பால்கோவா மாதிரி வாயில் வைத்ததும் கரைந்தது.

அத்தியாயம் - 7
பால்கோவா மாதிரி வாயில் வைத்ததும் கரைந்தது.

 

 

ஜெனிவா நகரில்

லிஸ்பனில் வாஸ்கோடகாமா நினைவிடம் இருந்தது. அவரது சமாதியும், போர்ச்சுக்கல் கடற்கரை நோக்கிய அவரது சிலையும் இருந்தது. ஆனால் அவற்றை பார்க்க போகவில்லை. மாலையில் லிஸ்பன் பேருந்தில் ஏறி கடற்கரைக்கு போகலாம் என கிளம்பினேன். தவறான இடத்தை சொல்லிவிட்டார்கள். அங்கே ஆறு ஒன்று கடலுடன் கலந்தது. அங்கே பீச் எதுவும் இல்லை. குளிக்க முடியாது. அட்லாண்டிக் சமுத்திரத்தை பார்த்தபடி சற்று நேரம் நின்றேன். 

நிறைய ஆட்டோக்கள் இருந்தன. அவற்றில் ஏறினால் சும்மா ஜாலியாக ஊரை சுற்றிக் காட்டுவார்கள். டுக்-டுக் என அவற்றுக்கு பெயர். லிஸ்பனில் கடைகள் இருந்த இடத்தில் சற்று நேரம் நடந்தேன். சீன உணவகம் என போர்டு மாட்டியிருந்தது. அரிசி உணவை உண்டு பல நாட்கள் ஆகியிருந்தது. பிராகா நகரில் உணவகங்களில் எல்லாம் கோதுமைதான். அரிசியை கண்ணில் பார்ப்பதே அபூர்வம். லிஸ்பனில் இப்போதுதான் இது கண்ணில் பட்டது. சரி என சொல்லி ஒரு பிரைடு ரைஸ் ஆர்டர் செய்தேன். நன்றாகவே இல்லை. சமைத்தது சீனர்களும் இல்லை. போர்ச்சுக்கீசியர்கள் யுடியூபை பார்த்து சீன உணவை சமைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

அடுத்த நாள் காலை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விமானம் ஏறவேண்டும். அதனால் ஓட்டலுக்கு வந்து நன்றாக உறங்கினேன். காலையில் விமான நிலையம் சென்று போர்ச்சுக்கலில் இருந்து ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகருக்கு வந்தேன்.

ஸ்விட்சர்லாந்து ஒரு வித்தியாசமான நாடு, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளால் சூழப்பட்ட நாடு. ஜெர்மனிக்கு அருகே இருக்கும் ஸ்விஸ் மக்கள் ஜெர்மன் பேசுவார்கள். பிரான்சுக்கு அருகே இருப்பவர்கள் பிரெஞ்சு பேசுவார்கள். ஆனால் இவர்கள் பேசும் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி மொழிகள் சற்று மாறுபட்டதாக இருக்கும். 32,000 பேர் மட்டுமே பேசும் “ரொமான்ஷ்” என்ற மொழியும் உண்டு. ரோம் பேரரசு ஆக்கிரமித்த காலத்தில் உருவான மொழி. ஆனால், அதையும் தேசிய மொழியாக மதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். நாலு தேசிய மொழிகள். அந்தந்த பிராந்தியத்தில் அந்தந்த மொழி பேசுவார்கள். இணைப்பு மொழி என எதுவும் இல்லை. தகவல் தொடர்புக்கு வேண்டுமானால் பள்ளியில் இன்னொரு மொழி கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

ஜெனிவா பிரெஞ்சு பேசும் பகுதியில் உள்ளது. நகர பேருந்துகள், டிராம் ரயில்கள் சகஜமாக சென்றுவந்துகொண்டிருக்கின்றன. ஜெனிவா மிக செலவு பிடிக்கும் நகரம் என்பதால் பல ஜெனிவா மக்கள் பிரான்சில் வசித்து, தினம் நகர பேருந்தில் வந்து செல்வார்கள்.

ஜெனிவாவில் பேருந்து, டிராம் போக்குவரத்து முற்றிலும் இலவசம். பிரான்சு எல்லைப் பகுதியிலேயே மூன்று இந்திய உணவகங்கள், சீன, ஜப்பானிய, மெக்சிகோ உணவகங்கள் நல்ல மலிவான விலையில் உள்ளன. ஜெனிவாவில் ‘செர்ன்’ எனப்படும் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையம் உள்ளது. ஐ.நா சபை உள்ளது. மியூசியங்கள் அனைத்தும் இலவசம். படகில் ஜெனிவா எரியில் க்ரூஸ் போக மட்டும் தான் $20 செலவு செய்தேன். ஸ்விஸ் சாக்லெட் எப்படி இருக்கும் என்ற ஆசையில் ஒரு சின்ன சாக்லெட் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன். பால்கோவா மாதிரி வாயில் வைத்ததும் கரைந்தது.

ஆங்கிலம் யாருக்கும் தெரியாது. எல்லாம் பிரெஞ்சுதான். ஆனால் கூகிள் மேப் இருந்தால் பக்காவாக எந்த பஸ், டிராம் எத்தனை மணிக்கு வந்துவிடும் என சொல்லிவிடும். கடை பலகைகளில் பிரெஞ்சில் எழுதியிருந்தாலும் பல வார்த்தைகள் படிக்க எளிதில் புரியும்படிதான் இருந்தது. ‘ரெஸ்டாரண்ட்’ என்பதை ‘ரெஸ்டராண்டே’ என எழுதுவார்கள்.

கடனட்டை எல்லா பக்கமும் வாங்குகிறார்கள் என்பதால் ஸ்விஸ் பிரான்க் மாற்றும் அவசியமே இல்லை. அமெரிக்காவில் இருந்து வருகையில் நூறு யூரோ மட்டும் தான் கொண்டுவந்தேன். அதில் ஐம்பது யூரோ இன்னும் மிச்சம் இருக்கு. போர்ச்சுக்கல் பேருந்துகளுக்கு டிக்கட் வாங்க ஆன செலவு அது. சில போர்ச்சுக்கல் உணவகங்களில் கிரெடிட் கார்டு வாங்கவில்லை. ஓட்டல், விமானம் எல்லாம் கடனட்டையை வைத்து அமெரிக்காவில் இருந்தே டால்ரில் புக் செய்துவிட்டதால் யூரோவாக மாற்றும் பிரச்னை இல்லை.

அதனால், ஜெனிவாவுக்கு வந்தால் செலவாகும் என பயப்படாமல் மினிமலிஸ்ட் சுற்றுப்பயணமாக தாராளமாக வரலாம். ஆனால், மெனக்கெட்டு ஆராய்ச்சி பண்ணினால்தான் காசை நிறைய மிச்சம் பண்ணமுடியும்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com