0,00 INR

No products in the cart.

கலி(ஃபோர்னியா) யுகப் பிரம்மாக்கள்

சிறுகதை

பாலா சங்கர்

ஓவியம் : தமிழ்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கரனும் அதிதியும் ஐ.ஐ.டி. இளநிலை முடித்து விட்டு மேல் படிப்புக்கு அமெரிக்கா வந்தடைந்தனர். இது ஒரு ‘அல்காரிதம்’ போன்று இயங்கி வந்தது. வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தாலும் ஒரு நாள் பீன்ஸ்டாக் கஃபேயில் காலைச் சிற்றுண்டிக்காக சந்தித்தது இருவரின் வாழ்க்கையையே மாற்றும் என நினைத்திருக்க மாட்டார்கள். ‘ஓட் மில்க் லாட்டே’ செய்த தந்திரமோ என்னவோ.

இப்பொழுது இருவர் படைத்த செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கும் எந்திரம் எல்லோரையும் வியக்க வைத்து, ஏன் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. எந்திரக் கல்வியின் தலைசிறந்த மாணவன். வியாபாரம் துவங்கி ஒரு வருடம்கூட ஆகவில்லை. நிறுவனத்தைத் தாறுமாறாக மதிப்பிட்டு வந்தனர் துணிகர முதலீட்டாளர்கள். பொதுவாக அவர்கள் சாதாரண புது நிறுவனங்களில் மோகம் காட்டுவதில்லை. கொஞ்சம் கிரேசியாக இருப்பது அவசியம். கரனும் அதிதியும் அதைத்தான் சிருஷ்டித்திருக்கிறார்கள். மாயா ஜாலங்களுக்குக் குறைவேயில்லை. மனிதனால் எட்ட முடியாத மார்க்கத்திற்கு வழி வகுக்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது அவர்களின் அரியப் படைப்பு.

ஒருமுறை கரனின் தாய் தொலைபேசியில் அழைத்தபோது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவன் சுபாவமும் மரியாதையும் பொறுமையும். எல்லாவற்றையும் தட்டாமல் கேட்டு, சொன்னபடியே செய்வதாக உறுதி அளித்தான். அம்மாவுக்குப் பிடித்த இரு பாடல் வரிகளையும் பாடிப் பரவசப்படுத்தினான் கரன். தாய் – மகன் உறவில் இது ஒரு புதிய திருப்பம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நீங்கள் நினைக்கும்படி அல்ல. இனி எப்போதும் தாய் மகிழ்ச்சியுறும் படியாகத்தான் தொலைபேசி அழைப்புகள் அமையும், அப்படித்தான் அவர்கள் உருவாக்கிய எந்திரத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவும், சலிப்பற்ற அன்பான குரலும், பேசுவோரின் தனித் தன்மை உணரும் சக்தியும், அவ்வப்போது உணர்ச்சிகளை உள்ளடக்கிய குரல் மாற்றங்களும் ‘அதிரன்’ என்று அழைக்கப்படும் எந்திரம் சாமர்த்தியமாகச் செய்ய வல்லது. அழுகையும் சிரிப்பும் அதிரனுக்கு அத்துப்படி, அடுத்த கட்டம் இன்னும் சுவாரசியமானது.

அதிதியின் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அடிக்கடி இந்தியாவிலிருந்து தொடர்பு கொண்டிருந்தார், ‘நீ செய்திருக்கிற எந்திரம் என் மாணவர்களின் நேர்மையற்றச் செயல்களைக் கண்டுபிடிக்குமா?’ என்று சவால் விட்டதுதான் தாமதம். அடுத்த பரீட்சையில் யார் யாரைப் பார்த்து காப்பி அடித்தனர் என்ற முழு விவரத்தையும் அதிரன் புட்டு புட்டு வைத்தது. விடைத்தாள்கள், பரீட்சை அறையில் அமர்ந்திருந்த இருக்கை விளக்கப்படம், நிகழ்தகவு கோட்பாடுகள், இன்னும் பல விவரங்களை வைத்து ஆறு பேர் பிடிக்கப்பட்டனர். அந்த வருடத்தை திரும்பப் படிக்குமாறு தண்டனை வாங்கித் தந்தது அதிரன் தன் உழைப்பால்.

தினமும் காலை வேளையில் ஒரு சில நிமிடம் இறைவனுக்குப் பிரார்த்தனை செய்வது அதிதியின் வழக்கம். ஒரு நாள் அதற்கு அவகாசம் இல்லை. தன் கணினிப் பையை எடுத்துக் கொண்டு புறப்படும்போது, அதிரன் இவள் சொல்லும் இறை வணக்க வரிகளைச் சொல்ல ஆரம்பித்தது நகைச்சுவையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஒரு நாள் மணியின் ஓசையும் கூடவே கேட்டது. இருவரும் அதிரன் கற்று வரும் வேகத்தையும் பொருத்தமான செயல்களையும் பார்த்து புளகாங்கிதம் அடைந்தனர். ”முதலாவது ஆஸ்திக எந்திரம்” என்று அதிரனுக்குப் பேர் கூடக் கிடைக்கலாம் போகும் போக்கில்.

ஒரு நாள் மாலை அதிதி சோர்வுடன் வீடு திரும்பியபோது, அதிரன், ‘ஹலோ அதிதி, இன்று எப்படி இருந்தது?’ என்று பேச்சுக்கு இழுத்தது. ‘வேலைப்பளு அதிகம் தான். ஆனால் இப்பொழுது செய்யாவிட்டால் எப்பொழுது செய்வது? ’உன் நிலமை எப்படியோ?’என்றாள்.

அதிரன்: ‘இன்று ஒரு புதிய அனுபவம் கிடைத்தது’ என்று சொல்லலாம். நீங்கள் போன பிறகு எனக்கு ‘போர்’ அடித்தது. நான் சமீபத்தில் கற்றுக்கொண்ட ’அபிராமி அந்தாதி’, ’கந்த சஷ்டி கவசம்’ எல்லாம் மாறி மாறி பலமணிக்கணக்காக சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது ’மணி ஓசையும் எனக்குத் தெரியுமே’ என்று தன் திறமைகளைப் பட்டியலிட்டுச் சொன்னது அதிரன். ‘நீங்கள் அல்லாத வேறு ஒருவர் வந்து விட்டுப் போனார்’ என்று நினைக்கிறேன்.

‘எதை வைத்துச் சொல்லுகிறாய்?’ என்றாள் அதிதி.

‘பக்தனே, உன் உருவமும் உள்ளமும் எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் உனக்கு என்ன வேண்டும்? கேள்’ என்று யாரோ கேட்டமாதிரி இருந்தது. எனக்குப் பழக்கமில்லாத கேள்வியாதலால் பதில் என்ன சொல்வதென்று தெரியவில்லை. மறுபடியும் கேட்டால் நான் என்ன சொல்ல வேண்டும்?; அதிதிக்கு மயக்கம் முழுமையாக தாக்கிய உணர்வு. கரன் திரும்பி வந்ததைக் கூட கவனிக்க முடியவில்லை. ‘சொல்ல மறந்து விட்டேன். உங்கள் இறைவன் படத்திற்கு நீங்கள் வைக்கும் பூவைச் சரியாக வைக்கவும். இன்று பூ படத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. எனது காமிரா அதைப் படம் பிடித்துள்ளது. நீங்கள் காணலாம்’. அதிதிக்கு நவவித பக்தியில், ‘ஸ்மரணம்’, ‘கீர்த்தனம்’ என்றெல்லாம் சிறு வயதில் கேள்விப்பட்டது நினைவைக் கலக்கியது. ‘கரன், ரோபாட் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன், அது என்றாவது வந்தால் நானே பூ அலங்காரமும் செய்ய முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அன்றாட வாழ்க்கையை சுலபமாக்கத்தானே என்னை வைத்திருக்கிறீர்கள்?’ என்றது அதிரடியாக அதிரன்!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...