தோழி

தோழி

குப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்தவுடன் அதுவரை சளசளவென்று இரைந்து கொண்டிருந்த உரையாடல்கள் சட்டென்று நிற்பதைப் போல அந்த அறைக்குள் முருகய்யன் நுழைந்ததும் ஒரு கணம் அமைதி நிலவியது. உள்ளே சரிந்தும், முனையில் பிதுங்கியும் அங்கிருந்த சோபாக்களில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நின்றார்கள். சண்முக சுந்தரம் மாத்திரம் எழ முயற்சிப்பது போல் பாவனை செய்துகொண்டு உட்கார்ந்திருந்தார்.

“உட்காருங்கய்யா! எனக்கு எதற்கு எழுந்து நிற்கிறீங்க? மரியாதையெல்லாம் பெரியவருக்குக் கொடுங்க!” என்றார் முருகய்யன் அமர்த்தலாக.

“நீங்களும் எங்களுக்குப் பெரியவர் மாதிரித்தான்” என்றார் ஓர் அடிப்பொடி குழைவாக. இதைத்தான் முருகய்யன் எதிர்பார்த்தார். என்ன வார்த்தை சொன்னால் என்ன பதில் கிடைக்கும் என்பதை அறிந்த உளவியல் நிபுணர் அவர். அவர் அதிகம் படிக்கவில்லை. ஆனால் மனிதர்களின் மனதைப் படிப்பதில் பிஎச்டி.

“இங்கே உட்கார்ந்து ஏதாவது உளறிக்கிட்டு இருக்காதய்யா!” என்றார் முருகய்யன் சற்று எரிச்சல் தொனிக்கும் குரலில். “பெரியவர் ஒருத்தர்தான். அவரை மாதிரி, அவருக்கு சமமா என்றெல்லாம் யாரும் கிடையாது!” என்றார்

அடிப்பொடி அதற்கும் சிரித்துக் கொண்டு தலையாட்டினார்.

“கட்சியில் மட்டுமில்ல, உலகத்திலேயே அவருக்கு சமமா யாரும் கிடையாதுங்கிறேன்!” என்ற சண்முக சுந்தரம்.”என்ன நான் சொல்றது?” என்று அருகிலிருந்தவரைத் திரும்பிப் பார்த்தார். இந்த ‘என்ன நான் சொல்றது” அவரது முத்திரை வாசகம். இரண்டு வாக்கியத்திற்கு ஒருமுறை, அவர் இடைவெளி எடுத்துக் கொள்ள விரும்பும்போது அல்லது அடுத்து என்ன சொல்லலாம் என்று யோசிக்கும் போது தானே வந்து விழும். இரு புருவங்களும் அனிச்சையாக ஏறி இறங்கும்.

‘இப்போ நீ என்னத்தை புதுசா சொல்லிட்ட!’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் முருகய்யன். அவர் தன்னைத்தான் தன் அடிப்பொடிகள் முன் மறைமுகமாகத் தாக்குகிறார் என்பது அவருக்குப் புரிந்தே இருந்தது. ஆனால் இது பதிலடிக்கான நேரம் அல்ல. பெரியவரிடம் பேச வந்திருக்கும் விஷயம் இதைவிட முக்கியமானது.

போட்டிருந்த பட்டு முழுக்கைச் சட்டையின் வலக்கையின் மேல் அணிந்திருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி படியிறங்கி வந்த பெரியவரைப் பார்த்ததும் மறுபடியும் எல்லோரும் எழுந்து நின்றார்கள். மறுபடியும் ஓரு மரியாதையான அமைதி.

“சாப்டீங்களா?” என்றார் பெரியவர் பொத்தாம் பொதுவாக

யாரும் பதில் சொல்ல முற்படவில்லை. பெரியவரின் கண்கள் அடிப்பொடி மேல் பதிந்தன.

“சாப்டீங்களா? என்ன சாப்டீங்க? இட்லிக்கு மீன்குழம்பா? சாம்பாரா?’ என்றார் அடிப்பொடியைப் பார்த்து. அவர் பதில் சொல்லும் முன் சடாரென அருகில் வந்து அவரின் வலக்கையை இழுத்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார்.”வெங்காய வாசனை வருது. ஆமா, நீங்க சைவம்ல!”என்றார்.

அடிப்பொடி மெய் சிலிர்த்து நின்றார். உடல் தானே குழைந்தது. பேச வார்த்தையில்லாமல் வாயடைத்து நின்றார். இப்படி ஒரு தலைவனா? சாப்டீங்களா என்பது வெறும் சம்பிரதாயமான விசாரிப்பு இல்லையா?

இல்லை பெரியவருக்கு அது சாதாரண வெற்று வார்த்தை இல்லை. எழுதிய வலி நிறைந்த அவரது கடந்த கால வாழ்க்கை அந்த வார்த்தைக்குள் நிரம்பியிருந்தது.

அடிப்பொடியைப் போல முருகய்யன் மெய்சிலிர்த்துப் போகவில்லை. மனதுக்குள் ஒரு முறுவல் ஓடியது. இகழ்ச்சி முறுவல் அல்ல. இனிய முறுவல்தான். இந்தக் காலையில் பெரியவர் அழுத்தமோ, பதட்டமோ இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார், அதன் அறிகுறிதான் அடிப்பொடியின் கையை இழுத்து முகர்ந்தது. என அவருக்குப் புரிந்தது. தான் சொல்ல வந்த விஷயத்தைப் பேச இது தகுந்த தருணம், அதுவே வேலையை எளிதாக்கிவிடும் என்று முருகைய்யனுக்கு தோன்றியதால் முகிழ்த்த முறுவல் அது.

பெரியவர் போர்டிகோவில் நின்ற காரில் ஏறவில்லை. அதைக் கடந்து தோட்டத்தில் நுழைந்தார். அங்கிருந்த வட்ட வடிவப் பாதையின் மையத்தில் கோவில் கருவறை போல ஒரு மாடம். உள்ளே இரண்டடி உயரத்தில் அவரது அம்மாவின் சிலை. சிலையின் கழுத்தில் ஒரு மல்லிகை மாலை.  தூங்கா விளக்கென்று கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. எந்தவிதத் தனித்த அலங்காரமும் இல்லாதது பெரியவர் வருகையைக் கோயில் பணியாளர் எதிர்பார்க்கவில்லை என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தது.

பெரியவர், அம்மாவின் சிலை முன் கண்மூடி நின்றார். கைகள் குவிந்தன. பெரியவரின் பின்னேயே வந்த முருகைய்யன். கண் மூடவில்லை. கை குவிக்கவில்லை. பணியாளர் ஒருவரை அழைத்து  அவர் காதில் “பூ கொண்டா!” என்று கிசுகிசுத்தார். அரக்கப்பரக்க அருகிலிருந்த செடிகளிலிருந்து தங்க அரளி, செம்பருத்தி என ஐந்தாறாகக் கொய்து கொண்டு வந்தார்கள்.

முருகய்யன் அம்மாவின் முன் வணங்கி நிற்கும் பெரியவரையே கண் கொட்டாமல் பார்த்தார். இன்று காலையில், பெரியவருக்கு எதன் பொருட்டோ தன் கடந்த காலம் நினைவுக்கு வந்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. எதிர்காலம் என்னவாகும் எனத் தெரியாத பாதுகாப்பற்ற அச்சம் நிறைந்த அந்த இளமைக்காலம் நினைவுக்கு வந்திருக்கலாம். அப்படி இருந்தால் அதுவும் நல்லதுதான்...  அதுபோன்ற அச்ச உணர்வு ஏற்படும் தருணங்களில் அவர் அதிரடியாகச் செயல்படுவார். மனிதர்கள் நம்பிக்கைகளால் அல்ல, அச்ச உணர்வினால்தான் மகத்தான செயல்களைச் செய்கிறார்கள் என்பது அவரது அனுபவம் தந்த சித்தாந்தம்.

அப்படி இருந்தால் இதுதான் ஏற்ற தருணம். ஏனென்றால் இன்று நான் சொல்லப்போகும் விஷயமும் பெரியவரது எதிர்காலத்திற்கான அச்சுறுத்தல் பற்றியதுதான் என்று நினைத்தார் முருகய்யன்.”அவருக்கு மட்டுமா, உனக்கும்தான்” என்றது அவரது மனக்குரல்.

“என்னய்யா சாமி குமிபிடக்கூட தனியா விடமாட்டீங்களா?” என்றார் கண் விழித்த பெரியவர்.

முருகய்யன் பணிவாகச் சிரித்தார். “தட்டக் கொண்டா! என்று பணியாளரை அதட்டினார். அவர் ஏற்கனவே பெரியவரின் முன் பூக்கள் வைத்திருந்த தட்டை நீட்டிக் கொண்டுதான் இருந்தார். பெரியவர் இரண்டு செம்பருத்திப் பூக்களை மட்டும் எடுத்து அம்மாவின் காலடியில் வைத்தார். கோயில் பணியாளரைப் பார்த்து,”ரோஜாப் பூ மாலை கிடைச்சா போடுங்க. மல்லிகை வேண்டாம். அம்மா மல்லிகை வைக்கமாட்டாங்க. தலைவலி வரும்னு” என்றார். சிலைக்கு ஏது தலைவலியும் கால்வலியும் என்று முருகய்யன்  நினைத்துக் கொண்டார். ஆனால் கேட்கவில்லை. பெரியவருக்கு அது சிலை அல்ல, தெய்வம். அது அவருக்கும் தெரியும்

“என்னையா?” என்று பெரியவர் முருகய்யன் பக்கம் திரும்பினார்.

“பேசணும்” என்றார் முருகய்யன்.

“சொல்லு”

“இல்ல.... கொஞ்சம் பேசணும்”

பெரியவர் முருகய்யனை ஏற இறங்கப் பார்த்தார். “சரி, வா!” என்றார்.

பெரியவர் காரில் ஏறிக் கொண்டதும் முருகய்யன் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். கோட்டைக்குப் போ என்றார் பெரியவர் ஓட்டுநரிடம்.

“கொஞ்சம் பேசணும்.” என்றார் முருகய்யன் மறுபடியும்.

“பேசேன்யா? நீயா காரை ஓட்டற?”

“இல்ல, தனியா பேசணும். இங்க வேணாம். கோட்டையிலும் ஆளுங்க சுத்தி நிற்பாங்க.”

“ம்....:” என்றார் பெரியவர். “ கோட்டைக்கு வேணாம், கட்சி ஆபீஸ் போ!” என்றார் டிரைவரிடம்.

முருகய்யனுக்கு சற்றே ஏமாற்றம். ஸ்டுடியோவிற்குப் போனால் அந்தரங்கமாகப் பேச வசதியாக இருக்கும் என்று அவர் எண்ணியிருந்தார். அது அவர் ஆளுகைக்குட்பட்ட இடம்.

பெரியவரின் காரைக் கண்டதும் கட்சி ஆபீஸ் பரபரத்தது. சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு ஆபீஸ் மானேஜர் தொப்பை குலுங்க ஓடினார்.பெரியவர் அறைக் கதவைத் திறந்து எல்லா விளக்குகளையும் போட்டார். ஏசியை முடுக்கினார்.மேசை மீதிருந்த மெல்லிய தூசியைத் துடைக்க துணி தேடினார். சட்டென்று அகப்படவில்லை. தன் உள்ளங்கையாலேயே துடைத்தார்.

பெரியவர் சாதாரணமாகக் கட்சி ஆபீசுக்கு வருவதில்லை. அவர் வருகிறார் என்றால் அந்தத் தெருவே அமளிப்படும்.விளக்குக் கம்பம்தோறும் வருக வருக பதாகைகள் தொங்கும். பொதுச் சுவர், அரசாங்கச் சுவர், தனியார் சுவர்,தெருவை அடையாளம் காட்டும் பலகை எல்லாவற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படும். முதல் முறை பார்ப்பவர்களுக்கு அவர் ஏதோ அயல்நாடு போய்த் திரும்பி வருவதைப் போலத் தோன்றும். ஆனால் அவர் உத்தண்டியிலிருக்கும் வீட்டிலிருந்து அலுவலகம் வருவதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம். பெரியவர் பெரும்பாலும் எவரையும் கோட்டையில்தான் சந்திப்பார். சில அரசியல் சந்திப்புக்களை ஸ்டூடியோவிலும் வியாபார சந்திப்புக்களை வீட்டிலும் ஏற்பாடு செய்து கொள்வதுமுண்டு. கட்சி ஆபீஸ் என்பது கடைசி பட்சம்தான்.

“மேஜையைத் துடைப்பது இருக்கட்டும். வாசலைப் பார்ப்பது இல்லியா?” என்று மேனேஜரைக் கேட்டார் பெரியவர். மேனேஜர் வாசலை எட்டிப் பார்த்தார். ஒன்றும் புலப்படவில்லை.

“இங்கிருந்து பார்த்தா தெரியாது. அங்க போய்ப் பாரு. சுவரோரம் எல்லாம் களை மண்டிக் கிடக்கு!” என்றார்    

“ என்னையா, எப்பப் பார்த்தாலும் ஏசிக்குள்ளேயே உட்கார்ந்து பேப்பர் படிச்சுக்கிட்டு. எழுந்து போய் சுத்திப் பார்க்கறதில்லையா? வர்றப்ப நானும் பார்த்தேன். பார்த்தீனியமய்யா அது எல்லாம் பார்த்தீனியம். சும்மா புல்லுனு நினைச்சிராதே. கிடுகிடுனு பரவிடும்... அப்புறம் நமக்கு நமைச்சல் கொடுக்கும். விஷம்யா விஷம்! அத்தனையும் விஷம்!” என்று முருகய்யன் தன் பங்கிற்கு இரைந்தார்.

“முருகா! பக்க வாத்தியம் நல்லா வாசிக்கிறீங்க!” என்றார் பெரியவர் நமுட்டுச் சிரிப்புடன். புரிந்தும் புரியாத மாதிரி முருகய்யன் பெரியவரைப் பார்த்தார். “ஆனா அது மெயின் வித்வானை அமுக்கிறக் கூடாது!” என்றார் அதே சிரிப்புடன்.

பெரியவர் முதுகுயர்ந்த நாற்காலியில் அமர்ந்த பின்னும் முருகய்யன் நின்று கொண்டிருந்தார்.

“சொல்லுங்க. என்ன விஷயம். காலையிலிருந்து மிரட்டிக்கிட்டே இருக்கிங்களே என்ன விஷயம்!”

“ஐயோ நானா! உங்களையா!”

“அப்படி என்ன ரகசியம் சொல்லப்போறீங்க. ஏதேனும் மந்திரிங்க விஷயமா? எனக்குத் தெரியாம பணம் வாங்கிட்டாங்களா?”

“இங்கல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நான்தான் ஒவ்வொருத்தருக்கும் ஆள் போட்டு உத்துப் பார்த்துக்கிட்டுதானே இருக்கேன்.”

“பின்ன?”

“நீங்க தில்லிக்கு அனுப்பிசீங்கள்ள அந்த அம்மா....”

“வித்யாவா?”

“ அவங்க பி.எம். ஐப் போய்ப் பார்திருக்காங்க”

“அப்படியா?” புதிதாக கேள்விப்படுபவர் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் பெரியவர்.

“ஆமா. அதுவும் தனியா”

“உங்களுக்கு யார் சொன்னா?”

“நம்ப பையன் ஒருத்தன் தில்லியில ‘பிரஸ்’ல இருக்கான். நமக்குத் தகவல் கொடுக்க நான்தான் அவனுக்கு தில்லியில வேலை வாங்கிக் கொடுத்தேன்”

“ம்.எல்லா இடத்திலும் ஆளுங்க வைச்சிருங்க போல.”

“இதெல்லாம் எனக்குனு ஏதும் செஞ்சுக்கலீங்க. உங்களுக்காகத்தான். சினிமாவிலிருந்து திடீர்னு அனுபவம் இல்லாம அரசியல்ல இறங்கிட்டீங்க. இது கொலைகாரன் பேட்டை. நானும் நாற்பது வருஷமா பார்த்துக்கிட்டுதானே இருக்கேன். ஈரத்துணியைப் போட்டுக் குலையை அறுத்துருவாங்க!”

பெரியவர் கடகடவென்று உரக்க சிரித்தார். அவரது சிரிப்பு அறைச் சுவர்களில் மோதி உதிர்ந்தது.

“ நீங்க இவ்வளவு நல்லா சினிமாவிற்கு வசனம் எழுதியிருந்தா படம் எல்லாம் பணமா கொட்டியிருக்கும். அங்க கோட்டை விட்டுட்டீங்க!” என்றார்.

முருகய்யன் தலை குனிந்து நின்றார். அந்தக் கணம் அவர் மனதில் கிடந்த பூத்துக் கிடந்த நெடுநாளைய நெருப்பில் நீறு உதிர்ந்து கனல் ஒளிர்ந்து அடங்கியது.

“சொல்லுங்க. இப்போ யார் கத்தியைத் தூக்கிட்டு வந்திருக்காப்ல? வித்யாவா?”

“எனக்கு சந்தேகமா இருக்குங்க. பெரிய இடத்தில, நம்மை மீறி, நேரடியா தானே போய் ஒட்டிக்கிறதெல்லாம் நமக்கு அவ்வளவு நல்லதில்லீங்க. என்னவோ தோணுச்சு. மனசு கிடந்து அடிச்சுக்கிட்டது. கொட்டிப்பிட்டேன்”

“இதில சந்தேகப்பட என்ன இருக்கு?”

“அப்படி இல்லீங்க. தில்லிக்காரங்களுக்கு தில்லி ஒண்ணுதான் குறி. பார்லிமெண்ட்ல அவங்க கை ஓங்கி இருக்கணும், அதுதான் அவங்களுக்கு தேவை. தமிழ்நாட்டில அவங்க கட்சியால சொந்தமா ஒரு சீட் ஜெயிக்க முடியாது. அதுக்கு நாம வேணும். அதுக்கு யாரையாவது வைச்சு நம்ம பிளாக் மெயில் பண்ணுவாங்க. அழுத்துவாங்க. அழுத்த முடியலைனா உடைச்சிருவாங்க”

“ஓகோ!”

“உங்களுக்குத் தெரியாததுங்களா? அப்படித்தானே சு.ம.க.வை ராம்மோகனை வைச்சு உடைச்சாங்க!”

“யாரு அந்த கோயம்புத்தூர் வக்கீலா?’

“அப்படித்தாங்க பேச்சு”

“அந்த மாதிரி வித்யாவை பயன்படுத்திக்கிடுவாங்கனு சொல்றீங்க!”

“எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. ரொம்ப படிச்சவங்க, ரொம்ப கெட்டிக்காரங்க, இவங்களை ஓரளவுக்கு மேல நம்பக் கூடாது. அவங்க எப்பவும் முதல்ல அவங்க நலனைத்தான் பார்ப்பாங்க! நான் பட்டவன் அந்த அனுபவத்தில சொல்றேன்”

பெரியவர் முகவாயைத் தடவிக் கொண்டு ஒரு நிமிடம் கூரையை அண்ணாந்து பார்த்தார். தன் விதைகள் பாறையில் அல்ல ஈரமண்ணில்தான் விழுந்திருக்கிறது என்று தோன்றியது முருகய்யனுக்கு.

“ம். என்ன செய்யலாம்?”

“ நீங்க அந்த அம்மாவைக் கூப்பிட்டு விசாரிங்க!”

“அப்படியா சொல்றீங்க. செய்திருவோம்.”

முருகைய்யன் முகத்தில் முறுவல் அரும்பியது. இனிய முறுவல்தான்...

“ இதெல்லாம் தனியா விசாரிக்கக் கூடாது. எல்லாரையும் வைச்சுக்கிட்டே கேட்டிரலாம். நாளைக்கு அரசியல் குழு கூட்டத்தை கூட்டுங்க” என்றார் பெரியவர்.

இப்படி ஒரு திருப்பத்தை சற்றும் எதிர்பார்க்காத முருகய்யன் திகைத்தார்.

 (தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com