காலையில் காட்மாண்டு இரவில் திருப்பதி

காலையில் காட்மாண்டு இரவில் திருப்பதி

அத்தியாயம் - 14

ன்று மாலை நாங்கள் ஏர்போர்ட்டில் இருந்து திரும்பி வருவதற்குள் எல்லா விவரங்களும் கிடைத்தன. சென்னையில் இருந்து டெல்லி செல்லும் IC 440 என்ற மாலை விமானம் 58 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்களுடன் கிளம்பியது. VT EAM என்ற அந்த போயிங் 737 விமானம் புத்தம் புதியதுதான். 126 பேர் செல்லக்கூடிய அந்த விமானத்தில் அன்று பயணிகள் நல்ல வேளையாகக் குறைவாகவே இருந்தார்கள். இரவு பத்து மணிக்கு டெல்லியை நெருங்க நெருங்க ‘ஆந்தி’ என்ற மணல் புயலும் பெரு மழையும் சேர்ந்து விமான நிலையமே சரியாகக் கண்ணுக்கு தெரியாத சூழ்நிலையில் பைலட்டுகள் டெல்லி விமான நிலையத்தின் தானியங்கி Instrument Landing System மூலம் தான் இறங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்கள்.  இது அடிக்கடி டெல்லியில் நடப்பதுதான். இதே பைலட்டும் எத்தனையோ முறை இந்த மாதிரி இங்கு வந்து இறங்கியும் இருப்பார் என்றாலும் அன்றைய தினம் NDB என்ற Non Directional Beacon விமானத்தை இறக்க உதவி செய்து கொண்டிருக்க Glide Path  எனப்படும் சாய்வு தள வழியை அப்படியே தொடராமல் தன்னிச்சையாகப் பைலட் அனுமதிக்கப்படாத குறைவான உயரத்தில் விமானத்தைச் செலுத்த முயலும்போது ஏர்போர்ட் எல்லைக்கு வெளியில் விமானச் சக்கரங்கள் குறுக்கே போகும் பவர் கேபிள்களைத் தட்டியதால் தடுமாறி ஏர்போர்ட்டை அடைவதற்குள்ளாகவே தரையில் பாய்ந்து தீப்பிடித்து எரிந்து பின்புறம் இருந்த 48 பேர் உயிரிழந்தார்கள்.

அருகே குடியிருப்புகளில் இருந்து ஓடி வந்தவர்கள் கொட்டும் மழையிலும் ஸீட் பெல்ட்டுடன் மயங்கி இருந்த பலரைத் தீக்காயங்களுடன் காப்பாற்றி ஏர்போர்ட்டில் இருந்து ஊரைச்சுற்றிக் கொண்டு வண்டிகள் வருமுன்னர் தங்கள் வண்டிகளில் பக்கத்தில் இருந்த AIIMS மருத்துவமனையில் கொண்டு சேர்த்து விட்டார்கள். விமானத்தை ஓட்டிய GPB நாயர் மற்றும் கோ பைலட் BN ரெட்டி இருவரும் பெரிதாகக் காயங்கள் இல்லாமல் தப்பித்து விட்டார்கள். நம் நண்பர் சந்திரன் சொந்த விஷயமாக டெல்லி சென்றவருக்கு முன்னால் தான் சீட் கொடுத்திருந்தார்களாம். ஏனோ தெரியவில்லை இரண்டு மணி நேரத்துக்கு மேற்பட்ட பயணத்தில் அவர் தானே பின்னால் போய் அமர்ந்து கொண்டு உயிரை விட்டிருக்கிறார்... விதி வலியது. 

மத்திய மந்திரியும் பல விஐபிக்களும் உயிரிழந்து விட்டதால் அடுத்த சில நாட்களுக்கு செய்திப் பத்திரிகைகள் இதைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தன. விமானிகளும் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டு நீண்ட என்கொயரிக்கள் நடந்தன. Flight Data Recorder, Cockpit Voice Recorder எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்து கடைசியில் விமானியின் தவறுதான் என்று தீர்மானிக்கப்பட்டு அவர்களது லைசென்ஸைக் கேன்சல் செய்து விட்டதால் வேலையும் போய்விட்டது. “விமான விபத்து நடந்தால் விமானி செத்துப் போய்விட வேண்டும். உயிரோடு இருப்பது என்பது அதைவிடக் கொடுமையானது” என்று என்கொயரிக்குள் மாட்டிய பைலட் நாயர் ஏதோ ஒரு பேப்பரில் பேட்டி அளித்தார். கோ பைலட் ரெட்டி இளைஞர் ஆனதால் சில நாட்களில் சவுத் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அங்கே புதிதாக லைசன்ஸ் பெற்றுக் கொண்டு ரிட்டயராகும் வரை அங்கேயே விமானங்களை ஓட்டிக் கொண்டிருந்தார். இந்த விபத்தில் கிடைத்த பாடத்தினால் உலகில் அதன் பிறகு செய்யப்பட்ட விமானங்களில் எல்லாமே ஆயிரம் அடிக்குக் குறைவாக இறங்க ஆரம்பிக்கும்போது தானாகவே 900,800 என்று சொல்ல ஆரம்பித்து 100 அடி தாண்டியதும் 50,40…என்றும் கடைசியில் Retard Retard என்றும் கத்தி பைலட்டுக்குப் பத்திரமாக ரன்வேயில் இறங்க உதவும் கருவிகள் பொருத்தப்பட்டன.

 சில நாட்களில் நானும் ராமசாமியும் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டதால் வருடாந்திர விடுமுறையில் எங்காவது போகலாமா என்று ஆரம்பித்து கடைசியில் நேபாளம் செல்வது என்று முடிவு செய்து காட்மாண்டுவுக்குப் பயணப்பட்டோம். பாஸ்போர்ட் தேவையில்லை. நமது ரூபாயே அங்கே செல்லுபடி ஆகும் என்பதால் எங்கள் முதல் வெளிநாட்டுப் பயணம் எளிதாக ஆரம்பித்தது. திருப்பதியில் இருந்து சென்னைக்கு ஆவ்ரோ விமானம். இறங்கிய ஒரு மணி நேரத்தில் சென்னை கல்கத்தா செல்லும் போயிங் விமானத்தில் பயணப்பட்டு கல்கத்தாவுக்குப் போய் ஓரிரு நாள் தங்கிச் சுற்றிப் பார்த்துவிட்டு கல்கத்தாவில் இருந்து ராய்ப்பூர் வழியாகச் செல்லும் எங்கள் எஃப் 27 என்ற Fokker Friendship விமானத்தில் காட்மாண்டு பயணம் செய்தோம். வெள்ளைக்கார ஆட்சியில் இந்தியாவின் முதல் தலைநகரமாக இருந்த கல்கத்தா பிரம்மாண்டமான கட்டிடங்களுடன் இருந்தது. டிராம் வண்டிகளும் கை ரிக்ஷா வண்டிகளும் எங்களைக் கவர்ந்தன.( அவை இன்னும் கூட கல்கத்தாவில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன ! ) இந்தியாவின் முதல் மெட்ரோ ரயிலை அப்போதுதான் அங்கே கட்ட ஆரம்பித்திருந்தார்கள். இப்போது போல ஆழத்தில் டன்னல் தோண்டும் மிஷின்கள் அப்போது இல்லாததால் பெரிது பெரிதாக ரோட்டில் பள்ளம் தோண்டி அந்தப்பகுதியை காங்க்ரீட் போட்டு மூடிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். முடிவு பெற்ற பகுதியில் ரயில் பெட்டியை இறக்கி சோதனை வேறு. இந்த மாதிரி கட்டினால் முடிவதற்கு வருடக்கணக்கில் ஆகுமே என்று நினைத்துக்கொண்டு காட்மாண்டு செல்லும் விமானத்திற்கு வந்தோம். நிஜமாகவே பதினோரு வருடங்களுக்குப் பிறகு 1984 ல் தான் அங்கே முதல் மெட்ரோ ரயில் ஓடியது.

காட்மாண்டு செல்லும் எப் 27   விமானம் கூட அதே 44 சீட் தான். ஆனால், இறக்கைகள் ஜன்னலுக்கு மேலே இருந்ததால் விமானத்தின் சக்கரங்கள் ஏறுவதும் இறங்குவதும் தெளிவாகத் தெரிந்தன. நல்ல வெளிச்சம் இருந்ததால் என் பாக்ஸ் கேமராவிலும் படங்கள் நன்றாகவே வந்தன. இமயமலையில் இருக்கும் ஏர்போர்ட் என்பதால் இறங்கிய உடனே தூரத்தில் பனி மலைகள் தான் கண்ணில் பட்டன அருமையான  சீதோஷ்ண நிலை. வெளியே வந்ததும் எங்கு பார்த்தாலும் ஜப்பான் மேக் கார்கள்தான். நம் ஊரில் வெறும் அம்பாசிடர், பியட்டை மட்டும் பார்த்த எங்களுக்கு இவற்றைப் பார்க்கும்போது பரவசமாக இருந்தது. வாடகைக் கார்களும் அவைதான். நான்கு நாட்கள் இஷ்டம் போலச் சுற்றிவிட்டு நிறைய ஷாப்பிங் செய்து கொண்டோம். அங்கு கிடைத்த துணிமணிகள் போல நம் ஊரில் எங்கும் கிடையாது. காலையில் போய் அளவு கொடுத்தால் மாலையில் பேண்ட் சர்ட் கோட் எல்லாவற்றையுமே தைத்துக் கொடுத்து விடுகிறார்கள். கொண்டு போன காசு எல்லாம் வேகமாகத் தீர்ந்து போய் விட்டதால் பசுபதிநாத் சிவன் கோவிலைத் தரிசித்து விட்டு மரியாதையாகத் திரும்பி வந்து விட்டோம். காட்மாண்டு டில்லி போயிங் அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் டெல்லி சென்னை போயிங் என்று ஓடியே வந்து விட்டோம். சென்னையில் பஸ் பிடித்து இரவுச் சாப்பாட்டுக்கு திருப்பதிக்கே வந்து விட்டோம். காலையில் காட்மாண்டு இரவில் திருப்பதி என்று மறக்கமுடியாத முதல் வெளிநாட்டுப் பயண அனுபவம். 

திடீரென்று ஒரு நாள் “இந்தியன் ஏர்லைன்ஸ் பணியாளர்கள் ஸ்ட்ரைக் செய்வதால் நிறைய விமானங்கள் கேன்சல் ஆகிவிட்டன” என்று செய்தி வந்தது. எங்கள் ஊரில் நாங்கள் இதுவரை யூனியனில் சேர்ந்திருக்கவில்லை. நாங்கள் வெள்ளை உடுப்புக்காரர்கள் வெளியூரில் இருந்து வந்திருந்தாலும் காக்கி யூனிபார்ம்காரர்கள் எல்லோரும் உள்ளூரிலேயே எடுக்கப்பட்டவர்கள்தான். அவர்களுக்கும் யூனியனைப் பற்றி ஒன்றும் தெரியாது. எங்கள் எல்லோருக்கும் யூனியன் ஒன்றுதான். நீங்களும் ஸ்ட்ரைக் செய்யுங்கள் என்று யூனியனிடம் இருந்து எந்தத் தகவலும் வரவும் இல்லை. ஆகவே நாங்கள் விமானம் வந்தால் வேலை செய்வது என்று லோக்கலாக முடிவு எடுத்து வேலைக்குப் போனோம். அவ்வப்போது ஒரிரண்டு விமானங்கள் கேன்சல் ஆனாலும் மற்றவை வந்து போய்க் கொண்டு தான் இருந்தன. ஸ்ட்ரைக் மிகவும் பெரிதாகி யூனியனுக்கும் நிர்வாகத்துக்கும் உடன்பாடு ஏற்படாமல் போகவே இந்தியன் ஏர்லைன்ஸில் 23.11.1973 அன்று  லாக் அவுட் அறிவித்து விட்டார்கள். மேனேஜர் வாயிலில் நின்று இன்றிலிருந்து லாக் அவுட் உங்களுக்கு உள்ளே வர அனுமதி இல்லை என்று சிரித்துக் கொண்டே எங்களைப் பார்த்துச் சொன்னதும் எங்களுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உள்ளூரில் எடுக்கப்பட்ட பணியாளர்கள் பயந்து போனார்கள். திருப்பதியில் ஓரிரண்டு நாள் இருந்து ஏதாவது தெரிகிறதா என்று பார்த்துவிட்டு நானும் ராமசாமியும் வீட்டைப் பூட்டிக் கொண்டு அவரவர்கள் ஊருக்குச் செல்லத் தலைப்பட்டோம். நான் எனது ஊரான நாங்குநேரிக்கு சென்று விட்டு அங்கே எந்த விதமான தகவல் தொடர்பும் இருக்காது என்பதால் இந்தியன் ஏர்லைன்ஸ் இருக்கும் மதுரைக்கு வந்து என் டிரெய்னிங் நண்பர்கள் அறையில் ஓரிரு நாட்கள் தங்கி ஒன்றும் தெரியாமல் போகவே சென்னைக்கு வந்து விட்டேன். அங்கு ஏர்போர்ட் வாசலில் தினமும் நூற்றுக்கணக்கான பேர் கூடிக் கோஷமிட்டுக்கொண்டு கேட் மீட்டிங்   போட்டுக்கொண்டு இருந்தார்கள். போலீஸ்காரர்கள் எல்லோரையும் அங்கிருந்து அகற்றிக் கொண்டும் இருந்தார்கள். என்ன ஆகப் போகிறது என்று புரியவில்லை.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com