த போது அவர் மீது பரிவு கொண்ட பெரியவர் ஒருவர் சொன்னார் “மூளையைத் தின்கிற வேலை இது. அதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆனால் தற்காத்துக் கொள்ள முடியும். நம்மை பலப்படுத்திக் கொண்டால் தற்காத்துக் கொள்ளலாம். பலப்படுத்திக் கொள்ள ஒரு வழி தியானம். அது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்ல. கண்ணை மூடிக் கொண்டு உள்முகமாக மனதைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். ஆயிரம் எண்ணங்கள் வரும். ஆனால் எதையும் துரத்திக் கொண்டு போகக் கூடாது. அப்படியே கடந்து போக விட்டிடணும். அப்படியே கொஞ்ச நாள் போனால் தானே மனசு குவிந்து தியானம் பண்ண வந்திரும்” அப்டீன்னு யோசனை சொன்னார். சிவகுருநாதன் எந்த யோசனையையும் துரத்திக் கொண்டு போகவில்லை. ஆனால் அவற்றோடு பத்துத் தப்படியாவது நடந்துவிட்டுத்தான் திரும்ப முடிந்தது.

எழுந்து நடைப் பயிற்சிக்குத் தயாரானார். சாம்பல் பூசிக் கிடந்தது வானம். ஜில்லென்று குளிர்ந்த காற்று வீசியது. குளிர் எவ்வளவு என்றாலும் அவருக்குப் பொருட்டில்லை, சூடுதான் பொறுக்க முடியாது. மார்கழி என்றாலும் வெந்நீரில் குளிக்க மாட்டார். காபி கூட ஆறவைச்சுத்தான் குடிப்பார். மனைவியோட போட்ட முதல் சண்டை கொதிக்கிற காபியைக் கொண்டு வந்து வைத்ததற்குத்தான்.” குடிக்க காபி கொண்டாறியா? கொளுத்தக் கொண்டாறியா?” என்று  அப்போது சீறினார். “அதுக்கு நீங்க ஏன் கொதிக்கறீங்க? கொண்டாங்க, ஆத்தித் தாரேன்’ என்ற மனைவியிடம், “நான் என்ன ஆத்தமாட்டாதவனா?” என்று சிலேடையில் தன் புலமையைக் காட்டினார்.

அலுவலகத்திலும் சண்டை ஏசியால்தான் வந்தது. அவ்வப்போது வந்து தணிகிற சண்டைதான். அன்று சற்று உக்கிரமாகி விட்டது. அவருக்கும் இன்னொரு மூத்த துணை ஆசிரியராக இருந்த கார்மேகத்திற்கும், ஒரே அறையை இரண்டாக வகிர்ந்து மேசை போட்டிருந்தார்கள். இரண்டுக்கும் ஒரே ஏசி. அறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக ரிமோட்டை எடுத்து வெப்பநிலையைக் குறைத்து விட்டுத்தான் இருக்கையிலேயே அமர்வார் சிவகுருநாதன்.

“சிவா சார்! ஏசியைக் குறைங்க. இதென்ன மார்ச்சுவரியா? இவ்வளவு குறைவா வைச்சிருக்கீங்க!” என்றார் கார்மேகம்.

மார்சுவரி என்ற வார்த்தை சிவகுருநாதனைச் சுட்டது. “எல்லாரும் ஒருநாள் மார்ச்சுவரிக்குப் போக வேண்டியவங்கதானே, பழகிக்கங்க!” என்றார் எகத்தாளம் இழையோட...

“நல்ல சாவு சாகிறவங்க, மார்ச்சுவரிக்குப் போகமாட்டாங்க. எல்லோரும் ஒரு நா சுடுகாட்டுக்குத்தான் போவாங்க. நீங்க நெருப்பில இருக்கப் பழகிக்கங்க!” என்றார் கார்மேகம் பதிலுக்கு.

சிவகுருநாதனை வெகுநாட்களாக உறுத்துகிற விஷயம் மரணம். அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தார். பழைய கார் மாதிரி உடம்பு அவ்வப்போது தகராறு செய்து கொண்டிருந்தது. அப்படி அது மக்கர் செய்யும் போதெல்லாம் அவருக்கு அந்த பயம் வந்துவிடும். மரண பயம் அல்ல. மரணத்திற்குப் பின் தன் குடும்பம் என்னாகும் என்ற பயம். மாற்றுத் திறனாளியான ஒரு மகள் யாழினி. பெரிய குறைபாடு இல்லை. ஆனால் இளம் வயதில் போலியோ தாக்கி ஒரு பக்கமாகச் சாய்ந்து சாய்ந்து நடப்பாள். அவளை எப்படிக் கல்யாணம் செய்து கரையேற்றப் போகிறோம் என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. அதனால் கல்யாணங்களுக்குப் போக மாட்டார். தவிர்க்க முடியாது போக நேர்ந்தால் தளர்ந்து போய்த் திரும்புவார். மகன் மிக இளையவன் இந்த ஏப்ரல் வந்தால் ஐந்து முடித்து ஆறாவது போவான். அவன் தலையெடுத்துக் கை கொடுக்க இன்னும் பத்துப் பனிரெண்டு வருஷமாவது ஆகும். ஒற்றைச் சம்பளக்காரர். சேமிப்பு அதிகமில்லை. ஆரம்ப காலங்களில் சிறிய பத்திரிகைகளில் வேலை செய்ததால் சம்பளம் அதிகம் இல்லை. இப்போதுதான் பத்து வருடங்களாக இந்த தினசரியில் வேலை. கட்சி சார்புப் பத்திரிகைதான். ஆனால் கண்ணியமாக நடத்துகிறார்கள். கை நிறைய இல்லை என்றாலும் வயிறு நிறையப் படி அளக்கிறார்கள். 

விருட்டென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்தார். கார்மேகத்தின் மேசைக்குப் போனார். “என்னைக் கொண்டு விறகில் வைச்சுட்டா உனக்கு நெஞ்சு குளிர்ந்திரும்ல?” என்று இரைந்தார்

சிவகுருநாதன் வந்த வேகத்தைப் பார்த்த கார்மேகம் திடுக்கிட்டார்.

“சொல்லு! உனக்கு நான் சாவணும். என் பொண்டாட்டி தாலி அறுக்கணும். பிள்ளைங்க நடுத்தெருவில் நிக்கணும்! அதுதானே உனக்கு? சொல்லு. சொல்லுடா!” என்று இரைந்தார்.

சொல்லு சொல்லு என்றால் இதற்கு என்ன பதில் சொல்வது. அதுவும் இந்த மாதிரி ருத்ர மூர்த்தியிடம். சிவகுருநாதன் தன்னைத் தாக்கக் கூடும் என்று அஞ்சிய கார்மேகம் நாற்காலியைப் பின்னுக்கு நகர்த்திக் கொண்டார்.

இரைச்சல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த அறையில் திரண்டார்கள். அவர்களில் இளையவனான கிருஷ்ணா அருகில் வந்து இடுப்பைப் பிடித்து “வாங்க சிவா சார்!” என்று இழுத்தான். அதுவரை அவருக்கு அடிக்கும் நோக்கமில்லை.  அந்த இழுப்பும் அணைப்பும் அவரை உசுப்பி விட்டது. படக்கென்று திரும்பி தன்னை விடுவித்துக் கொண்ட சிவகுருநாதன், ஆத்திரம் தணியாமல் கார்மேகத்தின் மேசையிலிருந்த காகிதங்களை அள்ளிக் கிழித்து கீழே போட்டார்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. அறைக்குள் போன போது ஓர் ஓரமாகக் கார்மேகம் நின்று கொண்டிருந்தார். அவர்தான் புகார் தெரிவித்திருந்திருக்க வேண்டும். நடந்தது என்ன என்று ஆசிரியர் நாலைந்து பேரை விசாரித்திருப்பார் போல. அவர்கள் அவரைத்தான் குற்றம் சொல்லியிருந்திருப் பார்கள். பார்த்தது தானே அவர்களுக்குத் தெரியும். அவர் மனதை அவர்கள் எங்கே பார்த்தார்கள்?

ஆசிரியர் சிவகுருநாதனை அவர் தரப்பு என்னவென்று கேட்கவில்லை.” என்ன சார் இது?” என்றார். “உங்களைப் போன்ற சீனியர்கள் இப்படி நடந்து கொண்டால் எப்படி?” என்றார். தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். அவரிடம் எப்படிக் கடுமையாகப் பேசுவது என்று அவரிடம் தயக்கம் தெரிந்தது.  பின் “போங்க! போய் எல்லோரும் வேலையைப் பாருங்க!” என்றார். கூட்டம் கரைந்தது. சிவகுருநாதன் போக எத்தனித்தார். ஆனால் கார்மேகம் அங்கேயே நின்று கொண்டிருந்தார். “இவர் கூட உட்கார்ந்து என்னால் வேலை செய்ய முடியாது!” என்றார். “நீங்க போங்க சார்! நான் பார்த்துக்கிறேன்!” என்றார்.

ஒரு மணி நேரத்தில் இடம் மாற்றினார்கள். முதல் தளத்திலிருந்து தரைத் தளத்திற்கு. அறையெல்லாம் இல்லை.  தரைத்தளத்தில் அச்சு இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்த நீண்ட கூடத்தை  ஒரு கண்ணாடித் தடுப்பு போட்டுப் பிரித்திருந்தார்கள். அதற்கு முன்னால் ஒரு கண்ணாடி வாசல். கண்ணாடி வாசலுக்கும் கண்ணாடித் தடுப்பிற்கும் இடையே வராண்டா போன்ற ஒரு  நீள் சதுரம். ஜன்னல் இல்லை. ஆனால் ஏசி இருந்தது. முன்பு அச்சகத்தின் மேனேஜரை அங்கு அமர்த்தி யிருந்தார்கள். ஜன்னல் இல்லை என அவர் சதா முணுமுணுத்ததால்  அவரையும் முதல் தளத்திற்கு நகர்த்திவிடார்கள்.

அவரது பதவிக்கு அது ஏற்ற இடமல்ல. வேலைக்கும் வாகான இடமல்ல.ஆனால் சிவகுருநாதனுக்கு அந்த இடம் பிடித்திருந்தது. நிம்மதியாக இருந்தது, யாரோடும் அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. அருகில் சகாக்கள் இல்லை. அதனால் சச்சரவு இல்லை.  எல்லாவற்றுக்கும் மேல் ஏசிக்குத் தனி ரிமோட். அவர் வெப்ப நிலையை எத்தனை டிகிரியில் வைத்தாலும் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள்.

ன்றைக்கு ஆற அமர பதினொரு மணிக்கு அலுவலகம் வந்தார் சிவகுருநாதன், அவசரமாக வரவேண்டிய அவசியம் ஏதுமில்லை. சட்டசபை, நீதிமன்றங்கள், தலைமைச் செயலகம்,  மாநகராட்சி, அரசியல் கட்சி அலுவலகங்கள், பெரும் வணிக நிறுவனங்கள்  எல்லாம்  பத்து மணிக்கு மேல்தான் உயிர்த்தெழும். செய்தியாளர் கள் கூட்டங்கள் பதினோரு மணிக்கு மேல் பனிரெண்டு மணி வாக்கில்தான் நடக்கும். அதற்கு முன் பெரிய செய்திகள் வர வாய்ப்பில்லை.

வரும் வழியில் அலுவலகத்திற்கு அருகே திட்டுத் திட்டாக கட்சிக்காரர்கள் கொடிபிடித்துக் கொண்டு குழுமியிருந் தார்கள். ஏதாவது பேரணி, போராட்டம் என்று இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். ஆனால் அது ஆளும் கட்சிக் கொடி. யாராவது பெருந்தலைகள் இந்தப் பக்கமாக வருவார்களாக இருக்கும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கக் கூடியிருப்பார்கள் என எண்ணினார்.

அவர் இருக்கையில் அமர்ந்து ஏசியைப் போட்டதும் “என்ன சார் இப்படிப் போட்டாங்க நம்ப பத்திரிகையிலே?” என்று அச்சக ஊழியர்கள் மூன்று நான்கு பேர் வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

“என்ன தப்பா போட்டிருக்காங்க?” என்றார் சிவகுருநாதன்

“பெரியவர் மரணம்னு போட்டிருக்கே ஸார்!”

சிவகுருநாதன் பத்திரிகையைப் பார்த்தார் பெரியவர் மரணம் என்று ஒரு கேள்விக்குறியுடன் பெரிய எழுத்தில் தலைப்பு அச்சாகி இருந்தது.

“அதான் பக்கத்தில் கேள்விக்குறி போட்டிருக்கே?”

“இதெல்லாம் தப்பு சார்! இன்னிக்கு எங்க தெருவில நாலைஞ்சு பேர் சேர்ந்துகிட்டு என்னை அடிக்கவே வந்துட்டாங்க சார்”

இதெல்லாம் தப்பு என்றுதான் அவரும் ஆசிரியரிடம் சொன்னார். பெரியவர் மூச்சு விடத் திணறிக் கொண்டிருக்கிறார், செயற்கை சுவாசம் வைத்திருக்கிறது என்றுதான் செய்தி வந்தது. நேற்று செய்தி அவர் மேசைக்கு வந்த போது  ‘அபாய கட்டத்தில்  பெரியவர்-மீள்வாரா?’    என்பதை அடித்துவிட்டு கவலைக்கிடம் என்று திருத்திக் கொடுத்தார். ஆசிரியர் மேசைக்குப் போனபோது அதை அவர் மாற்றிவிட்டார்.

அச்சுக்காகப் பத்திரிகை இயந்திரம் ஏறும் போது மாற்றத்தை கவனித்தார். மறுபடி மாடி ஏறிப் போய் ஆசிரியரிடம் “ வேணாம் சார். தப்பாயிடும்!” என்றார்.

“எனக்குத் தெரியுது. அவருக்கு அது புரியணுமே!”

“யாருக்கு சார்?”

“முதலாளி போடச் சொல்றார்யா. ‘என்னய்யா சவசவனு எழுதுறீங்க வியாபாரம் டல்லடிக்குது. பரபரப்பா ஏதாவது பண்ணுங்கய்யானு கோவிச்சுக்கிறாரு”  

அவர் முதலாளி மட்டுமல்ல, எதிர்க்கட்சியின் பெரிய தலையும் கூட. அதற்கு மேல் பேச ஏதுமில்லை. சிவகுருநாதன் படி இறங்கி விட்டார்.

வீடு தேடி வந்து சண்டை போட்டார்கள் என்று இவர்கள் சொல்வதைக் கேட்டால் இன்று இங்கும் தேடி வருவார்களோ? எதற்கும் எச்சரித்து வைப்போம் என்று இண்டர்காமைத் தேடி அச்சகத்திற்குள் போனார். அது அங்கே இயந்திரங்களுக்கு அப்பால் ஒரு மூலையில் இருந்தது. ஆசிரியர் எண்ணை அழைத்தார். அது அலறிக் கொண்டே இருந்தது. அவர் இத்தனை சீக்கிரம் வந்திருக்க மாட்டார். அவர் எப்போதும் மதியத்திற்கு மேல்தான் வருவார். முதலாளியின் செயலாளரை அழைத்தார். அவர் டீ குடிக்கப் போயிருந்தார். தலைமை நிருபரை அழைத்தார். அசைன்மெண்ட்டிற்காக வெளியே போயிருப்பதாகச் சொன்னார்கள் சற்று யோசித்து வாசல் செக்க்யூரிட்டியை அழைக்கலாமா என்று ரிசிவரைக் கையில் எடுத்த போது திமுதிமுவென்று ஏழெட்டுப் பேர் கண்ணாடிக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

“சார்! ஓடிரு! கொலைவெறியில் இருக்காங்ய!” என்று கூவிக்கொண்டே ஃபோர்மேன் வெளியே ஓடினார். அவர் கூடவே  தொழிலாளிகளும் வெளியே ஓடிக் கொண்டிருந்தார்கள்.

“ஓடிருவியா? எங்க ஓடு பார்ப்போம்!” என்று ஒருவன் கொடிக் கம்பை ஓங்கினான். அது கம்பு இல்லை. இரும்புத் தடி.

“இந்தக் கைதானே பொய் எழுதுது! இதை எடுத்துட்டுப் போய் காக்காய்க்குப் போட்டிரவா?” என்று ஒருவன் வந்து கையை முதுகுக்குப் பின்னால வளைத்து முறுக்கினான்.

“காக்காய்க்கு ஏன் போடற? இதைத் தின்னு அது சாகவா? விஷம்டா, அம்புட்டும் விஷம்! பேசாம எரிச்சிடு!” என்றான் இன்னொருவன்.

அவர்கள் கண்களில் தாண்டவமாடிய வெறியைப் பார்த்தால் செய்து விடுவார்கள் போலத்தான் தோன்றியது. விதிர்த்துப் போனார் சிவ குருநாதன்

“என்னை விட்டுருங்க, நான் ஏதும் செய்யல!” என்றார். பயத்தில் அவர் நாக்கு குளறியது. குரல் எழவே இல்லை. அவர் சொன்னது அவருக்கே கேட்டிருக்காது.

“வளவளனு பேசிக்கிட்டிருக்கவா வந்தோம்? சட்டுப் புட்டுனு சோலியை முடிங்கடா!” என்றான் ஒருவன்.

தடி ஒருமுறை அங்கிருந்த கணினி மேல் இறங்கியது . அடுத்த முறை மின்சார சுவிட்ச் போர்டை நசுக்கியது. மூன்றாம் முறை அது இறங்கிய இடம் சிவகுருநாதனின் தோள்பட்டை.

கையோடு கொண்டு வந்த தீப்பெட்டியை உரசி அங்கு அச்சடிக்க வைத்திருந்த காகித உருளைகள் மீது எறிந்தார்கள்பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அதன் மீது வீசினார்கள். அவசர அவசரமாக வெளியேறி  ஷட்டரை இறக்கி விட்டு ஓடினார்கள்.

கீழே விழுந்த சிவகுருநாதன் தட்டுத் தடுமாறி எழுந்த போது சுற்றிலும் தீ மூண்டிருந்தது. புகையில் மூச்சுத் திணறியது மெல்ல நடக்க முயன்றார். பயத்தில் கால்கள் பின்னிக் கொள்ளக் கீழே விழுந்தார். மறுபடி எழ முயன்றார். முடியவில்லை. வாசலை நோக்கித் தவழ்ந்தார்.  மரச் சட்டமா, ஏசி இயந்திரத்திலிருந்தா எனத் தெரியவில்லை. ஒரு நெருப்புக் கோளம் மேலே வந்து விழுந்தது.

எப்போதும் ஜில்லென்று இருக்க விரும்பிய சிவகுருநாதன் தீயில் கருகி இறந்து போனார். இறக்கும் முன் அவருக்கு வந்த கடைசி நினைவு யாழினி : ‘காலைச் சாய்த்து சாய்த்து நடக்கும் அவளை யார் கரையேற்றுவார்கள்?’

த்திரிகை அலுவலகம் எரிந்த அடுத்த இரு நாளைக்கு ஊர் எரிந்தது. ஆங்காங்கே வாகனங்கள் எரிந்தன. தீயணைப்புத் துறையும் காவல்துறையும் திசைகள் தோறும் ஓடின. ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்குமிடையே நடந்த மோதலில் சட்டசபையில் சட்டைகள் கிழிந்தன. தேனிக்கு அருகே கண்ணீர்ப்புகை குண்டுகளையும் தாண்டி கட்சி அலுவலகத்தை எரிக்க வந்த கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் இறந்து போனார்கள். ஆங்காங்கே தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டன.

சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆளுநர் அறிக்கை அனுப்பத் தயாரானார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com