வி.ஐ.பி. விமானமாக மாறிய எங்கள் விமானத்தை வரவேற்க நாங்களும்  போனோம்.

வி.ஐ.பி. விமானமாக மாறிய எங்கள் விமானத்தை வரவேற்க நாங்களும் போனோம்.

அத்தியாயம் - 16

மர்ஜென்சி காலத்தில் எல்லோரும் ஒருவித பயத்துடனேயே நடமாடிக் கொண்டிருந்தார்கள். திருப்பதியில் அவ்வளவாக எமர்ஜென்சியின் தாக்கம் தெரியவில்லை. என்றாலும் தினமும் எமர்ஜென்சியில் நடக்கும் விஷயங்களைப் பற்றிப் பேப்பரில் விதவிதமான கதைகள்  வந்து கொண்டிருந்தன. டெல்லிதான் மிகவும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. இந்திரா காந்தி பிரதமரா? சஞ்சய்காந்தி பிரதமரா? என்று சொல்லும் அளவுக்கு சஞ்சய் காந்தியின் செயல்பாடுகள் இருந்தன. பிரதமர் 20 அம்ச திட்டத்தை அறிவித்ததும் இவரும் ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை அறிவித்து குடும்பக் கட்டுப்பாட்டையும் டெல்லியை அழகுபடுத்துவதையும் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தது மிகப்பெரிய சர்ச்சைக்கு இடமானது. தன் நண்பர் பன்சிலால் உடன் சேர்ந்து கட்டாயக் குடும்ப கட்டுப்பாட்டை அமலாக்கியது இந்தியாவையே உலுக்கியது. இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று ஆந்திர முதல்வர் வெங்கல் ராவ் எங்களது விமானத்தை சார்ட்டர் செய்து கொண்டு ஹைதராபாத்திலிருந்து திருப்பதி வந்து இறங்கப்போகிறார் என்ற செய்தி வந்தது. விஐபி விமானமாக மாறிய எங்கள் விமானத்தை வரவேற்க நாங்களும் வழக்கம் போலப் போனோம். 

விமானம் வந்து நின்றதும் ஆந்திர முதல்வர் ஜலகம் வெங்கல் ராவ்,  அவர் பின்னால் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து மத்திய மந்திரி கே. ரகுராமையா மற்றும் பலர் இறங்கினார்கள்.  இறங்கியவர்கள் எல்லோரும் விமானத்தின் முன் பகுதிக்குக் கூட்டமாகச் சென்றபோது அங்கு நின்றிருந்த நான் புரியாமல் அவர்கள் பின்னே போனேன். சஞ்சய் காந்தி விமானத்தின் முன் பகுதியில் இருந்து இறங்கக் கண்டேன். இந்த விமானத்தின் முன்பகுதிப் படிக்கட்டு பைலட்டுகளுக்கு மட்டும் ஏற்பட்டது.  அப்போதுதான் விமானம் வந்து திரும்பி  நிற்கும்போது பைலட் ஜன்னலுக்குப் பின்னால் கண்ணாடி அணிந்த ஒரு புதுமுகத்தைப் பார்த்த ஞாபகம் எனக்கு வந்தது. அது வேறு யாருமில்லை சஞ்சய் காந்தியேதான். அவர்தான் விமானத்தையே  ஓட்டி வந்திருக்கிறார். எங்கள் பைலட்டுகள் இருவரும் இறங்கி அவருக்குக் கை கொடுத்து விடை கொடுத்தார்கள். சஞ்ஜய் காந்தியுடன் முதல் மந்திரி உள்ளிட்ட கும்பல் கிளம்பிப் போனதும் எங்கள் பைலட்டைக் கேட்டேன்.  இந்திரா காந்தியின் முதல் மகன் ராஜீவ் காந்தி தான் நமது பைலட். அவர்தான் இந்த விமானத்தை ஓட்டுவார். இவர் எப்படி ஓட்டி வந்தார் என்று கேட்டேன். இவர் விமானம் ஓட்டுவதில் மிக ஈடுபாடு கொண்டவர். சிறிய விமானங்கள் ஓட்டும் லைசன்ஸ் இருக்கிறது.  “நான் இந்த விமானத்தை ஓட்டுகிறேன்” என்று சொன்னவுடன் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நானும் அவருக்கு கோ பைலட்டாக உதவி செய்ய அவர்தான் விமானத்தை ஓட்டி வந்தார். அவரே லேண்டிங் செய்தார். விமானத்தை ஓட்டுவதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் அளப்பரியது என்பது எனக்கும் இப்போதுதான் தெரியும். பயந்து கொண்டே தான் வந்தோம். பெரிய விமானத்தை இதுவரை அவர் ஓட்டியதில்லை. ஓட்டப் பயிற்சியோ லைசன்சோ கிடையாது. நல்ல வேளை ஒழுங்காக விமானத்தை இறக்கி விட்டார். இப்படி அவரை ஓட்ட அனுமதித்ததற்கு என் லைசன்சையே பிடுங்கி விடுவார்கள். இவரை யாராலும் தடுக்க முடியாது. நாடே அவர்கள் கையில்தான். சிவில் ஏவியேஷன் மந்திரியே கூட இருந்தாரே. தப்பித்து விட்டேன். பகவான் பாலாஜிக்கு நன்றி கூற கூடிய சீக்கிரமே நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு பைலட் குப்தா விமானத்தைக் காலியாகவே ஓட்டிச் சென்றார்.  விமானத்தில் வந்தவர்கள் எல்லோரும் மலைக்குச் சென்றுவிட்டு ஆந்திராவில் வேறு சில ஊர்களுக்கும் பயணம் செய்துவிட்டு சாலை வழியாகத் திரும்புவார்கள் என்று சொல்லப்பட்டது. 20 வயது இளைஞர் சஞ்சய் காந்தியைப் பார்த்து காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எல்லோரும் பயந்து நடுங்கியதை நான் நேரில் கண்டேன். அப்படி இந்தியாவையே ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார் அவர். 

திருப்பதி நகரத்தில் வரலாறு காணாத வரவேற்பு அவருக்கு கொடுக்கப்பட்டு ஊர்வலம் சென்று பிறகு திருமலைக்கு அழைத்துச் சென்றார்கள்.  மாலையில் தரிசனத்திற்குக் கோவில் வாசல்வரை சஞ்ஜய் காந்தி செருப்போடு வந்து விட்டதைப் பார்த்து எல்லோரும் திகைக்க, சட்டென்று குனிந்த மத்திய விமானத்துறை மந்திரி ரகுராமையா  செருப்புகளை அகற்றிக் கையில் எடுத்து கோவில் வாயிலில்   கொண்டு வைத்த செய்தி அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் படத்தோடு வந்தது. ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் அவரை குண்டூர் விஜயவாடா என்று ஊர் ஊராக பெருத்த ஜனத்திரள்களூடே ஊர்வலமாகக் கொண்டு சென்றார்கள். இத்தனை கலாட்டா செய்தும் புண்ணியம் இல்லாமல் இந்திரா காந்தி எமர்ஜென்சிக்குப் பிறகு நடந்த தேர்தலில் தோற்றுதான் போனார் என்பது வேறு கதை. 

பைலட் குப்தா தான் சொன்னது போலவே ஒரு சில வாரங்களில் சென்னையில் இருந்து மற்றொரு பைலட்டுடன் காரில் ஒரு மாலை வேளையில் வந்து இறங்கி மலைக்கு என்னுடன் வா என்று கூட்டிப் போனார். இரவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்ய முடியாததால் அதிகாலை சுப்ரபாத சேவைக்குச் சென்று விட்டு நாங்கள் மூவரும் காரில் திரும்பினோம். களைத்துப் போன பைலட் குப்தா  பின் சீட்டில் உறங்கி வழிந்து கொண்டிருக்க மற்றொரு பைலட் காரை ஓட்ட நான் அவருடன் முன் சீட்டில் அமர்ந்து மலை இறங்க ஆரம்பித்தோம். புலர் காலையில் கடைசி ஹேர்ப்பின் பெண்டு வரும்போது கார் திரும்ப முயற்சிக்காமல் நேராகச் சென்றதைப் பார்த்து அதிர்ந்து போன நான் என்ன செய்கிறீர்கள் என்று கத்தவே காரை ஓட்டிக் கொண்டிருந்த பைலட் சுதாரித்துக் கொண்டு பிரேக் அடித்துத் தடுப்புச் சுவரை இடிக்காமல் நிறுத்தித் திருப்பி மீதிச் சாலையில் இறங்கி வந்தோம். என்ன இப்படிச் செய்து விட்டீர்கள் ? ஒரு கணம் தாமதித்து இருந்தால் நாம் வெளியே அதல பாதாளத்தில் விழுந்திருப்போம். தூக்கக் கலக்கமா என்று கேட்டதற்கு நோ நோ For a moment I thought I was making an approach on the runway opposite என்றாரே பார்க்கலாம்.

தடுப்புச் சுவருக்குப் பல நூறு அடிகள் கீழே நேர்கோட்டில் எதிரே தெரிந்த சாலை நம் பைலட் கண்ணுக்கு விமானம் இறங்கும் ரன்வே போலத் தோன்றவே தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டுவது ஞாபகம் இல்லாமல் விமானம் ஓட்டுவதாக நினைத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்துவிட்டிருக்கிறார் அவர்.

••• ••• •••

காலை விமானம் வந்து போனதும் அடுத்த விமானம் வருவதற்குப் போதிய இடைவெளி இருந்ததால் ஓய்வாக ஆபீஸில் அமர்ந்திருந்த எங்களுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், “இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மன் ஹைதராபாதில் இருந்து சென்னைக்குப் போகும் விமானத்தில் இருக்கிறார் என்றும், யாரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு அவர் பின்னால் வர வேண்டாம்” என்றும் தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். 1971ஆம் வருடம் நடந்த பாகிஸ்தான் யுத்தத்தின்போது  நமது விமானப்படை தளபதியாக இருந்து வெற்றி தேடித் தந்த Air Chief Marshall P C லால் அப்போது எங்கள் சேர்மன். அவரை நான் இதுவரை பார்த்ததில்லை. எல்லோராலும் பெரிதும் மதிக்கப்படும் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் விமானத்துக்குப் போனேன். உள்ளே அமர்ந்திருந்த பயணிகளிடையே அவரைக் காணாததால் முன்பகுதியில் நின்றிருந்த எனக்குப் பழக்கமான ஏர்ஹோஸ்டஸ் ஜூலியட்டிடம் போய் “சேர்மன் இருக்கிறார் என்று சொன்னார்களே காணோமே” என்று கேட்க, அந்தப் பெண் ஒரு மாதிரிக் கண்ணை விழித்துப் பார்க்கவே புரியாமல் நகரப் போன என்னை அப்போதுதான் காக் பிட்டிலிருந்து வெளிவந்த பைலட் என் தோளைத் தட்டி Young man..You are looking for your Chairman ? He is your Co-pilot now என்று சிரித்துக் கொண்டே சொல்ல, ஒன்றுமில்லை ஸார் உங்கள் புகழைப் பற்றிக் கேள்விப்பட்ட நான் உங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் வந்தேன். அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டேன்.

17 வயதிலேயே விமானம் ஓட்டத் தொடங்கிவிட்ட அவர் இப்போதுகூட ஆவ்ரோ விமானம் ஓட்டப் பயிற்சி எடுத்து அவ்வப்போது பைலட்டாக மாறுவதால் அன்றைய கோ பைலட்டாக இருப்பார் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அடுத்த வாரமே அவருக்கும் சஞ்ஜய் காந்திக்கும் ஏதோ தகறாராகிவிடவே இந்தியன் ஏர்லைன்ஸிலிருந்து அவரைத்தூக்கிவிட்டார்கள். எமர்ஜென்சி முடிந்து தேர்தலில் இந்திரா காந்தி தோற்றதும் மறுபடி அவரையே சேர்மனாக நியமித்தார்கள் என்பது தனிக்கதை. 

எமர்ஜென்சியும் முடிந்து எத்தனையோ அரசியல் திருப்பங்கள் நடந்து பொதுத் தேர்தலும் வந்தது. இம்முறை இந்திரா காந்தி அவர்கள் ஜெயிக்கவில்லை. ஜனதா கட்சி அரசாங்கம் வந்து மொரார்ஜி பாய் தேசாய் பிரதம மந்திரி ஆனார். பிரதம மந்திரி ஆன சில மாதங்களிலேயே திருப்பதிக்கும் வந்தார். பிரதமரை வரவேற்க வந்திருந்த அதிகாரிகள் கூட்டத்துடன் வந்திருந்த இந்தியாவின் முதல் லோக் சபா சபாநாயகர் மாடபூஷி அனந்த சயனம் ஐயங்காரைப் பார்த்ததும் நான் அவரைச் சென்று வணங்கினேன். திருப்பதியில் குடியிருந்த அவரைச் சில விழாக்களில் ஏற்கெனவே சந்தித்திருந்த என்னைப் பார்த்ததும், “என் நண்பர் மொரார்ஜியைப் பார்க்கும் ஆவலில் வந்தேன்... கூட்டத்தில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை... என்னை உன்னுடனே விமானத்துக்கு அழைத்துப் போகிறாயா” என்றதும் அவ்வாறே செய்தேன். பிரதமரும் இறங்கியதும் அவரைப் பார்த்து மகிழ்ந்து உரையாடிவிட்டுத்தான் தன்னை வரவேற்க வந்த கூட்டத்துடன் சென்றார். அப்போது எங்களுடன் மறுக்காமல் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

முதல் விமான டிக்கெட் வாங்கி பிறகு என் உடன் பிறவா சகோதரராக மாறிப்போன ஆங்கிலப் பேராசிரியர் செல்வன் என்னை வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர ஆங்கில இலக்கியப் பட்டமேற்படிப்புக்குச் சேர்த்துவிட்டார். பல்கலைக்கழகத்திலும் எனக்கு நண்பர்கள் சேர்ந்தனர். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பி.ஏ.வாக இருந்து கொண்டே வைணவத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த வரதராஜன் நண்பரானார். என் உறவினர் Dr. N.V. நந்தகுமார் விலங்கியல் துறையில் வந்து சேர்ந்தார். அதே துறையில் இருந்த TTD அர்ச்சக மிராஸ்தாரின் புதல்வர் Dr. ரமண தீக்ஷிதலு நண்பரானார். தாள்ளபாக்க அண்ணமாசார்யரின் ஆயிரக்கணக்கான பாடல்கள் பொறித்த செப்புப் பட்டயங்களை மொத்தமும் பல வருடங்களாக தெலுகு டிபார்ட்மென்ட்டில் தீவிரமாக ஆராய்ந்து தொகுத்து முடியும் நிலையில் இருந்தன. வேங்கடவன் இசைக்கல்லூரி முதல்வராக இருந்த வித்வான் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தியும் இதில் ஈடுபட்டு பாடல்களுக்குத் தகுந்த ராகங்களில் இசை அமைத்து தன் மாணவ மாணவிகள் மூலம் பிரபலப் படுத்திக் கொண்டிருந்தார். இதைப் பெரிய அளவில் முன்னெடுக்கத் தீர்மானித்து TTD தெலுகு பாஷை மற்றும் கர்நாடக இசையில் விற்பன்னரான Dr காமி செட்டி ஸ்ரீனிவாசுலுவை Project Director ஆக நியமித்தது. முதலில் 4 காஸட்டுகள் கொண்ட ஒரு தொகுதியாக வெளியிட்டார்கள். செல்வனுடன் அதற்கான ரிகார்டிங்குகளுக்கு நானும் அடிக்கடி சென்னை AVM ரிக்கார்டிங் ஸ்டூடியோ சென்று வந்தேன். இசைக்கல்லூரி இளைஞர் பாலகிருஷ்ண பிரசாத், ஷோபா ராஜு மற்றும் வயலின் ஆசிரியர் ராமனாதன் குழுவினருடன் காமிசெட்டிகாரு தலைமையில் நடந்த ரிக்கார்டிங்கைப் பலமுறை காணும் பேறு எனக்குக் கிட்டியது. சில மாதங்களிலேயே காஸட்டுகள் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இன்னும் பெரிய அளவில் அன்னமாசார்யா கீர்த்தனைகளைக் கொண்டு செல்லத் தீர்மானித்து ஆஸ்தான வித்வானாக இருந்த இசை அரசி M.S. அம்மாவை அணுக அவரும் சம்மதித்தார்.

”கீர்த்தனைகளை அர்த்தம் புரிந்து பாடவேண்டும்” என்று அவர் விழைந்ததால் குழுவினர் அவருக்கு கீர்த்தனைகளை முதலில் சிலநாட்கள் விளக்கிச் சொன்னார்கள். பிறகு அவர் பாடி வெளிவந்த முதல் அன்னமய்யா கீர்த்தனைகள் அடங்கிய LP இசைத்தட்டுகள் விற்பனையில் உலக ரிகார்டை ஏற்படுத்தியது. தனது கச்சேரிகளிலும் கட்டாயம் அன்னமய்யா பாடல்களைப் பாடவும் ஆரம்பித்தார். பிற்காலத்தில் அன்னமய்யா க்ருதிகளையும் எம்.எஸ். அம்மாவையும், அதேபோல Dr. பாலகிருஷ்ணப் பிரசாத் மற்றும் Dr. ஷோபா ராஜுவையும் இணைத்தே எல்லோரும் பேசும் நிலை உருவாகியது. இந்தக் குழுவினருடன் என் அனுபவங்கள் மறக்க முடியாதவை. பெரிய இசை வாணர்களான மதுரை சோமு, சித்தூர் சுப்ரமணிய பிள்ளை, M.S. அம்மா போன்றவர்களின் TTD கச்சேரிகளில் எனக்கும் முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. இப்படியிருக்கையில் திடீரென்று நமது பிரதமர் தேசாய் ஓர் பெரிய விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த செய்தி வந்தது.

 (தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com