அர்ச்சுனனின் பலம் ‘வில்’ பவர்! கலைஞர் கருணாநிதி சிலேடை!

அர்ச்சுனனின் பலம் ‘வில்’ பவர்!  கலைஞர் கருணாநிதி சிலேடை!

(ஜூன் 3- கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்)

– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

கம்பராமாணத்தை அடிப்படையாக வைத்து கவிஞர் வாலி எழுதிய 'அவதாரப் புருஷன்' என்னும் நூலை விரும்பிப் படித்தார் கலைஞர் கருணாநிதி. இதைக் கேள்விப்பட்ட கவிஞர் வாலி, ''உங்களுக்கு ராமாயணம் பிடிக்குமா?'' என்று வியப்பாகக் கேட்டார்.

அதற்கு கலைஞர் "யார் சொன்னது எனக்கு ராமாயணம் பிடிக்காது என்று?! எனக்கு ராமாயணத்து வாலியையும் பிடிக்கும். வாலியின் ராமாயணத்தையும் பிடிக்கும்'' என்று சொல் நயத்துடன் சொன்னார்.

கலைஞரின் சமயோசித பதில்.

ஒரு சமயம் நிருபர் ஒருவர் கலைஞரிடம், "எத்தனை எதிர்ப்புகள், சிக்கல்கள் இருந்தாலும் தேர்தல்களை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள்.. அதற்கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது?" எனக் கேள்வி கேட்டார். அதற்கு கலைஞர், "மகாபாரத அர்ச்சுனனின்  பலம் வில் 'பவரில்' இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த மகா சாதாரணமானவனின் பலமும் 'வில் பவரில்' (Will Power) தான் இருக்கிறது'' என்று சமயோசிதமாக பதில் சொல்லி நிருபரை சிரிக்க வைத்தார்.

ஆர்கெஸ்ட்ரா இனிது..?

திருமண விழா ஒன்றில் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டார். அவர் அந்த விழாவில் பேசும்போது "ஒரு குழந்தை ஆணாகப் பிறந்து அதன் மழலைச் சொல்லைக் கேட்டால் அதற்குப் பிறகு புல்லாங்குழல் இசையைக்கூட கேட்கத் தேவையில்லை. அதைப்போல் மற்றொரு குழந்தை பெண்ணாகப் பிறந்து அதன் பேச்சைக் கேட்டால் பிறகு யாழிசையையும் கேட்கத் தேவையில்லை.

குழந்தைகளின் மழலைப் பேச்சில் அத்தனை இனிமை அடங்கியுள்ளது. எனவே, ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இரு குழந்தைகள் போதுமானது. இதைத்தான் திருவள்ளுவர் தனது குறளில்,

'குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்' என்று கூறிச் சென்றுள்ளார்.

அதாவது குழல் ஆணையும், யாழ் பெண்ணையும் குறிப்பதாகும். 'அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்' என திருவள்ளுவர்  நினைத்திருந்தால் 'ஆர்க்கெஸ்ட்ரா இனிது' என்றுதானே சொல்லியிருப்பார் என கூறி சிரிப்பை ஏற்படுத்தினார்.

முதலைக்கு முதலை..

முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. அப்துல் லத்தீப் சட்டப் பேரவையில் பேசுகையில் ''கூவம் ஆற்றில் முதலை இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால் அங்கே அசுத்தம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே முற்றிலும் அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகளை விடுவது பற்றி ஆலோசிக்குமா?'' என்ரு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளிக்க எழுந்த கலைஞர், ''ஏற்கனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 'முதலை' கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது'' என நகைச்சுவையாக பேசி சிரிப்பில் மூழ்கடித்தார்.

பாண்டவர் லிப்ட்..

கலைஞர் முதல்வராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். அந்த நிகழ்ச்சி பல மாடிக் கட்டடம் ஒன்றில் நடப்பதாக இருந்தது. லிப்டில்தான் செல்ல வேண்டும். கலைஞரோடு முக்கிய பிரமுகர்களும் லிப்டில் நுழைந்தனர். இப்போது அந்த லிப்ட் பயணிக்கத் தொடங்கியவுடன் கலைஞர், "ஓ… இது பாண்டவர் லிப்டா?" எனக் கேட்டார். உடன் நின்றவர்கள் ஒன்றுமே புரியாமல் தவித்து நின்றனர். சிறிது மவுனத்திற்குப் பிறகு லிப்டின் உள்பகுதியின் மேலே எழுதப்பட்ட அறிவிப்பைக் கலைஞர் சுட்டிக் காட்டினார். அங்கு 'ஐவர் மட்டுமே' என்ற வாசகம் காணப்பட்டது.

தொடரும் நூல் உறவு..

கவிஞர் வைரமுத்து ஒருமுறை தன் பிறந்த நாளையொட்டி கலைஞரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காகச் சென்றிருந்தார்.

''உங்கள் நூல்களால்தான் நான் தமிழைக் கற்றேன்'' என்று கூறி மரியாதை நிமித்தமாக அவருக்கு பொன்னாடை போர்த்தினார்.

கலைஞரும் பதிலுக்கு வைரமுத்துவுக்கு பொன்னாடை போர்த்தினார். அப்போது வைரமுத்து போர்த்திய பொன்னாடையில் இருந்து பிரிந்த ஒரு நூல், கலைஞரின் சட்டைப் பொத்தான் ஒன்றில் சிக்கிக் கொண்டது.

அப்போது கலைஞர், ''பார்த்தீர்களா… உங்களுக்கும் எனக்கும் உள்ள 'நூல்' தொடர்பு அறந்து போகவில்லை'' என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com