‘பெண்மை வாழ்க!’

‘பெண்மை வாழ்க!’

தெருமுனையில் கார் திரும்பும் போதே கவனித்தாள் வித்யா. காவலாளி பாபு யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். யாரோ அல்ல என்பதை அணிந்திருந்த ஆடையும் ஆளின் தோற்றமும் என்பதை உணர்த்தி விட்டன. காக்கி கால்சாராய். ஒட்டக் கத்தரித்த தலைமுடி. உடம்பில் ஒரு நிமிர்வு. கூடவே அதில் ஒரு குழைவு. அவை அனைத்துமே அவர் ஒரு சீருடை அணியாத போலீஸ்காரர் என்பதை அறிவித்துக் கொண்டிருந்தன.

என் வீட்டின் முன் போலீஸ்காரருக்கு என்ன வேலை? யாரும் உளவு பார்க்கிறார்களோ? எதிர்கட்சியைச் சாடிப் பேசியதால் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறார்களோ? அப்படியானால் போலீஸ்காரர் என் வரவேண்டும்? ஆனால் காவல்துறையில்தான் எல்லாக் கட்சிக்காரர்களும் இருக்கிறார்களே?அல்லது தாக்குதல் நடந்தால் சாட்சியம் இருக்கக் கூடாதென்பதற்காக போலீஸ்காரர் வேடம் புனைந்து வந்திருப்பார்களோ? சந்தேகங்கள் மொய்க்க சஞ்சலத்தில் ஆழ்ந்தாள் வித்யா

வித்யாவின் காரைப் பார்த்ததும் விறுவிறு என்று கதவை விரியத் திறந்த பாபு அரட்டையை அவசரமாகக் கத்திரித்துக் கொண்டு காரின் பின்னால் ஓடிச் சென்றான்.

“யாரு?” என்று விசாரித்தாள் வித்யா

“தெரியலைமா”

“தெரியாமலா பேசிக்கிட்டிருக்க?”

“நீங்க இருக்கீங்களானு கேட்டாங்க. இல்லை ஊருக்குப் போயிருக்கீங்கனு சொல்லிட்டிருந்தேன்”

“யாருனு கேட்டியா?”

“இல்லைமா”

“எதுக்குனு கேட்டியா?”

“பார்க்கணும்னார்”

“எதுக்குப் பார்க்கணுமாம்?

“சும்மானு சொன்னார்”

அடுத்த கணம் காவலாளி பாபுவின் கன்னத்தில் மின்னல் வேகத்தில் இடியொன்று இறங்கியது. காலை உதறிய வேகத்தில் வித்யாவின் செருப்பு வாசலில் இருந்து வராந்தாவிற்குப் போயிற்று. “காவலாளினா கதவைப் பிடிச்சுக்கிட்டு நிக்கிறது மட்டுமல்ல வேலை. வர்றவங்க யாரு என்னனு விசாரிச்சு வைச்சுக்கணும், தெரியுதா?” என்ற அவள் உறுமல் கேட்டு உள்கூடத்திற்கு வந்து எட்டிப் பார்த்தாள் சித்தி ராஜம்மா.

“வந்துட்டியா, வா வா. சித்த இரு காபி கலந்து எடுத்துண்டு வரேன்”

தம்ளரிலிருந்து டபராவிற்குத் தாரையாக காப்பியை வார்த்துக் கொண்டே ராஜம்மாள் சொன்னாள், “உன்னைக் கேட்டு மூணு நாலு தரம் போன் வந்தது”

“யாரு, சித்தி?”

“நான் கேட்கலை. என்னமோ இங்கிலீஷில் சொன்னா”

“பத்திரிகைக்காராளா?”

“அப்படித் தெரியலை... அதிகாரிகள் மாதிரி இருந்தது.”

“யாரு என்னனு கேட்டு வைச்சுக்கக் கூடாதோ?”

“எனக்குத் தோணலையேடியம்மா”

வித்யாவிற்குப் புசு புசுவென்று பொங்கிக் கொண்டு வந்தது. ‘மஃப்டியில் போலீஸ் வாசலில் வந்து நிற்கிறது. எதற்கு என்று கேட்கத் துப்பில்லாத காவல்காரன். போனில் யார் பேசுகிறார்கள் எனப் புரிந்துகொள்ள முடியாத சித்தி. வீடு விளங்கிடும்’ என்று நெஞ்சு புகைந்தது. ‘தனியாக இருக்கும் பெண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானலும் நடக்கலாம்’ என்பதுதான் சமூக யதார்த்தம். என்றாவது ஒருநாள் நான் ரத்த சாட்சியாகத்தான் மரிக்கப் போகிறேன். அப்படி நான் செத்தாலும் அழுவதற்கு யார் இருக்கிறார்கள்? எனக்கென்று எவருமில்லை’ அவ்வப்போது வந்து கவிந்து கொள்ளும் ஆற்றாமை அப்போதும் மனதில் சூழ்ந்தது.

அன்றைய நாள் பாபுவிற்கு அத்தனை நல்லதாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அவன் கதவருகே  வருவதற்குள் சர் சர் என்று இரண்டு கார்கள் நேரடியாகப் போர்டிகோவில் வந்து நின்றன. பதறிக்கொண்டு அவன் காரை நெருங்குவதற்குள் காரிலிருந்து இறங்கிய இயந்திரத் துப்பாக்கி ஏந்திய காவலர் முழங்கையால் அவனை விலாவில் இடித்து நிறுத்தினார். இரண்டாவது காரிலிருந்து இறங்கிய ஒரு சபாரி சூட் அதிகாரி அவன் காரை நெருங்காமல் மறித்து நின்றார்

கறுப்பு பிளைமெளத் காரிலிருந்து இறங்கிய பெரியவர் தோள் துண்டை சரி செய்துகொண்டே வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்.

“நானே உங்களை வந்து பார்க்கலாமென்றிருந்தேன். இப்போதுதான் உள்ளே நுழைகிறேன். குளித்து, சாப்பிட்டு, உங்களைப் பார்க்க வரலாமென்று நினைத்தேன். நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள்”

“எனக்கு அவசரம்... அதனால் நானே வந்துவிட்டேன்”

“அவசரமா? என்ன?”

“பால் பாயசம் ஆறிப் போகிறதே?” பெரியவர் வாசலைப் பார்த்துக் கை நீட்டினார். வெள்ளிக் கூஜா ஒன்று வந்தது.

“பாயசமா? எதற்கு? இன்றைக்கு உங்கள் பிறந்தநாளா?”

பெரியவர் பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தார்.

“செத்துப் பிழைத்தவனுக்கு ஒவ்வொரு நாளும் பிறந்தநாள்தான்”

“அம்மாவிற்குப் பிறந்தநாளா?”

“அமரராகிவிட்டவர்கள் கூட நம் காலண்டர் கணக்குகளில் அகப்பட்டுக் கொள்வார்கள், பார்!”

வித்யாவிற்கு அலுப்பாக இருந்தது. காலையில் இது என்ன கண்ணாமூச்சி விளையாட்டு..

“நேராகத்தான் சொல்லுங்களேன். இன்று என்ன?”

“நான் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் பால் பாயசம் சாப்பிடுவது வழக்கம். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள பாயசத்தை பகிர்ந்து கொள்வதும் என் வழக்கம்”

“அப்படி என்ன மகிழ்ச்சி உங்களுக்கு இன்றைக்கு?”

“நீ நெடுநாளாய்த் தேடிக் கொண்டிருந்த பொருள் ஒன்று கிடைத்துவிட்டால் சந்தோஷமாகத்தானே இருக்கும்!”

“பொருளா?”

“இல்லை. ஆள்”

“ஆளா? யார்?”

மறுபடியும் அந்த மந்திரச் சிரிப்பை வீசிக் கொண்டே தன் சுட்டு விரலை வித்யாவை நோக்கி நீட்டினார் பெரியவர். “நானா?” என்று அவள் குரல் எழுப்புவதற்குள் ஜிப்பா பைக்குள் கையை விட்டு ஒரு சிறு வெல்வெட் பெட்டியை எடுத்தார். நீட்டினார்.

ஓவியம் : தமிழ்
ஓவியம் : தமிழ்

வித்யா திறந்து பார்த்தாள்.ஜன்னல் வழி வந்த வெளிச்சக் கீற்றுப் பட்டு மின்னியது ஒரு வைர மோதிரம். அதனருகில் ஒரு துண்டுச் சீட்டு. அதில் கறுப்பு மையில், குண்டு குண்டான கையெழுத்தில், ‘பெண்மை வாழ்க!’

“எனக்கா? எதற்கு?”

“பேச்சைப் பார்த்தேன். சொல்லு கண்ணா சொல்லு என்று உயர்த்திய சுட்டுவிரலில் மோதிரம் இல்லாதிருப்பதைப் பார்த்தேன். அந்த விரல் அப்படி இருக்கக் கூடாது. அடுத்த முறை அது உயரும் போது ஒளிர வேண்டும்”

“பேச்சை பார்த்தீர்களா? எப்படி?”

பெரியவர் சுதாரித்துக் கொண்டார். “பேப்பரைப் பார்த்தேன் பேச்சைப் படித்தேன். அதிலிருந்த படத்தையும் பார்த்தேன்”

“இப்போது நேரிலேயே பாருங்கள்” தன் பத்து விரல்களையும் நீட்டினாள் வித்யா. அந்த சந்தன விரல்கள் எதிலும் மோதிரமோ, சிறு வளையமோ கூட இல்லை. “நான் அதிகம் நகைகள் அணிவதில்லை. அதிலும் வைரம் அணிவதே இல்லை. இதோ இது கூட கிளிப்தான்.” வெடுக்கென்று காதில் கிடந்த தோட்டை இழுத்து அகற்றி உள்ளங்கையைக் குழித்து அதில் வைத்துக் காட்டினாள்

‘ஆச்சரியமாக இருக்கிறதே! பொன்னை விரும்பாத பெண்ணும் உண்டா?”

“அபூர்வமாகச் சிலர் இருப்பார்கள். இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி வித்யா!” கால் மீது கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து உடகார்ந்தாள் வித்யா

“உன் அழகிற்கு நகைகள் வேண்டாம்தான். ஆனால் பெண்கள் அழகிற்காக மட்டுமல்ல, தங்கள் எதிர்காலத்திற்காகவும்தான் தங்கம் வாங்குகிறார்கள்”

“அது எதிர்காலம் உள்ள பெண்களுக்கு. எனக்கு இன்று நிஜம். நாளை என்று ஏதுமில்லை”

திடீரென்று ஒரு கனத்த மெளனம் அங்கு கவிந்தது. அந்த மெளனத்தை அலட்சியப்படுத்திக் கொண்டு கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரத்தின் கூட்டைத் திறந்து கொண்டு  வந்து கூவியது மணிக் குயில்.பெரியவர் கை கடிகாரத்தைப் பார்த்தார் பின் பேச ஆரம்பித்தார்

‘எதிர்காலம் குறித்துத்தான் பேச வந்தேன்”

“என் எதிர்காலமா?”

“ உன் எதிர்காலம், என் எதிர்காலம், என் கட்சியின் எதிர்காலம், ஏன் இந்த மக்களின் எதிர்காலம் எல்லாமும்தான்.”

என்ன என்பது போல பார்த்தாள் வித்யா

“என் சரித்திரம் ஊரறிந்த ரகசியம். ஆனால்ல் அதிகம் பேர் அறியாத ரகசியம் ஒன்றுண்டு. அது: காலம் என்னைத் தின்று கொண்டிருக்கிறது. கடக்கும் ஒவ்வொரு மணியிலும் நீ கல்லறையை நோக்கி இன்னொரு அடி எடுத்து வைக்கிறாய் என்று காலக் குயில் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. உனக்குத் தெரியும் கோட்டைச் சுவர்களிலிருந்து குதித்திருக்கிறேன். மலைச் சரிவுகளில் ஏறியிருக்கிறேன். ஆனால் இப்போது மாடிப்படி ஏறினாலே மூச்சு வாங்குகிறது. நான் என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு மேடையில், மயங்கிச் சரிந்து விழலாம். அல்லது மெளனமாகவே கூட மரித்துப் போகலாம். நான் மரணத்திற்கு பயப்படவில்லை. நான் எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது என்றெனக்குத் தெரியும். ஆனால் எதை விட்டுச் செல்கிறேன் என்று எண்ணும் போது எனக்குக் கலக்கமாக இருக்கிறது.  அன்றே எல்லாம் போதும் என்று ஒதுங்கி விடாலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் அவர்கள், என் ஆதரவாளர்கள், அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட என் வீட்டு வாசலில் வந்து நின்ற போது அதை அலட்சியப்படுத்திவிட்டு கடந்து போக எனக்கு முடியவில்லை. அப்படி அலட்சியப்படுத்தியிருந்தால் இன்னும் பலர் தாக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் சிலர் இறந்தும் கூடப் போயிருப்பார்கள். எனக்கு உயிர் கொடுத்தவர்கள், வாழ்வு கொடுத்தவர்கள் என் அலட்சியத்தால் இறந்து போயிருப்பார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி அரசியல் கட்சிதான். அனுபவத்தில் சொல்கிறேன். அதிகார முற்றங்களில் அப்பாவிப் பொது மக்களின் குரல்கள் எடுபடாது. ஆனால் அரசியல்கட்சிகளின் சிறு அசைவுகள் கூட ஆட்சிப் பீடங்களுக்கு அச்சம் தரும். அவர்களுக்காகத்தான் ஆரம்பித்தேன். அந்த அவர்கள் மெத்தப் படித்த மேதைகள் இல்லை.இலக்கியத்தில் புரண்டு எழுந்த எழுத்தாளர்கள் இல்லை. அருவி போல மேடையில் அடுக்கு மொழிகளைக் கொட்டி அசர வைக்கிற பேச்சாளர்கள் இல்லை.விவசாயம்  செய்து விட்டு வீட்டுக்குப் போய் சினிமா பார்த்து இளைப்பாறுகிறவர்கள். காற்றுக்கும் கடலுக்கும் இசைந்து படகேறிப் போய் பணம் தேடுபவர்கள். அவர்கள் ஒரு நாளும் வசிக்க இயலாத கட்டிடத்திற்காகக் கல் சுமப்பவர்கள்.எட்டுமணி நேர வேலையில் இடுப்பொடிந்து போனவர்கள். அவர்கள் என்னில் தன்னைக் கண்டார்கள் எனக்குப் பிரசினை என்ற போது தங்கள் பிரசினை என்றெண்ணி என் பின் திரண்டார்கள். இப்போது நான் போய்விட்டால் அவர்கள் என்ன ஆவர்கள்? திக்குத் தெரியாத நடுக் காட்டில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் இதுநாள் வரை முழு நேர அரசியல் செய்தவர்கள் இல்லை. இனிப் பழைய வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது. அவர்களை வழி நடத்திச் செல்ல ஒரு தலைமை வேண்டும். ஜனங்களை ஈர்க்கும் சக்தி, புத்திசாலித்தனம், தைரியம். அதிகப்பிரசங்கிகளை பார்வையாலேயே அடக்குகிற கம்பீரம் கொண்ட தலைமை வேண்டும். இப்போது என் கட்சியில் இரண்டாமிடத்தில் இருப்பவர்களிடம் இவை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் காரியஸ்தர்கள். கணக்குப்பிள்ளைகள் ஆனால் அரசர்களோ அரசிகளோ அல்ல. அப்படி ஒரு தலைமையைத் தேடிக் கொண்டிருந்தேன். அதை இன்று கண்டு கொண்டேன். பால் பாயசம் சாப்பிடுகிறேன்”

இந்த மனிதரைப் பார்த்துப் பெருமைப்படுவதா, பரிதாபப்படுவதா எனப் புரியாமல் குழம்பினாள் வித்யா

“சரி, நான் என்ன செய்ய வேண்டும்?”

“அரசியலுக்கு வந்துவிடு. எங்கள் கட்சியில் சேர்ந்துகொள். என் நிழலாக இரு. என் குரலாக இரு”

இரண்டு கையையும் தலைக்கு மேல் உயர்த்தி பெரிய கும்பிடாகப் போட்டாள் வித்யா.

“ஆளை விடுங்கள் சாமி. அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது. தட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ. உங்களுக்குத் தெரியும், நான் தனிமை விரும்பி. நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே யாருடனும் ஒட்டமாட்டேன். புத்தகத்தை வைத்துக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்து விடுவேன். எனக்குப் பகை என்று யாருமில்லை. ஆனால் எனக்கு நண்பர்களும் இல்லை. என்னால் மனிதர்களை நம்ப முடியவில்லை. இப்போதுதான் ஒரு பெரும் மனக்காயத்திலிருந்து மீண்டு கொண்டிருக்கிறேன். இல்லை மீள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.”

அதுதான் எனக்குத் தெரியுமே என்பது போலப் புன்னகைத்தார் பெரியவர்.

“அடுத்தவர்களைச் சொல்லுவானேன். எனக்கு மனிதர்களைக் கையாளத் தெரியவில்லை. இந்த வீட்டையே நிர்வகிக்க முடியவில்லையே. ஒரு கூட்டம் பேசினதற்கே யாரோ போலீஸ்காரன் வாசலில் வந்து நிற்கிறான். வீட்டுக்கு போன் வருகிறது. யார் எனத் தெரியவில்லை என்கிறாள் சித்தி”

“இரண்டும் நான்தான்” என்று முறுவலித்தார் பெரியவர்.

“நீங்களா?”

“நீ வந்து விட்டாயா எனத் தெரிந்துகொள்ள போன் செய்தேன். இல்லை என்றார்கள். இருந்து கொண்டே இல்லை என்கிறாயோ எனச் சந்தேகம். ஆளை அனுப்பி பார்த்துவிட்டு வரச் சொன்னேன். பயந்து விட்டாயா?”

“பயம்! ஹ... ஹா... எனக்கா!” என்று உரக்கச் சிரித்தாள் வித்யா. “பயம் இல்லை. அது அருவருப்பு. அசூயை. ஒருவிதமான கூச்சம். நேற்று உங்கள் ஆட்கள் மேலே விழுந்து மொய்த்து விட்டார்கள். இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் பிய்த்துத் தின்றிருப்பார்கள். இன்னொரு புறம் மீடியா துரத்துகிறது. எல்லோரும் என் அந்தரங்கத்தைப் பறித்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.”

இப்போது பெரியவர் கடகடவென்று சிரித்தார். “இது சின்னப் பிரச்னை. ரொம்ப ரொம்பச் சின்னப் பிரச்னை. அரசியலுக்கு வந்து விட்டால் நீ முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது யாரும் உன்னை அணுகாமல் பார்த்துக் கொள்வது. வாசல் கதவைத் திறக்க, வந்தவர்களை விசாரிக்க, போன் வந்தால் எடுக்க, மீடியாவைத் துரத்த அல்லது அழைக்க எல்லாவற்றுக்கும் கூட ஒரு ஆளை வைத்துக்கொள்ள வேண்டும். அர்த்த மண்டபம், மண்டபம் அப்புறம்தான் கர்ப்ப கிரகம். நந்தி பூசாரி எல்லோரையும் தாண்டியதற்கு அப்புறம்தான் சிவன். அந்த சிவனே அப்படி!”

 சிரித்து முடித்துவிட்டு அவர் நிதானமான குரலில் சொன்னார்.”நான் ஒரு ஆளை அனுப்புகிறேன். உதவிக்கு வைத்துக்கொள்”

“நம்பலாமா?”

“ஈரக் களிமண் உன் இஷ்டத்திற்கு வளைத்துக் கொள்ளலாம்”

மறுநாள் பெரியவர் அனுப்பினார் என்று வாசலில் வந்து நின்றாள் பெரியநாயகி.    

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com