தோழி

அத்தியாயம் -2
தோழி

“என்ன தைரியத்தில் இதில் என் கையெழுத்தைக் கேட்கிறீர்கள்?”கேரம் போர்டில் காய்களைச் சுண்டுவது போல நுனி விரலால் தன் எதிரே வைக்கப்பட்ட காகிதத்தைத் தள்ளினார் ஸ்ரீரஞ்சனி.

‘கலெக்டருக்கு எப்படி விளங்க வைப்பது’ என்று புரியாமல் மெளனமாக நின்று கொண்டிருந்தார் அதிகாரி.

“திட்டத்திற்கான எஸ்டிமேட் எப்போதோ எகிறி விட்டது. வேலை பாதி கூட முடியவில்லை. மேலே மேலே சாங்ஷன் கேட்டால் எப்படி?” குரலை நிதானப்படுத்திக் கொண்டு ரஞ்சனி தன் ஆட்சேபத்தை வெளிப்படுத்தினார்.

“கட்சி மாநாடாம். பந்தல் இந்தக் காண்டிராக்டர் செலவாம். பணமில்லாமல் திணறுகிறார். கையில் கொஞ்சம் காசு கிடைத்தால் இந்த நேரத்தில் உதவியாக இருக்கும் என்று நம்மை நெருக்குகிறார்”

“நல்ல கதையா இருக்கே!”

“அவர் மந்திரிக்கு சம்பந்தி. மறுத்தோம்னா மேல வரைக்கும் போனாலும் போவார்”

“அதுக்காக? நமக்கு ஆடிட்னு ஒண்ணு இருக்கில்ல. யார் பதில் சொல்வா?”

“வேதாளத்திற்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரம் ஏறத்தான் வேண்டும்” என்ற யதார்த்தத்தை இன்னும் வேறு வார்த்தைகளில் எப்படிச் சொல்லலாம் என்று அதிகாரி யோசிக்க ஆரம்பித்தபோது தொலைபேசி அலறியது

நீங்க எடுங்க என்று கண்ணால் ஆணையிட்டார் கலெக்டர். ரிசீவரை எடுத்த அதிகாரி, “சி எம். ஆபீஸ்” என்று ரத்தினச் சுருக்கமான  இரண்டு வார்த்தைகளுடன் போனை கலெக்டரிடம் நீட்டினார்.

மறுமுனையில் இருந்தவர்கள் அதைவிடச் சுருக்கமாகப் பேசினார்கள். “போர்டு வழி வேண்டாம். ஹாட்லைனில் வாங்க” என்றார்கள்

ரஞ்சனி அதிகாரியைப் பார்த்தார். இங்கிதம் தெரிந்த அவர் அவசர அவசரமாகக் கோப்புகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அதற்குள்ளா நம் ஆட்சேபணை கோட்டை வரை போய்விட்டது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே முதல்வர் அலுவலகத்தை அழைத்தார் ரஞ்சனி.

ஆனால், முதல்வர் பேசவில்லை. அவரது முதன்மை உதவியாளர் முத்துலிங்கம் பேசினார். நடைபெற இருக்கும் கட்சி மாநாட்டிற்கு முக்கியமான ஒருவர் முதல்வரின் பிரதிநிதியாக வரவிருக்கிறார். அவரை முறையாக வரவேற்றுத் தங்க வைக்க வேண்டும். அதுதான் அவர் பேச்சின் சாரம்.

‘இதற்கா ஹாட்லைன்?ஆனாலும் இப்பெல்லாம் ரொம்பத்தான் அலட்டறாங்க’ என்ற அலுப்புடன் போனை வைத்தார் ரஞ்சனி. திருநெல்வேலிக்கு வரும் முன் அவர் முதல்வர் அலுவலகத்தில் சில காலம் ‘குப்பை’கொட்டியவர்தான். திறமையான அதிகாரிகள் வேண்டும் என்று விரும்பிய முதல்வர் பொறுக்கி எடுத்த மணிகளில் அவரும் ஒருவர். நுனிக்காலில் நடப்பது போல எப்போதும் ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருந்ததால் மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தார்.

போன் வைக்கப்பட்ட அடுத்த நிமிடம் அது மறுபடியும் அலறியது.

இந்த முறை முதல்வர்தான்

“அனுஜத்தி, சுகந்தன்னே?”

ஏதாவது ஒரு உறவைச் சொல்லி அழைத்து முதல் வார்த்தையிலேயே நெருக்கத்தை ஏற்றிக் கொள்வது பெரியவரின் தனி ஸ்டைல் என்பதை அவரது அலுவலகத்தில் வேலை செய்த போது ரஞ்சனி கவனித்திருக்க்கிறார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் சரளமாகப் பேசுவார். அதனால் தன்னைத் தங்கை என்று மலையாளத்தில் அழைத்ததைக் கண்டு ரஞ்சனி ஆச்சரியப்படவில்லை.

பதில் வணக்கத்திற்குக் கூட இடம் கொடுக்காமல்,“நீங்க ஒரு உதவி செய்யணுமே?”என்றார் பெரியவர் எடுத்த எடுப்பில்.

“சொல்லுங்க சார். காத்திருக்கிறேன்”

“சொன்னாங்களா ,உங்க ஃபிரண்ட் அங்க வர்றாங்க.”

“யாரு சார்?”

“சொல்லலையா? வித்யா!”

“ஸார்!” சற்றே வியப்பில் ஆழ்ந்தார் ரஞ்சனி.“மாநாட்டுக்கா?”

“ம்”

“மாநாட்டில் அவங்க டான்ஸா?”

ஹா, ஹா. என்று சிரித்தார் பெரியவர். “கவனித்துக் கொண்டே இருங்கள், ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன” என்றார் “பேசப்போறங்க. அதைப் படம் எடுத்து எனக்கு அனுப்பணும்”

“அவங்க பேசறது பத்தாவது நிமிஷம் உளவுத் துறை மூலம் உங்க டேபிளுக்கு வந்திடும். போட்டோ எதுக்கு சார்?”

“போட்டோ இல்லம்மா. வீடியோ. இப்ப வீடியோனு ஒண்ணு புதிசா வந்திருக்கு தெரியும்ல?”

“நல்லாத் தெரியும் ஸார். இப்பெல்லாம் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போறதில்லை. கடையில கேசட் எடுத்து வீட்ல பார்க்கிறேன்”

“பாருங்க... பாருங்க... அதோட நடுவில் அப்பப்ப கொஞ்சம் வேலையும் பாருங்க!”

“ஸார்!”

“வீடியோ எடுத்து அனுப்பிச்சிருங்க. உடனே வேணும்!”

“சரி!”

“பேச்சு முக்கியமில்லை. ஆனால், அதற்கு ஜனங்க எப்படி ரியாக்ட் செய்யறாங்கனு நான் பார்க்கணும்”

“செய்திடலாம் சார்”

“அத காப்பி கீப்பி போடக் கூடாது. அந்த மாஸ்டரே எனக்கு வரணும்”

“ஓகே சார்!”

“அப்படி எனக்கு மட்டும் அனுப்பியிருக்கீங்க என்பது அவருக்குத் தெரியக் கூடாது!”

“ஓ!” ரஞ்சனி ஒரு நொடி திகைத்தார். சட்டென்று சுதாரித்துக் கொண்டு “நிச்சயம்” என்றார்.

போனை வைத்த பின்னும் சில நொடிகள் திகைப்பு மனதைச் சுற்றிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அது கேள்விகளாகத் திரண்டது. பள்ளிக்கூட நாள்களிலிருந்து வித்யாவோடு அறிமுகம் உண்டு. லிட்டில் ஃபிளவர் கான்வெண்டில் சில வருடங்கள் சேர்ந்து படித்தார்கள். பின் அவள் பெங்களூர் போய் விட்டாள். தொடர்பு விட்டுப் போயிற்று என்று நினைத்த போது சினிமாவில் அவள் முகத்தைப் பார்த்தார். பரிசளிப்பு விழா ஒன்றில் பழக்கம் மீண்டும் துளிர்த்தது.

வித்யாவிற்கு என்ன திடீர் முக்கியத்துவம்? அவர் பேச்சை வீடியோ எடுப்பது அத்தனை முக்கியமா?பேச்சைக் கூட இல்லை. ஜனங்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை. அது அற்ப விஷயம். அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ். வேண்டியதில்லை. கட்சிக்காரர்களிடம் சொன்னால் அவர்கள் அதைச் செய்ய முண்டியடித்துக் கொண்டு முந்துவார்கள். பெரியவருக்கு மாஸ்டரே வேண்டும். யாரிடமும் பிரதிகள் இருக்கக் கூடாது. அப்படியென்றால்....? இது ஏதோ ஒரு பரிசோதனை. யாரையோ ஆழம் பார்க்கிறார். அல்லது ஏதோ ஒரு அரசியல் காய் நகர்த்தல். இந்தச் சதுரங்க விளையாட்டில் என்னை ஏன் சிக்க வைக்கிறார்கள்? ரஞ்சனிக்கு லேசாக பயம் ஏற்பட்டது.

‘எதற்கும் நாம் ஒரு சாட்சி வைத்துக் கொள்வது நல்லது’ என்று அவருக்குத் தோன்றியது. அந்த சாட்சி நம்பிக்கைக்குரிய சாட்சியாக இருக்க வேண்டும். விசுவாசமான சாட்சியாக இருக்க வேண்டும். அது யார்?

இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார். அவர் அறைக்கு வெளியே வருவதற்குள் டவாலி வராந்தாவில் காத்திருந்தவர்களை அவசர அவசரமாக விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுக்க மனதில் கேள்விகள் அலை மோதுவது வெளியே தெரியாமல் புன்னகைத்துக் கொண்டே மாடிப்படியிலிருந்து இறங்கினார். மாடிப்படி வளைவில் இருந்த செய்தித்துறை அலுவலகம் முன் அரை நொடி தயங்கினார். பின் மனதை மாற்றிக் கொண்டவர் போல, காரை நோக்கி நடந்தார். கார்க் கதவைத் திறந்து காத்துக் கொண்டிருந்த தனது கடைநிலை ஊழியரிடம் பி.ஆர்.ஓ.வைப் பேசச் சொல் என்று சொல்லிவிட்டு கதவை வாங்கி மூடிக் கொண்டார்.

“ எந்த மாநாட்டிலும் அண்ணா கடைசியாகப் பேசுவார். அன்றும் அப்படித்தான் திட்டம் போட்டிருந்தோம். அவர் பேச ஆரம்பித்த சில நொடிகளில் கவிஞர் வந்தார். ‘அவர் பேசட்டும்’ என்று நினைத்த அண்ணா, சட்டென்று பேச்சை முடித்துக் கொண்டார். அவ்வளவு சுருக்கமாக அண்ணா பேசி நான் பார்த்ததில்லை” என்று பழைய சம்பவம் ஒன்றைப் பற்றி தன்முன் இருந்த செய்தியாளர்களிடம் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்த சாமிநாதன், எதிரே வந்து நின்ற கலெக்டரின் கடைநிலை ஊழியரைப் பார்த்து “என்னப்பா?” என்றார்

“அம்மா பேசச் சொன்னாங்க!” என்றார் அவர்

“கிளம்பிட்டாங்க போலிருக்கே?”சாமிநாதனுக்கு உடம்பெல்லாம் கண். அறைக்குள் உட்கார்ந்தபடியே சென்னையில் நடப்பதைக் கூடச் சொல்லக் கூடிய ஆள் என்று பேர். அதில் பாதி உண்மை. எல்லா இடத்திலும் அவருக்கு ஆட்கள் உண்டு. ஆனால், அவர் மட்டும் யாரிடமும் எதையும் முழுமையாகச் சொல்லி விடமாட்டார். அழுத்தம் சற்று அதிகம்.

“போன்ல“ என்று முஷ்டியைக் காது பக்கம் கொண்டு சென்று காண்பித்தார் கடைநிலை ஊழியர்.

கலெக்டர் பங்களாவிற்குள் நுழைந்த போது,காய்ந்த சூரியகாந்திப் பூவிலிருந்து விதைகளை உதிர்த்துத் திரட்டிக் கொண்டிருந்தார் ரஞ்சனி. தோட்ட வேலைக்கு ஆளிருந்தாலும் தாவரங்கள் மீது அவருக்குத் தனிப் பிரியம். கோட்டயத்தில் இருந்த அவரது பூர்வீக வீட்டில் ஐந்து வண்ணங்களில் பூக்கும் செம்பருத்தி செடிகள் இருந்தன. இங்கேயும்  தாவரங்களோடு பேசிய பின்தான் அலுவலகம் புறப்படுவார்.‘ரோஸி, எந்து கொண்டு வாடிப்போயி?’என்று ரோஜா செடியை நலம் விசாரிப்பார். ‘எங்கனே பூவு’என்று அரளியை அதட்டுவார். ஆரம்பத்தில் இது வேலைக்காரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. உதட்டுச் சிரிப்பை ஒளித்துக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணால் சிரிப்பார்கள்.

ரஞ்சனியைப் புரிந்து கொள்வது அத்தனை சுலபமில்லை. சல்வார் கமீஸ் அணிந்து இன்ஸ்பெக்க்ஷன் போவார். 1980களில் அது தமிழ்நாட்டில் அத்தனை பிரபலமில்லை. அப்போது அது சரோஜாதேவி, ஜெயலலிதா, காஞ்சனா என்று சினிமாவில் நடிகைகள் கிளாமருக்காகப் போடும் உடுப்பு. காலையில் நீராகாரம் குடிப்பார். சர்ரியலிசம் பற்றிப் பேசுவார். மலையாளத்தில் மரபுக் கவிதை எழுதுவார்.

சாமிநாதனுக்கு கை குவித்து விட்டு உள்ளே திரும்பிப் பார்த்ததும் ஆர்டர்லி ஒரு பிரம்பு நாற்காலியை அவர் எதிரே கொண்டு வந்து போட்டார், சாமிநாதன் அமர்ந்துகொள்ள.

“இங்கே என்ன கான்பிரன்ஸ் மிஸ்டர் சாமிநாதன்”

நேரத்தை வீணாக்காமல் நேரடியாக விஷயத்தைத் தொடங்கினார் ரஞ்சனி.

“மகளிர் அணி மாநில மாநாடுனு சொன்னாங்க. பேச்செல்லாம் ஒண்ணும் பெரிசா இருக்காது”

“அப்படியா சொல்றீங்க?யார் யார் வராங்க?”:

“சமூக நல அமைச்சர் சாவித்ரி வராங்க. அவங்க காலேஜ் பிரின்சிபாலா இருந்தவங்க. புள்ளி விவரமா அடுக்கி போரடிச்சிடுவாங்க”

“வேற விஐபி யாரும்?”

“வேற ஒண்ணும் பேச்சில்லையே? ஆங், சினிமா நடிகை வித்யா வந்தாலும் வரலாம்னு பிரஸ்ல சொன்னாங்க. ஆனா, கட்சியில அது பற்றிப்  பேச்சில்லை. கூட்டம் வரணும்ல, கிளாமருக்காக யாரையாவது கொண்டு வருவாங்க”

“உங்களுக்கு யாராவது நல்ல வீடியோகிராஃபர் தெரியுமா?”

“ திருநெல்வேலியில் இருக்கறதே நாலு பேர்தான்?’

“நம்பிக்கையானவங்களா?”

“ ஏன் மேடம், ஏதாவது கான்பிடன்சியல் ஒர்க்குங்களா?”

“அப்படியும் வெச்சுக்கலாம்”

சாமிநாதன் கலெக்டர் முகத்தையே கண் எடுக்காமல் பார்த்தார்.

“அந்த கான்பிரன்சுல பேசறவங்க பேச்சையெல்லாம் தனித்தனியா வீடியோ எடுத்து என்கிட்ட கொடுங்க”

“எல்லாரையுமா மேடம்?”

“முக்கியமானவங்களை. அமைச்சர், அந்த நான்குநேரி எம்.எல்.ஏ. முத்துலட்சுமி, ஸ்டார் ஸ்பீக்கரா வர்ற வித்யா இப்படி”

“அவங்க வர்றாங்களா மேடம்?”

ரஞ்சனி உஷாரானார். “நீங்கதானே சொன்னீங்க?”

“எடுத்திடலாம் மேடம்.”

ரஞ்சனி விடை கொடுக்கும் பாவத்தில் கை கூப்பினர். சாமிநாதன் கிளம்பத் தயாரான போது, “ஆ! முக்கியமான விஷயம். சும்மா பேசறவங்க முன்னாடி ஸ்டாண்டு போட்டு அவங்க மூஞ்சியையே எடுத்திட்டிருக்காதீங்க. மக்களை எடுங்க. அவங்க சிரிக்கிறது, கை தட்றது, ஏன் கொட்டாவி விட்டாக்கூட எடுங்க. அவங்க ரியாக்ஷன் முக்கியம். அதில்தான் ஆக்ஷன் இருக்கும் பேச்செல்லாம் போர். வள வளா”

கலெக்டர் ஒரு சினிமா டைரக்டர் போல ஆணைகள் கொடுப்பதை ஆச்சரியத்தோடு பார்த்தார் அம்பலவாணன். ஆனால், முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

“ எடிட் பண்ண வேணாம். அந்த கேசட்டிற்கு காபி கீபி போட வேண்டாம். மாஸ்டரே என்கிட்ட வரணும்” ரஞ்சனி தொடர்ந்தார்.

சாமிநாதன் கூர்மையானார். என்ன நடக்கிறது? ஏதோ ஒரு மர்மம். என்னவோ ஒரு ரகசியம். ஏன் எல்லோரையும் எடுக்க வேண்டும். ஏன் ரியாக்ஷனை எடுக்க வேண்டும். அதை ஏன் பிரதி எடுக்கக் கூடாது?

அவர் கண்ணில் ஆடும் சந்தேக நிழலைப் பார்த்துவிட்டு ரஞ்சனி சொன்னார். “இது நான் கேட்டதா இருக்க வேண்டாம்.” சொல்லிவிட்டுச் சின்னதாகப் புன்னகைத்தார்

“புரியுது மேடம்”

சாமிநாதன் அன்று இரவு பூராவும் யோசித்தார். காலையில் காபியோடு செய்தித்தாளைப் பருகியபோது அதில் மாநாட்டிற்கு வித்யா வருகிற செய்தியை வாசித்தார். அவர் மனதில் புகை போல இருந்த ஊகம் நிழல் போல வலுப்பெற்றது. கல்லூரி நாட்களிலிருந்து கட்சி அரசியலில் திளைத்தவர் அவர்.

மறுநாள் ரஞ்சனியிடம் சொன்னார்: “ஏற்பாடு செய்துவிட்டேன் மேடம். என் மனைவி பெரியநாயகி பேரில் எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. நானோ நீங்களோ அதில் சம்பந்தப்பட்டதாக சாட்சி இராது. எல்லாம் பெரியநாயகி செய்வார். ஆனால், அவர் நம் கட்டுப்பாட்டில் இருப்பார்.”

ரஞ்சனி புன்னகைத்தார்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com