விமானத்தின் முன் பகுதியைத் தரையில் மோதி பிரதமரைக் காப்பாற்றினார்.

அத்தியாயம் - 17
விமானத்தின் முன் பகுதியைத் தரையில் மோதி பிரதமரைக் காப்பாற்றினார்.

ந்திய விமானப்படையில் “கம்யூனிகேஷன் ஸ்க்வாட்ரன்” என்று ஒரு பிரிவு உண்டு. இவர்களிடம்தான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல விஐபிகள் செல்லும் விமானங்கள் இருக்கும். அப்போது ரஷ்ய நாட்டு தயாரிப்பான  டி யூ 154 என்ற  இரண்டு பெரிய விமானங்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி செல்வதற்காக இருந்தன.

T U 154 விமானத்தை ஓட்டுவதற்கு இரண்டு பைலட்டுகள் தவிர மூன்று பேர் காக்பிட்டில் இருப்பார்கள். இந்தப் பகுதியை அடுத்து விமானங்களில் லக்கேஜ் ஏற்றும் இடம். அதற்குப் பிறகு விஐபிகள் சௌகரியமாக அமர்ந்து செல்லும் கேபின்கள். அதற்குப் பிறகு வி ஐ பிக்கள் இறங்கி ஏறும் வாயில். அதற்கும் பிறகு விமான பணியாளர்கள் ஏழு எட்டு பேர் அமர்ந்து செல்லும் பகுதி.

இத்தகைய விமானத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் டெல்லியில் இருந்து மாலையில் கிளம்பி அசாம் மாநிலத்தின் மேற்பகுதியில் இருக்கும் ஜோர்ஹாட் விமான தளத்திற்கு செல்ல வேண்டும். அவர்கள் அங்கு செல்லும்போது மாலை ஏழரை மணி ஆகிவிடும் என்பதால் இரவில் இறங்க உதவும் அன்றைய வசதிகளான ரன்வேக்கு வழிகாட்டும் தீப்பந்தங்கள் ( Flares ) வரிசையாக இரண்டு புறமும் கொளுத்தி வைக்கப்பட்டு எல்லோரும் விமானத்தின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். விமானத்தில் பிரதமர் தவிர அவரது மகன் காந்திபாய் தேசாய் மற்றும் சில உயர் அதிகாரிகள் , பக்கத்து மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தின் முதல் மந்திரி ஆகியோர் இருந்தார்கள்.

விமானம் ஜோர்ஹாட் வரை வந்துவிட்டது. இறங்கும்போது மழை  மற்றும் பனிமூட்டம் காரணமாக மசமசவென்று இருந்ததால் விமானி டி லீமா சரியான இடத்தில் விமானம் இறங்காது கிட்டத்தட்ட ரன்வே நடுவில் இறங்கி நிறுத்த முடியாமல் போய்விடும் என்று தெரிந்துகொண்டு மறுபடி மேல் எழும்பி ஒரு முறை வலம் வந்து பிறகு சரியாக இறங்கலாம் என்று தீர்மானித்து அவ்வாறே ஒரு சுற்று சுற்றி வந்தார். 

இந்த முறை விமானம் ரன்வேக்கு வெகு தூரத்திலேயே இறங்க ஆரம்பித்துக் கட்டுப்படுத்த முடியாமல் க்ராஷ் ஆவதைத் தவிற்க முடியாது என்று தெரிந்ததும் தாங்கள் அமர்ந்திருந்த மூக்குப்பகுதி முதலில் தரையைத் தொடுமாறு நோஸ் லாண்டிங் செய்து பிரதமர் உள்ளிட்ட எல்லோரையும் காப்பாற்றி ஐந்து பேரும் உயிர் தியாகம் செய்தார்கள். ஆறாவதாக முன்னால் இருந்திருக்க வேண்டிய பயிற்சி விமானப்படை வீரர் ரவீந்திரனை கடைசி நிமிடத்தில் உன் யூனிபார்ம் சரியில்லை என்று டி லீமா பின் பகுதிக்கு விரட்டி விட்டதால் பிழைத்துக்கொண்டவர் விமானம் இருட்டில் கிராஷ் ஆனவுடன் தன்னுடன் உயிர் பிழைத்த சிலருடன் சேர்ந்து பக்கத்து கிராமத்துக்குப் பிரதமர் உட்பட எல்லோரையும் பத்திரமாக அழைத்துச்சென்று தீரச் செயல் புரிந்ததற்காக விமானப்படை விருது பெற்றார். பிறகு உயிரிழந்த விமானிகளின் தியாகத்தைப் போற்றி ஓர் நினைவுத்தூணும் அந்த இடத்தில் நிறுவப்பட்டது. சேதமடைந்த விமானம் அகற்றப்பட்டதும் அதே இடத்தில் பிரதமரைத் தன் வீட்டில் அந்த இரவில் அமரவைத்த பரூவா என்பவர் மகன் பிற்காலத்தில் மூங்கிலால் அதேபோல ஒரு விமானத்தை நினைவிடமாக நிறுவினார்.

பொதுவாக ரஷ்ய விமானங்கள் நிறைய எரிபொருள் குடிக்கும். பக்கத்தில் 45 நிமிடத் தொலைவில் இருக்கும் பெரிய பாக்டோக்ரா விமான நிலையம் வரை போக எரிபொருள் இல்லாததால் வேறுவழியின்றி ஜோர்ஹாட்டில் இறங்கவேண்டிய நிலை. அதேபோல ஒரு அளவுக்கு மேல் தரைக்கருகில் வந்துவிட்டால் திடீரென்று மேலே எழும்பிவிடவரும் இத்தகைய விமானங்களால் முடியாது. எப்படியும் க்ராஷ் ஆகிவிடும் என்று தெரிந்ததும் தங்கள் உயிர் போனாலும் மற்றவர்கள் தப்பி விடுவார்கள் என்று விமானத்தின் முன் பகுதியைத் தரையில் மோதி பிரதமரைக் காப்பாற்றினார் டி லீமா. 

இந்த நிகழ்வை திருப்பதி விமான நிலைய டவரில் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிக்கையில் எங்கள் ஆவ்ரோ விமானம் இறங்க ஆரம்பித்து விட்டது. அன்றைய விமானி ஒரு எக்ஸாமினர் பைலட். இந்த பைலட்டுகள் தானே விமானத்தை ஓட்டாமல் பயிற்சியில் இருக்கும் கோ பைலட்டையே ஓட்ட வைப்பார்கள். கொஞ்சமும் பதட்டமடையாமல் கூலாக இருப்பார்கள். எங்கள் விமானம் இறங்குவதைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் ரன்வேக்கு முன்னால் திடீரென்று ஒரே புழுதிப் படலம். “ஐயையோ ஷார்ட் லாண்டிங்  ஆகிவிட்டது... அதாவது ரன்வே ஆரம்பிக்கும் முன்னாலேயே கட்டாந்தரையில் விமானம் இறங்கிவிட்டது போலிருக்கிறது” என்று பதறிய நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே புழுதிப்படலத்தினூடே சற்றே மேலெழும்பிய விமானம் சரியான இடத்தில் இறங்கியது. டி லீமாவால் அன்று TU 154 ரஷ்ய முரட்டு விமானத்தில் இதைச் செய்ய முடியவில்லை. பாவம் உயிரை விட்டார். 

விமானம் வந்து நின்றதும் சக்கரங்கள் மற்றும் அடிப்பகுதியில் ஒரே புழுதி மயம். இன்ஜினீயர் செக் பண்ணிவிட்டு ஒன்றும் இல்லை புழுதியைத் துடைத்துவிட்டு கிளம்பலாம் என்றாலும், “டவர் அதிகாரிகள் மண்ணில் டயர்கள் இறங்கிய அடையாளம் இருந்தால் விமானத்தை இயங்க அனுமதிக்க மாட்டோம்” என்று ரூல் பேசியதால் அவர்கள் ஜீப்பை எடுத்துக்கொண்டு இன்ஜினீயருடன் ரன்வே இன்ஸ்பெக்ஷன் போனார்கள். எங்கள் எக்ஸாமினர் பைலட் கூலாக உட்கார்ந்து கொண்டு விமானத்தை ஓட்டிய கோ பைலட்டைப் பார்த்து அடுத்த முறை மரியாதையாக கறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு விமானத்தை ஓட்டு என்று புன்முறுவலுடன் சொல்லிக் கொண்டு இருந்தார்.  அன்றைக்குப் பார்த்து விமானம் ஃபுல். டவர் ஆசாமிகள் விமானத்தை நிறுத்தி விடக்கூடாதே என்று நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். ஆர்வக் கோளாறால் இது என்ன கறுப்புக் கண்ணாடி கதை என்று ஜீப் திரும்பி வந்ததும் பைலட்டைக் கேட்கலாம் என்று நினைத்தேன்.

 “ஜீப் ரன்வேயிலிருந்து திரும்பி வந்ததும் நல்ல வேளையாக விமானம் மண்ணில் இறங்கிய தடம் இல்லாததால் நீங்கள் போகலாம்” என்று சொல்லி விட்டார்கள். பயணிகள் விமானத்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது ஆர்வக்கோளாறு பிடித்த நான் நமது பைலட்டிடம் கருப்புக் கண்ணாடி கதை என்ன என்று கேட்டேன். ஒன்றுமில்லை. இறங்கிக் கொண்டிருக்கும் போது எதிரே சூரியன் இருந்ததால் கண்கூசிய நம்ம ஆசாமி சிறிதே தடுமாறியதால் விமானம் ரன்வேக்கு முன்னால் இறங்க ஆரம்பித்ததை அறிந்து, தானே சரி செய்து, மறுபடியும் இறக்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டார். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தால் கண் கூசி இருக்காது. அதனால் சொன்னேன். இல்லாவிட்டால் எங்க கதையும் சாண்டா குரூஸில் இறங்க வேண்டிய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஜுஹு ஏர்போர்ட்டில் இறங்கிய கதையாக ஆகி இருக்கும் என்று சொல்லிவிட்டுப் போனார். ஒரு சில வருடங்களுக்கு முன்பு 24-9-1972 அன்று லண்டனில் இருந்து டோக்கியோ சென்ற விமானம் பம்பாய் சாண்டாக்ரூஸ் ஏர்போர்ட்டில் இறங்குவதற்குப் பதிலாக சிறிய ஜுஹு ஏர்போர்ட்டில் இறங்கிய கதையைப் படித்திருந்த நான் மேல் விவரங்களை பம்பாய் டவரில் இருந்து பிரமோஷனில் திருப்பதி வந்திருந்த ஏரோட்ரோம் ஆபீஸர் கோதண்டராமனிடம் கேட்டேன். 

இப்போது மாதிரி விமானங்கள் நீண்ட நேரம் பறக்க முடியாத காலம். லண்டன்-டோக்கியோ ஜப்பான் ஏர்லைன்ஸின் DC 8 ரக விமானம் ஃபிராங்க்ஃபர்ட் ரோம் பெய்ரூட் டெஹ்ரான் பம்பாய் பேங்காக் ஹாங்காங் என்று எல்லா இடங்களிலும் இறங்கித்தான் போகும். அப்படி பம்பாயில் இறங்கும்போது ஸான்டாக்ரூஸ் விமான தளத்துக்கு மேலாக இறங்கி அரபிக்கடலுக்குள் சென்று வட்டமடித்து உயரத்தைக் குறைத்துக் கொண்டு கடற்கரையில் இருந்து சிறிது தூரம் தள்ளி இருக்கும் ரன்வேயில் இறங்குவதற்குப் பதிலாக விமானத்தைக் கடற்கரையிலேயே இருக்கும் சிறிய ஜுஹு ஏர்போர்ட்டில் இறங்கி விட்டார் ஜப்பானிய பைலட். இதே மாதிரி எதிரே சூரிய ஒளியில் கண்கூசியதாலும் இப்படி சாண்டாக்ரூஸ் ஏர்போர்ட்டின் திசையிலேயே இன்னொரு ஏர்போர்ட்டும் இருக்கும் என்று எதிர்பார்த்திராததாலும் இந்தத் தவறு நடந்து விட்டது. 108 பயணிகளும் 14 விமான சிப்பந்திகளும் நல்ல வேளையாக உயிர் பிழைத்துக் கொண்டனர். குட்டி ரன்வேயில் விமானத்தை நிறுத்தமுடியாததால் overshoot ஆகி ஏர்போர்டைத்தாண்டி நின்ற விமானம் டோட்டல் டேமேஜாகி விட்டது. இதில் என்ன விசேஷமென்றால் இதே போல 1953 ல் BOAC விமானமும் 1968 ல் இந்தோனேஷிய கருடா ஏர்லைன்ஸ் விமானமும் பம்பாய் ஏர்போர்ட் என்று நினைத்து ஜுஹுவில் இறங்கியிருக்கிறார்கள்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்திய விமானத்துறை இப்படி இரண்டு ஏர்போர்ட்டுகளை அருகருகே வைத்திருக்கக்கூடாது என்று சண்டை போட்டதும் ஜுஹு ரன்வேயில் பெரிதாக மஞ்சள் கலரில் ஒரு பெருக்கல் குறியைப்போட்டு பைலட்டுகளை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் தொழில்நுட்பம் விமானத்தை இனிமேல் ஜுஹுவில் இறங்கவிடாமல் தடுத்துவிடும். ஆதலால் கவலையில்லை.

 என்னுடன் இருந்த நன்கு சமைக்கத் தெரிந்த ராமசாமி கல்யாணம் பண்ணிக்கொண்டு மனைவி பெங்களூரில் வேலை பார்த்ததால் தானும் அங்கேயே மாற்றல் வாங்கிக்கொண்டு போனதும் சமைக்கத் தெரியாத எனக்குத் திருப்பதி ஓட்டல்களில் காரமாகச் சாப்பிட்டதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு நாமும் கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன என்று தோன்றியது. சென்னையில் என் உறவினர்கள் உதவியுடன் ஜாதக பரிவர்த்தனை நடந்தது. என் உறவினர்களும் சில பெண்களைப் பிரஸ்தாபித்து இறுதியில்  என் குடும்பத்தைப் போல ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த பெண்ணுடன் நிச்சயம் செய்து கொண்டோம்.  பெண்ணின் பெயர் நான் திருப்பதியில் எழுதிய முதல் டிக்கெட் பயணியின் பெயரான அதே யதிராஜம். அந்த டிக்கெட்டை வாங்கிய சகோதரர் செல்வனிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது யதிராஜம் என்ற பெயரே அமைந்தது குறித்து எல்லோரும் வியந்தார்கள்.

 கொடைக்கானலில் தேன் நிலவு என்று திட்டமிட்டு நாங்குநேரிக்கு அருகே திருவனந்தபுரம் விமான நிலையம் இருந்ததால் அங்கு செல்ல மெட்ராஸ் ஏர்போர்ட் வந்தோம். ஸ்ரீரங்கத்தில் கட்டுப்பெட்டியாக வளர்ந்து அப்பாவின் போஸ்டிங் காரணமாக சமீபத்தில்தான் சென்னைக்கு இடம் மாறி இருந்த என் மனைவி என்னையும் என் ஏர்லைன்ஸ் ஸ்டைலையும் பார்த்து மிரண்டு போயிருந்தவள் ஏர்போர்ட்டில் நுழைந்ததும் ஆரவாரமாக எங்களை வரவேற்ற என் நண்பர்களைப் பார்த்து அலமந்து போனாள். திருவனந்தபுரம் செல்லும் போயிங் விமானத்தில் ஏற நாங்கள் நடக்கையில் எதிரே வந்த Practical Joke செய்வதில் தேர்ந்த என் ஸீனியரிடம் என் மனைவியை அறிமுகம் செய்யப்போக அந்தப் பாவி மனிதர் ஷாக் ஆனதுபோல நடித்து “ இவளா அப்ப அவ “ என்று சொல்லி விட்டுப் போயே போய்விட்டார். அதிர்ந்து போன என் மனைவியுடன் நான் விமானத்தில் நுழைந்த போது என் ஏர்ஹோஸ்டஸ் நண்பிகள் என் புது மனைவியின் அழகைப் பாராட்டிக் கன்னத்தைக் கிள்ளி பண்ணிய கலாட்டாவில் இன்னும் நிலைகுலைந்து போய்விட்டாள். விமானம் 28000 அடி உயரத்தில் நிலைபெற்றுப் பறக்கும் போது பைலட் நண்பர் வேறு காக்பிட்டிலிருந்து வெளியே வந்து எங்களிடம் கை குலுக்கி வாழ்த்திய போது   ஐயையோ விமானத்தை ஓட்டாமல் இங்கே வந்து நிற்கிறாரே என்று பயந்து போய் விட்டாள். விமானம் ஆட்டோ பைலட்டில் போகிறது உள்ளே இரண்டாவது பைலட் வேறு இருக்கிறார். பயமில்லை என்று சமாதானம் செய்தேன். இப்படியாக என் மனைவியின் முதல் விமானப் பயணம் முழுதும் கலவரமாகவே உட்கார்ந்திருந்தாள். திருவனந்தபுரத்தில் இறங்கும்போது மழை மின்னல் காரணமாக விமானம் குலுங்க வேறு ஆரம்பித்து விட்டது.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com