spot_img
0,00 INR

No products in the cart.

​சிரசுப்பூ உத்தரவு!

லதானந்த்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையாகப் போற்றப்படுகிறது ஈரோடு மாவட்டத்தில் அமைந்த, ‘சிரகிரி’ என அழைக்கப்படும் சென்னிமலை திருத்தலம். இந்த மலையின் பரப்பளவு 1,700 ஏக்கர்கள் ஆகும். சென்னிமலை என்ற அந்த மலையின் பெயரே அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊருக்கும் பெயராகிப்போனது.

சன்னிமலை உருவானதற்கு சுவாரசியமான ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் நாகார்ஜுனனுக்கும் வாயு தேவனுக்கும் யுத்தம் ஏற்பட்டது. வாயு தேவனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, நாகார்ஜுனன் மேரு மலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். இதைக் கண்ட வாயு தேவன், காற்றை மிக வேகமாக வீசி, நாகார்ஜுனனிடம் இருந்து மேரு மலையை விடுவிக்க முயற்சி செய்தார். நாகார்ஜுனனின் பிடியோ மிகவும் இருக்கமாக இருந்தது. வாயு தேவன் வீசிய காற்றில் மலையின் சிகரப் பகுதி மட்டும் துண்டிக்கப்பட்டது. அது பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. மேரு மலையின் உச்சிப் பகுதியான அந்தச் சிகரமே, ‘சிரகிரி’ எனப்பட்டது. இதற்கு சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி எனப் பல பெயர்கள் உண்டு. தற்போது, சென்னிமலை என்ற பெயரே மக்களால் பிரபலமாக அறியப்படுகிறது.

இந்த மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி தண்டாயுதபாணி எனப்படும் முருகப்பெருமான் ஆவார். அவர் இங்கே கோயில் கொண்டதற்கும் ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது.

சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தொலைவில் நொய்யலாறு ஓடுகிறது. அதன் கரையில் கொடுமணல் என்ற ஒரு கிராமம் இருந்தது. அங்கு வசித்த செல்வந்தரான பண்ணையாருக்கு நூற்றுக்கணக்கில் பசுக்கள் இருந்தன. அதில் ஒரு காராம் பசு மட்டும் பால் தருவதை நிறுத்திவிட்டது. அதன் காரணத்தை அறிய அதைப் பின்பற்றிச் சென்றபோது, தினசரி அந்தக் காராம் பசு ஒரு குறிப்பிட்ட இடத்தின் மேல் பால் சொறிவதைப் பார்த்தனர். அதைக் கண்டு, ஆச்சரியப்பட்டு அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது மிக அழகிய கோலத்தில் ஒரு கற்சிலை தென்பட்டிருக்கிறது. பண்ணையாருக்கோ, எல்லையில்லாத ஆனந்தம். இறைவனே நேரில் காட்சியளித்திருப்பதாக மெய்சிலிர்த்தார். அந்தச் சிலையின் முகம் மட்டும் தகத்தகாயமாக மின்னியது. இடுப்புப் பகுதி வரை ஜொலித்தது. ஆனால், இடுப்புக்குக் கீழே வேலைப்பாடுகள் எதுவுமின்றி, கரடுமுரடாகக் காட்சியளித்தது.

அந்தச் சிலையின் திருமேனியை முழுவதும் வேலைப்பாடுள்ளதாக ஆக்க நினைத்த பண்ணையார், சிற்பிகளிடம் சிலையின் கீழ்ப்பகுதியைச் சுத்தம் செய்ய ஆணையிட்டார். சிற்பிகளின் உளி பட்டதுமே சிலையின் திருமேனியில் இருந்து ரத்தம் கொப்பளித்துப் பீறிட்டது. இதைக் கண்ட பண்ணையார், தாம் அபசாரம் செய்துவிட்டதா அஞ்சினார். மேற்கொண்டு சிலையைச் சுத்தம் செய்யாமல், அருகில் இருந்த குன்றிலேயே ஆலயம் ஒன்றை எழுப்பி, அந்தச் சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அன்று முதல் சென்னிமலையில் குடிகொண்டு அருளாசி வழங்கி வருகிறார் எம்பெருமான் முருகப்பெருமான்.

ந்தத் தலத்துக்குப் பெருமை சேர்க்கும்விதமாக இங்கே எழுந்தருளிய மஹான்களில் ஒருவர் புன்நாக்குச் சித்தர். இவர் பதினெண் சித்தர்களில் ஒருவர். ‘பொய் சொல்லல் ஆகாது; அவ்விதம் பொய் சொன்னால் உன் நாக்கு புண் நாக்கு’ என உபதேசம் செய்ததால், இவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. இன்னும் சிலர், இந்தச் சித்தர் நாக்கினைப் பின்பக்கமாக மடித்து அருட்சொற்களைக் கூறி வந்ததால், ‘பின்நாக்குச் சித்தர்’ எனப் பெயர் பெற்றார் என்றும் சொல்கின்றனர். இவர் தவம் புரிந்த குகை ஒன்று சென்னிமலையில் இன்றும் இருக்கிறது.

கந்தசஷ்டி கவசம் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நாள்தோறும் பயபக்தியோடு பாராயணம் செய்யப் படும் கந்தசஷ்டிக் கவசம் அரங்கேறியது சென்னிமலையில்தான்.

காங்கயம் நகருக்கு அருகே இருக்கும் மடவிளாகம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர், ஸ்ரீ பாலன் தேவராய ஸ்வாமிகள். மைசூர் தேராச உடையாரின் காரியஸ்தர்களில் இவரும் ஒருவர். கந்த சஷ்டி கவசத்தை எழுதி முடித்தபோது, இவரது கனவில் இறைவன் தோன்றி, அதைச் சென்னிமலையில் அரங்கேற்றம் செய்யுமாறு அருள்கட்டளை இட்டதாகவும், அதற்கேற்ப கந்தசஷ்டி கவசத்தை இவர் சென்னிமலையில் அரங்கேற்றியதாகவும் தல வரலாறு சொல்கிறது.

ஸ்ரீ அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடி, முருகனை மகிழ்வித்து அவரிடமிருந்து படிக்காசு பெற்ற தலம் இது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் விரதமிருந்து, வேண்டிக்கொண்டு குழந்தைப்பேறு பெற்றுத் தமது குழந்தைகளோடு வந்து நன்றி செலுத்துவதும் இத்தலத்தில் நடைபெற்று வருகிறது.

மூலவர் சென்னிமலை ஆண்டவர் நடுநாயக மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்தும், மூலவரைச் சுற்றி ஏனைய எட்டு கிரகங்களும் பாங்குடன் அமைந்தும் அருள்பாலிக்கின்றனர்.

செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கே வந்து பிரார்த்தித்து தோஷம் நீங்கப்பெறுகிறார்கள்.

வள்ளி, தெய்வானை இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்னும் பெயர்களுடன் இறைவனைக் கைப்பிடிக்க, தவக்கோலத்தில் தனிச் சன்னிதிகளில் காட்சியளிக்கின்றனர். வள்ளி, தெய்வானை ஆகிய இரு திருவுருவங்களும் ஒரே கல்லில் பிரபையுடன் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.

என்னதான் கோடை வாட்டினாலும், மலைக்கோயிலுக்கு தெற்குப் புறத்தில் இருக்கும் தீர்த்த விநாயகர் முன்பு பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தம் அதிசயம் நிரம்பியதாகும். கடந்த 1988, 2000 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் மாமாங்கத் தீர்த்தம் தானாகவே பொங்கி வழிந்தது அதிசய நிகழ்ச்சியாகும்.

தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளில் ஈடுபடலாமா, வேண்டாமா என்பதில் ஆண்டவனின் விருப்பம் என்ன என்பதை அறிந்துகொள்ள, இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து, வேண்டுதல்களை முன்வைத்து, சிரசுப்பூ உத்தரவு கேட்பார்கள். உத்தரவு கிடைத்தால் காரியங்களை மேற்கொள்வதும், உத்தரவு கிடைக்காவிட்டால் காரியங்களைத் தவிர்ப்பதும் பக்தர்களின் வழக்கம். நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், கிணறு வெட்டுதல், புதுத்தொழில் தொடங்குதல், திருமணங்களுக்கு வரன் பார்த்தல் போன்ற பல நிகழ்வுகளுக்கும் சிரசுப்பூ உத்தரவை நாடுவது பல பக்தர்களின் வழக்கம்.

பக்தர்கள் இம்மலைக் கோயிலுக்கு நடந்து செல்ல 1,320 படிகள் இருக்கின்றன. ஓய்வெடுக்க ஆங்காங்கே மண்டபங்களும், குடிநீர் வசதியும் உண்டு. தனியார் வாகனங்கள் செல்ல 4 கி.மீ. தொலைவுள்ள தனிப் பாதையும் உண்டு. அரசுப் பேருந்துகளும் அடிவாரத்தில் இருந்து மேல் மலை வரை இயக்கப்படுகின்றன.

சென்னிமலைக் கோயிலில் இரு பொதி காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பணி, தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்களுக்குத் தேவையானவற்றை மலையின் அடிவாரத்தில் இருந்து 1,320 படிகள் ஏறி, ஆலயத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பதாகும். சென்னிமலையில் 12.12.1984ஆம் தேதியன்று ஓர் அதிசயம் நடைபெற்றது. இரட்டை மாட்டு வண்டி ஒன்று, மலையடிவாரத்தில் புறப்பட்டு மலைப் படிகளில் ஏறி, ஆலயத்தை அடைந்தது. நாடெங்கிலும் இருந்து வந்த சுமார் பத்து லட்சம் பக்தர்கள் இந்த அதிசயக் காட்சியைக் கண்ணாறக் கண்டு மகிழ்ந்தனர்.

சென்னிமலையில் அனைத்து நாட்களும் அருள் பெற உரியன என்றாலும், மாதாமாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி நாளும், ஐப்பசி மாதம் வரும் கந்தர் சஷ்டி திருவிழா ஆறு நாட்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இச்சமயங்களில் ஏராளமான பத்தர்கள் விரதமிருந்து ஆசார அனுஷ்டானங்களோடு நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம்.
மூவருள் மூவர் முதலே சரணம்
முகில்வண்ணன் மருகா முருகா சரணம்
கூவிய காலாயுதனே சரணம்
குலவுகை வேலாயுதனே சரணம்
மாஇரு கூறாய் வகிர்வாய் சரணம்
மலைமுனி குருவாய் வருவாய் சரணம்
தேவர்கள் சேனாதிபதியே சரணம்
சிரகிரி வாழ்வே சரணம் சரணம்!’
என்னும் தலபுராணப் பாடலைப் பாடி சிரகிரி வேலவனின் அருளைப் பெறுவோம்!
அமைவிடம் : ஈரோட்டில் இருந்து 26 கி.மீ தொலைவிலும், காங்கேயத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.
தரிசன நேரம் : காலை 6 முதல் இரவு 8 மணி வரை.

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,884FollowersFollow
3,230SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...

​இடது கண் ஏன் அழுதது?

0
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம்...

​ஸ்ரீ அனுமத் ஜயந்தி துளிகள்

0
மாதங்களில் சிறந்த மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இத்திருநாள் அனுமத் ஜயந்தி நாளாக நாடெங்கும் வழிபடப்படுகிறது. இனி, அனுமன் குறித்த சில...

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

- நெய்வாசல் நெடுஞ்செழியன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம்,...