
பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவரும், முதல்வா் வேட்பாளருமான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பகவந்த் மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
பஞ்சாபில் புதிய அரசின் பதவியேற்பு விழா, சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும். இதற்கிடையில், இன்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜிர்வாலை சந்திக்க இருக்கிறேன். இந்த சந்திப்பின் போது இம்மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். மேலும் பஞ்சாபில் ஆட்சியமைக்க நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆம் ஆத்மி உரிமை கோரவுள்ளது.
-இவ்வாறு பகவந்த் மான் தெரிவித்தார். நடந்து முடிந்த சட்டமனறத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் 92 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.