தோழி – 25

ஓவியம்; தமிழ்
“அக்கா! இங்கே வந்து பாருங்களேன்!” சித்ராவின் உற்சாகக் கூவலில் அதிசயத்தைக் கண்ட ஐந்து வயதுக் குழந்தையின் குதூகலம் ததும்பியது. ஆனால் அந்தக் கூச்சல் பூஜை அறையில் கண்மூடித் தியானத்தில் அமர்ந்திருந்த வித்யாவின் காதுகளை அறுத்தது. கண நேரம் கண்ணைத் திறந்து மூடிய வித்யா பின் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.இருந்த இடத்திலிருந்து அசையவில்லை.
ஆனால் தியானத்தைத் தொடரமுடியவில்லை. உள்ளே ஓசையற்று நீண்டு கொண்டிருந்த ஓர் ஒளி இழை படக்கென்று அறுந்து விட்டது.இனி அதை இன்று மீட்டெடுப்பது சிரமம்.
பூஜை அறையிலிருந்து ரெளத்திரம் பொங்க எழுந்து வந்தாள் வித்யா. “என்னத்திற்கு இப்போ கூச்சல் போட்டே?” என்று இரைந்தாள்.
தலையைக் குனிந்தபடி நாக்கைக் கடித்துக் கொண்டாள் சித்ரா. “நீங்க பூசைக்குப் போயிட்டீங்க என்பதைக் கவனிக்கவில்லை. குளிச்சிட்டுத் தலையை ஆத்திக்கிட்டு இருக்கீங்கனு நினைச்சிட்டேன்”...
“நினைப்ப நினைப்ப. ஏன் இப்படிக் கூச்சல் போட்ட? அப்படி என்ன காணானதைக் கண்டுட்ட?”
சித்ரா ஒரு குறுமுறுவலுடன் வித்யாவைக் கைப்பிடித்து அழைத்து வந்து எதிர்த்திசையில் கை காட்டினாள். அங்கே பதினைந்தடி உயரத்தில் ஒரு கட் அவுட் நின்று கொண்டிருந்தது. அதில் வித்யா இரண்டு விரல் காட்டி புன்னகைத்துக் கொண்டிருந்தாள். கீழே “பொற்கால ஆட்சி நடத்தும் வெற்றிச் செல்வி புகழ் ஓங்குக!” என்று போட்டிருந்தது.
“இதெல்லாம் உன் வேலையா?”
“ஐயோ! நானில்லக்கா. அவர் யார் கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்தாரு. நான் ‘வேணாம், அக்காவிற்கு இதெல்லாம் பிடிக்காது’ என்றுதான் சொன்னேன்”
பிடிக்கத்தான் செய்கிறது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் வித்யா. யாராவது பாராட்டினால் மனது குளிரத்தான் செய்கிறது. மனதுக்குள் ஒரு முறுவல் மலரத்தான் செய்கிறது. அதட்டல் போட்டால் அரள்கிறவர்களைப் பார்த்தால் ஓர் ஆனந்தம் பிறக்கிறது. காலில் விழுகிறவர்களைக் கண்டால் கர்வம் தலையில் ஒரு கீரீடம் போல் ஏறுகிறது. கோபக்காரி என்ற இமேஜ் ஒரு கேடயம் போல் காத்து நிற்கிறது. அதிகாரிகள் கூட அதிகம் பேசத் தயங்குகிறார்கள். இருக்கட்டும் இப்படியே இருக்கட்டும். இதெல்லாம் இல்லையென்றால் நம்மைத் தூக்கிச் சாப்பிட்டு விடுவார்கள்.
“நான் நம்ப மாட்டேன். கள்ளிடி நீ!”
அம்மா கொஞ்சுகிறார்கள் என்பது சித்ராவிற்குப் புரிந்தது. நம்ப மாட்டேன் என்று வெளியில் சொன்னாலும் உள்ளே நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என அவளுக்குத் தெரியும்.
இருவரும் இந்த நாடகத்தை ரசித்தபடியே படி இறங்கி வந்தார்கள்.
முன்னறையில் அதிகாரிகள் பூங்கொத்தோடு காத்துக் கொண்டிருந்தார்கள். முதலில் தலைமைச் செயலாளர் எழுந்து சற்றே வளைந்து பூங்கொத்தை நீட்டினார் ” வாழ்த்துகள் மேடம்!” என்றார்.
“நன்றி. ஆனால் எதற்கு?” தெரியாதது போல் கேட்டாள் வித்யா.
“நீங்கள் பதவியேற்று இன்றோடு ஓராண்டை நிறைவு செய்கிறீர்கள்.”
வித்யா முறுவலித்தாள்.
“சென்னையில் ஆர்கிட் பூக்கள் கிடைக்கின்றனவா?”
“தெரியவில்லை, விசாரிக்கிறேன். இதை சிங்கப்பூரிலிருந்து தருவித்தேன்” என்றார் வெட்கச் சிரிப்புடன்.
“நிறைய செலவழித்திருக்கிறீர்கள். ஏராளமாகப் பணம் வைத்திருக்கிரீர்கள் போல”...
“இல்லை மேடம் என் கூடப்படித்தவர் அங்கு ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கிறார். அவரிடம் சொன்னேன். அனுப்பியிருக்கிறார்”
“மஞ்சள் ஆர்கிட் என்பதை அவர்தான் தேர்ந்தெடுத்தாரா?”
“இல்லை, நான்தான் மஞ்சள் வண்ணம்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொன்னேன்”.
“நன்றி. மஞ்சள் வண்ணம் எதைக் குறிக்கிறது எனத் தெரியுமா?”.
“தெரியும். ஹோப் அண்ட் வைடாலிட்டி”.
“ஆம். அதுதான். நம்பிக்கை, வீர்யம் அவைதான் இன்று வேண்டும். அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும்தான்”.
“அவற்றின் மனித வடிவம் நீங்கள்தான்” என்றார் இன்னொரு அதிகாரி.
கொசு விரட்டுவது போல மூக்கின் முன் கையை அலைத்தாள் வித்யா.”எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள். இன்று இன்னுமொரு நாடகமா என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் சித்ரா.
அன்று முழுதும் அடுத்தடுத்து நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. அவற்றில் பார்வையாளராகவும் பங்கேற்பாளராகவும் திளைத்துக் கொண்டிருந்தாள் வித்யா. மதியம் உளவுத் துறையின் அறிக்கை வரும் வரை மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.
முத்திரையிட்டு மூடிய உறையைக் கிழித்து அறிக்கையை எடுத்தாள் வித்யா.
வித்யாவின் முதலாண்டு ஆட்சி எப்படி இருக்கிறது என்று உளவுத்துறை மக்களிடம் எடுத்த சர்வே எடுத்திருந்தது. மக்கள் வித்யாவிற்கு ஃபெயில் மார்க் கொடுத்தி ருந்தார்கள். கிராமப்புறத்தில் கடும் அதிருப்தி நிலவியது. தனது பலம் என்று வித்யா நினைத்திருந்த பெண்கள் வித்யாவைக் கைவிட்டிருந்தார்கள். தொழிற்துறை உதட்டைப் பிதுக்கியிருந்தது.
இப்போது தேர்தல் நடந்தால் என்ற கேள்வியில் அருட்செல்வன் வித்யாவை நெருங்கியிருந்தார். இருவருக்கும் இடையே மூன்று புள்ளிகள்தான் இருந்தன. இன்னும் நான்காண்டுகள் ஆட்சி இருந்தது. அதற்குள் எதுவும் எப்படியும் மாறலாம்.
அறிக்கையைப் பார்த்ததும் அயர்ந்து போனள் வித்யா. நிலைமை இப்படியா இருக்கிறது? ஏன் என்னிடம் யாரும் எச்சரிக்கவில்லை? அடித்தளத்தில் என்ன நடக்கிறது என்பதை அருகிருந்து பார்த்து அறிந்து சொல்லத்தானே அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள். கட்சி நிர்வாகிகள். அவர்கள் குனிந்து குழைந்து கும்பிடு போடுகிறார்களே தவிர கள நிலவரத்தைச் சொல்ல மாட்டேன் என்கிறார்களே? காலடியில் தரை நழுவிக் கொண்டிருக்கிறதோ? முட்டாள்களின் சொர்க்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேனோ? கண்ணைக் மூடிக் கொண்டு யோசித்தாள்.
ஆம். இன்னும் நான்காண்டுகள் இருக்கின்றன. அதற்குள் எதுவும் எப்படியும் நடக்கலாம் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்த போது வித்யா ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
*
அவசரக் கூட்டம் என்று அழைப்பு வந்ததும் தலைமைச் செயலர் சற்றுக் குழம்பித்தான் போனார். காலையில்தானே பார்த்தோம், நன்றாகத்தானே பேசிக் கொண்டிருந்தார் என்று எண்ணிக் கொண்டே முதல்வர் அறைக்குள் நுழைந்தார். அங்கே ஏற்கனவே நிதித் துறைச் செயலரும், உணவுத் துறைச் செயலரும் அமர்ந்திருந்தார்கள். முன் வரிசையில் நிதி அமைச்சரும் பொது வழங்கல் துறை அமைச்சரும் உட்கார்ந்திருந்தார்கள்.
“இப்போது ரேஷன் கடைகளில் அரிசி வாங்குபவர்கள் எத்தனை பேர்?” என்றாள் வித்யா எடுத்த எடுப்பிலேயே.
“ஒரு கோடியே 20 லட்சம் பேர்” என்றார் செயலர்.
“எவ்வளவு கிலோ அரசி கொடுக்கிறோம்? என்ன விலைக்குக் கொடுக்கிறோம்?”
“பத்துக் கிலோ. கிலோ இரண்டு ரூபாய்” என்றார் அமைச்சர் உணவுத் துறைச் செயலரை முந்திக் கொண்டு.
“இனி இருபது கிலோ கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள், இலவசமாக” என்றாள் வித்யா. இலவசமாக என்பதை சற்று அழுத்தமாகவே சொன்னாள்.
செயலர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“என்ன பிரச்சினை? அரிசி கையிருப்பு இல்லையா?”
“இந்த முறை விளைச்சல் நன்றாகவே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் கூடுதலாகத் தங்களது நெல்லைக் கொள்முதல் செய்யவில்லை என்று விவசாயிகள் கோபமாக இருக்கிறார்கள்” என்றார் அமைச்சர்.
“நீங்கள் பேச வேண்டாம்.” என்று அமைச்சரைக் கையமர்த்தி விட்டு, “அவர் சொல்லட்டும்” என்று செயலரின் முகத்தைப் பார்த்தாள் வித்யா.
அவர் ஏதும் சொல்லவில்லை. ஆனால் நிதிச் செயலர் தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்,”ஏற்கனவே மதிய உணவுத் திட்டத்தினால் தற்போது நிதிச் சுமை கடுமையாக இருக்கிறது” என்றவரை “மதிய உணவுத் திட்டமல்ல, சத்துணவுத் திட்டம்” என்று திருத்தினாள் வித்யா.
“தற்போது நிதிச்சுமை கடுமையாக இருக்கிறது. அரிசியை இலவசமாகக் கொடுப்பதென்றால் நிதிப் பற்றாக்குறை மிகப் பெரிதாக ஆகிவிடும். மாநிலத்தின் வருவாய் அதிகரிக்காமல் நாம் இதில் இறங்கினால், புதை சேற்றில் மாட்டிக் கொண்டு விடுவோம் என அஞ்சுகிறேன்” என்று தமிழிலும் ஆங்கிலத்திலுமாகச் சொல்லி முடித்தார் நிதிச் செயலர்.
“நாங்கள் எடுக்கும் முடிவுகளைச் செயல்படுத்தத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களை எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்றாள் வித்யா கடுமையாக. தனது யோசனைகளுக்கு முட்டுக் கட்டைகள் வருவதை அவள் விரும்பவில்லை என்பதைக் குரலின் கடுமை உணர்த்தியது. பின் தானே தணிந்து “வருவாய் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?” என்றாள்
“அரசிற்கு வருவாய் வரும் முதன்மையான வழிகள் மூன்று. ஒன்று வணிக வரி. மற்றொன்று பதிவுக் கட்டணம் அப்புறம் ஆயத் தீர்வை, அதாவது மது விற்பனை”
“மத்திய அரசிடம் அல்லது ரிசர்வ் வங்கியில் கடன் வாங்க முடியாதா?”
“வருமானம் கூட இருந்தால் கடன் பெரிதாகக் கிடைக்கும். வருமானம் குறைந்தவர்களுக்குக் கடன் குறைவு”
“விநோதமாக இருக்கிறது. வருமானம் குறைந்தவர் களுக்குத்தானே அதிகம் பணம் தேவைப்படும் அவர்களுக்குத்தானே அதிகம் கடன் கொடுக்க வேண்டும்?” என்றார் அமைச்சர்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மற்ற செயலர்களைப் பார்த்தார் நிதித்துறைச் செயலர்.
“உலகெங்கும் வங்கிகளின் நடைமுறை அதுதான்” என்றார் தலைமைச் செயலர்.
“வரியை உயர்த்தாமல், கடன் வாங்காமல், வருமானம் உயர என்ன வழி?” என்றாள் வித்யா தலைமைச் செயலரைப் பார்த்து.
“மது வருமானம்தான். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.”
“என்ன?”
“நாம் மதுக்கடைகளை ஏலம் விட்டு குத்தகைக்குக் கொடுக்கிறோம். ஏலம் எடுப்பவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஏலம் போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் விற்பனை அதிகரித்தாலும் நமக்குக் குத்தகைத் தொகைக்கு மேல் வருமானம் உயராது”.
“கார்டலைசேஷன்” என்றார் நிதி அமைச்சர்.
எனக்குத் தமிழில் சொன்னால் புரியாதா என்பதைப் போல அவரைப் பார்த்த வித்யா சிறிது மெளனத்திற்குப் பின் கேட்டாள்:
“அரசே மது விற்றால் என்ன?”
அறைக்குள் இருந்தவர்கள் வெடிகுண்டு விழுந்ததைப் போலத் திகைத்துப் போனார்கள்.
“குத்தகை முறையை ஒழித்து விட்டு அரசே தனது நிறுவனத்தின் மூலம் மது விற்றால் என்ன?” என்றாள் மறுபடியும்.
“செய்யலாம். ஆனால் அது அறமல்ல” என்று முனகினார் தலைமைச் செயலாளர்.
“சொல்வதை உரக்கச் சொல்லுங்கள், ஏன் உங்களுக்குள் முனகுகிறீர்கள்?” என்றாள் வித்யா.
“ஒன்றுமில்லை மேடம். எப்படிச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்”
“தட்ஸ் குட். நாளைக் காலை பன்னிரண்டு மணிக்குள் எனக்கு ஒரு திட்ட அறிக்கை தயாரித்து அனுப்புங்கள்.” வித்யா எழுந்து கொண்டாள்
எல்லோரும் அறையை விட்டு வெளியேறத் தயாரானார்கள். “அப்புறம் அந்த அரிசி பற்றிய அறிவிப்பு இன்று மாலையே வெளியாக வேண்டும்” என்றாள்
*
தலைமைச் செயலாளர் சொல்லத் தயங்கியதை கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒரு மூத்த தலைவர் வெளிப்படையாகவே சொன்னார் ”அம்மா அது அறமல்ல. அது மட்டுமல்ல, நீங்கள் சொல்வது போலச் செய்தால் நமக்குப் பெண்களின் ஓட்டு போய்விடும்.”
“அப்படியா? அதுதான் அரிசி இலவசமாகக் கொடுக்கிறோமே?”
“இருந்தாலும்..”
“ அறம் பற்றிப் பேசுகிறீர்கள். மதுவிலக்கை நாமா தளர்த்தினோம்? நாம் யாரையும் மது குடியுங்கள் என்று சொல்லவில்லை. குடிக்கச் சொல்லிப் வற்புறுத்தவில்லை. பிரசாரம் செய்யவில்லை. நான் ஆட்சிக்கு வரும் முன்னரே இங்கு மது அறிமுகமாகிவிட்டது. ஆனால் அதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானம் தனியார் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதை அரசுக்குத் திருப்புகிறோம் அவ்வளவுதான்” என்றாள் வித்யா. “இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். மது, பணம், அரசியல் அதிகாரம் இவை மூன்றும் ஒரு சேரத் தனியார் கையில் குவிந்தால் அது அரசுக்கு ஆபத்து”.
இதைக் கேட்டதும் அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதை கவனித்த வித்யா, “நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கிறேன். என் அரசுக்கு மட்டுமல்ல, எந்த அரசுக்குமே அது ஆபத்துதான்”என்றாள்.
அரியலூர் மாவட்டச் செயலாளர் எழுந்தார். “வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன் அம்மா. மதுக்கடை குத்தகை எடுத்திருப்பவர்களில் பலர் நம் கட்சிக்காரர்கள்தான். அது உங்களுக்கும் தெரிந்திருக்கும். இப்போது மதுக்கடைகளை அரசு எடுத்துக் கொண்டால் அவர்களது வருமானம் பாதிக்கும். அவர்களது நிதி ஆதாரம் வற்றினால் அது தேர்தலில் நம்மை பாதிக்கும். அந்தப் பணத்தைத்தான் தேர்தலில் செலவழிக்கிறோம். தேர்தலை எதிர் கொள்ள நிறையப் பணம் வேண்டியிருக்கிறது.”
“அவர்கள் வருமானத்திற்கு வேறு ஏதாவது வழி செய்வோம். அது குறித்த யோசனைகளைச் சொல்லுங்கள். அடித்தளத்தில் இருக்கும் கட்சிக்காரர்களைப் பாதுகாக்க நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து சம்பளமாக அல்லது அவர் செலவிற்கு தலைமை நிலையத்திலிருந்து மாதம் 5000 கொடுக்கலாம். தொகுதி நிலவரங்களை அவர் அவ்வப்போது தலைமை நிலையத்திற்குத் தெரிவித்து வர வேண்டும்”.
“இருநூறு தொகுதினு வைச்சுக்கிட்டாலும் வருஷத்திற்கு ஒன்றரைக் கோடி பக்கத்தில வேணுமே அம்மா! அவ்வளவு தொகை கட்சியால தாக்குப் பிடிக்க முடியுமானு தெரியலையே” என்றார் ஒருவர்.
“அமைச்சர்களும் தலைவர்களும் தங்களுக்கு மட்டுமில்லாமல் கட்சிக்கும் பணம் வரும் வழிகளைப் பாருங்கள்!” என்றாள் வித்யா நறுக்கென்று.
வீட்டிற்குத் திரும்பும்போது, அசாதரணமாக, களைப்பு அதிகமாக இருந்தது. வழக்கத்தை விட வேலை அதிகமோ என்று நினைத்தாள். ஆனால் இது என்ன அதிகம், தேர்தல் நேரத்தில் இதைவிடப் பலமணி நேரம் சுற்றியிருக்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டாள். அவள் சந்தேகத்திற்கு அடிவயிறு பதில் சொல்லியது. ஏதோ மனக் கணக்குப் போட்டாள். பதற்றமாகக் கைப் பையைத் திறந்து பார்த்தாள். நல்ல வேளை அது இருந்தது.
காரை வேகமாகச் செலுத்தச் சொன்னாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அவசரமாகக் கழிவறைக்கு ஓடினாள்
அந்த முன் மாலைப் பொழுதில் மயங்கி விழுந்தாள். பரிசோதிக்க வந்த டாக்டரிடம் சித்ரா சொன்னாள் ”வழக்கத்தை விட உதிரப் போக்கு அதிகமாக இருக்குனு சொன்னாங்க. இப்போ விழுந்துட்டாங்களே!”
“உதிரப் போக்கு அதிகமா இருக்குதான். ஆனால் பயப்பட ஒன்றுமில்லை. அவர்கள் மெனோபாஸை நெருங்குகிறார்கள் என நினைக்கிறேன். அல்லது நீண்ட காலமாக டயபடீஸ் இருப்பதால் கர்ப்பப் பையின் சுவர்கள் தடித்து சுருங்க மறுக்கிறதோ என்னவோ. அப்படி இருந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இப்போதைக்கு மருந்து கொடுக்கிறேன். மூன்று நாள்களுக்குப் பின் பரிசோதித்துப் பார்க்கலாம். ஆனால் அதற்கு மருத்துவமனையில் சேர வேண்டும்” என்றார் பரிசோதிக்க வந்த பெண் மருத்துவர்.
‘வழக்கமான ஹெல்த் செக்கப்’ என்று ஊடகங்களுக்குச் சொல்லி மருத்துவ மனையில் சேர்த்தார்கள். பரிசோதித்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை அவசியம் என்றார்கள்.