ஏர்போர்ட் ஏரியாவே அமர்க்களப்பட்டது.

அத்தியாயம் - 12
ஏர்போர்ட் ஏரியாவே அமர்க்களப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மடாதிபதியை மரியாதைகளுடன் அழைத்துச் செல்வதுபோல எங்கள் சக்கரவர்த்தியை தேவஸ்தான வேத பண்டிதர்கள் குழு தரிசனத்திற்கு அழைத்துச் சென்றது. பெருமாள் முன்பு நாங்கள் இருவர் மட்டுமே நின்று நிதானமாக தரிசனம் செய்து முடித்து வெளியில் வந்து வேத ஆசீர்வாதங்களுடன் எங்களுக்கு பிரசாதமும் அளிக்கப்பட்டது. ஆர்வம் தாங்க முடியாமல் “ஏன் உங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது” என்று அவரிடமே கேட்டு விட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, என் தந்தையார் ஓர் பெரிய வக்கீல்.  1932 இல் தேவஸ்தானம் டிரஸ்ட் உண்டாக்கி இந்த கோவிலை அரசாங்கம் எடுத்துக் கொண்ட பிறகு எத்தனையோ சட்டங்கள் போட்டு இந்த அர்ச்சகர்கள் மற்றும் வேறு பல மிராசிகளின் பரம்பரை உரிமையை அவர்கள் தடுத்தபோதெல்லாம் எங்கள் அப்பாதான் இவர்களுக்காக வாதாடி ஒவ்வொரு முறையும் கேஸ் ஜெயித்துக் கொடுத்திருக்கிறார். நானும் அப்பாவுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறேன் என்றார். இவரே ஒரு MA.BL., வக்கீலுக்குப் படித்துவிட்டு தொழில் செய்யாமல் இந்தியன் ஏர்லைன்ஸில் சேர்ந்தவர்தான் என்பதும் எனக்கு நினைவுக்கு வந்தது.

பிறகு தேவஸ்தான அதிகாரிகளுடன் பேசி எங்கள் ஏர்போர்ட் திறப்பு விழா முடிந்து அடுத்த சில தினங்களில் பெங்களூர் விமானம் தொடங்கும் விழாவை மலை மேல் கோவிலில் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்துக் கொண்டு சம்பிரதாயப்படி கர்நாடக இசை கச்சேரி முதலியன ஏற்பாடு செய்து வேறு விதமாக கொண்டாடலாம் என்று தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளையும் அவர்களையே செய்யச் சொல்லிவிட்டு நாங்கள் கீழே இறங்கினோம். அவரும் சென்னை நோக்கிப் புறப்பட்டார். 

1972 நவம்பர் 7ஆம் தேதியும் வந்தது. திருப்பதியே திமிலோகப்பட்டது. B.நாகிரெட்டி காரு தன் ஸ்டூடியோ பேனர் கலைஞர்கள் படையை திருப்பதியில் இறக்கி, ஏற்கனவே வழிநெடுகச் செய்து வைத்திருந்த பதாகைகளும் தோரண வாயில்களும் ஏர்போர்ட் ரோட்டை அலங்கரித்தன. சாரி சாரியாக மக்கள் காலையிலேயே ஏர்போர்ட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

மேளதாளங்கள் என்ன பேண்டு வாத்தியங்கள் என்ன என்று ஏர்போர்ட் ஏரியாவே அமர்க்களப்பட்டது. அன்றைய சிவில் விமான போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் கடைசி காஷ்மீரத்து மன்னர் மகாராஜா ஹரி சிங்கின் புதல்வர் டாக்டர் கரன்சிங். அவருடன் அன்று ஆந்திர முதல்வராக இருந்த பி.வி.நரசிம்மராவ் மற்றும் இந்தியன்  ஏர்லைன்ஸ் சேர்மன் உட்பட உயர் அதிகாரிகள் இன்னும் பல வி.ஐ.பி.கள் எங்கள் விமானத்தில் வந்து திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு மலைக்குச் சென்று தங்கி பிறகு அடுத்த நாள் கார் மூலம் சென்னைக்குச் சென்று அங்கிருந்து ஹைதராபாத் மற்றும் டெல்லி செல்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எங்கள் முதல் விமானமும் நல்லபடியாக வந்து  காஷ்மீர் மன்னர் வாரிசு கரன்சிங் தன் நேபாள அரசகுமாரி மனைவியான யசோ ராஜ்யலக்ஷ்மியுடன் இறங்கினார். ஏர்போர்ட்டை  மரியாதை நிமித்தம் சுற்றிப் பார்த்துவிட்டு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அனைவரும் அமர்ந்து திறப்பு விழாவும் இனிதே முடிந்தது. ஆந்திர அரசும் திருப்பதி தேவஸ்தானமும் செய்திருந்த ஏற்பாடுகள் எல்லோராலும் பாராட்டப்பட்டன.

திருப்பதி நகரத்திலும் மலைமேலும் நடந்த வரவேற்பு மற்றும் விழாக்களைக் காண எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. முதல் விமானத்தை எங்களிடம் அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு மேனேஜர் மற்றும் எல்லோரும் பெரும்படையோடு  கிளம்பிச் சென்றதும் ஏற்கனவே விமானத்துக்குக்காகக் காத்திருந்த 16 பயணிகளையும் நாங்கள் பூங்கொத்து, லட்டு பிரசாதம் கொடுத்து மரியாதையுடன் ஏற்றி அனுப்பி வைத்தோம். முதல் டிக்கெட் வாங்கிய யதிராஜம்மாவுக்கும் என்னுடைய தனி மரியாதைகளைச் செய்தேன். அவரும் எனக்கு ஆசிகூறி விடை பெற்றார்.

ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு நாங்கள் திரும்பி வரும்போது வழியெல்லாம் கலைந்து சென்ற மக்கள் கூட்டம் ஆளாளுக்குத் தோரணங்களையும் மற்ற அலங்காரங்களையும் பிய்த்துக் கையில் எடுத்துக் கொண்டு போவதைப் பார்த்தோம். அடுத்த பெங்களூர் விமானத் திறப்பு விழாவுக்கு ஏர்போர்ட் பில்டிங்கின் அருகில் இருக்கும் அலங்காரங்களாவது மிஞ்ச வேண்டுமே என்ற கவலையுடன் திரும்பிச் சென்றோம். 

D.K.பட்டம்மாள் கச்சேரி
D.K.பட்டம்மாள் கச்சேரி

பெங்களூர் விமானத் துவக்க விழா நாளும் வந்தது. இந்த முறை ஏர்போர்ட்டில் பெரிதாக அமர்க்களம் ஏதும் இல்லை.‌ மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துணை மந்திரி சரோஜினி மஹிஷி தொடங்கி வைத்தார். அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த ஏற்பாடு. எங்கள் சக்கரவர்த்தி உள்ளிட்ட தெற்கு பிராந்திய அதிகாரிகள் தான் வந்திருந்தார்கள். டெல்லிவாலாக்கள் யாரும் வரவில்லை. விழாவை மாலை நேரத்தில் வைத்திருந்ததால் எல்லோரும் மந்திரியுடன் தரிசனத்துக்கும் சென்றுவிட்டு விழா நடைபெற்ற கோவிலுக்கு எதிரில் இருந்த ஆயிரங்கால் மண்டபம் சென்றோம். சம்பிரதாயமான உரைகள் நடந்த பிறகு பிரபல பாடகி D.K.பட்டம்மாள் கச்சேரி களை கட்டியது. சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக அவரும் புரந்தரதாசர் கிருதிகள்  விசேஷமாக வெங்கடேஸ்வரர் பற்றிய பாடல்கள் நிறையப் பாடி எங்கள் எல்லோரையும் மகிழ்வித்தார். திருப்பதிக்கு வந்துவிட்டு மொட்டை அடிக்காத ஒரு குறை இருக்க வேண்டாம் என்று அன்று நானும் மொட்டை அடித்துக் கொண்டுதான் தரிசனம் செய்தேன்.

 சென்னை திருப்பதி ஹைதராபாத் திருப்பதி சென்னை, பெங்களூர் திருப்பதி பெங்களூர், ஹைதராபாத் திருப்பதி ஹைதராபாத் என்று ஒரு நாளைக்கு நான்கு முறை விமான சர்வீஸ் அமர்க்களமாக ஆரம்பித்து நடத்தினோம். இதில் மற்ற விமானங்களில் ஓரளவு கூட்டம் வந்தாலும் பெங்களூர் விமானம் மட்டும் கடைசி வரை தேறவே இல்லை. ஆரம்பித்த ஓரிரு மாதங்களிலேயே அதைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டோம்.

திருப்பதி விமான நிலையம் திருப்பதிக்கே சம்பந்தம் இல்லாமல் எங்கோ இருந்தது ஒரு காரணம். இரண்டாவது மலைக்கு வரும் பக்தர்கள் குடும்பத்தோடு தான் வருவார்கள். மலை மேல் அங்கும் இங்கும் அலைவதற்கு அவர்களுக்கு கார் மிக முக்கியமாகத் தேவைப்படும். எனவே சென்னையிலிருந்தும் பெங்களூரில் இருந்தும் வருபவர்கள் குடும்பத்தோடு காரில் தான் வருவார்கள். இதுவே அதிகம் பேர் விமானத்தில் பயணம் செய்யாததற்கு காரணம். இத்தனைக்கும் விமானத்தில் வருபவர்களுக்கு 25 ரூபாய் டிக்கெட்டில் ஸ்பெஷல் பிரேக் தரிசனம் உண்டு. இரண்டு லட்டுக்களும் இலவசம். விமானப் பயணிகளுக்கு என்று தேவஸ்தானம் பஸ் சர்வீஸ் வேறு தனியாக நடத்தினார்கள். ஆனாலும் பெங்களூர் விமானத்தில் குறைவான பயணிகளே வந்ததால் தேவைப்பட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அதை நிறுத்தியே விட்டார்கள். 

எங்களுக்கும் ஏர்போர்ட் டியூட்டி என்பது சிரமமாகத்தான் இருந்தது. திருப்பதியில் கிளம்பிய உடனேயே ஒரு லெவல் கிராஸிங்.ரேணிகுண்டா வந்தவுடன் இன்னொரு லெவல் கிராஸிங். இதையும் தாண்டிக்கொண்டு தண்ணியைத் தவிர வேறு எதற்கும் வழி இல்லாத ஓர் பொட்டல் காட்டு ஏர்போர்டுக்குப் போய்வர வேண்டும். வெயில் காலம் ஆரம்பித்து விட்டதால் மண்டை பிளக்கும் வெயில் வேறு.  ஏசி என்பது VIP ரூமில் மட்டும் தான் இருந்தது. எனவே விமானம் வந்து போனதும் உள்ளே ஓடிப் போய் உட்கார்ந்து கொள்வோம்.  விமானத்திலும் அவை பறக்கும் போது தான் ஏசி.  இறங்கி நின்று விட்டால் ஒரே புழுக்கமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு ஸீட்டிலும் விசிறி வைத்திருப்போம். ஆகவே, அவசர அவசரமாக வந்த விமானத்தை உடனே அனுப்புவதிலேயே குறியாக இருப்போம். இந்த லட்சணத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு விமானம் நிற்கும்படி ஆகிவிட்டால் பயணிகளை எப்படி கையாளுவது என்பது எங்களுக்கு நினைக்கவே அச்சமாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் ஆயில் லீக் என்று சென்னையிலிருந்து வந்த விமானம் நின்றுவிட்டது. அன்று பார்த்து 38 பயணிகள்.  நடு நடுங்கி விட்டோம். இறைவா என்ன இது சோதனை என்று பயணிகளிடம் போய் சிறிது தாமதம் ஆகும்போல இருக்கிறது, பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு செய்வதறியாது என் ஆபிசுக்கு உள்ளே வந்தேன்.

 (தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com