தோழி

தோழி

பெரியவர் அனுப்பினார் என்பதற்காக வேறு பேச்சு இல்லாமல் வித்யா பெரியநாயகியை வீட்டிற்குள் சேர்த்து விடவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் நேர்காணல் போல அடுக்கடுக்காக கேள்விகளை வீசி விசாரித்தாள். பேர் என்ன, ஊர் என்ன என்பதைப் போல விவரம் சேகரிக்கும் வெற்றுக் கேள்விகள் இல்லை. இயல்பு, குணம், நடத்தை, விசுவாசம் இவற்றைப் பரிசோதிக்கும் கேள்விகள்.

“இந்த வீட்டில் என் படுக்கை அறை எங்கிருக்கிறது தெரியுமா?” என முதற் கேள்வியை வீசினாள் வித்யா.

“இப்போதுதான் அடியெடுத்து வைக்கிறேன், எனக்கெப்படித் தெரியும்” என்று கேட்க நினைத்தாள் பெரியநாயகி. ஆனால் கேட்கவில்லை. ‘தெரியாது’ எனத் தலை அசைத்தாள்.

“கண்டுபிடி!”

சுற்றும் முற்றும் பார்த்தாள் பெரியநாயகி. “யாரையும் கேட்காமல் கண்டுபிடி”

கீழே இருந்த அறைகளுக்குள் அவற்றின் வாசலில் இருந்தே எட்டிப் பார்த்தாள். பின் தயங்கித் தயங்கிப் படி ஏறினாள். படபடவென்று இறங்கி வந்தாள். “முதல் மாடியில் இடது புறம் இருக்கும் முதல் அறை” என்றாள்

“பரவாயில்லையே, எப்படிக் கண்டு பிடித்தாய்?”

பெரியநாயகி பதில் சொல்லத் தயங்கினாள்.

“சொல்லு! யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?”

அவசர அவசரமாக தலையை இடமும் வலமுமாக ஆட்டி மறுத்தாள் பெரியநாயகி.

“பெரிய அறையாக இருந்தது.”

“அதனால்?”

“தோட்டத்தைப் பார்த்து இருந்தது”

“ம்”

“அப்புறம்?”

“சொல்லு, அப்புறம்?”

“ஜன்னலோரமாக ஒரு சோபா இருந்தது. சோபா அருகில் ஒரு ஸ்டூல்”

“அது ஸ்டூல் இல்லை. டீபாய் என்று சொல்லு” என்று திருத்தினாள் வித்யா.

“அதில் ஒரு காஃபி டம்பளர். கழுவப்படாத காஃபி டபரா தம்பளர்”

வித்யாவின் புருவங்கள் வியப்பில் ஏறி இறங்கின. “சித்தி ! என்று சமையலறையைப் பார்த்து கூப்பாடு போட்டாள். “காபி பாத்திரம் அங்கேயே இருக்காமே?” என்று இரைந்தாள்.

“எடுத்துண்டு வரலாம்னுதான் புறப்பட்டேன். நீ கூப்பிட்ட மாதிரி இருந்தது. அதனால் போகலை. அப்புறம் மறந்துட்டேன்” என்றார் சித்தி.

“எல்லாத்திற்கும் ஒரு சால்ஜாப்பு, நொண்டிச் சாக்கு. ஏதாவது ஒரு காரணம்”

“இல்லடியம்மா நான் இனி ஒண்ணும் பேசலை!” வாயை மூடிக்கொண்டாரே தவிர, கண்ணைத் திறந்து கொண்டார். நெற்றிக் கண். பெரியநாயகி மீது எரிக்கும் பார்வையை வீசிக் கொண்டே விடுவிடுவென்று படியேறினார் ராஜம்மா.’போட்டுக் கொடுத்துட்டியா’ என்று பொசுக்கியது பார்வை.

“சபாஷ்! குட் கெஸ்!”

“என் ஊகத்தை இதுதான் ஊர்ஜிதப்படுத்தியது” என்று கையைத் திறந்து காட்டினாள் பெரியநாயகி. அது. ஒரு வெள்ளி ஜரிகை. அல்ல அல்ல, ஜரிகை இழைபோல ஒரு நீண்ட தலைமுடி. “இது தலையணையின் ஓரமாகக் கிடந்தது. நீங்கள் அங்குதான் தூங்கியிருக்க வேண்டும் என்று தோன்றியது”

அனிச்சையாகத் தலையைத் தடவிப் பார்த்துக் கொண்டாள் வித்யா. முதுக்குப் பின்னால் கிடந்த கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டாள். பின் “அடிப்பாவி! டிடெக்டிவ் வேலையெல்லாம் பண்றியே!

பெரியநாயகி அசட்டுப் புன்னகை புரிந்தாள் .ஆனால் நெளியவில்லை.

 “இருக்கட்டும் அப்படியும் ஒரு ஆள் வேணும் இந்த வீட்டுக்கு!”” என்றபடி எழுந்து கொண்டாள் வித்யா.

•••• ••••

ந்த முதல்நாள் பெரியநாயகி வேறு யாரிடமும் வாயைத் திறந்து அதிகம் பேசவில்லை. வாசலையும் கூடத்தையும் தாண்டி வீட்டுக்குள் வேறு இடங்களுக்குப் போகவில்லை. ஆனால், பதினைந்து நாளில் பல விஷயங்கள் மாறின.

வாயிற்காப்போன் பாபு வேலையை விட்டுத் தூக்கப்பட்டான். அந்த இடத்தில் பெரியநாயகியின் ஊருக்குப் பக்கத்திலிருந்த பண்ணையிலிருந்து ஒரு முரட்டு பண்ணை ஆள் நியமிக்கப்பட்டான். ஜன்னல்களை, சோபாக்களைத் துடைக்க, திரைச்சீலை மாற்ற என இரண்டு சிறு பெண்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களும் ஊர்க்காரர்கள்தான். அவர்கள் வந்த பின்பு காஃபி டபராவை எடுக்க ராஜம்மா மாடிக்குப் போக வேண்டியிருக்கவில்லை. அந்தப் பெண்கள் வாசலில் அழகாகக் கோலம் போட்டார்கள். அதைப் பார்த்த வித்யா அசந்து போனாள். மகிழ்ச்சியால் மலர்ந்த அவளது முகத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டாள் பெரியநாயகி.

பாதுகாப்புக்கு என்று இரண்டு அல்சேஷன் நாய்கள் வாங்கப்பட்டன. அவற்றைக் குளிப்பாட்ட, பராமரிக்க, அவை செய்யும் அசிங்கத்தை சுத்தப்படுத்த, அவற்றுக்கு மாமிசம் வாங்கிப் போட என இருவர் நியமிக்கப்பட்டார்கள். மதில்மேல் வலையடித்து கொடி வளர்க்க ஏற்பாடாயிற்று. அதற்காகவும் தோட்டத்தைப் பராமரிக்கவும் தோட்டக்காரர்கள் வந்தார்கள். டிரைவரை வீட்டில் எடுபிடி வேலைக்கு மாற்றிவிட்டு புதிதாக டிரைவரை நியமிக்க ஏற்பாடு செய்தாள் பெரியநாயகி.

“திவான்!” என்ற வித்யாவின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள் பெரியநாயகி. சுற்று முற்றும் பார்த்தாள். “யாரையாவது கூப்பிட்டீர்களா அம்மா!” என்றாள்.

“உன்னைத்தான் கூப்பிட்டேன்! சமஸ்தானம் பெரிதாகிக் கொண்டே போகிறதே! நான் நடித்துக் கொண்டிருந்த போது கூட இத்தனை ஆட்கள் இல்லையே! காசுக்கு என்ன செய்ய உத்தேசம்?”

“கிராமத்து ஜனங்கம்மா. காசு அதிகம் கேட்கமாட்டார்கள். வயிறாரச் சாப்பாடு போட்டு வருஷத்திற்கு இரண்டு புது துணிமணிகள் கொடுத்தால் அதிகம் கேட்கமாட்டார்கள்!”

வேலையாட்கள் எண்ணிக்கை அதிகமாயிற்று. அவர்கள் வீட்டோடு தங்கவும் ஏற்பாடாயிற்று. ஆட்கள் எண்ணிக்கை அதிகமானதால் அத்தனை பேருக்கும் தன்னால் சமைக்க முடியாது எனச் சுணங்கினார் ராஜம்மா.

“என்ன செய்யணுங்கிறாய்?” என்று எரிச்சலானாள் வித்யா.

“நான் என் ஆயுசுக்கும் உனக்கு சமைச்சுப் போடத் தயார். அவாளுக்கு தனியா ஆளைப் போடு!”

‘நீ என்ன சொல்கிறாய்’ என்பதைப் போல பெரியநாயகியைப் பார்த்தாள் வித்யா.

“சித்தியோட கைப் பக்குவம் யாருக்கும் வராது. அவர் வெண்டைக்காயை நறுக்கறதை ஒருநாள் பக்கத்திலிருந்து பார்த்தேன். ஒவ்வொரு காயா எடுத்துக் கழுவி, துடைச்சு உலர வைச்சு... என்ன மெனக்கிடல். அப்புறம் ஒவ்வொரு துண்டும் மிஷின்ல கொடுத்து நறுக்கின மாதிரி ஒரே அளவு.”

“ என்கிட்டேயே நீ அவளைப் பற்றி சர்ட்டிபிகேட் கொடுக்கிறியா? முப்பது வருஷமா தினம் சாப்பிட்டுண்டு இருக்கேன். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு போதும்!” என்றாள் வித்யா கறாரான குரலில்.

அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், “ஆனா அவருக்கும் வயசாயிக்கிட்டுப் போகுது” என்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள் பெரியநாயகி. “அதுவும் தவிர எங்க ஆளுங்களுக்கு ஐயர் வீட்டுச் சாப்பாடு சாப்பிடக் கொடுத்து வைக்கல. அவங்க நாக்கை இத்தனை நாள் வேறு மாதிரி பழக்கிட்டாங்க!”

‘அப்டீனா?”

“ஏதோ ஒண்ணுல ரெண்டுல மீனோ... கோழியோ சாப்பிட்டுக்கலாம்னு சொன்னா அவங்க சந்தோஷப்பட்டுப்பாங்க”

“பெருமாளே!” என்று காதைப் பொத்திக் கொண்டார் ராஜம்மா. “என்னையா அசைவம் சமைக்க சொல்ற. இன்னும் எனக்கு அது ஒண்ணுதாண்டி பாக்கி!”

“இருங்க சித்தி!.” என்றாள் பெரியநாயகி. “நான் அப்படிச் சொல்லலை. வேலைக்காரங்களுக்கு சமைக்க தனியா ஓர் ஆளைப் போட்டிடலாம்னு சொல்ல வந்தேன்”

ராஜம்மா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

ஆனால் வித்யா, “ஆளை  வேணா போட்டுக்கோ. ஆனால் இந்த வீட்டுக்குள் அசைவம் கூடாது!” என்றாள் தீர்மானமாக.

“வீட்டுக்குள்ள இல்ல, அவுட் ஹவுசிலதானே அவங்க சமையல்!”

“என்ன வேணா பண்ணிக்கோ. ஆனால் கவுச்சி நாத்தம் வரக்கூடாது என்றாள் வித்யா, ஆட்கள் அதிகமாக அதிகமாக தனது ஒவ்வொரு அசைவும் கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட்டுக்கும் உள்ளாகிறது என்பதை உணராமலே.

••• •••

“இந்த நாற்காலியை மாற்றிக் கொள்ளலாமா?” என்றார் பெரியவர்

“அட! அரசியல்வாதிகள் கூட நாற்காலியை மாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறார்களே!” என்று கேலியாகச் சிரித்தாள் வித்யா.

“கொஞ்சநாளா நீண்ட நேரம் உட்கார்ந்தா கீழ்முதுகுல வலி. சோபாக்களை தவிர்க்கச் சொல்கிறார் டாக்டர்,”

“எர்கோனாமிக் சேர்னு கிடைக்கிறது அதை வாங்கிக்கோங்க” என்ற வித்யாவின் யோசனையைக் காதில் வாங்கிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல், “நான் அனுப்பிச்ச பொண்ணு எப்பிடி?” என்றார்.

“பொண்ணா? பொம்பளை! உங்களுக்கு வயசாயிடுச்சு என்பதற்கு இது இரண்டாவது நிரூபணம். முதல் சாட்சி முதுகுவலி. இரண்டாவது சாட்சி பொம்பளைங்க எல்லாம் சின்னப் பொண்ணாத் தெரியுது!”

என்ன உரிமை! எத்தனை ஸ்வாதீனம்! அதிகாரம், பணம், புகழ் நிறைந்த ஒருவரிடம் வேறு யாரேனும் இப்படி கேலி பேச முடியுமா என்று எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்த பெரியநாயகிக்கு பிரமிப்பாக இருந்தது.

“பாயசம் சாப்பிடறீங்களா?” என்றாள் வித்யா

“அப்போ அவ வந்தது உனக்கு மகிழ்ச்சிதான்!”

“சித்தி!” என்று அடுக்களையைப் பார்த்துக் கூவினாள் வித்யா. “ பெரியவருக்கு பாயசம் இருந்தா கொண்டாங்கோ!”

சித்தி வரவில்லை. பெரியநாயகி ஒரு வெள்ளித் தம்பளரை ட்ரேயில் வைத்து எடுத்து வந்து பணிவாகக் குனிந்து நீட்டினாள்

“நீ சாப்பிடலையா?”

“உங்களுக்கு பாயசம் ஒரு குறியீடு. சந்தோஷமா இருப்பதற்கு. எனக்கும் அப்படியா?”

“இல்லையா? பின்னே? எதற்கு பாயசம்?”

“இன்னிக்கு ரத சப்தமி. பூஜை பண்ணி நைவேத்தியம் பண்ணினேன்.”

“ரத சப்தமினா?”

“அது ஒரு பண்டிகை”

“அது தெரியும்... ஆனா என்ன பண்டிகைனு தெரியாது”

“தை அம்மாவாசைக்கு அப்புறம் வர்ற ஏழாம் நாள். சூரியன் தனது ஏழு குதிரை பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கித் திருப்புகிறான்”

“அட!”

“இதிலெல்ன ஆச்சரியம்? ரதசப்தமினா ஆதித்ய ஹிருதயம் படித்துவிட்டு வடை, பாயசம் வைத்து நைவேத்தியம் பண்ணுவது எங்க வீட்டில் எனக்குத் தெரிந்து எங்க தாத்த காலத்திலிருந்து நடந்துண்டிருக்கு!”

“என் அட அதற்கு அல்ல. நானும் ஒரு சூரியனை வடக்கே அனுப்பலாம் என்று இன்றுதான் நினைத்தேன்”

“சூரியனையா?”

“உன்னை ராஜ்ய சபாக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்திருகிறேன்!”

“என்னையா?”

“ம்”

“நிஜமாவா?”

“ம்”

“கட்சியில ஒத்துப்பாங்களா?”

“கட்சினு தனியா ஒண்ணு இருக்கா? நாமதான் கட்சி. எனக்கு தில்லியில வலுவா ஒரு ஆள் வேணும். இப்ப இருக்கிற ஆளுங்க அந்த அம்மாவைப் பார்த்தாலே நடுங்கறாங்க. எனக்கு நல்ல ஒரு ஆள் வேணும். தைரியமான கெட்டிக்கார ஆள்!”

“கெட்டிக்கார ஆளா இருந்தா போதுமா? விசுவாசியா இருக்க வேண்டாமா?” கடகடவென்று சிரித்தாள் வித்யா.

அவள் சிரித்து முடியும்வரை காத்திருந்த பெரியவர் சொன்னார்.” இந்த பார் வித்யா. விசுவாசியை வாங்க முடியாது. உருவாக்கணும். கெட்டிக்காரனை வாங்க முடியும். எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். கெட்டிக்காரனுக்கும் பலவீனம் இருக்கும். அது என்னனு கண்டுபிடிச்சு வைச்சுக்கணும். அதைத் தெரிஞ்சுக்கிட்டா கெட்டிக்காரனை எப்போதும் கையில வைச்சுக்கலாம். கை மீறிப் போகாம வைச்சுக்கலாம்”

இப்போது பெரியவரை பிரமிப்புடன் பார்த்தாள் பெரியநாயகி. மனிதர்களைப் பற்றிய என்ன துல்லியமான மதிப்பீடு.  

“நான் கெட்டிக்காரியா? விசுவாசியா?”

“இப்போதைக்கு எனக்குத் தெரிந்தது, நீ கெட்டிக்காரி!”

“ஓ! அப்படியானால் என் பலவீனம் என்ன?”

“தெரியலை. கண்டுபிடிக்கணும்” என்றவர் பார்வை பெரியநாயகி மீது விழுந்தது.

“என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே? நான் அனுப்பிய இவள் எப்படி?”

“ம். கெட்டிக்காரி. விசுவாசியா என்று இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்!” 

இப்போது கடகடவென்று சிரித்துக் கொண்டே எழுந்தார் பெரியவர். இதழ்கள்தான் சிரித்தன. இதயம், ‘வித்யா, உன் பலவீனம் எனக்குத் தெரியுமே?. தெரியாமலா உன்னை தில்லிக்கு அனுப்புவேன்? உன் பலவீனம் சந்தேகம். யாரையும் எதையும் நம்பாத குணம். அது போதும் உன்னை ஆட்டி வைக்க!’ என்றது.

அவரை வழியனுப்ப வாசலுக்குப் போனாள் வித்யா.

வித்யாவின் பலவீனம் என்னவாக இருக்கும்? என்று யோசிக்க ஆரம்பித்தாள் பெரியநாயகி.

(தொடரும்)

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com