“பிரதமர் என்றாலும் உணவை வீணாக்கக்கூடாது”

அத்தியாயம் - 15
 “பிரதமர் என்றாலும் உணவை வீணாக்கக்கூடாது”

ந்தியாவின் ஒரே ஏர்லைன்ஸ் நாங்கள்தான். போட்டி கீட்டி எதுவும் கிடையாது. விமானம் ஓடி காசு சம்பாதித்து லாபம் பார்த்தால்தான் மேற்கொண்டு விமானங்களை வாங்க முடியும்” என்ற நிலையும் இல்லை. தேவைக்கு கவர்மெண்ட் காசு கொடுத்து விடுவார்கள். பணியாளர்கள் யாருக்குமே  கம்பெனி வருவாய் ஈட்ட வேண்டும் என்ற பிரக்ஞை இல்லை. விமானம் வந்து இறங்கியதும் ஒரு படையே சுற்றிக்கொண்டு அவரவர்கள் வேலையை மட்டும் செய்துவிட்டு மற்றப்படி வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருப்பார்கள். ஒருவருக்கொருவர் உதவ மாட்டார்கள். சரக்கு ஏற்றும் பணியாளர்கள் சரக்கு மட்டும் ஏற்ற வேண்டும். டிரைவர் உதவ மாட்டார். அவர் டிராலியைக் கொண்டு வந்து நிறுத்துவதோடு சரி. உள்ளே சுத்தப்படுத்தும் காபின் கிளீனர்கள். விமானத்தை வெளியே துடைப்பவர்கள் இன்ஜினீயரிங் கிளீனர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உதவ மாட்டார்கள். பைலட் தனி வழி. இன்ஜினீயர் அதற்கு மேலே. சுமுகமாகப் பழகிக்கொள்ளவே மாட்டார்கள். பயணிகள் வருகிறார்கள்... போகிறார்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ள வெள்ளைச்சட்டை போட்ட நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் அவர்களுடைய எண்ணம். எங்கே என்ன கோளாறு நடந்தாலும் அது எப்போதும் எங்கள் தலையில் தான் வந்து விடியும். பயணிகள் எல்லோரும் எங்கள் சிண்டைப் பிடித்துத்தான் உலுக்குவார்கள்.  “புதிதாக விமானங்களை வாங்க வேண்டும்” என்றால் அரசாங்கத்தின் காலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி வாங்கப்படும் விமானங்கள்கூட எங்கு அவை தேவையோ அங்கே ஓடாது. ஆவ்ரோ விமானங்கள் சென்னை, ஹைதராபாத் அல்லது பம்பாய்க்கு இரவு திரும்பிவிட வேண்டும். அதுபோல போயிங் விமானங்கள் டில்லி அல்லது பம்பாய்க்கு இரவு திரும்பிவிட வேண்டும். ஏனென்றால் அங்கு தான் அவற்றைப் பராமரிக்கும் இடங்கள் இருக்கின்றன. காலையில் அவை கிளம்பி நெடுகச் சென்றுவிட்டு திரும்பிவிடும். இதனால் பயணிகளின் தேவைக்குக் கால அட்டவணை இருக்காது. விமானங்கள் எப்போது வர இயலுமோ அந்த அட்டவணை தான் உங்கள் ஊருக்குக் கிடைக்கும். இதுபோல பெரிய நகரங்களில் இருந்து தான் காலை விமானங்கள் கிளம்பும். பராமரிப்பு வசதி இல்லாத ஊர்களில் விமானம் பகலில் ஏதாவது ஒரு நேரத்தில்தான் வரும். ஏர்லைன்ஸ் நிர்வாகத்தை யூனியன்கள்தான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. பயணிகளைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. பயணிகளுக்கும் எங்களைத் தவிர வேறு கதியில்லை. இப்படியாக  ஒரு மாதம் இழுத்தடித்த லாக் அவுட் ஒரு வழியாக முடிவுக்கு வந்து நாங்களும் வேலைக்குச் சேர்ந்தோம். 

25. 4. 1974 காலை நாங்கள் வழக்கம் போல ஏர்போர்ட் சென்று கொண்டிருந்தபோது எங்களுக்கு முன்னாலும் பின்னாலும் குடுமி வைத்த வெள்ளைக்காரர்களோடு காரவான் வண்டிகள் நிறையச் சென்றன. ஏர்போர்ட்டை அடைந்ததும் ஏற்கனவே இருந்த ஒரு வெள்ளைக்காரக் கூட்டம் மேளத்தையும் தாளத்தையும் வாசித்துக்கொண்டு ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என்று டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள். என்ன என்று விசாரித்ததில் ISKON ஐ அமெரிக்காவில் ஸ்தாபித்து உலகெங்கும் கிருஷ்ண பக்தி இயக்கத்தைக் கொண்டு சென்ற அவர்களுடைய குருநாதர் ஶ்ரீல பக்தி வேதாந்த கிருஷ்ண சைதன்ய பிரபுபாத ஸ்வாமிகள் வருகிறார் என்றார்கள். விமானம்  வந்து கதவு திறந்ததும் பழுத்த கிழவரான அந்த சுவாமி ஒளி பொருந்திய முகத்துடன் நின்று காட்சி அளித்ததை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அவருடைய வெள்ளைக்கார சிஷ்யக் கூட்டம் பக்தி பரவசத்துடன் எம்பி எம்பி குதித்து “ஹரே கிருஷ்ணா... ஹரே ராமா” என்று ஆடியதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சுவாமி இறங்கியதும் என் காலணிகளைக் கழற்றிவிட்டு நெடுஞ்சாண்கிடையாக நான் அவரை விழுந்து வணங்கினேன். அவர் புன் சிரிப்புடன் என் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து தன் கையில் வைத்திருந்த வெள்ளிப் பேழையில் இருந்து கிருஷ்ணப் பிரசாதமாக லட்டு எடுத்துக் கொடுத்தார். அவரது சிஷ்யர்கள் அவரை வணங்கி ஆரவாரத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.  இதற்கு முன் நான் அவரைப் பற்றி பெரிதாகத் தெரிந்து கொண்டிருக்கவில்லை.  பிறகுதான் அவருடைய சரித்திரத்தைப் படித்து வியந்தேன். கூடிய சீக்கிரமே இன்னொரு மகானையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. 

மாலை ஏர்போர்ட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் ஆபீசில் நமது பி ஏ நண்பர் ராமசாமி நின்று கொண்டிருந்தார். “உடனே ஓடிப் போய் வேஷ்டி கட்டிக் கொண்டு வா நாம் ஓர் இடத்திற்குப் போகிறோம்” என்று சொல்லவே நானும் அவ்வாறே செய்தேன்.  வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தை தாண்டி அவர்கள் யானை, பசு, குதிரை முதலியவற்றை பராமரிக்கும் TTD  கோ சாலைக்குச் சென்றோம். காஞ்சிபுரத்தில் இருந்து கால்நடையாக வரும் மகா சுவாமிகள் சாயங்காலத்தில் திருப்பதி எல்லைக்கு வந்து விடுவார் என்று அவரை வரவேற்க பெரும் படையுடன் தேவஸ்தான அர்ச்சகர்களும் அதிகாரிகளும் யானை, குதிரை முதலியவற்றை ரெடி செய்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் மகா சுவாமிகளின் குழு வருவது தெரிந்ததும் சாலையில் எல்லோரும் நின்று கொண்டு வேத கோஷத்துடன் அவர்களை வரவேற்றார்கள். தீட்சண்யமான கண்களுடன் மெலிந்த உருவத்துடன் தளர்ந்த நடையுடன் ஓர் சைக்கிள் ரிக்ஷாவைப் பின்புறத்தில் பிடித்துக் கொண்டு மெதுவாக அவர் நடந்து செல்ல முன்னும் பின்னும் எல்லோரும் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என்று சொல்லிக் கொண்டு நடந்தார்கள். திருப்பதி நகரத்திலும் கோலாகலமான பூரண கும்ப வரவேற்புடன் அவரை அழைத்துச் சென்று திருச்சானூர் வரை விட்டு வந்தார்கள். அங்கு இரவு தங்கி விட்டு அடுத்த நாள் மலைக்குப் போவார்கள் என்று சொன்னார்கள்.  நாங்கள் ஏர்போர்ட் செல்ல வேண்டி இருந்ததால் அடுத்த நாள் அவருடன் மலைக்குப் போக முடியவில்லை. அதுதான் மகா சுவாமிகளை நான் முதலும் கடைசியுமாக தரிசித்தது.

சில மாதங்கள் கழித்து “பிரதமர் இந்திரா காந்தி வெள்ளிக்கிழமை அதிகாலை திருப்பதி பாலாஜியை தரிசிப்பதற்காக வருகிறார் என்றும் அதைப்பற்றி வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும்,  ஓரிரு அரசாங்க அதிகாரிகள் மட்டும் ஏர்போர்ட்டில் இருப்பார்கள். மற்றபடி நாங்கள் காலை 6 மணிக்கே அங்கு சென்றுவிட வேண்டும்” என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அதன்படியே நாங்கள்  காலையிலேயே கிளம்பி அங்கே சென்று காத்திருந்தோம்.  சில அரசாங்க அதிகாரிகள் போலீஸ் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வண்டிகளுடன் அங்கே காத்திருந்தார்கள்.

விமானம் வந்து இறங்கியதும் விறுவிறு என்று படிக்கட்டில் இறங்கிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், வரவேற்ற எங்களைப் பார்த்து ‘சாப்பிட்டீர்களா’ என்று இந்தியில் கேட்டார். ‘இல்லை மேடம் நீங்கள் சென்றவுடன் நாங்கள் போய்ச் சாப்பிடுவோம்’ என்று பதில் சொன்னேன். அவர் பின்னால் திரும்பி வி.ஐ.பி. விமான ஊழியரைப் பார்த்து, “ஜார்ஜ் அந்தப் பூரிகளை இவர்களுக்கு கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு விரைந்து போனார்.  கார்கள் சென்று மறைந்ததும் நானும் என் சீனியரும் கிளம்பினோம். ஜார்ஜ் ஓடி வந்து “மேலே ஏறி வந்து பூரி சாப்பிட்டுவிட்டுப் போங்கள்.  விமானத்தின் கதவை மூட  வேண்டும்” என்றார்.   விமானத்தில் இருந்து எதையும் வெளியிலே எடுத்து வர எங்களுக்கு உரிமை இல்லை. ஆகவே உள்ளே வாருங்கள்” என்றார். “அதுக்கு என்ன பரவாயில்லை நாங்கள் ரேணிகுண்டா போய் சாப்பிட்டுக்கொள்வோம். பிரதமர் வருவதற்குத் தான் நேரம் இருக்கிறதே” என்ற என்னிடம், “இல்லை... இல்லை உங்களுக்குப் பிரதமரைப் பற்றித் தெரியாது. வந்தவுடன் பூரியைக் கொடுத்தீர்களா என்றுதான் என்னைக் கேட்பார். மேலே வாருங்கள்” என்று எங்களை அழைத்துச் சென்றார்.

விமானத்தின் இரு பைலட்டுகளுக்கும் எங்கள் இருவருக்கும் உள்ளே இருந்த டைனிங் ஏரியாவில் பூரியைப் பரிமாறினார் ஜார்ஜ். நாங்களும் திருப்தியாக சாப்பிட்டு விட்டுக் கீழே இறங்கினோம். நான்கு மணி நேரம் கழித்து கோவிலில் இருந்து அவசரமாக வந்த பிரதமர் படியேறி விமானத்திற்குள் விரைய விமானமும் அவசரமாகக் கிளம்பிச் சென்றது. டெல்லியில் இருந்து இரவு வெகு நேரம் கழித்துப் புறப்பட்டு ஹைதராபாதில் வந்து இறங்கி திருப்பதிக்குச் சிறிய விமானங்கள் தான் போக முடியும் என்பதால் இந்த விமானத்தில் வந்த பிரதமருக்குக்  காலை உணவாக பூரிகள் வைக்கப்பட்டிருந்தன என்றும், ‘நான் தரிசனம் செய்த பிறகுதான் சாப்பிடுவேன்’ என்று அவர் சொல்லி விட்டதால்  இந்த பூரியை வீணாக்காமல் எங்களுக்குக் கொடுக்கச் சொல்லி விட்டதாக ஜார்ஜ் தெரிவித்தார். என்னதான் பிரதமர் என்றாலும் “உணவை வீணாக்கக்கூடாது” என்ற பண்பும் தாய் உள்ளமும் அந்த இரும்புப் பெண்மணியிடம் இருந்ததை நாங்கள் அன்று கண்டோம்.

சில நாட்கள் கழித்து காலையில் என் 25 ஆவது பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன ராமசாமியுடன் நான் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “இந்திய ஜனாதிபதி பக்ருதீன் அலி அஹ்மத் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்திருக்கிறார்” என்று ரேடியோ நியூஸ் வந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com