இரண்டுவிதமான விமானங்களை ஓட்ட இந்தியாவில் மிகச்சிலருக்கே அனுமதி இருந்தது.

இரண்டுவிதமான விமானங்களை ஓட்ட இந்தியாவில் மிகச்சிலருக்கே அனுமதி இருந்தது.

அத்தியாயம் - 13

ன் பின்னாலேயே அவசர அவசரமாக நுழைந்த சீனியர் ராவ்காரு, “விமானத்தில் இருந்த சென்னை ஹைதராபாத் பயணிகளையும் உள்ளே உட்கார முடியாததால் இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். நீ விமானத்திற்குப் போய் அங்கே கேப்டனிடமும் என்ஜினீயரிடமும் பேசி என்ன நிலைமை என்று பார்த்துவிட்டு என்னிடம் வந்து சொல்” என்று அனுப்பி வைத்தார்.

அன்றைக்குப் பார்த்து ஆள் பற்றாக்குறையால் நாங்கள் இருவர் மட்டுமே வந்திருந்தோம். விமானத்திற்குப் பக்கத்தில் போகும் போதே என்ஜின் கவுலிங்கைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்த என்ஜினீயர் கங்குலியும் பைலட் எம்.வி.வி. ராவ்காருவும் கண்ணில் பட்டார்கள். இந்தப் பைலட்டைப் பார்த்ததும் எனக்கு ஆறுதலாகி விட்டது. இவர் ஒரு எக்ஸாமினர் பைலட். திறமைசாலியான இவர் போயிங் விமானத்திலும் எக்ஸாமினர் பைலட். இதுபோல இரண்டுவிதமான விமானங்களை ஓட்ட இந்தியாவில் மிகச்சிலருக்கே அனுமதி இருந்தது.

இந்த ஆவ்ரோ விமானத்தைப் பற்றிச் சகலமும் அறிந்த பயிற்சியாளர் என்பதால் இன்ஜின் ஆயில் எங்கே லீக் ஆகிறது என்பதைக் கண்டுபிடித்து அதைத் தாற்காலிமாகச் சரி செய்த என்ஜினீயரிடம் உடனே இந்த ஒழுகும் பைப்லைனை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை ஹைதராபாத் ஹேங்கரில் செய்துவிடுங்கள். ‘நான் ஹைதராபாத் போவதற்குள் அங்கே எல்லாம் ரெடியாக இருக்கவேண்டும்’ என்று சொன்னதோடு “ஸ்பேர் பார்ட் நம்பரையும் குறித்துக்கொடு, நான் கம்பெனி சானலில் ஃபாலோ அப் செய்து கொள்கிறேன்” என்றும் சொன்னார். விமானத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளுடன் பேசுவதற்கென்றே தனி ரேடியோ ஃப்ரிக்வன்ஸி உண்டு. ஹைதராபாத்தில் ஆவ்ரோ விமானங்களை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிப் பராமரிக்கும் மெயின்டனன்ஸ் பேஸ் வேறு இருந்தது. அதனால்தான் இந்தத் திட்டம்.

லீக்கை சீல் செய்ததும் ஏணி போட்டு என்ஜின் மண்டையில் பேனலைக் கழற்றி ஆயிலை டாப் அப் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இது முடிந்ததும் பயணிகளை ஏற்றலாம் என்று அவர் சொன்னவுடன்தான் எனக்கு உயிர் வந்தது. திரும்ப வந்து பார்த்தால் பயணிகள் ராவ்காருவைச் சூழ்ந்து கொண்டு காச் மூச் என்று கத்திக் கொண்டிருந்தார்கள். அவரைக் காப்பாற்றி பயணிகளையும் ஆசுவாசப்படுத்தி ஒருவழியாக எல்லோரையும் மறுபடி ஹைதராபாதுக்கு ஏற்றிவிட்டோம். விமானமும் கிளம்பிச் சென்றது. ஹைதராபாத் சென்றதும் ஸ்பேர் பார்ட் மாற்றிக் கொண்டு விமானம் விசாகப்பட்டினம் வரை சென்று திரும்பி மறுபடியும் இங்கே தான் வரவேண்டும் என்பது எனக்குத் தெரியும். நம்ம பெங்காலி இன்ஜினியர் கங்குலி டெலிபோனில் கம்யூனிகேஷன் ராமசாமியிடம் அங்கே அனுப்ப வேண்டிய முக்கிய செய்தியை டிக்டேட் செய்து கொண்டிருந்தார். அந்தப் பக்கத்தில் ராமசாமிக்குத் தலைகால் புரியவில்லை... இவர் இங்கிலீஷ் பேசுகிறாரா... பெங்காலி பேசுகிறாரா என்று ஒரே குழப்பம். இப்படி இருந்தால் மெசேஜ் ஒழுங்காகப் போய்ச் சேராது அங்கே விமானமும் லேட்டாகிவிடும் என்பதால் நானே அந்த மெசேஜை கங்குலிக்காக நம்ம இங்கிலீஷில் படிக்க ஆரம்பித்தேன். தேங்க்யூ கோபோலோன் என்று சொல்லிவிட்டு அவர் தன் வேலையைப் பார்க்க விரைந்தார். அவர் அப்படித்தான் ஏ வரும் இடங்களில் எல்லாம் ஓ என்று தான் உச்சரிப்பார். இவரை வைத்துக் கொண்டு எத்தனையோ தமாஷ்கள் நடந்திருக்கின்றன. இந்த மனிதர் ஒரு தனிப் பிறவி.

எங்கோ சம்பந்தமில்லாமல் ஓர் அறை எடுத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் வாயில் புகையிலையைக் குதப்பிக் கொண்டு தபேலா வாசித்துக் கொண்டிருப்பார். நாங்கள் எப்போதாவது அந்தப் பக்கம் போய் வாக்கிங் கூட்டிக் கொண்டு போனால் வருவார். இல்லாவிட்டால் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு தினமும் ஏர்போர்ட்டுக்கு வண்டி கிளம்பும் போது கடைசி ஆளாக ஓடோடி வருவார். ஒருநாள் டூட்டி முடிந்து போகும்போது, ‘இன்றைக்கு நீங்கள் எல்லோரும் சாயங்காலம் என் ரூமுக்கு வாருங்கள் போஜன் இருக்கிறது’ என்று சொல்லிவிட்டுப் போனார். நாங்களும் ‘இன்றைக்காவது அவரது பெங்காலி சமையலை ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்’ என்று சந்தோஷமாகப் போனோம். அவர் வழக்கம் போல தபேலா வாசித்துக் கொண்டு ஓ மா என்று ஏதேதோ வங்காளப் பாடல்களைப் பாடிவிட்டு காளி படத்துக்குக் கற்பூரம் காட்டிவிட்டு எங்களுக்கு கடுகு எண்ணையில் தாளித்த சுண்டலைக் கொடுத்து விட்டு போஜன் ஓவர் என்றாரே பார்க்கலாம். அப்போதுதான் அது போஜன் இல்லை வெறும் பஜன் மட்டும்தான் என்று புரிந்தது. ஏ வுக்கு ஓ என்ற உச்சரிப்பு ! தலையில் அடித்துக் கொண்டு ஓ மா என்று நாங்களும் திரும்பி வந்தோம். அப்புறம் ஒரு நாள் ஊருக்குப் போய் ஓர் வங்காள அழகியைத் திருமணம் செய்து கொண்டு வந்தார். அந்தப் பெண்ணுக்கு இந்த ஊர் பிடிக்கவேயில்லை என்பதால் கல்கத்தாவுக்கு மாற்றலாகிப் போய்விட்டார்.

எப்போதும் காலையில் முதல் ஆட்களாக நானும் என் அறை நண்பர் ராமசாமியும் வந்து ஆபீஸைத் திறப்போம். டெலி பிரிண்டர், டெலக்ஸ் என்று இரண்டு இயந்திரங்கள் உண்டு. இரவெல்லாம் வந்த மெஸேஜ்கள் அனுமார் வால் போல நீண்டு வாசல் வரை வந்து முட்டிக் கொண்டிருக்கும். எங்களுக்கு என்று AIRIMP என்று சங்கேத மொழி உண்டு.‌ ஒவ்வொரு ஊருக்கும் மூன்றெழுத்து குறியீடு உண்டு.

ஒவ்வொரு ஏர்லைன்ஸுக்கும் இரண்டெழுத்து குறியீடு. உலகில் பல ஏர்லைன்ஸ் பல பாஷைகள். ஒரு பயணியின் ஏர்லைன்ஸ் டிக்கெட் புத்தகத்தில் வேறு நாடுகளின் ஏர்லைன்ஸில் அந்த ஊர்களுக்குப் பயணித்து இங்கே திரும்பி வரும் வரை எல்லா ஃப்ளைட் கூப்பன்களும் இருக்கும். பயணக் கட்டணம் மொத்தத்தையும் ஆரம்பத்தில் டிக்கெட் எழுதும் ஊரில் அந்த ஏர்லைன்ஸில் வாங்கிக் கொள்வார்கள். பயணக் கட்டணத்தை மைலேஜ் கால்குலேஷன் பண்ணி தகுந்த கரென்ஸி எக்ஸ்சேஞ்ச் ரேட் எல்லாம் பார்த்து வாங்கிக் கொள்ளவேண்டும். அவரவர்கள் போக வேண்டிய ஏர்லைன்ஸில் ஸீட்டுகளையும் கேட்டு வாங்கி டிக்கெட்டில் குறிக்க வேண்டும். அந்தந்த ஏர்லைன்ஸ்களுக்கு அவரவர்கள் பணத்தைப் பிரித்துக்கொடுப்பதற்கென்றே ஜெனிவாவில் IATA Clearing House இருந்தது. Multi Sector Ticket எழுதும் திறன் பெற்ற என்னைப் போன்றவர்களுக்குத் தனி மரியாதை வேறு. எங்களுக்குள் இத்தகைய கம்யூனிகேஷன் எல்லாம் இந்தச் சங்கேத மொழியில் தான் இருக்கும். இப்படிக் காகிதச் சுருளில் பிரிண்டாகி வரும் செய்திகளைப் பொறுமையாக கிழித்து உரியவர்களிடம் கொடுத்து பதிலை வாங்கி அனுப்புவது ராமசாமியின் வேலை. அன்று அப்படிப் படித்துக் கிழித்துக் கொண்டிருந்த அவர் பதற்றத்துடன் எனக்குக் கோவையிலிருந்து வந்திருந்த ஒரு செய்தியைக் கையில் கொடுத்தார்.

நமது ஏர் இண்டியா சந்திரன் டில்லி விமான விபத்தில் இறந்து விட்டார் என்றிருந்தது. காலை 6 மணிக்கு அங்கே ஆபீஸ் திறந்ததும் அனுப்பியிருக்கிறார்கள். இந்த ஏர்இண்டியா சந்திரன்தான் அங்கே எனக்கு Multi Sector Ticket எழுதக் கற்றுக்கொடுத்தவர்.

பரபரப்புடன் காலைப் பத்திரிகையில் விமான விபத்துச் செய்தி இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. ஓடிச் சென்று பக்கத்தில் TTD Guest House ரேடியோவில் செய்திகளைக் கேட்டோம். எங்கள் சென்னை- டில்லி விமானம் 31 மே 1973 இரவு பத்து மணிக்கு டில்லியில் இறங்கும்போது விழுந்து தீப்பிடித்து மத்திய மந்திரி மோகன் குமார மங்கலம் கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம் போன்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று தெலுங்குகில் செய்தி வந்து கொண்டிருந்தது. நாங்கள் ஏர்போர்ட்டுக்குக் கிளம்பும் வரை வேறு விவரங்கள் கிடைக்கவில்லை. பாவம் நண்பர் சந்திரன் அவர் ஏன் அந்த விமானத்தில் போனார் என்றும் தெரியவில்லை.

(தொடரும்)

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com