தோழி

தோழி

டைத்தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது பெரியவர் உறங்கிக் கொண்டிருந்தார். பகல் உணவுக்குச் செல்லும் முன் அவருக்கு அவ்வப்போது உளவுத்துறை அனுப்பிக் கொண்டிருந்த முன்னணி நிலவரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவர், ‘அதிசயம் நடந்தால் என்னை எழுப்பு’ என்று முருகய்யனிடம் சொல்லிவிட்டுத் தூங்கப்போனார்.

அதிசயம் நடக்கவில்லை.  அது நடக்காததில் முருகய்யனுக்கு உள்ளூற ஆனந்தம்தான். ஆனால் அந்த ஆனந்தத்தைக் கொண்டாடத்தான் முடியவில்லை. அவரது அடிப்பொடிகளிடம் வாய் விட்டுக் கூடச் சொல்ல முடியவில்லை.

“முப்பதாயிரம் ஓட்டுல ஜெயித்திருக்க வேண்டியது. இப்போ ஆயிரத்து சொச்சத்தில போச்சே!” என்றார் பெரியவரிடம். பெரியவர் அவரையே அரைக்கணம் தீர்க்கமாகப் பார்த்தார். “நம்ம கேண்டிடேட் சரியில்லை. நாம உள்ளூர்க்காரனைப் போட்டிருக்கணும்” என்றார் முருகய்யன் தொடர்ந்து. அவருக்கு வித்யாவை நேரடியாகக் குற்றம் சாட்ட விருப்பம்தான் ஆனால் பெரியவர் அதை ரசிக்க மாட்டார் எனத் தோன்றியதால் அடக்கி வாசித்தார்.

“அது மட்டும்தான் காரணமா?” என்றார் பெரியவர்

பெரியவரின் கேள்விக்குள் பொதிந்திருந்த அர்த்தம் முருகய்யனுக்குப் புரிந்தது. எதையும் பேச இது உகந்த நேரம் அல்ல என்பதும் புரிந்தது. பெரியவர் வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளே தன்னைச் சந்தேகிக்கிறார் என்பதும் புரிந்தது

****** ****** ******

“எனக்கு எதுவும் புரியவில்லை” என்றாள் வித்யா. “அசலூர்க்காரர் என்றாலும் அவர் நல்ல வேட்பாளர்தான், இல்லை? நிறையப் படித்தவர் நாமும் அசராமல் உழைத்தோம். அவ்வளவு கூட்டம் வந்ததே! எல்லாவற்றுக்கும் மேல் தலைவருடைய வசீகரம் இருக்கிறது. எப்படித் தோற்றோம் மிஸ்டர் சாமிநாதன்?”

“சதி!”

“சதியா? யார் செய்த சதி?”

“வேறு யார்?முருகய்யன்தான்!”

“சே!சே! இருக்காது. அவருக்கு என்னைப் பிடிக்காதுதான். ஆனால் அதற்காகக் கட்சி தோற்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்!”

சாமிநாதன் சிரித்தான்.

“கட்சிக்குள் அவர் தோற்காதிருக்க வேண்டுமானால் கட்சி தோற்க வேண்டும். இதுதான் அவர் கணக்கு”

அட! இது நான் யோசிக்காத கோணம் என்று நினைத்தாள் வித்யா. பரவாயில்லை, இந்த சாமிநாதன், ஆட்களை நன்றாகத்தான் புரிந்து வைத்திருக்கிறான் என்றும் தோன்றியது.

“மேடம், அரசியலின் அஸ்திவாரம் அதிகாரம். அந்த அதிகாரத்தை அடைய வேண்டுமானால் தலைமைக்கு அருகில் நிற்க வேண்டும். தலைமைக்கு அருகில் நிற்க வேண்டுமானால் கட்சிக்குள் நமக்கென்று ஒரு கோஷ்டி வேண்டும். ஊருக்கு ஊர், தெருவிற்குத் தெரு நமக்கென்று ஆள்கள் இருக்க வேண்டும். விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான். இது பைபிள். விசுவாசத்தால் அநீதியும் பிழைத்துக் கொள்ளும், இது அரசியல்.”

வித்யா ஒரு நிமிடம் பிரமித்தாள். ஏறத்தாழப் பெரியவரும் அன்று இதைத்தானே சொன்னார்:’ விசுவாசியை உருவாக்கணும். கெட்டிக்காரனை வாங்க முடியும்’. எப்படி இவனும் அதையே சொல்கிறான்? ஒருவேளை இயக்கத்திலேயே இப்படி உருவேற்றி இருப்பார்களோ?

தன் ஆச்சரியத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவனது சாமர்த்தியத்தையும் பாராட்டிவிடாமல், அவனை அடக்கி வைப்பது போல வித்யா அமர்த்தலாகவே கேட்டாள்:

“மிஸ்டர், நாம் தேர்தல் தோல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்”

“அதில் சொல்ல ஒன்றும் இல்லை மேடம். உங்களைப் போல வெள்ளைச் சட்டை போட்ட மேல்தட்டுக்காரர்கள் நினைப்பது போன்ற தேர்தல்கள் இன்று இல்லை. வேட்பாளர் படித்தவர் என்கிறீர்கள். வேட்பாளர் எந்த ஜாதி என்று வாக்காளன் பார்க்கிறான்.படித்தவர்களை அணுகுவது சிரமமாக இருக்கிறது. ஜாதியைச் சொல்லிக் கொண்டு போனால் பார்க்க முடிகிறது.  நீங்கள் ஊர் ஊராகப் போய் உழைத்தோம் என்கிறீர்கள். அவன் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறான். ஓட்டு சேகரிக்க வேண்டும் என்று நீங்கள் பிரசாரம் செய்கிறீர்கள். எதிரே இருப்பவன் ஓட்டை எப்படிப் பிரிப்பது என்று கணக்குப் போடுகிறான். இங்கே யாரும் பெரும்பான்மை வாக்குகள் வாங்கி ஜெயிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. சித்தாந்த அரசியல், தியாகம் செய்யும் அரசியல், ஏழைப்பங்காளன் அரசியல் எல்லாம் ஜெயிக்க முடியும் என்றால் இங்கே. கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைப் பிடித்திருப்பார்கள். ஆனால் எந்தத் தியாகமும் செய்யாத, எந்த சித்தாந்தமும் இல்லாத, சினிமாக்காரர்கள் ஜெயிக்கிறார்கள்”.

வித்யா புன்னகைத்தாள். அந்தப் புன்னகையின் அர்த்தம், நானும் சினிமாவிலிருந்து வந்தவள்தான். அந்த அர்த்தம் புரிந்தபோது கண நேரம் தடுமாறிய சாமிநாதன் சமாளித்துக் கொண்டு பேசினான்:

“இங்கே இப்போது ஜெயிப்பது ஜாதி, பணம். இதைத் திரட்ட வேண்டும் யாரால் அதிகம் திரட்ட முடிகிறதோ அவர்கள் ஜெயிப்பார்கள். அதுதான் இனி நடக்கும். அதுதான் எதிர்கால அரசியல்”

“இந்த ஒரு தோல்வியிலேயே விரக்தி அடைந்து விட்டீர்களா, சாமிநாதன்?”

“இல்லை மேடம். நான் போனதை நினைக்கவில்லை. வருவதை, வர வேண்டியதை, நினைக்கிறேன். எனக்கு நேற்று அல்ல, ஏன் இன்றுமே அல்ல, நாளை முக்கியம்.” என்றவன் சற்று நிறுத்தி, “எனக்கு அல்ல, நமக்கு” என்றான் அழுத்தமாக.

‘இங்கே பணம்தான் ஜெயிக்கிறது, அதுதான் எதிர்காலம்’ என்ற சாமிநாதனின் வாசகங்கள் இரவு நெடுநேரம் மனச் செவியில் ஒலித்துக் கொண்டிருந்தது. உண்மைதானே? எதிர்காலம் மட்டும்தானா?கடந்த காலமும் அதுதானே? அதற்கு அப்பாவை விடச் சிறந்த நிரூபணம் உண்டா? கையில் காசு புரண்டு கொண்டிருந்தவரை அவர் வாழ்க்கை எப்படி இருந்தது? பின் எப்படித் தடம் புரண்டது! அவர் இயல்பே தலைகீழாக மாறிவிட்டதே! கையில் பணம் இருந்த போது இருந்த தைரியம், தன்னம்பிக்கை, கெத்து, அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அது பணம் போன அப்படியே அடித்துக் கொண்டு போய் விட்டதே. கையில் பணம் இல்லாதவன் காற்றில் எழுந்த காகிதம். ஆற்றில் விழுந்த கட்டை.

“அக்கா, தூங்கலியா?”

கையில் பால் தம்பளருடன் வந்து நின்ற சித்ராவின் கண்ணில் கேள்வி மிதந்தது.

“ம். ஏதோ குருட்டு யோசனை”

“ஸாரி அக்கா. நாம தோற்போம்னு நான் நினைக்கலை. நாம நிச்சயம் ஜெயிப்போம்னு அவர் சொன்னாரு”

“யார்?”

சித்ரா முகத்தைத் திருப்பிக் கொண்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“யார்?” என்றாள் வித்யா மறுபடியும்

“சாமி சார்”

“அவரை நீ எங்க பார்த்த?”

“இல்லக்கா. அன்னிக்கு ஹால்ல நீங்க வரும் முன், யார் கிட்டேயோ பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் போனேன், காதில விழுந்தது”

கையில் தம்பளரை வாங்கிக் கொண்ட வித்யா, அரைக் கணம் சித்ராவைக் கண்கொட்டாமல் பார்த்தாள்:

“சித்ரா உங்க குடும்பம் எப்படி?”

“அப்டீனா?”

“நீங்க பணக்காரர்களா?”

“ ஏழைகள் இல்ல”

“ இது தன்னடக்கமா, இல்லை பணக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ள கூச்சமா இருக்கா?”

“இல்லக்கா. நாங்க பணக்காரர்களும் இல்ல. ஏழைகளும் இல்ல. வீடு இருந்தது. நிலம் இருந்தது. சாப்பாட்டிற்கு நெல்லு வரும். பருப்பு, புளி எல்லாம் வருஷத்திற்கு வாங்கி வைத்துக் கொள்வோம். அதனால் சாப்பாட்டிற்கு பிரசினை இருந்ததில்லை. ஆனால் நகை நட்டு பட்டு எல்லாம் வாங்கிக்கிறது எப்போதாவதுதான்”

“இருந்தது இருந்ததுங்கிறியே, இப்ப இல்லையா?”

“இருக்கு, ஆனா இல்ல”

“எல்லாத்தையும் துருவித் துருவிக் கேட்டாத்தான் சொல்வியா?”

“சொல்ல என்னக்கா இருக்கு? தாத்தாவிற்கு பெரிய குடும்பம். அப்பா கூடப் பிறந்தவங்க எட்டுப் பேர். தாத்தாக்கு ஒரு தொடுப்பு வேற இருந்தது. அவருக்கு அப்புறம், பாகப்பிரிவினையில் எல்லாம் துண்டு துண்டாயிடுச்சு!”

இவள் கதையும் என்னைப் போலத்தானா? இவளும் என்னைப் போல இருந்ததை இழந்தவள்தானா? தனிமனிதன், குடும்பம், சமூகம் எல்லாவற்றையும் இயக்குவது பணம். அதற்கு பலியானவர்களில் என்னைப் போல இவளும் ஒருத்தியா?

என்ன தோன்றிற்றோ, பால் தம்பளரை அருகில் இருந்த மேசையில் வைத்த வித்யா, சித்ராவை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள்.  

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com