தோழி-11

தோழி-11

பெரியவரோடு சாமிநாதனைப் பார்த்ததும் திடுக்கிட்டாள் சித்ரா. ‘இவர் எங்கே இப்படி?’ என்ற கேள்வியும் குழப்பமும் கண்ணில் படர்ந்தன. அவளது முயற்சிகளையும் மீறி அவை முகத்திலும் பிரதிபலித்தன. காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்று சாமிநாதனிடம் கெஞ்சின கண்கள்.

ஆனால் சாமிநாதன் முகத்தில் ஒரு முறுவல் மிளிர்ந்தது. அவளது பதட்டத்தை அவன் ரசிப்பது போலத் தோன்றியது. கணவன் மனைவியின் கண்களுக்கிடையே நடந்து கொண்டிருந்த உரையாடலைக் கவனிக்காத வித்யாவும் பெரியவரும் அடுத்திருந்த அறைக்குள் நுழைந்தார்கள்.

“என்ன திடீரென்று? உங்களை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை”

“எழுந்து வெளியே போ என்கிறாயா?” எனக்கேட்டு கடகடவென்று சிரித்தார் பெரியவர். அப்படிச் சிரிக்கும் போது அவர் கை முகவாயை ஏந்திக் கொள்ளும். பட்டுச் சட்டையின் மீது அணிந்திருந்த கடிகாரத்தின் தங்கப்பட்டை ஜன்னல் வெளிப் புகுந்திருந்த கதிர் ஒளியில் மினுங்கியது.

“சிவனேனு இருக்கேன். ஏன் என்னைச் சீண்டுகிறீர்கள்?” என்றாள் வித்யா. “ஒரு போன் பண்ணியிருக்கலாமே என்று சொல்ல வந்தேன். பண்ணியிருந்தால் இந்தப் பத்திரிகையாளரை இன்னொருநாள் வரச் சொல்லியிருப்பேன். நேரில் வேறு பார்த்து விட்டார்களா, காது மூக்கு வைத்து எழுதப் போகிறார்கள்”

“இப்போது மாத்திரம் சும்மா இருக்கிறார்கள் என்றா நினைக்கிறாய்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே உடல் சார்ந்த உறவன்றி வேறு ஏதுவும் சாத்தியமில்லை என்று நம்புகிற சமூகத்தில், நம்புகிற காலத்தில், நாம் வாழ்கிறோம். இன்று நேற்று ஏற்பட்டதல்ல அந்த நம்பிக்கை... நாளை இன்னொரு தலைமுறை வந்தாலும் இங்கு அந்த நம்பிக்கை அப்படியேதான் இருக்கும். நாகரீகம் காரணமாக அது அப்பட்டமாக வெளியே வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உள்ளே ஒளிந்து கொண்டு குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும். அதன் வேர்கள் ஆண்டாண்டு காலமாக ஆழப் புதைந்து, அடர்ந்து படர்ந்திருக்கின்றன.”

“இப்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்?’

“நாம் மாற முடியாது. அவர்களும் மாற மாட்டார்கள். எனவே எதைச் செய்தாலும் பயன் இராது.”

“அதனால் சும்மா இருக்க வேண்டுமா?”

“ஏன் சும்மா இருக்க வேண்டும். இதனால் சில பலன்களும் நமக்கு உண்டு. அதை அறுவடை செய்து கொள்வோம்”

“புரியலை”

“உன்னையும் என்னையும் பற்றிய ஊகங்கள், கற்பனைகள், கட்டுக்கதைகள் ஒருவகையில் உனக்குப் பாதுகாப்பு. எளிதில் நெருங்க முடியாமல் ஒரு அச்சம் இருக்கும். தனியொரு பெண்ணாக அரசியலில் இறங்கும் உனக்கு அப்படி ஒரு பாதுகாப்பு வளையம் அவசியம்தான்”

“என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்குத் தெரியும். பச்சைக் குழந்தை மாதிரி என்னை நடத்த வேண்டாம்”

மறுபடியும் பெரியவர் உரக்க சிரித்தார். இன்னொரு முறை கடிகாரப் பட்டையில் கதிர் மினுங்கிற்று

“அந்தத் தன்னம்பிக்கையும் வேண்டியதுதான். ஆனால் வித்யா, பயமும் ஒரு ஆயுதம். பயம், பதற்றம், பதவி, பணம் இவற்றின் தாக்கத்தில் மனிதர்கள் தடுமாறுவார்கள். அதிலும் ஆண்களுக்கு அந்தத் தடுமாற்றம் அதிகம். ஆண்களைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவிற்கு உனக்குத் தெரியாது!”

“சரி, நீங்கள் சொல்வது போலவே வைத்துக் கொள்வோம். எனக்குக் கிடைப்பது பாதுகாப்பு. இதில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?”    

பெரியவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மனதுக்குள் எண்ணங்கள் ஓசையின்றி ஒலித்தன. கடிகாரப் பட்டையின் கதிர் மறுபடி மினுங்கிற்று.

‘எனக்கு என்ன கிடைக்கும்? இந்தக் கேள்விக்கு முன் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இன்னொன்று உண்டு. அது, எனக்கு என்ன வேண்டும் என்பது. எனக்கு என்ன வேண்டும்? வறுமை, சிறுமை, அவமானம், ஏளனம், பொறாமை, வஞ்சம், வன்மம், துரோகம், காமம், காதல், பணம், புகழ், போலி, பொய், இச்சகம் எல்லாம் பார்த்து விட்டேன். இவை எல்லாவற்றையும் என்னளவிற்குப் பார்த்தவர்கள் இன்னொருவர் நம் காலத்தில் இல்லை. இருக்க முடியாது. அவர்களது வாழ்க்கை அந்த வரத்தை அவர்களுக்குக் கொடுக்கவில்லை.  இனி எனக்கு என்ன வேண்டும்? உதைபந்து போல் உருட்டப்பட்டிருக்கிறேன். உதைக்கப்பட்டிருக்கிறேன். முட்டப்பட்டிருக்கிறேன். வலையில் வீழ்த்தப்பட்டிருக்கிறேன். இனி, இந்த பந்து, ஆட்டம் பார்க்க விரும்புகிறது. ஆட்டத்தில் ஒருவனாக இருந்த பந்து இனி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க விரும்புகிறது. அதற்கு வேண்டும் கேளிக்கை. தடுமாறுவார்கள் என்று சொன்னேன் இல்லையா, அந்தத் தடுமாற்றம் பார்க்க ஒரு நாட்டியம் போலிருக்கும். நாட்டிய நாடகம் பார்க்க விரும்புகிறேன் நான்’

“ஏன் மெளனமாகி விட்டீர்கள்?”  

‘மெளனத்தின் ஓசைகள் மனதிற்குக் கேட்கும். எப்படி என் கவிதை? ஹா ஹா!’ என்று உரக்க சிரித்தார் பெரியவர்.

அவர் அப்படிச் அதிரச் சிரித்து அதுவரை பார்த்திராத வித்யா திடுக்கிட்டாள்.    

*** *** ***

“என்ன இங்கேயே வந்துட்டீங்க?” சித்ராவின் முகத்தில் பதற்றம் தணிந்திருந்தது என்றாலும் குரலில் அது  இழையோடியது

சுவாமிநாதன் புன்னகைத்தான்.

“சிரிச்சுக்கிட்டே இருந்தா? சொல்லுங்க.”

“உன்னைப் பார்க்காம இருக்க முடியலைன்னு வைச்சுக்கேயேன்.”

“கொஞ்ச நாள் பார்க்க வேண்டாம்னு சொன்னீங்களே?”

“ஆமாம். சொன்னேன்”

“எல்லாம் காரணத்தோடதான்னு சொல்றேனு சொன்னீங்க!”

“ஆமாம், சொன்னேன்தான்”

“அப்புறம் திடுப்புனு வந்து நிக்றீங்களே?”

“நானா வந்தேன்?”

“பெரியவர் “வா!”’னு சொன்னார். வந்தேன். அவர் சொன்னா மறுக்க முடியுமா?”

“எதுக்கு உங்களைக் இங்க கூட்டிக் கொண்டு வந்து இருக்கார்?”

“வித்யாகிட்ட உதவிக்குச் சேர்த்து விடப் போறார்”

“ஐயோ!” என்று பதறினாள் சித்ரா

“என்ன ஐயோ? வீட்டை நீ பார்த்துக்க. வெளியில் நான் பார்த்துக்கிறேன்”

“நாம புருஷன் பொண்டாட்டிங்கிறது அக்காக்குத் தெரியுமா?”

“அது எனக்குத் தெரியாது!”

“அக்காக்குத் தெரிஞ்ச்சா?”

“ நீ சொல்லப் போறதில்ல, நான் சொல்லப் போறதில்ல. பெரியவரும் சொல்ல மாட்டார்னுதான் நினைக்கிறேன். அப்புறம் எப்படித் தெரியும்? சரி, அப்படி தெரிஞ்ச்சாத்தான் என்ன?”

“என்னமோ எனக்கு பக் பக்குனு இருக்கு. அவங்க ரொம்ப கோபக்காரங்க”

“இந்த பாரு. அனாவசியமா பயந்துகிட்டும், பதறிக்கிட்டும் இருக்க வேணாம். நாமா இங்க வரலை. பெரியவர்தான் நம்மை இங்கே கொண்டு வந்திருக்கிறார். அவர் ஏன் கொண்டு வந்தார், எதற்குக் கொண்டு வந்தார்னு நமக்குத் தெரியாது. என்னோட அனுபவத்தில சொல்றேன், அவர் செயலுக்கு ஏதாவது காரணம் இருக்கும். அது என்னனு நமக்குத் தெரியாது. அவர் சொல்லவும் இல்லை. அப்படியிருக்க நாம ஏன் பதறணும்? அவர் ஏதோ காய் நகர்த்தரார்னு எனக்குத் தோணுது. அது எதற்காக வேணும்னாலும் இருக்கட்டும். நாம வெட்டுப்படாம தப்பிச்சுக்கணும். காப்பாத்திக்கணும் அதுதான் நாம சிந்திக்க வேண்டியது”

சுவாமிநாதன் கிசுகிசுப்பாகவும் இல்லாமல், குரலை உயர்த்தவும் இல்லாமல் சன்னமான குரலில் சரளமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். குரல் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, கண்கள் சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என அளவெடுத்துக் கொண்டிருந்தது.

அவன் பேச்சை இடையில் புகுந்து அறுப்பது போல் அடுத்த அறையிலிருந்து பெரியவரின் அதிர் வேட்டுச் சிரிப்பு கேட்டது. சிரிப்பையடுத்து “சாமி! இங்கே வா!” என்று அழைப்பும் வந்தது.

இரண்டாவது அழைப்பு வரும் முன் எழுந்து விறுவிறுவென்று அந்த அறைக்குள் நுழைந்தான் சாமிநாதன். வித்யாவைப் பார்த்து வணங்கினான். வித்யா பதிலுக்கு கையெடுத்து வணங்கவில்லை.கண்ணசைத்து வணக்கத்தை ஏற்றுக் கொண்டாள்.

“இவர் சாமிநாதன். எம்.ஏ. கவிஞர். என்னப்பா, சரியாச் சொல்றேனா?”

“ஐயோ கவிஞர் எல்லாம் இல்லைங்க. நான் பத்திரிகையில் கட்டுரைகள்தான் எழுதியிருக்கேன். அதுவும் கல்லூரியில் படிக்கிற நாள்லதான்”

“மாணவரா இருக்கும் போதே அரசியலுக்கு வந்துவிட்டார். கட்சியில் யாரு என்ன, ஆள் எப்படி எல்லாம் நல்லாவே தெரியும்”

“சரி. இவருக்கு நான் என்ன பண்ணனும்?”

“நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். அவர் உனக்கு உதவி பண்ணுவார். உன் பேச்சுக்களைத் தயார் செய்வது, அறிக்கைகள் எழுதுவது, உன்னை சந்திக்க வருகிறவர்களின் அப்பாயிண்மெண்ட்களை ஒழுங்கு செய்வது, கூட்டம் ஏற்பாடு செய்வது, முக்கியமா பத்திரிகைக்காரனை கையாள்வது எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். நீ இனி பத்திரிகைக்காரர்களின் கண்ட கண்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருக்க வேண்டியதில்லை”

“ஏன் எனக்கு இதெல்லாம் செஞ்சுக்கத் தெரியாதா? அவ்வளவு கையாலாகதவளா நான்?

“நம்மால முடியும். ஆனால் தேவையானு யோசி. ஆங்கிலத்தில் இருக்கும் எல்லாவற்றையும் ஆங்கிலச் சொல் இல்லாம தமிழ்ல சொல்ல முடியும். ஆனால் தேவையா? என்ன சாமி நான் சொல்றது?”

சாமிநாதன் சங்கடத்தில் நெளிந்தார். அவர் தனித் தமிழ் ஆர்வலர். அது தெரிந்தேதான் பெரியவர் இதைச் சொல்கிறார் என்றும் அவருக்குத் தெரியும்

“ நீ செய்ய வேண்டிய வேலை ஏராளம் இருக்கு. அதுக்கு நடுவில இந்தச் சின்ன வேலையில் நேரத்தை மெனக்கிடணுமா? சினிமாவில கால்ஷீட் பார்த்துக்க ஆள் வைச்சுக்கிறோம்ல, அது போலத்தான்”

வித்யா சாமிநாதனை ஏற இறங்கப் பார்த்தாள். பின் மெல்ல புன்னகைத்தாள். பின் “வரட்டும்!” என்றாள். பின் சற்றே யோசித்தவள் போல், “இங்க வீட்டுக்கு வேண்டாம். கட்சி ஆபீஸ்ல அவருக்கு ஒரு ரூம் கொடுத்திடுங்க!” என்றாள்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com