தோழி

தோழி

விருட்டென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு முருகய்யன் எழுந்து வெளியேறியதைக் கண்டு அறையிலிருந்தவர்கள் திகைத்தனர். பெரியவரே கூட, வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கூட ஒரு கணம் அசந்துதான் போனார். அந்த அறையில் புன்னகைத்துக் கொண்டிருந்தவர் ஒரே ஒருவர்தான். அது சாமிநாதன்.

பெரியவர் முருகய்யனை அழைத்துப் பேசினார்.

“என்னய்யா, கோவம் உனக்கு?”

“ஐயோ! நான் உங்களை கோபித்துக்கொள்ள முடியுமா? எப்பவாவது நான் உங்களைக் கோபித்துக் கொண்டிருக்கிறேனா?”

“அதான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எல்லாம் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்”

“நாங்கள் கைவிட மாட்டோம். ஆனால் நீங்கள் யாரை நம்பிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்கள் உங்கள் காலை வாரிவிடுவார்கள்!”

“சாபமா?”

“இல்லை. சந்தேகம்”

பெரியவர் முறுவலித்தார்.

“முருகன், நீங்கள் என் படங்களின் தயாரிப்பாளர்.என் முதலாளி..”

“என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்! அந்த முதல் யாருடையது என்று உங்களுக்குத் தெரியும். நான் ஒப்புக்குச் சப்பாணி என்பது ஊருக்குத் தெரியும்”

ஆமோதிக்கிறாரா, அலட்சியப்படுத்துகிறாரா என்று அறிந்துகொள்ள முடியாமல் ‘ம்ம்’ என்று தலையை அலைத்தார் பெரியவர்

‘அதில்லை விஷயம். நீங்கள் எனக்காக எத்தனை படங்கள் தயாரித்திருப்பீர்கள்?”

“இருபது”

“இருபதிலும் ஒரே கதாநாயகனா?”

“இதென்ன கேள்வி. நீங்கள்தான் கதாநாயகன்”

“இருபதிலும் ஒரே கதாநாயகியா?”

“இல்லை. நாலு படத்திற்கு மேல் ஆளை மாற்றிவிடு என்று நீங்கள்தான் சொன்னீர்கள்”

“ஏன் சொன்னேன் என்பது நினைவிருக்கிறதா?”

“எப்படி மறப்பேன்? நம் படங்களில் மக்கள் கவனம் நம்மீதுதான் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்”

“அது மட்டும்தான் சொன்னேனா?”

முருகய்யன்  சற்றுத் தயங்கினார் பின் சொன்னார்:” நம் படங்களில் கதாநாயகிகளுக்குப் பெரிய வேலை இல்லை. ஆனால் கிளாமருக்காக அவர்கள் வேண்டும். மறுபடி மறுபடி ஒருவரையே பார்த்துக் கொண்டிருந்தால் மக்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடும் என்று சொல்லியிருந்தீர்கள்”

“அரசியலுக்கும் அதுதான் ஃபார்முலா. தலை மாறக் கூடாது. ஆனால் முகம் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். ... என்ன புரிகிறதா?”

முருகய்யனுக்குப் புரிந்தது. ஆனால் ஏற்க முடியவில்லை.

“போங்கள் போய் வேலை செய்யுங்கள்.

“என்னை வற்புறுத்தாதீர்கள். இந்த முறை தேர்தலை அந்த அம்மாவே வழி நடத்தட்டும். நான் இங்கேயே ஓரமாக இருந்து கொள்கிறேன்”

“இல்லை இல்லை. நீங்கள் போங்கள். திருச்செந்தூரில் முருகன்தான் ஜெயிக்க வேண்டும். திருச்செந்தூர் பக்கம்தானே சாத்தான்குளம்?”

முருகய்யன் களம் இறங்கினார். ஆனால் வேறு திட்டங்களோடு.

•••• •••• ••••

சாமிநாதன் வேட்பாளர் செந்தில்குமாரோடு சாத்தான்குளத்தில் போய் இறங்கியபோது ஊரெங்கும் சுவரொட்டிகள் உரக்க முழங்கின:

“மாட்டோம்! மாட்டோம் அயலூர் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம்!”

“என்னய்யா, ஆரம்பமே இப்படி இருக்கு?” என்றான் சாமிநாதன் செந்தில்குமாரைப் பார்த்து. “போஸ்டர் யார் போட்டிருக்கா? பேரைப் பாரு” என்றான்

கண்களைக் குறுக்கிக் கூர்மையாக்கிக் கொண்டு சுவரொட்டியின் கீழப்புறத்தில் வெளியிட்டவர் பெயரைத் தேடிய செந்தில் குமார், “பேரே இல்லை” என்றார்

“எல்லாம் அவர் வேலையாய்த்தான் இருக்கும்”

“யார்?”

“ம். வேற யார், எங்கப்பன் முருகன் திருவிளையாடல்தான் இது”

செந்தில்குமாருக்கு யார் என்று புரிய அரை நிமிடம் ஆயிற்று.

“பெரியவர் வந்து பேசினால் சரியாப் போயிடும்!” என்றார் செந்தில் குமார் நம்பிக்கையுடன்.

ஆனால் பெரியவர் வரவில்லை. மனுத்தாக்கல் செய்கிற அன்று வித்யா வந்தாள். சற்றே தாமதமாக. அவளைப் பார்க்க, பெண்கள் வீட்டில் பார்த்துக் கொண்டிருந்த கைவேலையை விட்டுவிட்டு வீதியோரத்தில் வந்து நின்றார்கள். பெரியவரின் கணக்கு என்ன என்று சாமிநாதனுக்குப் புரிந்தது. மக்கள் மனதை எத்தனைத் துல்லியமாகக் கணித்திருக்கிறார் என்று எண்ணியபோது மனதில் வியப்பு எழுந்தது. இப்படிப்பட்ட ஒருவரை வெறும் சினிமா நடிகன் என்று குறைத்து மதிப்பிட்டு கட்சியிலிருந்து அருட்செல்வன் வெளியே அனுப்பியது எத்தனை பெரிய தவறு என்பதும் புரிந்தது. அந்தத் தவறு மாத்திரம் நடந்திராமல் இருந்தால் இன எதிரிகள் கையில் இயக்கம் விழுந்திருக்காது என அவனுக்குக் கற்பிக்கப்பட்ட அரசியல் கல்வி சொல்லியபோது பெருமூச்சு ஒன்று பிறந்தது.

வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளிவந்தபோது அதில் இருபத்தியிரண்டு வேட்பாளர்கள் இருந்தார்கள். அதில் செந்தில்குமார்கள் மூவர். செந்தில் குமரன் என்ற பெயரில் இன்னொருவர். செந்திலாண்டவன் என்று இன்னொருவர். ஒரே பெயரில் ஆட்களை நிறுத்திக் களத்தைக் குழப்புவது, அல்லது கட்சி வேட்பாளர்களிடம் காசு பறிப்பது என்பது வழக்கமாக நடப்பதுதான் என்பதால் சாமிநாதன் இதை எதிர்பார்த்திருந்தான்.

ஆனால், அவன் எதிர்பாராத ஒன்றும் இருந்தது. ஒரு சமூக வேவை அமைப்பின் சார்பில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் களமிறக்கப்பட்டிருந்தார். அவருக்கு உள்ளூர் மத குருமார்களின் ஆதரவு இருப்பதாக வாய்மொழியாகச் செய்திகள் பரவின. மதங்களைக் கடந்தும் முருகனுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது புரிய சாமிநாதனுக்குச் சற்றுக் காலம் பிடித்தது.

ஆனால் மத, ஜாதி அபிமானங்களை வித்யாவின் முகம் மறக்கச் செய்துவிடும் என்று சாமிநாதன் நம்பினான். வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க அவளை அழைத்தான். அவள் மறுத்துவிட்டாள். வீதிமுனைக் கூட்டங்களுக்குக் கூட அவள் சம்மதிக்கவில்லை.இரண்டு மூன்று பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் நிறைய இருக்க வேண்டும் என்பதற்காகத் தொகுதிக்கு வெளியிலிருந்து ஆட்கள் தருவிக்கப்பட்டார்கள்.

கூட்டம் முடிந்து விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது வித்யா சொன்னாள்: ”ஆரம்பத்தில் எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. இப்போது நம்பிக்கை வந்துவிட்டது! சென்னை திரும்பியதும் பெரியவருக்கு நல்ல செய்தி சொல்லிவிடலாம். என்ன மிஸ்டர் சாமிநாதன், சொல்லிவிடலாம் இல்லையா?”

சாமிநாதன் பதில் சொல்லாமல் சிரித்தான்

“உங்கள் நம்பிக்கை ஜெயிக்கட்டும் மேடம். ஜெயிக்க வேண்டும்”

“அப்படியானால்? உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையா?இன்னிக்கு எவ்வளவு பெரிய கூட்டம்!”

“அவ்வளவு பேரும் நமக்கு ஓட்டுப் போட்டால் நாம்தான் ஜெயிப்போம். ஆனால் போட வேண்டுமே!”

“போடமாட்டார்களா? இத்தனை ஆர்வமாய் கட்சிக் கூட்டத்திற்கு வந்தவர்கள் போடமாட்டார்களா? அவர்கள் புரிந்து கொள்கிறமாதிரி எளிமையாகத்தானே பேசினேன்”

“மேடம். உடைத்துச் சொல்கிறேன். நீங்கள் கோபித்துக் கொண்டாலும் சரி. அது உங்களைப் பார்க்க வந்த கூட்டம். கேட்க வந்த கூட்டம் அல்ல.”

“சரி அப்படியே இருக்கட்டும். அது ஓட்டாக மாறாதா?”

“மாறணும். மாற்ற வேண்டும். அதற்குத்தான் நாளைக்கு கறிவிருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்”

“விருந்தா? ஒரு பக்கம் சந்தேகமாகப் பேசுகிறீர்கள். இன்னொரு புறம் அதற்குள் வெற்றி விழாவை ஆரம்பித்து விட்டீர்களே?”

“வெற்றி விழா இல்லை மேடம். காது குத்துக் கல்யாணம்”

“யாருக்கு? மக்களுக்கா?” தன் ஜோக்கிற்கு தானே சிரித்துக் கொண்டாள் வித்யா

“நம்ம வட்டச் செயலாளர் பேத்திக்கு. வந்துதான் பாருங்களேன்!”       

அந்தக் கல்யாண மண்டபம் சிறியதுதான். ஆனால் அதைச் சுற்றிலும் போட்டிருந்த பந்தல் பெரியது. பாய் விரித்துப் பந்தி போட்டிருந்தார்கள். ஏக காலத்தில் 200 பேர் உட்காரலாம். உட்கார்ந்திருந்தவர்கள் எளிய மக்கள் என்பதை அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் சொல்லின. ஒவ்வொருவரும் முகம் பார்த்து உள்ளே அனுப்பப்பட்டார்கள். ஆனால் அதற்குள் அவர்கள் முண்டியடித்து உள்ள நுழைய முற்பட்டார்கள். உள்ளே வந்தவர்கள் உட்கார்ந்ததும் இலையைத் தூக்கிப் பார்த்தார்கள். அங்கே இருந்ததைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். அவசரமாக அதை எடுத்து ஆடைக்குள் ஒளித்துக் கொண்டார்கள்.

“இலைக்கு மேல் பரிமாறப்படும் உணவை ஆவலுடன் பார்ப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் இலைக்குக் கீழே என்ன பார்க்கிறார்கள்.?”

“நீங்களும் பாருங்கள்” என்று ஒரு இலையை விலக்கிக் காட்டினான் சாமிநாதன். அங்கே இரு நூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன!

“பணமா? காது குத்துக் கல்யாணத்தில் மொய் எழுதுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வருகிறவர்களுக்குப் பணம் கொடுப்பார்களா என்ன?”

“ இது 17ஆம் தேதி நடக்க இருக்கும் கல்யாணத்திற்காக” என்று புன்னகைத்தான் சாமிநாதன்

பதினேழாம் தேதிதான் தேர்தல்

•••• •••• ••••

வாக்குப் பதிவு அமைதியாக நடந்தது. ஆனால் சதவீதத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. கடந்த தேர்தலை விட ஒரு சதவீதம்தான் அதிகரித்திருந்தது. ஆனால் முடிவுகள் வெளியானபோது வித்யாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது

செந்தில்குமார் 1300 வாக்குகளில் தோற்றுப் போயிருந்தார்.

(தொடரும்)  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com