தோழி - 26

தோழி - 26

ஓவியம்; தமிழ்

அறுவைச் சிகிச்சை அவசியம் என்றதும் வித்யா கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். ஏழு வயதில் செய்து கொண்ட டான்ஸில்ஸ் ஆபரேஷன் ஞாபகம் வந்தது. ஆபரேஷன் முடிந்த அன்றிரவே வீட்டுக்குப் போகலாம் என்று அனுப்பிவிட்டார்கள். ஆனால்  ஒரு வாரத்திற்கு தொண்டை வலி படுத்தி எடுத்து விட்டது. அம்மாவும் டாக்டரும் அவர்கள் பங்கிற்கு இம்சித்துக் கொண்டிருந்தார்கள்.  இரண்டு மூன்று நாள் திரவ உணவுதான். ஆனால் ஜூஸ் இல்லை. அம்மா சர்பத் என்று எதையோ கலக்கிக் கொடுத்தாள். அதைக் குடித்தால் நாக்கெல்லாம் வழவழவென்று இருந்தது. அந்த ஆபரேஷனில் இருந்த ஒரே சந்தோஷம் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிட முடிந்ததுதான்.

கத்திக்கு பயம் என்பது ஒரு புறம். மற்ற உடல் நலக் கோளாறுகளைப் போல இந்தப் பிரச்சினையை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்ற கூச்சம் ஒரு புறம். ஆனால் அதைவிடக் கூர்மையான கேள்விகள் அவள் முன் நின்றன. மருத்துவமனையில் சேருவதற்கு முன் தற்காலிகமாக யாரையேனும் முதல்வராக நியமிக்க வேண்டுமா? சட்டம் என்ன சொல்கிறது? கவர்னர் என்ன சொல்வார்? அப்படி நம்பி பொறுப்பைக் ஏற்கக்கூடியவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் அந்த இடைவெளியில் கலகம் செய்யவோ, கவிழ்க்கவோ முனைவார்களா? எதிரிகளிடம் எச்சரிக்கையாய் இரு, நண்பர்களிடம் கவனமாய் இரு என்றாரே பிரதமர், அது அவரது அனுபவத்தில் உதித்த வார்த்தை அல்லவா? கட்சி என்னவாகும்? பெரியவர் மருத்துவ சிகிச்சைக்குப் போய் அவர் உடல் மட்டும் திரும்பி பதினைந்து மாதம்தான் ஆகிறது, அது தொண்டர்கள் நினைவில் இருக்கிறது. இப்போது நாமும் மருத்துவமனைக்குப் போகிறோம் என்றால் அவர்கள் மனநிலை என்னவாகும்? அவர்கள் நம்பிக்கை குலைந்தால் கட்சி என்னவாகும்? குழப்பம் வராதா என்றுதானே அருட்செல்வன் காத்துக் கொண்டிருக்கிறார்?

யாரிடமாவது வாய் விட்டுப் பேசினால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். விடை கிடைக்காவிட்டாலும் ஏதேனும் க்ளூ கிடைக்கும். சிக்கலின் ஏதேனும் ஒரு முனை கிடைத்தால் தொடர்ந்து  பிடித்துக் கொண்டே போய் அதை அவிழ்த்து விடலாம். ஆனால் இது அடி முடி தெரியாத இடியாப்பச் சிக்கலாகத் தோன்றியது வித்யாவிற்கு. எதையும் வாய்விட்டுப் பேசக் கூட ஆள் இல்லாத தனிமையில் அகப்பட்டுக் கொண்டிருப்பதை நினைத்தால் வித்யாவிற்குள் சுய இரக்கம் பெருகியது

ஆனால் இதற்கு நேர் மாறாக இருந்தாள் சித்ரா. அவளிடம் எந்த விதக் குழப்பமும் இல்லை. எந்த வித மனச் சோர்வும் இல்லை. வித்யாவிற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்ற விஷயத்தை முதலில் சித்ராவிடம்தான் சொன்னார் டாக்டர். அவள் அதிர்ந்து போகவில்லை. இதென்ன பெரிய விஷயம் என்பது போல்தான் இருந்தது அவள் பாவனை. அதை வித்யாவிடமே சொல்லவும் செய்தாள்

“நீங்க பயப்படாதீங்க அக்கா. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்.” என்றாள்

“பயமா? எனக்கென்ன பயம்?” என்றாள் வித்யா.

“இல்லக்கா. அவங்க சொன்னதிலிருந்து நீங்க என்னமோ மாதிரி இருக்கீங்க. அது முகத்திலேயே தெரியுது!” ஏதும் அதிகம் சொல்லாமலே அவள் பல விஷயங்களை ஊகித்து உணர்ந்து கொண்ட மாதிரித் தோன்றியது. அந்த அளவிற்கு அவள் கெட்டிக்காரிதான். அவள் புரிந்து கொண்டிருப்பாள் எனத் தோன்றியதே மனதுக்கு சற்று நிம்மதியாக இருந்தது

“சர்ஜரினு தெரிஞ்சா பத்திரிகைக்காரங்க என்ன எழுதுவாங்களோ?”

“அவனுக கிடக்காங்க. இதென்ன ஊர்ல உலகத்தில நடக்காத விஷயமா? இதெல்லாம் பொம்பிளைக்கு வர்ற பிரச்சினைதானே? பொம்பிளைக்கு மட்டுமே வர்ற பிரச்சினை. நாமதான் எதிர் கொள்ளணும். நாமதான் இதை ஜெயிக்கணும்”

“ நீ சுலபமா சொல்லிட்ட. ஆனா ஆஸ்பத்ரிக்கு போகணும்னா என்னமோ சங்கடமா இருக்கு!”

“அவ்வளவுதானே? கவலையை விடுங்கக்கா. நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

சொன்னது மட்டுமில்லாமல் மள மள வென்று வேலையில் இறங்கினாள். அன்று மாலையே ஒரு இளம் பெண்ணைக் கூட்டி வந்தாள். “இவ பேரும் பெரியநாயகி. பேர்தான் பழசு. ஆனா ஆள் ரொம்ப மார்டன். என் தம்பி பொண்ணுதான், டாக்டருக்கு படிச்சுருக்கு. அதற்கப்புறம் அமெரிக்கா வெல்லாம் போய் படிச்சு அங்கேயே வேலை பார்த்திருக்கு. திரும்பி வந்து இப்ப”  ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்ரி பெயரைச் சொல்லி “ அதுல சீஃபா இருக்கு”

“சீஃப் இல்லை. கன்செல்டெண்ட்”

“ நீ  டெண்ட்டா இரு, கொட்டகையா இரு. நீ ஒரு யோசனை சொன்னையே அதைச் சொல்லு அவங்க கிட்ட”

“உங்க பிரச்சினை பற்றி அத்தை சொன்னாங்க. யூட்ரஸை அகற்றத் தேவை இல்லை. லேசர் வைத்து அதன் சுவர்களில் உள்ள லைனிங்கை சுரண்டி அகற்றி விடலாம்.”

“சனியனை எடுத்துப் போடுங்கக்கா. மாதா மாதம் தொல்லை விட்டதுனு இருக்கலாம்”

“அது கூடச் செய்யல்லாம். இன்று யூட்ரஸை அகற்றுவது பெரிய பிரச்சினை இல்லை. லேப்ராஸ்கோப்பி மூலம் கூட அதைச் செய்து விட முடியும்.”

“அது எனக்கும் தெரியும். நான் சமீபத்தில்தான் அதைப் பற்றி படித்தேன்”

“அத்தை இன்னொன்றும் சொன்னார்கள். உங்கள் பிரைவசி பற்றி. நீங்கள் அனுமதித்தால் வீட்டின் ஒரு அறையை ஆபரேஷன் தியேட்டராக மாற்றி விடலாம். தற்காலிக மாற்றம்தான். நானே ஒரு சர்ஜன்தான். நீங்கள் அனுமதித்தால் நானே பொறுப்பேற்று அந்த மாற்றத்தைச் செய்கிறேன்”

வித்யா யோசித்தாள். சின்னப் பெண்ணாய் இருக்கிறாளே? ரிஸ்க் எடுத்துக் கொள்கிறோமோ எனத் தோன்றிற்று. ஆனால் அந்த யோசனையும் பிடித்திருந்தது. வேறு சிறந்த வழி இருப்பதாகவும் தோன்றவில்லை,

அடுத்த இரு நாளில்  மாடியிலேயே படுக்கை அறைக்குப் பக்கத்தில் ஒரு அறையை அறுவை சிகிச்சைக்கு ஏற்றமாதிரி மாற்றினாள் டாக்டர் பெரியநாயகி. துணைக்கு ஒரு நர்ஸையும் உதவியாளரையும் வைத்துக் கொண்டு சிகிச்சையை முடித்தாள். தொப்பூழ் அருகே ஒரு சிறிய துளையிட்டு ஒரு மெல்லிய குழாயையும் சாதனங்களையும் செலுத்தி வேலையை முடித்து விட்டாள்.

“இனிமேல் நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட காயங்கள் ஆற சாதாரணமாக நான்கு வாரங்கள் ஆகும். நீங்கள் டயபடிக் என்பதால் ஆறு வாரம் ஆகலாம்.முதல் இரண்டு நாட்கள் முதுகுவலி இருக்கும். பயப்படாதீர்கள். இந்தஅமெரிக்கான் போது காட்சிகள் தெளிவாகத் தெரிய ஒரு காஸ் செலுத்தியிருக்கிறேன். அதனால்தான் அந்த வலி. தானே சரியாகி விடும். நன்றாக தூங்குங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். வழக்கமான சாப்பாடு சாப்பிடலாம். மலச் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க எளிதில் ஜீரணமாகிற மாதிரி சாப்பிடுங்கள். கனமாக எதையும் தூக்காதீர்கள்”

“ஏய் என்னத்துக்கு அவங்ககிட்ட இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க. என்கிட்ட சொல்லு. அவங்க என்னத்தைத் தூக்கப் போறாங்க. நாந்தான் இருக்கேன்ல?”

“அவங்க குனிஞ்சு ப்ரீப் கேஸ் கிரீப்கேஸ் எடுத்திரப் போறாங்கனு சொன்னேன்”

“அதெல்லாம் அவங்களைத் தொடவிட மாட்டேன்”

“தினமும் நீங்கள் கொஞ்சம் நடக்கணும். அதற்காக எடுத்த எடுப்பிலேயே நீண்ட தூரம் நடக்க ஆரம்பிக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்” என்ற டாக்டர் பெரியநாயகி சித்ராவின் பக்கம் திரும்பி, “அத்தை! இதை அவங்க கிட்டதான் சொல்லணும். ஏன்னா அவங்களுக்காக நீ நடக்க முடியாது!” என்றாள்

வித்யா மெல்லப் புன்னகைத்தாள்

“நான் தினமும் வந்து பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாதீர்கள். யாருக்கும் எந்தக் கேள்வியும் வராது. நான் என் அத்தையை அல்லவா பார்க்க வருகிறேன்” என்று சிரித்தாள் டாக்டர் பெரியநாயகி.

ஓய்வெடுங்கள் டாக்டர் சொன்னது வழக்கமான வார்த்தைதான்.  ஆனால் ஓய்வெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்தது. உடல் அடித்துப் போட்டாற்போல் களைப்பாக இருந்தது. ‘கிழித்த நார் போல’ என்று அந்தக் காலத்து எழுத்தாளர்கள் எழுதியதைப் படித்திருக்கிறாள் வித்யா. அப்படியென்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக அடுத்த சில நாள்களில் அறிந்து கொண்டாள்.

அந்த ஆறுவாரமும் சித்ரா அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாள். மாடியை விட்டுக் கீழே இறங்கவிடவில்லை. அவளே தலைமைச் செயலரை அழைத்து முதல்வரின் ‘கேம்ப் ஆபீஸிற்கு’ அதுதான் வீட்டிற்கு, கோப்புகளை அனுப்பச் சொன்னாள். “அதற்காக எல்லாவற்றையும் இங்க கொண்டாந்து ரொப்பிடாதீங்க. முக்கியமானதை மட்டும் அனுப்புங்க” என்று ஒரு வரி சேர்த்துக் கொண்டாள்

முதலில் சாமிநாதன் மூலமாக அமைச்சர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் கட்டளைகள் அனுப்பினாள். வித்யா அதை விரும்பவில்லை எனக் கோடி காட்டியதும் அவளே நேரிடையாகப் பேச ஆரம்பித்தாள். ‘அக்கா சொல்லச் சொன்னாங்க’ என்று வரும் கட்டளைகள் உண்மையிலேயே வித்யாவின் கட்டளைகளா அல்லது சித்ராவாகச் சொல்கிறாளா என்று அமைச்சர்களுக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால் எதுவானால் என்ன, அவை கலாநிலையக் கட்டளைகள், நமக்கெதுக்கு வம்பு என்று அவர்கள் சித்ராவிற்கும் சலாம் போட ஆரம்பித்தார்கள். வித்யாவிற்குச் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் எல்லாம் சித்ரா வித்யாவிடம் தெரிவிப்பாள் என்ற நம்பிக்கையில் சித்ராவிடம் சொல்லப்பட்டன.

ஒருமுறை ஒரு அமைச்சர் வாய்விட்டே கேட்டுவிட்டார்: “அம்மாவிற்கு என்ன?”

“அம்மாவிற்கு என்ன, நல்லாதான் இருக்காங்க” என்றாள் சித்ரா

“இல்லை பார்க்கவே முடியலையேனு கேட்டேன்”

“அவங்க ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு மண்டலம் உபவாசம் இருக்காங்க. ஜெபத்தில் இருக்காங்க!” என்று அந்த நேரம் தனக்குத் தோன்றியதை அடித்துவிட்டாள் சித்ரா

“இருக்கட்டும் இருக்கட்டும்! நான் ஏதும் மேலுக்கு முடியலையோனு நினைச்சுட்டேன்”

“ஏன், அவங்க உடம்புக்கு முடியாம படுக்கையில் கிடக்கணும்னு நீங்க ஜபம் கிபம் பண்றீங்களோ?” துடுக்குத்தனமான பதில்தான் என்று சித்ராவிற்கே புரிந்தது. ஆனால் துருவித் துருவிக் கேட்கும் அவரை அதற்கு மேல் வாயைத் திறக்கவிடாமல் தடுக்க அவளுக்கு வேறு வழியில்லை.

அந்த வாரக் கோமாளிப் பத்திரிகையின் கிசு கிசு பகுதியில் அருட்செல்வனை முற்றிலுமாக அழிக்க வித்யா தன் வீட்டில் மலையாள மாந்ரீகர்களை வரவழைத்து ஒரு மண்டலம் ஹோமம் செய்வதாக கிளியார் எழுதியிருந்தார். அந்தச் செய்தியைப் படித்து விட்டு வித்யாவும் சித்ராவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.” ஆனாலும் உனக்கு ரொம்பக் கொழுப்புடி!”என்றாள் வித்யா

“அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் வேடிக்கை காட்டலாம் அக்கா!” என்றாள் சித்ரா.

“நீ நடத்து!” என்றாள் வித்யா குறுஞ்சிரிப்புடன்

அவளுக்கு பிரமிப்பாய் இருந்தது. தான் குழம்பிக் கொண்டிருந்த விஷயத்தை எப்படி சுலபமாகத் தீர்த்து விட்டாள். தன்னையும் காப்பாற்றி, அந்த ரகசியத்தையும் காப்பாற்றி... என்ன கெட்டிக்காரத்தனம்! என்ன தீர்மானம்! ஐஏஎஸ் முதல் அடுப்படி வரை வேலை வாங்குகிற சாமர்த்தியம். யார் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் செயல்படுகிற அழுத்தம்!

ஆறு வாரங்களுக்குப் பின் வித்யா தலைமைச் செயலகத்திற்கு காரில் வந்து இறங்கிய போது காரின் பின்னிருக்கையிலிருந்து சித்ராவும் இறங்கியதை அமைச்சர்களும் அதிகாரிகளும் பத்திரிகைக்காரர்களும் கவனித்தார்கள். அவளுக்கும் வணக்கம் போட்டார்கள். அன்று நாள் முழுவதும் வித்யாவோடு அவளும் வித்யாவின் அறையில் ஓரமாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்கள். ஆறு வாரம் கழித்து வந்திருப்பவரிடம் அந்தரங்கமாக சில விஷயங்கள் சொல்ல விரும்பிய அதிகாரிகள் சித்ரா அமர்ந்திருப்பதைப் பார்த்துத் தயங்கினார்கள். “சித்ரா, நீ கொஞ்சம் வெளியில் இரு!” என்று முதல்வர் சொல்வார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வித்யாவோ, “பரவாயில்லை, இருக்கட்டும் சொல்லுங்க!” என்றாள்.

*****

பரேஷன் முடிந்து ஆறு வாரங்களுக்குப் பின்னும் டாக்டர் பெரியநாயகி கலாநிலையத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். ஆபரேஷன் முடிந்த முதல் வாரம் அறைக்குள்ளேயே வித்யா அவளின் கையைப் பற்றிக் கொண்டு  நடந்தாள். அடுத்த வாரம் மாடிக்குள்ளேயே நடந்தார்கள். அதன் பின் மொட்டை மாடியில் நடக்கும் போது, “உனக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். என்னால் செய்யக் கூடியது ஏதாவது இருந்தால் சொல், செய்கிறேன்”

“கேளு, கேளு, அக்கா செய்வாங்க!”

“எனக்கு ஏதும் வேண்டாம் மேடம்”

“என்னையும்  நீ அத்தை என்றே அழைக்கலாம். தப்பில்லை. ஆங்கிலத்தில்  ஆன்டி என்று சொல்வதில்லையா? உனக்கு ஒரு ஆஸ்பத்ரி கட்டிக் கொடுத்தால் நிர்வாகம் செய்து கொள்வாயா?”

“வேண்டாம் மேடம், ஸாரி அத்தை. எனக்கு அவ்வளவு சாமர்த்தியம் கிடையாது. நான் வெறும் டாக்டர். நல்ல நிர்வாகி அல்ல என்பது எனக்குத் தெரியும்”

“நீ ஏன் கிடந்து மெனக்கிட வேண்டும். ஒரு கெட்டிக்காரப் பையனாகப் பார்த்து கட்டிக் கொள். அவன் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளட்டும். நீ வைத்தியம் பார்”

“உங்கள் யோசனை நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் நான் ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறேனே!” என்றாள் டாக்டர் பெரியநாயகி

“என்னடீ இது! திடீர்னு இப்படி குண்டைத் தூக்கிப் போடறியே!” கூட நடந்து கொண்டிருந்த சித்ராவின் குரல் பதற்றத்தில் உயர்ந்தது.

“பதறாத அத்தை!” என்றவள் வித்யாவைப் பார்த்துச் சொன்னாள்: “நான் அவங்களைச் சொன்னேன்”

வித்யா இந்த விளையாட்டை முறுவலுடன் ரசித்தாள்.

 “பயப்படாத அத்தை, நம்ம ஜாதிப் பையன்தான்” என்றாள் சித்ராவைப் பார்த்து டாக்டர் பெரியநாயகி

“அப்ப என்ன, ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே?”

“ம். ஆனால் அதுக்கு கொஞ்ச காலம் ஆகும்”

“ஏன் ஏதாவது பணப் பிரச்சினையா?”

“மானப் பிரச்சினை. கெளரவப் பிரச்சினை. அவர் சொந்தமாகத் தொழில் தொடங்கியிருக்கிறார். அது நிலைத்துக் கால் ஊன்றிக் கொண்ட பின்னர்தான் கல்யாணம் என்கிறார்”

“ரோசக்காரப் பையனாக இருப்பான் போலிருக்கே. இருக்கட்டும் இருக்கட்டும். அவனை என்ன வந்து பார்க்கச் சொல்”

வந்து பார்த்தான். தொழிலை விரிவுபடுத்த கொஞ்சம் முதலீடும் ஃபாக்டரிக்கு இடமும் வேண்டியிருக்கிறது என்றான்.

மறுவாரம் அவனுக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இடமும் முதலீடும் கிடைத்தது. அத்தோடு அவன் நிறுவனத்தில் புதிதாக ஒரு இயக்குநர் சேர்க்கப்பட்டிருந்தார். அது : சித்ரா!

“என்னக்கா, இது?” என்றாள் வியப்பும் மகிழ்ச்சியுமாக.

“இருக்கட்டும். பெரிய நாயகி நம் வீட்டுப் பெண் இல்லையா? அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நம் பொறுப்புத்தானே?”

***

மொட்டை மாடி நடை வழக்கமாகி விட்டது. காலையில் நடை, பின் குளியல், பூஜை, வந்திருப்பவர்களைப் பார்ப்பது, சிலரை கோட்டைக்கு வரச் சொல்வது என்ற அவளது அன்றாட ஷெட்யூல் கலாநிலையத்தில் அறிவிக்கப்படாத நடைமுறையாகியிருந்தது.

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்திருந்த நேரம். காலை நடை முடிவதற்குள் வியர்த்து ஊற்றியது. உள்ளாடைகள் நனைந்து ஒட்டிக் கொண்டன. “நமக்கு காலாற நடக்க ஒரு இடம் இருந்தால் நல்லா இருக்குமில்லையா அக்கா!” என்றாள் சித்ரா

“ம் இருந்தால் மட்டும் நாம் அங்கு சுதந்திரமாக நடக்க முடியும் என்று நினைக்கிறாயா?”

“சென்னை வேண்டாம் அக்கா. பெங்களூருக்கு போயிடலாம். ஜில்லுனு இருக்கும்”

“இன்னொரு மலையாள மாந்ரீகன் பூஜைக்கு அடி போடறியா நீ!” என்ற வித்யா கடகடவென்று சிரித்தாள்.

இரண்டு வாரம் கழித்து ஒரு சிங்கப்பூர் தொழிலதிபர் மஞ்சள் நிற ஆர்கிட் பூக்களோடு முதல்வரை சந்தித்தார். அவரது  நிறுவனம் மூணாறில் ஒரு தேயிலை தோட்டம் வாங்கியது. அதை இன்னொரு நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்குக் கொடுத்திருந்தார்.

குத்தகைக்கு எடுத்த நிறுவனத்தின் பத்திரத்தை சித்ராவிடம் நீட்டினாள் வித்யா. திறந்து பார்த்தாள் சித்ரா. அதில் நிர்வாக இயக்குநர் என்ற இடத்தில் சித்ராவின் பெயர்  இருந்தது.

“ஹலோ, மிஸ் எம் டி எனக்கு இப்போ ஒரு கப் டீ கிடைக்குமா?” என்றாள் வித்யா.

“ போங்க அக்கா!” என்று சிரித்துக் கொண்டே அடுக்களைக்கு ஓடினாள் சித்ரா.     

logo
Kalki Online
kalkionline.com