தோழி

தோழி

“எனக்கு சமாதானங்கள் வேண்டாம், சாக்குப் போக்குகள் வேண்டாம், சால்ஜாப்புகள் வேண்டாம்.” என்று பெரியவர் பேச ஆரம்பித்த போது அவையில் கனத்த மெளனம் நிலவியது. பெரியவர் கடுங்கோபத்தில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் புரிந்தது. அப்படி நினைக்க அவர்களுக்குக் காரணங்கள் இருந்தன. பொதுவாக பெரியவர் பேசுவதென்றால் கடைசியில்தான் பேசுவார். எல்லோரையும் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார். சிலர் அள்ளி வீசும் புகழுரைகளைக் கேட்டு சிரிப்பார். அது அளவு மீறிப் போனால் ‘ரொம்பக் குளிருதப்பா” என்று ஜோக் அடிப்பார். அது ஜோக் என்பது கூடப் புரியாமல் சிலர் ஏசியில் உஷ்ணம் ஏற்ற ஓடுவார்கள். அதைக் கண்டு இன்னும் பெரிதாகச் சிரிப்பார். ஆனால் இன்று அவர் முகத்தில் எந்த உணர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. அதை விட முக்கியமாக இன்று அவரே யாரையும் பேச அனுமதிக்காமல் அவரே நேரடியாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

“எனக்கு சமாதானங்கள் வேண்டாம், சாக்குப் போக்குகள் வேண்டாம், சால்ஜாப்புகள் வேண்டாம்... ஏன் காரணங்கள் கூட வேண்டாம். இந்தத் தோல்விக்கு எது காரணம், யார் காரணம் என்று எனக்கு நன்றாகவே தெரியும்” என்று சொல்லி அரைக் கணம் நிறுத்தினார். பலரது கண்கள் முருகய்யன் மீது பாய்ந்தன. சிலர் வித்யாவைப் பார்த்தார்கள்.

“யார் காரணம் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா?” என்று மீண்டும் அரைக்கணம் நிறுத்தினார்.

அவை அவரைக் கூர்ந்து பார்த்தது

“யார் காரணம்? நான்தான்”

அவையில் பலர் இல்லை என்பது போல் இடம் வலமாகத் தலையாட்டினார்கள்.

“ஆமாம் தோற்றது செந்தில் குமார் அல்ல, நான்தான். சிலர் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தேன், அந்த நம்பிக்கை தோற்றது. சிலர் எனக்காக எதையும் செய்வார்கள் என்று எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் தோற்றது.” மறுபடியும் எல்லோரும் வித்யாவையும் முருகய்யனையும் பார்த்தார்கள்...

பெரியவர் தொடர்ந்து பேசினார்:

“உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்தக் கட்சியை நான் எனக்காகத் தொடங்கவில்லை. அதற்கான அவசியம் எனக்கு இல்லை. இந்த அதிகாரம் எனக்கு சுமை. எனக்கு சூட்டப்பட்ட முள் கிரீடம். இந்த அதிகாரம் இல்லாமலே என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்ள முடியும். ஏனெனில் எனக்குத் தனிப்பட்ட தேவைகள் குறைவு.

எனக்குக் குடும்பம் இல்லை. குழந்தைகள் கிடையாது. யாருக்காகவும் சொத்து வைத்துவிட்டுப் போக வேண்டிய கட்டாயங்கள் இல்லை. வாழ்வில் மிச்சம் இருக்கும் ஐந்தோ, பத்தோ ஆண்டுகளுக்கு இருப்பதை வைத்துக் கொண்டு என்னால் வாழ்ந்து விட்டுப் போக முடியும்.

உங்களுக்காகத்தான் இந்தக் கட்சியைத் தொடங்கினேன். பலருக்கு நினைவிருக்கலாம். பழைய கட்சியிலிருந்து விலக்கப்பட்டபோது அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனல் அன்றைக்கு உங்களில் சிலர் எதிரிகளால் தாக்கப்பட்டீர்கள். அப்படி அடி வாங்கிய இளங்கோவன், தியாகமூர்த்தி இருவரும் இங்கே கூட அமர்ந்திருகிறார்கள். ரத்தம் சொட்டச் சொட்டத் தோட்டத்திற்கு வந்தார்கள். அவர்கள் அன்று சிந்திய ரத்தம் எனக்காக்ச் சிந்திய ரத்தம். எதிரிகளால் என்னை அடிக்கமுடியாது. தொடக்கூட முடியாது. அதனால் அவர்கள் ஆத்திரத்தை வன்மத்தை என் ரசிகர்கள் மீது காண்பித்தார்கள்.

அடிபட்டு வந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லி நிதி உதவி செய்து அனுப்பியிருக்க முடியும். ஆனால் நான் நினைத்தேன் அவர்கள் சிந்திய ரத்தம் எனக்காகச் சிந்திய ரத்தம். நான் சிந்தியிருந்திருக்க வேண்டிய ரத்தம். அவர்களை, அவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களை காப்பாற்ற வேண்டுமானால் கட்சி வேண்டும். அரசியல் வேண்டும். அதிகாரம் வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் எளிய மனிதர்களின் வார்த்தைகள் எடுபடாது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு அவர்கள் அஞ்சுவார்கள். ஆளும் கட்சியாக இருந்தால் இந்த எளிய மனிதர்களுக்கு சலாம் வைப்பார்கள். அப்போது முடிவெடுத்தேன் எனக்கு, ராஜநாயகம் என்ற இந்த தனிமனிதனுக்குக் கட்சி வேண்டாம். ஆனால் இந்த எளிய மனிதர்களுக்குக் கட்சி வேண்டும்“ என்ற பெரியவர் கண்ணாடிக் குவளையிலிருந்து தண்ணீர் எடுத்து ஒரு மடக்குப் பருகினார். கடந்த கால சம்பவங்கள் அவர் மனதில் காட்சிகளாக ஓடியிருக்க வேண்டும். அதில் அவர் லேசாக உணர்ச்சிவசப்பட்டிருந்திருக்க வேண்டும்.

“ஆனால் இன்று கட்சிக்குள்ளேயே சிலர் கட்சி தோற்பது தனக்குக் கிடைத்த வெற்றி என்று நினைக்கிறார்கள். உங்களுக்கே கட்சி தேவையில்லை என்னும் போது எனக்கு எதற்கு கட்சி? அதனால்-

பெரியவர் இந்த முறை கூடுதலாகவே இடைவெளி கொடுத்தார். அதற்குப் பின் அந்த வெடிகுண்டை வீசினார்:

“அதனால் கட்சியைக் கலைத்து விடலாம் என்று இருக்கிறேன்”

அவையில் ‘ஹோ’ என்று கூச்சல் எழுந்தது. பலர் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். பின் வரிசையிலிருந்து சிலர் திடு திடுவென்று ஓடி வந்தார்கள்.

பெரியவர் எழுந்து நின்றார். எதுவுமே நடக்காதது போலத் தொடர்ந்து பேசினார் : அவர் வார்த்தைகள் அவையின் இரைச்சலில் மூழ்கின.

“இந்தக் கட்சிக்கு எனக்காக வந்தவர்கள் சிலர்; என்னை நம்பி வந்தவர்கள் சிலர்; என் அழைப்பில் வந்தவர்கள் சிலர். எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.”

திடுதிடுவென்று ஓடி வந்தவர்கள் சடாரெனப் பெரியவர் காலில் விழுந்தார்கள். “தெய்வமே! நீங்கள் முடிவை மாத்துங்க. நீங்க கலைக்க மாட்டேன் என்று சொல்லும் வரை காலை விட மாட்டோம்” என்று சர்வ அங்கமும் தரையில் பட நமஸ்காரம் செய்து காலைப் பிடித்துக் கொண்டார்கள்.”தீக்குளிப்பேன்” என்று வாசலை நோக்கி ஒருவர் ஓடினார்.

பெரியவரின் பாதுகாவலர்கள் காலில் விழுந்தவர்களை குண்டுக் கட்டாகத் தூக்கி நிறுத்தினார்கள். கூடத்தின் கதவுகள் ஏற்கனவே மூடப்பட்டிருந்தன. யாரும் வெளியேறிவிடாமல் அதன் அருகில் இரண்டு பேர் போய் நின்று கொண்டார்கள். கட்டிடத்தின் வெளிக்கதவு பூட்டப்பட்டது.

தலைவர் பேசி முடித்ததும் முருகய்யன் ஏதோ சொல்ல எழுந்து நின்றார். தற்செயலாக அதே நேரம் வித்யாவும் எழுந்து நின்றாள். “ சரி நீங்கள் பேசுங்கள்” என்று அதைப் பார்த்த முருகய்யன் அமர்ந்து கொள்ளப்போனார். “இல்லை இல்லை நீங்கள் பேசுங்கள்” என்று வித்யா அமர்ந்து விட்டாள்

“யாரும் பேச வேண்டாம். அவரவர் கருத்தை எழுதி மூன்று நாட்களுக்குள் எனக்கு அனுப்புங்கள். அவசியமானால் என் முடிவை மறுபரிசீலனை செய்ய நான் தயார். ஆனால் ஒரு வேண்டுகோள், இல்லை இல்லை இது கட்டளை. இங்கு நடந்தவை யாவும் ரகசியம். பரம ரகசியம். இது குறித்து நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, கிசிகிசுப்பாகக் கூட வெளியில் செய்தி கசியக் கூடாது. செய்தி வரக்கூடாது. அப்படி ஏதும் வந்தால்....” பெரியவர் அழுத்தம் திருத்தமாச் சொன்னார்:

“வந்தால் என் முடிவில் மாற்றம் இருக்காது”

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com