தோழி - 28

தோழி - 28

ஓவியம்; தமிழ்

“இவர் என் அண்ணன், கற்பகநாதன். அப்பா போனதற்கப்புறம் இவர்தான் என்னை வளர்த்தார். சொல்லியிருக்கேன்ல, எனக்கு பத்து வயசு இருக்கும் போது அப்பா போயிட்டாரு.” என்றாள் சித்ரா அருகில் நின்றவரைக் காட்டி. அவர் ஆறடிக்கு இரண்டங்குலம் குறைவாக நெடு நெடுவென்று நின்றார். கரிய மேனி, வெள்ளைச் சிகை. விழுந்த வழுக்கை முன்னேறாமல், முன் நெற்றி மட்டும் தூக்கலாய்த் தெரிந்தது.

“சித்ராவை ரொம்ப கெட்டிக்காரியா வளர்த்திருக்கீங்க.” என்றாள் வித்யா அவரிடம்.

யார் சித்ரா என்பது போல அவர் அரை நிமிடம் மலங்க மலங்க முழித்தார். அவர் மனதில் அவள் இன்னும் பெரியநாயகியாகவே இருந்தாள்.

“போங்கக்கா, கிண்டல் பண்றீங்க!” என்று சித்ரா செல்லமாகச் சிணுங்கிய பின்னர்தான் அவருக்குத் தன் தங்கையைத்தான் முதல்வர் சொல்கிறார் என்பது புரிந்தது.

“என்ன செய்கிறார்?” என்றாள் வித்யா சித்ராவைப் பார்த்து.

“அதிகம் படிக்கலை. படிக்க வசதி இல்லை. அப்பா போன பின்பு இவர்தான் எல்லாரையும் ஆளாக்க வேண்டியிருந்தது. விவசாயம்தான் பார்த்தார். ஆனால் அதில் கெட்டிக்காரர், உள்ளங்கையில் விதையை எடுத்து உரசிப் பார்த்தார்னா விளையுமா பொய்க்குமானு சொல்லிடுவார்”

“தாயீ, அவங்க எல்லாம் தெரிஞ்சவங்க, அவங்க கிட்ட ரொம்ப அளக்காத!” என்று கடிந்து கொண்டவர் “எல்லாம் அனுபவம்தான்மா” என்றார் வித்யாவிடம்

வித்யா முறுவலித்தாள்.” விவசாயம் ஒண்ணும் லேசுப்பட்ட விஷயமில்லை. அதில அனுபவம் என்பது பெரிய அஸட்!” என்றாள்

அஸட் என்றால் என்ன, தன்னை அசடன் என்கிறாரோ என்று சித்ராவை கண்ணில் கேள்வியோடு பார்த்தார் கற்பகநாதன்.

“அஸட் என்றால் சம்பத்து, செல்வம், என்ன சரிதானே அக்கா?” என்று வித்யாவைப் பார்த்தாள்

“நீ இப்போ பெரிய முதலாளி, நீ சொன்னா தப்பா இருக்குமா!”

“அக்கா இன்னிக்கு செம மூட்ல இருக்காங்க போல. என்னை வாரிகிட்டே இருக்காங்க”

“சித்ரா அண்ணன் உங்க கிட்ட ஒரு நல்ல சேதி சொல்லணும்னு வந்திருக்காங்க!” என்று சாமிநாதன் வந்த வேலையை ஞாபகப்படுத்தினார்.

“பொண்ணுக்கு கல்யாணம் பேசியிருக்கேன். அடுத்த வெள்ளிக்கிழமை கோயில்ல வைச்சு பாக்கு வெத்தலை மாத்தி நிச்சயம் பண்ணலாம்னு நினைச்சிருக்கேன். பெரியநாயகியை நீங்க ஒருவாரம் என்கிட்ட அனுப்பி வையுங்க. எனக்கு இந்த வரதட்சணை, சீர் செனத்தியெல்லாம் அழுத்தமா பேச வராது. அவ வந்த அடிச்சுப் பேசுவா. பெரிய பக்கபலாமா இருக்கும்!”

“ஏண்டி, நீ அடிக்க வேற செய்வியா?” என்றாள் வித்யா சித்ராவைப் பார்த்து.

“அவசியம்னா அதையும் செய்யத்தானேக்கா வேணும்?”

“என்ன சாமிநாதன்! சரிதானா அவ சொல்றது? உங்க அனுபவம் எப்படி? அடிச்சிருக்காளா?”

“கொலையும் செய்வாள் பத்தினி” என்று பழைய சினிமா வசனத்தை உதிர்த்தான் சாமிநாதன்.

சித்ரா முறைத்துக் கொண்டே  தூரத்தில் நின்று கொண்டிருந்த அவனை நோக்கிக் கையை உயர்த்தினாள்.

அந்த கூடத்தில் இருந்த எல்லோரும் கண்ணில் நீர்தளும்ப  உரக்க சிரித்தார்கள்.

“மாப்பிள்ளை என்ன செய்கிறார்?”

“ உறவுக்காரப் பையன்தான்வெளிநாட்ல வேலை செய்கிறார்”

“எந்த நாடு? என்ன வேலை? வெளிநாட்டு வேலைனா உசத்தியா இருக்கணும்னு அவசியம் இல்லை. அங்கேயும் லாரி ஓட்றவங்க, கொத்தாள் சித்தாள் எல்லாம் இருக்காங்க!” என்றாள் வித்யா

கற்பகநாதன் சாமிநாதனைப் பார்த்தார்.

“பிரான்ஸ்ல ஃபாக்டரி மானேஜர்” என்றார் சாமிநாதன்

“என்ன பாக்டரி?”

சாமிநாதன் தயங்கினார் பின் மெதுவாக ஒயின் என்று ஆரம்பித்தவர் சடக்கென்று “ஷாம்பெயின் ஃபாக்டரி!” என்று மாற்றிக் கொண்டார்.

“அது தப்பில்ல, அவர் குடிப்பாரா?”

“சே! சே! தங்கமான பையன்!” என்றாள் சித்ரா முந்திக் கொண்டு.

“ பொண்ணுக்கு என்ன செய்யப் போறீங்க?”

“முப்பது பவுன் போடலாம்னு நினைச்சிருந்தேன்.  பையன் வெளிநாட்டுல்ல இருக்கறதால, அவங்க அதிகமா எதிர்பார்க்கறாங்க!”

“அதனாலதான் தங்கமான பையன்றாளா இவ” என்று சித்ராவை கிண்டலடித்த வித்யா “அதிகமானா எவ்வளவு?”

ஐம்பது எதிர்பார்க்கறாங்க. பெரியநாயகி வந்தா நாற்பதுக்கு பேசி முடிக்கலாம்னு தோணுது”

“நூறு பவுன் போடறோம்னு சொல்லுங்க!”

கற்பகநாதன் திகைத்தார். “அம்மா! அது எனக்கு ஆகாதுமா! என் தலையை அடகு வைச்சாலும் அத்தனை புரட்ட முடியாதுமா!”

“ உன் தலையை யார் அடகு பிடிப்பா? மதிப்புள்ளதைத்தானே அடகு வைக்க முடியும்?” என்று அண்ணனைக் கலாய்த்தாள் சித்ரா.

“சும்மா சொல்லுங்க! எல்லாம் சித்ரா செய்வாள்!”

“அக்கா!” சித்ரா திகைத்துப் போய் வித்யாவைப் பார்த்தாள்

“நீங்க சித்ராவிற்கு அண்ணன்னா எனக்கும் அண்ணன்தான். உங்க பொண்ணு எங்க வீட்டுப் பொண்ணு. அவளுக்கு நான் செய்வேன், நாங்க செய்வோம். என்னடி செய்ய மாட்டியா?”

கற்பகநதான் பேச நா எழாதவராக கை உயர்த்திக் கும்பிட்டார். அதுவரை அவரருகில் நின்று கொண்டிருந்த அவர் மனைவி தமிழரசி சற்று முன்னே வந்து தாடால் என்று வித்யா காலில் விழுந்தாள்.

அவள் காலில் விழுந்ததை வித்யா ரசித்த மாதிரித் தோன்றியது. காலை நகர்த்திக் கொள்ளவில்லை. தோளைப் பிடித்து எழுப்ப முயற்சிக்கவில்லை.

“அரசி! எழுந்திரு!” என்று சித்ராதான் அவளை உலுக்கினாள்.

“அண்ணியைப் பேர் சொல்லித்தான் கூப்பிடறதா!” என்று சித்ராவைக் கடிந்து கொண்டாள் வித்யா.

“அண்ணன் கல்யாணத்திற்கு முன்னாலேயே அவங்க இரண்டு பேரும் ஃபிரண்ட்ஸ். சித்ராதான் அவளை  அண்ணனுக்கே கட்டி வைத்தாள்” என்றார் சாமிநாதன்.

தமிழரசி எழுந்து “நீங்க தெய்வம்!” என்றாள் நாத் தழுதழுக்க.

வித்யா முறுவலித்தாள். “இருக்கட்டும் இருக்கட்டும், ஆனா அதுக்காக கல்லில் அடிச்சு கர்ப்பகிரஹ இருட்டில கொண்டு போய் உட்கார்த்திராதீங்க!” என்றாள்

“இவள் செஞ்சாலும் செய்வாள்!” என்றான் சாமிநாதன் சித்ராவைப் பார்த்து.

மறுபடியும் அறையை சிரிப்பு நிறைத்தது

“கல்யாணம் எங்க?”

“ஊர்ல சத்திரம் பார்த்திருகேன். தேதி நிச்சயமானதும் பேசி உறுதி பண்ணனும்” என்றார் கற்பகநாதன்

“அவங்க கிட்ட கல்யாணம் மெட்றாஸ்லனு சொல்லுங்க!”

“அம்மா!” கற்பகநாதன் தயங்கினார். “அங்காளி, பங்காளினு எங்க சொந்தக்காரங்க பெரிய பட்டாளம். அக்கம் பக்கம் நகராம அந்த ஊர்லேயே ஆணி அடிச்சமாதிரி ஐம்பது வருஷமா இருந்திட்டேன் பாருங்க அதுனால ஒரு குடித்தனம் விடாம ஊர்ல எல்லோரும் பழக்கம். அவங்களை கூப்பிடாம இருக்க முடியாது. ‘என்ன கற்பகம், நாங்க வரவேணாம்னு பட்டணத்தில கொண்டு கல்யாணத்தை வைக்கிறியானு’ கிண்டலும் கேலியுமா பேசுவானுங்க. பெரியநாயகி கல்யாணத்திலேயே நூறு இலை விழுந்தது. இதில அதுக்குக் கூடுமே தவிர குறையாது. மாப்பிள்ளை வீடும் பெரிய குடும்பம். அங்கேயும் நூறுக்கு மேல போகும். அதுவும் தவிர...”

“அதுவும் தவிர?”

“ இங்கு எடுத்துச் செய்ய  எனக்கு  ஆள் வசதி கிடையாதம்மா. என்னால் வந்து வந்து போக முடியாது!”

“ அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க? உங்களுக்கு இங்கு ஒரு ஆள் இருக்கிறாள். அவள் அப்படி ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. ஆனால் சொன்னதைச் செய்து காட்டுவாள்”

வித்யா யாரைச் சொல்கிறாள் என்று புரியாமல் கற்பகநாதன் சித்ராவைப் பார்த்தார்.

அதைப் பார்த்த வித்யா முறுவலுடன், “அவள் பெயர் வித்யா!” என்றாள்

திகைத்துப் போனார் கற்பகநாதன்

“அண்ணா, மக்கு அண்ணா!.  புரியலையா உனக்கு. அக்கா தன் கையால் தாலி எடுத்து கொடுத்து கல்யாணத்தை நடத்தணும்னு நினைக்கிறார்ப் போல” என்றாள் சித்ரா.

அவளைக் கையுயர்த்தி அடக்கினாள் வித்யா. “அப்படியெல்லாம் எனக்கு ஆசை இல்லை.  ஆனால் என்னால் ஒரு சுப காரியம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அக்கா தங்கை அண்ணன் தம்பி இல்லை. எனக்குக் குழந்தை குட்டிகளும் கிடையாது. என் வாழ்வில்  பெரிதாய் மங்கல நிகழ்ச்சி எதுவும் நடந்து விடவில்லை. நடத்தும் பாக்கியமும் இல்லை. அப்படி ஏதாவது நான் என் பொறுப்பில் எடுத்து நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான்” என்றாள்

இதைச் சொல்லும் போது அவள் முகத்தில்  உணர்ச்சிகள் கொந்தளித்தன. குரலில் ஒரு தீவிரம் தொனித்தது. ‘எனக்கு பாக்கியம் இல்லை’ எனச் சொல்லும்போது குரல் கம்மிற்று. உடைந்து விடுவாள் போல் தோன்றியது.

அதுவரை கேலியும் சிரிப்புமாக இருந்த அறையில் ஒரு கனத்த மெளனம் நிலவியது.

******

“வெள்ளிக் குடம் பெரிசு ஏழு, சின்னது எட்டு, எழுதிக்கிறீங்களா?” என்றாள் சித்ரா.

“குறிச்சுக்கிட்டுதான் இருக்கேன். நீ சொல்லு!” என்றார் எழுதிக் கொண்டிருந்த சாமிநாதன் தலைநிமிர்ந்து,

“வெள்ளித் தட்டு 75”

“இது நிஜமான வைரமா, அமெரிக்கன் டைமண்டா?” தமிழரசி ஓர் ஆரத்தை எடுத்துக் கொண்டு வந்து காட்டினாள். கல்யாணத்திற்கு வந்திருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் பிரித்து கணவனும் மனைவியுமாக ஒவ்வொன்றாகக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். முதல்வர் வீட்டுக் கல்யாணம் என்பதால் கட்சிக்காரர்களும், அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும், தொழிலதிபர்களும், திரைநட்சத்திரங்களும் பரிசுகளாகக் கொண்டு வந்து குவித்திருந்தார்கள்.

“அரசி, நகையெல்லாம் இப்ப வெளிய எடுக்காதே. பத்தரை வரச் சொல்லியிருக்கேன். அவர் வரட்டும் உரசி எது எத்தனை மாத்துனு பார்த்துக்கலாம்”

“கொடுத்தவன் தரமும் அதில் தெரிஞ்சு போகும்”  என்று சிரித்தான் சாமிநாதன்.

“அதுக்கில்லடி இவளே! எல்லாத்தையும் சட்டுப் புட்டுனு பார்த்து முடிச்சாதானே தேவலாம். பரிசுனு வந்ததை காலா காலாத்திலே மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிச்சாதானே நமக்கு மரியாதையா இருக்கும்!”

“என்னது! மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பறதா? ஒரு குண்டூசி வெளிய போகாது. எல்லாம் இங்கேதான் இருக்கும்” என்றாள் சித்ரா.

“அவங்க கல்யாணத்திற்கு வந்ததடி!”

“இருக்கட்டும். ஆனா அவங்களுக்கு வந்ததா இது? அதுவும் தவிர அண்ணன் முப்பதுனாரு. அக்கா 108 பவுன் போட்டாங்க! அதுக்கு மேல என்ன?”

“அதென்ன 108, அனுமாருக்கு வடைமாலை சாத்தின மாதிரி”

“அனுமார்தான். ஆளைப் பாத்தீங்கள்ல. அண்ணன் தேடிப் பிடிச்சிட்டு வந்திருக்காரு. அவருக்கு இத்தனையும் கொடுக்கணுங்கறா அரசி!”

“நம்மளே வைச்சுக்கலாம்கிறியா?” என்றாள் தமிழரசி மறுபடியும்.

“ஆமாம். இப்பத்தானே சொன்னேன், காதில விழலையா. உன் காதை நல்ல டாக்டரா பார்த்து காட்டு. மறுபடி சொல்றேன். நல்லா கேட்டுக்க. இது எல்லாம் இங்கதான் இருக்கும். ஒரு துரும்பு வெளிய போகாது!” என்றாள் சித்ரா அழுத்தம் திருத்தமாக.

“அக்கா, நகையெல்லாம் போட்டுக்குவாங்களா? அவங்க கழுத்தில  சணல் கயிறு மாதிரி ஒரு சங்கிலியைத் தவிர வேறேதும் பார்க்கலையே நான்”

“ அவங்க போட்டுக்க மாட்டாங்க. ஆனால் இதெல்லாம் இங்க இருக்கணும். அவங்க இப்படி அப்படிப் போகும் போது வரும்போது இந்த வெள்ளிப் பாத்திரங்கள் அவங்க கண்ணுல பட்டுக்கிட்டே இருக்கணும். நகைகள் ஞாபகத்தில வந்து போகணும். அரண்மனை ராணிங்க, காணாது கண்ட மாதிரி, எல்லா நகையும் அன்றாடம்  எடுத்து எடுத்து  பூட்டிக்கிட்டு அலங்கார பூஷணியா அலையமாட்டாங்க. ஆனா அப்பப்ப கஜானவைத் திறந்து பார்த்து பூரிச்சுப் போவாங்க. நீ பேர்லதான் அரசி.  ஆனா அவங்க தன்னை ராணினு நினைச்சுட்டு இருக்காங்க. ஆளு, அம்பு, சேனை, அரண்மனை, நகை, அதிகாரம்,  எல்லாம் இருக்கணும் அவங்களுக்கு. இருந்துகிட்டே இருக்கணும்.  கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஒரு கூட்டம் இருக்கணும். ஏவின வேலையைச் செய்ய எடுபிடிகள் வேண்டும். கால்ல விழுந்தா கை தூக்கி விடுவாங்க. எதிர்த்துப் பேசினா தலையைச் சீவுவாங்க. மன்னிக்கிறதிலும் தண்டிக்கிறதிலும் அவங்க அரசிதான். கொடை கொடுக்கறதிலும் சரி கோபப்படறதிலும் சரி அவங்க ராணி. அந்த நினைப்புதான் அவங்களைச் செலுத்துது. அதுதான் அவங்க பலம். அதுதான் அவங்க பலவீனம்”

“கரெக்ட்! அவங்க பலவீனத்தை சரியா பிடிச்சுட்ட!”

“பலவான்களை பலத்தால் ஜெயிக்க முடியாது. அவர்களது பலவீனத்தால் ஜெயிக்கலாம்”

“அட, இது நல்லா இருக்கே!” என்றான் சாமிநாதன்

 “சொன்னது காந்தாரி!”

“காந்தாரியா அதுயாருடீ?” என்றாள் தமிழரசி குழப்பத்துடன்

“அவளை உனக்குத் தெரியாது என்ரு முறுவலித்தாள் சித்ரா.

-தொடரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com