சமோசாவுக்குள் உருளைக்கிழங்கை வைத்து பொறிக்கும் வித்தையை கண்டுப்பிடித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்

சமோசாவுக்குள் உருளைக்கிழங்கை வைத்து பொறிக்கும் வித்தையை கண்டுப்பிடித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்
Published on

கொரோனாவால் எங்கேயும் சுற்றுப்பயணம் போகாமல் இருந்தேன். அதன்பின் சந்தையியல் கருத்தரங்கு ஒன்றில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. போவதுதான் போகிறோம். அப்படியே அருகே உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றுவரலாம் என நினைத்தேன். ஸ்விட்சர்லாந்து, கிரீஸ் என பயண திட்டத்தை மாற்றியமைத்தேன். பயணவிதிகள் பின்வருமாறு:

மினிமலிஸ்ட் சுற்றுப்பயணமாக இருக்கணும். பெரிய செலவுகள், விலைஉயர்ந்த ஓட்டல்கள் இருக்கக்கூடாது

ஒற்றை சூட்கேசுடன்தான் சென்றேன். எங்கேயும் டாக்ஸிகள் எடுக்கவில்லை, பஸ் மற்றும் ரயில் பயணம்தான். எந்த பரிசுப்பொருளும் வாங்கவில்லை.

உடற்பயிற்சியை தவறவிடக்கூடாது. தினம் தவறாமல் 10,000 அடிகள் நடக்கத் திட்டமிட்டேன்.

சுற்றுப்பயணம் செல்ல சில மாதங்கள் இருக்கும்போது போர்ச்சுக்கீசிய வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன்.

போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவுக்கு வந்த வரலாற்றை படித்தால் அவர்கள் சிறந்த கடலோடிகள் என விளங்கும். அதே சமயம் கடல்கொள்ளைக்காரரைப் போலவும் நடந்துகொன்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவை சுற்றிக்கொண்டு போனால் இந்தியாவுக்கு போகலாம் என தெரிந்துகொண்டு பல ஆண்டுகள் முயற்சித்து ஆபிரிக்க மேற்கு கரையோர தீவுகளை ஆராய்ச்சி செய்து வந்தார்கள். இறுதியில் ‘பார்த்தலோமியோ டயஸெ’ என்பவர் ஆப்பிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை கண்டறிந்தார். ஆப்பிரிக்க  கண்டத்தின் தெற்கு முனையை கண்டுபிடித்தாகிவிட்டது. அதன்பின் வாஸ்கோடகாமா அதன்வழியே கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு போய் மொசாம்பிக்கில் இறங்கி அங்கிருந்த அரபு வணிகர்கள் மூலம் கொச்சிக்கு வழிகண்டுப்பிடித்து பயணித்தார். அதனால் இந்தியாவுக்கு செல்ல மொஸாபிக் நாட்டை காலனிமயமாக்குவதும் அவசியம் என அறிந்து அதை காலனியாக்கினர். மொஸாம்பிக்கில் வந்து கப்பல்களை பழுதுபார்த்து, சாதகமான காற்றடிக்கும் வரை பலமாதங்கள் காத்திருந்து கொச்சிக்கும், கோவாவுக்கும் வருவார்கள். மொஸாம்பிக் விடுதலை பெற 1970 வரை 400 ஆண்டுகள் ஆனது.

வாஸ்கோடகாமாவுக்கு பின்னர் லாரன்ஸ் அல்மைடா என்பவர் இந்தியாவின் வைசிராய் ஆக நியமிக்கப்பட்டார். அவர் 1505ம் ஆண்டு புயல்காற்றடித்து இலங்கையில் ஒதுங்கி கொழும்பில் தரை இறங்கினார். இங்கே வந்து பார்த்தால் இங்கே ஏழு அரசுகள் ஒன்றுடன் ஒன்று சண்டைபோட்டுக்கொண்டிருந்தன. அதன்பின் அவர்கள் பிரச்னையில் புகுந்து பஞ்சாயத்து பண்ணி இலங்கையை ஒரு 150 ஆண்டுகள் காலனிமயம் ஆக்கினர். அவர்களை எதிர்க்க கண்டி அரசு டச்சுகார்களை கூட்டி வந்தது.

போர்ச்சுகீசியர் வசம் கடலோர இலங்கையும், இலங்கையின் உட்புற பகுதிகள் கண்டி அரசு வசமும் இருந்தது. போர்ச்சுக்கீசிய தாக்கத்தால் கடலோர இலங்கையில் நமக்கு பரிச்சயமான பல பெயர்கள் அறிமுகமாயின.

அல்மைடா- போர்ச்சுக்கலின் அல்மீரா பகுதியில் இருந்து வந்தவர் என பொருள். அலமாரி எனும் சொல்லும் போர்ச்சுகீசிய சொல்லே.

பொன்சேகா - பொன்சேகா என்றால் காய்ந்த கிணறு என பொருள். கோடையில் காய்ந்து போய், மழைக்காலத்தில் நிரம்பும் கிணறுகளின் பெயர் பொன்சேகா.

பெர்னான்டோ- துணிச்சலான பயணி என பொருள்.

பெரைரா- பேரிக்காய் மரத்தை குறிக்கும் போர்ச்சுகிசிய சொல்.

கோஸ்டா- கடற்கரை என பொருள்.

துசிரா, மென்டிஸ்

டி சில்வா- காடு என பொருள்.

ஆக இலங்கை கிரிக்கட் அணி முழுக்க போர்ச்சுக்கீசிய பெயர்கள்தான் போல.

போர்ச்சுக்கீசியரால் தமிழுக்கு வந்த சொற்கள் அலமாரி, மேஜை, மேஸ்திரி, ஜன்னல், சாவி, பீப்பாய், அன்னாசி.

முக்கியமாக அவர்கள்தான் நமக்கு சமோசாவை அறிமுகப்படுத்தியவர்கள். சமோசா இரானிய உணவு. பட்டுப்பாதை மூலமாக மத்திய ஆசியாவெங்கும் அறிமுகமாகி அரேபியா, எகிப்தில் சம்புசா, சம்புக்சா இப்படி பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், இதில் எல்லாம் பிரமிடு வடிவ சமோசாவுக்குள் இறைச்சியை வைத்துதான் எண்ணெயில் பொறிப்பார்கள்.

டெல்லி சுல்தான்கள் மூலம் சம்புசா வட இந்தியாவுக்கு வந்தது. 13ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த இபின் பத்துதா இங்கே இறைச்சி, பிஸ்தா எல்லாம் வைத்து பொறிக்கப்பட்ட சமோசாவை உண்டதாக எழுதியுள்ளார்.

ஆனால், சமோசாவுக்குள் உருளைக்கிழங்கை வைத்து பொறிக்கும் வித்தையை கண்டுபிடித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்தான். தென்னமெரிக்காவில் இருந்து வந்த உருளைக்கிழங்கை சமோசாவுக்குள் வைத்து பொறித்து ‘பாஸ்டியாஸ்’ என அழைத்தார்கள். அது சைவ உணவு வழக்கம் உள்ள இந்தியாவில் நல்ல பிரபலம் ஆகி இந்திய சமோசா ஆகிவிட்டது.

இதேபோல் ஜப்பானுக்கு டெம்புராவை அறிமுகப்படுத்தியதும் போர்ச்சுக்கீசியர்தான். அது போர்ச்சுக்கீசிய உணவு என்றால் ஜப்பானியரே இன்று நம்பமாட்டார்கள்.

தகவல்களை படித்ததும் போர்ச்சுக்கல் செல்லும் ஆர்வம் கூடியது. பயண நாளும் வந்தது...

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com