அவர்தான் எனக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர்

அத்தியாயம் - 8
அவர்தான் எனக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர்

திருப்பதி வாழும் வெங்கடேஸ்வரனே என் கையைப் பிடித்து  விமானத்திற்கு அழைத்துச் சென்றது போல எனக்குத் தோன்றியது. என் வாழ்க்கையில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்த திருப்பதியை நோக்கி நான் பயணப்பட்டேன்.

பைலட் என்னை மூன்றாவது விமானிகள் அமரும் இருக்கையில் அமர வைத்துக் கொண்டு விமானம்  நிலையாகப் பறக்க ஆரம்பித்ததும் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு தன் சொந்த ஊர் திருப்பதிக்குப் பக்கத்திலேயே இருக்கும் நகரி என்று பேச்சை ஆரம்பித்தார்.

“மிகப் பழைய காலத்தில் அவர்கள் பகுதியில் இருக்கும் ஓர் உயர்ந்த குன்றின் மேல் தான் குங்கிலியம் போன்ற வஸ்துக்களையும் நின்று எரியும் தாவர எண்ணெய்களையும் மரங்களையும் உபயோகித்து தீமூட்டி கடலில் வரும் வியாபாரிகளின் மரக்கலன்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகப் பயன்படுத்தினார்கள்” என்ற அபூர்வமான தகவலையும் சொன்னார்.

விமானம் காஞ்சிபுரம் நகரத்திற்கு மேல் வந்ததும் இடது பக்கத்தில் தெரிந்த ஏகாம்பரேஸ்வரர் மற்றும் வரதராஜர் கோவிலையும் காண்பித்தார். இந்த விமானங்கள் அதிகபட்சம் 13000 அடி உயரத்தில்தான் பறக்க முடியும் என்பதால் தெளிவாகவே தெரிந்தது. சென்னையில் தரை இறங்கியதும் “நான் அடிக்கடி திருப்பதி வருவேன் உன்னைக் கட்டாயம் அங்கே சந்திக்கிறேன்” என்று வாழ்த்தி விட்டுச் சென்றார்.

சென்னையில் மீட்டிங் முடிந்ததும் திருப்பதியை நோக்கி ரயிலில் பயணப்பட்டேன். ரேணிகுண்டாவில் ரயில் நின்றதும் பக்கத்தில் தான் ஏர்போர்ட் என்றார்களே என்று எட்டிப் பார்த்தேன். ஏதும் தெரியவில்லை. திருப்பதியில் என் ஆபிஸ் ஏற்கெனவே திறந்திருந்தார்கள். ரயில் நிலையத்திலிருந்து நடந்து போகும் தூரத்தில் TTD கெஸ்ட் ஹவுஸில் ஆபீஸ். அங்கே ஏற்கெனவே தங்கியிருந்த மேனேஜர் மற்றும் இன்ஜினீயர் இருவரையும் சந்தித்துப் பேசினேன். ஆரம்பமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேனேஜர் மோகன் ராவ் மலர்ந்த சிரிப்புடன் என்னை வரவேற்றார். பிற்காலத்தில் அவர்தான் எனக்கு பல விதங்களில் குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர். இந்தியன் ஏர்லைன்ஸில் உச்சபட்ச பதவியான Deputy MD வரை உயர்ந்தார்.( MD  பதவி அரசு நியமனம்.)  குடும்பத்தை இனிமேல் தான் பெங்களூரில் இருந்து கூட்டி வர வேண்டும், ஆகவே, நான், நீ, என்ஜினீயர் A K ராவ் ஆகிய மூவரும் இந்த கெஸ்ட் ஹவுஸிலேயே இருந்து கொள்ளலாம். TTD இல் எல்லோருக்கும் குவார்டர்ஸ் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். பிறகு அங்கே மாறிக் கொள்ளலாம்.  மேலும் பலர் மாற்றலாகி இங்கே வர இருக்கிறார்கள். நாளை நாம் ஏர்போர்ட் சென்று பார்வையிடுவோம் இன்று ஊரைச் சுற்றிப் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டார்.

திருப்பதி விமான நிலையம்
திருப்பதி விமான நிலையம்

திருப்பதி நகரம் இப்போது போலப் பெரிதாக இருக்கவில்லை. ரயில்வே ஸ்டேஷனில் இருபுறமும் பிரம்மாண்டமான சத்திரங்கள். கோவிந்தராஜர் கோவில் தெப்பக்குளம் அருகில் மலைக்குப் போகும் பஸ்கள். ஸ்டேஷனுக்கு எதிரில் வெளியூர் போகும் பஸ்கள் என்று எங்கு பார்த்தாலும் கூட்டம் நெரிசல். இதெல்லாம் எனக்குப் புதிது.  எல்லோரும் தெலுங்கில் தான் பேசினார்கள். தமிழில் பேசினாலும் தெலுங்கில் தான் பதில். சாதாரணப் பேச்சே அதட்டல்தான். கோவைத் தமிழ், பணிவின் உச்சகட்டம். அங்கிருந்து வந்து இங்கே முரட்டுத்தனமாக அதட்டும் உச்சரிப்பில் தமிழ். ஒரே அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இது சோதனை என்று காலாற நடந்துபோய் பிரம்மாண்டமான கோவிந்தராஜர் கோவில் உள்ளே சென்று தரிசனம் செய்துவிட்டு அயர்ந்து போய் ஓரமாக அமர்ந்து நெரியும் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து போய், “இங்கே நம் வாழ்க்கை இனி எப்படி இருக்கப் போகிறதோ” என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது 12 திருமண் அணிந்த ஓர் வைணவப் பெரியவர்  என்னிடம் வந்து உட்காரவே, அவரை ‘அடியேன் ' என்று வணங்கினேன். என் பூர்வோத்தரங்களை விசாரித்த அவர் தான் தங்கியிருந்த சின்ன ஜீயர் மடத்திற்கு அழைத்துச் சென்றார். ஜீயர் ஸ்வாமிக்கு மலையிலும் இங்கேயும் பெரிய மடம் இருக்கிறது என்றும், தான் இந்த மடத்தைப் பராமரிப்பவர் என்றும் சொன்னார். தத்யன்னப் (தயிர்சாதம்) பிரசாதத்தைக் கொடுத்து விட்டு, “எப்போது வேண்டுமானாலும் மடத்துக்கு வாருங்கள்” என்று சொல்லி இரவுக்கும் பிரசாதம் பார்சல் பண்ணிக் கொடுத்தார். மன ஆறுதலுடன் கெஸ்ட் ஹவுஸ் ரூமுக்கு வந்த போது பக்கத்தில் இன்ஜினீயர் ஏகே ராவ் அறையில் சீட்டுக் கச்சேரி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஆந்திராவில் வசதியுள்ளவர்களின் தலையாய பொழுது போக்கு “பெக்குலு ( விஸ்கி ) பேக்காட்டா(சீட்டாட்டம்)” என்பதுதான் என்று தெரிந்து கொண்டேன். மரியாதைக்குச் சிறிது நேரம் இருந்துவிட்டு என் அறைக்குப் போய்விட்டேன்.

அடுத்த நாள் காலையில் தேவஸ்தானத்தின்  கார் வந்து எங்களை ஏர்போர்ட்டுக்குக் அழைத்துச் சென்றது. நானும் என்ஜினீயர் ஏ.கே. ராவும்தான் பயணித்தோம்.‌ மேனேஜர் தேவஸ்தானம் எக்ஸிக்யூடிவ் ஆபீஸருடன் வருகிறார் என்றும், சென்னையிலிருந்து நேராக ஏர்போர்ட்டுக்கு தேவஸ்தான போர்டு மெம்பர் விஜயா வாஹினி ஸ்டூடியோ அதிபர் நாகி ரெட்டியும் வருகிறார் என்றும் சொன்னார். மேனேஜர் ராவ்காருவின் அப்பாதான் நாகார்ஜுன சாகர் அணையைக்கட்டிய சீஃப் என்ஜினீயர் என்றும், இவர் உனக்கு மேனேஜர் ஆகக் கிடைத்தது உன் அதிர்ஷ்டம் என்றவர், திருப்பதி தேவஸ்தானம்தான் ஏர்போர்ட் கட்டப் பணம் கொடுத்திருக்கிறது என்றும் சொன்னார்.

 ரேணிகுண்டா ஊரைத் தாண்டி காளஹஸ்தி போகும் வழியில் கொஞ்சம் தூரம் சென்று வலது பக்கம் திரும்பி ஏர்போர்ட்டுக்குப் போகும் சாலையில் சென்றோம்.  வழியெல்லாம் ஒரே பொட்டல். பசுமை என்பதே இல்லை. ஒரு வழியாக நெடுந்தூரம் பயணம் செய்து புதிதாகக் கட்டி ஏறக்குறைய முடியும் தருவாயில் இருந்த விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். ஏர்போர்ட்டுக்குப் பணம் கொடுத்தது பூராவும் தேவஸ்தானம். ஆனால் கட்டியது இந்திய அரசு சிவில் விமான போக்குவரத்துத் துறை. புதிய ஏர்போர்ட் பிரம்மாண்டமாக அழகாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்த எனக்குப் பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது. கோயம்புத்தூர் விமான நிலையத்தை விட இது சிறிதாகவே இருந்தது. பெரிய போயிங் விமானங்கள் இங்கு இறங்க முடியாது 44 இருக்கைகள் கொண்ட ஆவ்ரோ விமானங்கள் மட்டும்தான் இறங்க முடியும். தேவஸ்தானத்தில் “பணம் கொடுக்கிறேன்” என்று சொன்ன பிறகு ஏர்போர்ட்டைப் பெரிதாகக் கட்டி இருக்கக் கூடாதோ. அவ்வளவுதான் நம் விமானப் போக்குவரத்துத் துறையின் தூரப்பார்வை என்ன செய்வது ?  

இன்னும் சில ஏமாற்றங்களும் காத்திருந்தன.

 (தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com