பட்டாசு படும் பாடு: தடுமாறும் சிவகாசி!

பட்டாசு படும் பாடு: தடுமாறும் சிவகாசி!

நேரடி விசிட் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

உலக அளவில் பட்டாசு தயாரிப்பதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதற்கடுத்து எப்போதும் இரண்டாம் இடத்தில் இருந்து வருவது சிவகாசி. சிவகாசி முதல் இடத்தைப் பிடிக்க முடியாததற்குக் காரணம் சீனாவில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை குறைவு. அரசு தரும் சலுகைகள் ஏராளம். சீனாவில் ஏற்றுமதி கெடுபிடிகளும் ரொம்பவே இல்லை.

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியிலும் விற்பனையிலும் மட்டும் ஏன் இந்தப் படாதபாடு பட வேண்டியுள்ளது? பட்டாசு தயாரிப்பதற்கான மிக மிக முக்கிய மூலப்பொருள் பேரியம் நைட்ரேட். உலகில் வேறு எந்த நாடுகளிலும் பட்டாசு தயாரிப்பதில், பேரியம் நைட்ரேட் உபயோகிப்பதில் எவ்விதத் தடையுமில்லை. ஆனால், இந்தியாவில் பேரியம் நைட்ரேட் உபயோகிப்பதில் மிகக் கடுமையான தடைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். மூன்றாண்டுகளாக அந்தத் தடையினால் சிவகாசியில் பட்டாசுத் தொழிலானது மிகக் கடுமையான சவால்களையும் சரிவையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது. பட்டாசு உற்பத்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்காடி வருபவர்கள் தவறுதலான புரிதலால், இதர நாடுகளில் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட்க்கு எவ்வித குறுக்கீடும் இல்லை என்பதனை ஏற்க மறுக்கிறார்கள் எனச் சொல்கிறது சிவகாசி பட்டாசுகள் உற்பத்தியாளர் தரப்பு.

CSIR – RNEERI என்கிற மத்திய அரசு அமைப்பின் வழிகாட்டுதலின்படியே, 'பசுமை பட்டாசுகள்' தயாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மேற்கண்ட அமைப்பானது, பட்டாசு தயாரிப்பதில் பேரியம் நைட்ரேட் அளவினைக் குறைத்து, வேறு சேர்மானப் பொருட்களைத் தந்து வழிகாட்டுகிறது. எனினும், பேரியம் நைட்ரேட் துளி கூட சேர்க்காமல் பட்டாசு தயாரிக்க முடியாது. வழக்கமான பேரியம் நைட்ரேட் அளவினைக் கொஞ்சம் குறைத்து, மேற்கண்ட அமைப்பு அவ்வப்போது தருகின்ற சேர்மானப் பொருட்களைச் சேர்த்து சில குறிப்பிட்ட வகை பட்டாசு வகைகளை மட்டுமே தயாரிக்க முடிகிறது. இந்த மிகப் பெரிய இடைவெளியை எவ்விதம் நிரப்புவது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறது சிவகாசி தரப்பு.

பசுமைப் பட்டாசுகள் வெடிக்கும்போது புகை பரவுதல் கொஞ்சம் குறைவு. அதனால் காற்று மாசு குறைவு எனக் கூறுகிறது எதிர்த் தரப்பு. சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது என்பது அவர்களின் வாதம். அதுமட்டுமல்ல, பசுமைப் பட்டாசுகள் வெடிக்கும்போது அதன் ஒலி அளவும் சற்று குறைவு என்கிறார்கள். இந்தப் பசுமைப் பட்டாசு களேபரங்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பேரிடர் கால ஊரடங்கு, வேலை இழப்பு, உற்பத்தி இழப்பு, பொதுமக்கள் மத்தியில் பணப்புழக்கக் குறைவு அதனால் ஏற்பட்ட விற்பனை இழப்பு என எல்லாமாகச் சேர்ந்து வாட்டி வதைத்துப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது சிவகாசி பட்டாசுத் தொழில். அடுத்த ஆண்டு இறுதிக்குப் பின்னர், நூற்றாண்டு விழாவினை எதிர்நோக்கியுள்ளது சிவகாசி. அச்சமயத்தில் இத்தொழில் ஒரேயடியாக அதலபாதாளத்துக்குச் சென்று விடுமோ என்று அஞ்சுகிறார்கள் பட்டாசு தொழிலாளர்கள்.

நூறாண்டுகளுக்கு முன்பாக சிவகாசியினைத் தொழில் நகரமாக மாற்றிட அடித்தளம் போட்டுக் கொடுத்தவர்கள் அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார். இவர்களின் சீரிய முயற்சிகளின் பயனாக 1923ல் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே சிவகாசியில் தீப்பெட்டித் தொழிலும் லித்தோ ஆப்செட் அச்சுத் தொழிலும் ஒருசேரக் கால்கள் பதித்தன. நவீன விஞ்ஞான அசுர வளர்ச்சி, பரவலாகத் தொழில் பரவிடுதல் காரணமாக, சமீபத்திய இருபது முப்பது ஆண்டுகளாகவே தீப்பெட்டித் தொழிலும் லித்தோ ஆப்செட் அச்சுத் தொழிலும் சிவகாசியில் அதிபயங்கர வீழ்ச்சியினைச் சந்தித்து விட்டது. அதுபோல சிவகாசியில் பட்டாசுத் தொழிலும் ஆகிவிடுமோ என்கிற பேரச்சம் பட்டாசுத் தொழில் உற்பத்தியாளர்கள் மனதில் குடி புகுந்துள்ளது.

பெரிய தொழிற்சாலைகள் நூற்றியிருபது, நடுத்தர தொழிற்சாலைகள் இருநூறு, சிறு குறு தொழிற்சாலைகள் எல்லாம் சேர்த்து சுமார் ஆயிரத்து அறுநூறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நேரடியாக மூன்று லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக ஐந்து லட்சம் தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். ஆக மொத்தம், எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பட்டாசு உற்பத்தித் தொழிலை மையப்படுத்தியே அமைந்துள்ளது.

கொரோனா நிலவரம் சார்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி வியாபாரம் மட்டுமல்ல, கோயில் திருவிழாக்கள், மனித இறப்புச் சடங்கு, திருமணம் இதர சுப காரியங்களில் கூட பட்டாசு வெடிப்பது என்பது மிகக் குறைந்து போய் விட்டது. அதிலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகள் கூட வெடிக்கக் கூடாது என டெல்லி உட்பட ஐந்து மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. சிவகாசி பசுமைப் பட்டாசுகளுக்கான தடையினை நீக்கக் கோரி அந்தந்த மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின். அதனையேற்று ராஜஸ்தான் மாநில முதல்வர், சிவகாசி பசுமைப் பட்டாசுகளுக்கான தடையினை நீக்கி அறிவித்துள்ளார். எப்படியிருப்பினும் சிவகாசி பட்டாசு தொழிலானது, படாதபாடு பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com