தோழி

தோழி

ன்ன இருந்தாலும் பெரியவர் அப்படி செய்திருக்கக் கூடாது” என்றார் அறிவுடைநம்பி.

அறிவுடை நம்பி முருகய்யனின் கைத்தடி. பதில் ஏதும் சொல்லாமல் முருகய்யன் அவர் முகத்தையே பார்த்தார். தன்னை உசுப்பேத்துகிறார்கள் என்பது அவருக்குப் புரிந்தே இருந்தது. கூடவே இவர்கள் எல்லாம் நம்மைப் பார்த்து பரிதாபப்படும் நிலைமைக்கு ஆளாக்கிவிட்டாரே பெரியவர் என்று ஒரு மனப்புழுக்கமும் இருந்தது.

“என்ன செய்தார்?” என்றார் அருகில் இருந்த இன்னொருவர்.

“இவ்வளவு வருடம் கட்சிக்கு ஓடாய்த் தேய்ந்த நம் அண்ணனுக்கு அவர் மேடையில் இடம் கொடுக்கவில்லை. புதுசா வந்த அந்த அம்மாவிற்கு மேடையில் நாற்காலி போடச் சொல்கிறார். அதுவும் தனக்கு சமமாக.”

“அந்த நாற்காலி வரும் வரை அந்தம்மா அடம்பிடித்து நின்று கொண்டிருந்தாரே? அண்ணன் அப்படி என்றைக்காவது இருந்திருக்கிறாரா?”

முருகய்யன் முகம் சிவந்தது. “அறிவு!” என்று சீறினார் அவர். பொதுவாக அவர் சீறுகிறவர் அல்ல. குரலை உயர்த்துவதால் கை ஓங்கிவிடாது என்பதை அனுபவம் அவருக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. ஆனால் இந்த முறை பொறுக்கமாட்டாமல் சீறினார்.”அறிவு! வாயை மூடு அல்லது எழுந்து வெளியே போ!”

“அண்ணே நான் ஒண்ணும் தப்பா ...”

“ம்!” என்று மறுபடி உறுமினார்.

அறிவுடை நம்பி மெளனமானார்.

••• ••• •••

ன்ன இருந்தாலும் முருகய்யனுக்கு இப்படி முகத்தில் குத்து விழுந்திருக்கக் கூடாது. என்ன நான் சொல்றது?” என்றார் புருவங்களை நெறித்து ஏற்றி இறக்கிய சண்முகசுந்தரம், தனது அடிப்பொடியிடம்.

“ஐய்யய்யோ! குத்திட்டாங்களா?”

“பதறாதய்யா! குத்துனா நிஜமான குத்தா? சூசகமா சொன்னா புரிஞ்சுக்க. புத்திய வளர்த்துக்க முதல்ல”

“இல்லண்ண, யாரு குத்தினான்னேன்.... மறைமுகமாகத்தான்”

“பெரியவர்தான். புதுசா வந்த அந்தம்மாவை ஓரங்கட்டணும்னு முருகய்யன் திட்டம் போட்டான். மூக்கு உடையற மாதிரி தலைவர் தனக்கு சமமா நாற்காலி கொடுத்துட்டாரு.!”

“அடடா!”

“அது மட்டுமில்ல, அந்தம்மா பேசும் போது இரண்டு மூணு இடத்தில கைதட்டி ரசிச்சாரு.முருகய்யன் பேசினதுக்கு பதிலே சொல்லாம எழுந்து போயிட்டாரு!”

“இன்ஸல்ட்!”

“அதான் தெரியுதே. அதை நீ வேற சொல்லி நான் தெரிஞ்சுக்கணுமா?”

“இல்லண்ணே, நான் என்ன நினைக்கிறேன்னா?”

“நான் என்ன நினைக்கிறேன்கிறதை சொல்றேன் கேளு. அந்தம்மா பெரிய லெவலுக்கு வருவாங்க. பெரியவர் கொண்டு வருவார்னு தோணுது, என்ன நான் சொல்றது?”

“முருகய்யன் அதுக்கு விட்டுருவாரா?”

“முருகய்யன் கொட்டத்தை அடக்கத்தான் கொண்டு வர்றாருங்கிறது என் கணிப்பு”

‘அவர் கொட்டத்தை அடக்க நாமும்தான் இத்தனை வருஷமா முயற்சித்துக்கிட்டு இருக்கோம். முடியலையே. ஒரு மாவட்டச் செயலாளரை அசைக்க முடியலையே? எல்லாம் அவன் ஆளு!”

தனது அடிப்பொடியை உற்றுப் பார்த்தார் சண்முகசுந்தரம். தன் அருகிலிருந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்தார். திறக்க முயற்சித்தார், அந்த வெள்ளிப் பெட்டியின் மூடி இறுகிக் கிடந்தது. திறக்க முடியவில்லை.  அடிப்பொடி கையை நீட்டி வாங்கிக் கொண்டு முயற்சித்தார்.  அவரிடமிருந்து இன்னொருவர் வாங்கிக் கொண்டு உதட்டை இறுக்கிக் கொண்டு இழுத்தார். முடியவில்லை. “மூடியைப் பெயர்த்து எடுத்திராதே. கீழே ஒரு கிளிப் இருக்கு அதை அழுத்து!” என்று கையை நீட்டினார். பெட்டி மீண்டும் சண்முகசுந்தரம் கைக்கு வந்ததது. இப்போது அவர் கிளிப்பை நசுக்கியதும் ‘ப்ளுக்’ என்று பெட்டியின் மூடி நெகிழ்ந்தது. வெற்றிலைப் பெட்டியின் மூடியைத் திறந்து கொண்டே சண்முகசுந்தரம் சொன்னார்: “இதுக்கெல்லாம் ஒரு ‘நேக்’ வேணும்யா. ஒரு வெற்றிச் செல்லத்தையே திறக்க முடியலை உனக்கு, மாவட்டச் செயலாளரை மாத்திருவையா நீ!”

“அண்ணே நாங்க எல்லாம் இழுத்து இளக்கினப்புறம் உங்க கைபட்டு மூடி திறந்தது. நேக் இல்ல அண்ணே. எல்லாத்துக்கும் நேரம் வரணும்!”

“நேரம் வந்திருச்சு தம்பிங்களா. நாளை அந்தம்மாவைப் பார்க்கிறோம்”

••• ••• •••

ன்னதான் இருந்தாலும் நீ அப்படி பேசியிருக்கக் கூடாது!”

பெரியவரின் குரலில் வெளிப்பட்டது கோபமா, அறிவுரையா, ஆதங்கமா என்பதை வித்யாவால் புரிந்து கொள்ள முடியவில்லை

“அப்படி என்ன பேசிவிட்டேன்?”

பெரியவர் நேரடியாக பதில் சொல்லவில்லை. “நான் சினிமாவில் பிரபலமாகாத காலம். அப்போது அரசியலில் இறங்கியிருக்கவில்லை. நடிக்க சான்ஸ் கிடைக்கப் போராடிக் கொண்டிருந்தேன். ஸ்டண்ட் வாத்தியார் ஒருவருடன் பீச்சுக்கு வந்து உட்காருவேன். காற்று வாங்க மட்டும் அல்ல.... வறுத்த கடலை வாங்கித் தருவார். இப்போது போல காகித கூம்பில் பொட்டலம் கட்டி வைத்திருக்கமாட்டார்கள். சூடாக மணலில் வறுத்து ஒரு சிறு ஆழாக்கில் கோரி உள்ளங்கையில் போடுவார்கள். சில நாள் அதுதான் ராத்திரி சாப்பாடு. மென்று தின்று தண்ணீர் குடித்தால் பசி தீர்ந்தது போலிருக்கும். தீராது. தீர்ந்தது போல் இருக்கும். .ஆனால் அந்த இதமான காற்றும் மொறுமொறு கடலையும் தனி சுகம். ஆனால்-“

“நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் உங்கள் சுய சரிதையை ஆரம்பித்து விட்டீர்கள். நான் என்ன தப்பா பேசிவிட்டேன்?”

பெரியவர் பொறு என்பது போல் கையை சற்றே உயர்த்தினார் .

“ஆனால்- அந்த வறுத்த கடலையில் கடைசிக் கடலை எண்ணெய்க் கடலையாக அமைந்து விட்டால், அரை நிமிடத்தில் அந்த சுகம் கசப்பாக மாறிவிடும். அதுபோல இருந்தது உன் பேச்சு”

“அப்படி என்ன தப்பாகப் பேசிவிட்டேன்?

“’வாலாட்டுவது’, ‘உடன் பிறந்த வியாதி’ இதெல்லாம் தரக் குறைவாக இருந்தது”

“உங்கள் கட்சியில் எல்லோரும் தரமாகத்தான் பேசுகிறார்களா?”

“அது வேறு விஷயம். முதலில் உங்கள் கட்சி அல்ல. இது என் கட்சி அல்ல, உன் கட்சி அல்ல. நம் கட்சி. அது எப்போதும் நினைவில் இருக்க வேண்டும்.’‘

“ம்”

“மற்றவர்களின் தரம் என்ன என்பதல்ல என் கவலை. நீ எல்லாம் படிச்சவ.  நாகரீகமானவ. அதுவும் தவிர தலைவர் ஸ்தானத்தில் இருப்பவர்கள் ரசக்குறைவாகப் பேசுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள்”

“இப்போதும் நீங்கள் உங்கள் முருகய்யனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறீர்கள். முதலில் அவர்தான் என்னைச் சீண்டினார். எனக்கு வரலாறு தெரியாது என்றார்.கிட்டத்தட்ட என்னை முட்டாள் என்றார். நம்பிக்கை துரோகம் செய்வேன் என்றார். அப்போதெல்லாம் நீங்கள் வாயை மூடிக் கொண்டிருந்தீர்கள். நானும் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமா?” வித்யா சீறினாள்.

பெரியவர் அந்தச் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் இடப்புறம் திரும்பி பெரியநாயகியைப் பார்த்து தண்ணீர் கொண்டுவா என்பது போல சைகை செய்தார். வித்யாவின் சந்தன முகம் குங்கும முகமாக மாறுவதைப் பார்த்ததும் அவரிடம் ஒரு புன்னகை அரும்பியது.

“இங்கு எல்லோருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு, பத்திரிகைகளுக்கு ஏன் பொதுமக்களுக்குமே கூட ஒரு எண்ணம். சினிமாக்காரி என்றால் மக்கு. அவளுக்கு ஒன்றும் தெரியாது. புத்தக வாசனை கிடையாது. பேப்பர் படிக்க மாட்டா. அரசியல் தெரியாது. உடம்பைக் காட்டி காசு பண்றவ அவ. அதற்கு வேணுங்கிற தளுக்கு தெரியும். மேக்கப் தெரியும் சல்லாபம் தெரியும் அப்படீனு பல பேருக்கு நினைப்பு. என்னை யாராவது அப்படிப் பேசினா நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன், சொல்லிட்டேன்”

“நீ அறிவாளிதான்னு பிரதமருக்கே தெரிஞ்சுருக்கே!”

இது கிண்டலா, போட்டு வாங்குகிறாரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாததால் மெளனமானாள் வித்யா

வெள்ளிக் குவளையிலிருந்து மேலும் ஒரு மடக்கு பருகிவிட்டு எழுந்தார் பெரியவர். “ தண்ணிப் பானையில் வெட்டி வேர் போட்டு வைச்சிருக்க போல” என்றார் பெரியநாயகியைப் பார்த்து. பெரியநாயகி ஏதும் பதில் சொல்லாமல் மெல்லப் புன்னகைத்துவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்.

“வாசனை சொல்லுது. நல்லதுதான் இப்படித்தான் இருக்கணும். வாசனை தெரியணும் வேர் தெரியக் கூடாது” என்றார் வித்யாவைப் பார்த்தபடி.

வாசல் வரை போனவர் பின்னாலேயே வந்த வித்யாவின் பக்கம் திரும்பி “முருகய்யன் எனக்கு வேர் என்றவர் பின் மெல்லக் கிசுகிசுப்பாக “நீ வாசனை!” என்றபடி செருப்பில் காலை நுழைத்துக் கொண்டார்.

“நான் நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு. நீ யார், உன்னைக் கட்சியில் எந்த இடத்தில் வைத்திருக்கிறேன் என்பது எல்லோருக்கும் புரியட்டும் என்றுதான் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் பிடிப்பது எல்லாம்  பிள்ளையாராவா முடியுது. சிலது குரங்காகவும் ஆகும். எப்படியோ என் தவறோ உன் தவறோ, உங்க இரண்டு பேருக்கும் இடையில் விரோதம் விழுந்து போச்சு. இனி நீ கட்சிக்காரர்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஜால்ராவும் வரும்; சண்டைக்காரனும் வருவான். உனக்குக் கட்சிக்காரர்களைப் பற்றி அதிகம் தெரியாது. முறைக்காதே. மனிதர்களைப் புத்தகங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடியாது. உனக்கு உதவ ஓர் ஆளை அனுப்புகிறேன். உன் எதிரிகளை அவன் பார்த்துப்பான்” என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறினார்.

அலுவலகத்திற்குப் போனதும் அவர் தன் செயலரிடம் சொன்ன முதல் வாக்கியம்:

”சாமிநாதனை வரச் சொல்லு!”

(தொடரும்) 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com