கிறிஸ்துமஸ் கவிதை: இணைந்து மகிழ்ந்து கொண்டாடுவோம்!

Christmas Poetry
Christmas Poetry
Published on

உலகம் முழுவதும் ஒன்றாக

உளத்தில் மகிழ்ச்சி மிகப்பொங்க

கொண்டாடும் பண்டிகை இதுவொன்றே

குதூகல கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ்ஸே!

அன்பை விதைத்தார் ஏசுபிரான்

அறைவோர் தன்னையும் மன்னிக்க!

இந்தக் கன்னம் பழுத்துவிட்டால்

இன்னும் இருக்கிறது மற்றொருகன்னம்

என்றே காட்டச் சொன்ன மகான்!

இப்படிச் செய்தால் கோபமெல்லாம்

முற்றாய் நீங்கி வடிந்துவிடும்

முழுதாய் நட்பாய் மாறிவிடும்!

நட்பை மிஞ்சிய உறவெதையும்

நயனுலகம் இதுவரை கண்டதில்லை!

இராமன் குகனின் நட்பினையும்

நல்லகர்ணன் துரியோதனன் உறவினையும்

ஈண்டு நாமும் நினைந்திடலாம்

எல்லாம் ஒன்றே வேறில்லை!

சிலுவை தன்னைச் சுமக்கவைத்தே

சிதைத்தார் அவரின் ஆத்மாவை!

சிறிதாய்ச் சிரிப்பை உதிர்த்தபடி

சிரமம் அனைத்தையும் மனத்துள்ளே

நீரைத் தேக்கிக் காக்கும் அணைபோல

நிமிர்ந்தே அவரும் நடந்திட்டார்!

அளவை மிஞ்சினால் அணையுங்கூட

ஆக்ரோஷம் கொண்டே உடைந்துவிடும்!

எல்லை மீறிய துயரத்திலும் அவர்

இனிதாய்ச் சொன்னது இதுவொன்றே!

‘அறியாமல் இவர் செய்யும் தவறுகளை

ஆண்டவரே நீரும் மன்னித்தருளும்!’

அன்புச்சீதையை ஏமாற்றி அசோகவனத்தில்

அதிரடியாய்ச் சிறைவைத்த ராவணனையும்

இன்று போய் நாளை வாவென்றே

இனிதாயச் சொன்னான் ராமனுமே!

எல்லாம் ஒன்றே வேறில்லை

வேண்டாம் பேதம் உலகினிலே!

சிலுவையைச் சுமந்தது சிரமமாவென

சிறுபிள்ளைத்தனமாய் ஒருவன் நினைத்திருக்க

முழுதாய்ச் சிக்கலில் அவன்சிக்க

முதுகுத் தோலை உரித்தார்கள்!

ஐயோ! ஜீசஸ் நீங்களுந்தான்

அதனை எப்படித் தாங்கினீர்கள்?

என்றே மயங்கி வீழ்ந்தானாம்

எதுவும் புரியும் அனுபவித்தாலே!

(Jesus of Nazareth!

Now only I come to

Understand your sufferings

Because they have lynched me!)

மதத்தை இனத்தைத் தெரிவுசெய்யும்

மதியை இறைவன் அளிக்கவில்லை!

இதையும் படியுங்கள்:
கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்!
Christmas Poetry

இன்ன இனத்தில் இன்னார்க்கென்று

பிறக்க நமக்கும் வழியில்லை!

நினைவு தெரிந்த பின்னாலே

நிம்மதி கொண்டு வாழ்ந்திடவே

எல்லா மதமும் ஒன்றென்றே

எண்ணி நாமும் இணைந்திடுவோம்!

எல்லோர் ரத்தமும் சிவப்புநிறம்

என்றுமில்லை அதற்கு வேறுநிறம்!

அல்லா ஜீசஸ் ராமரென்று

அனைவரும் போதித்தது அன்பொன்றே!

அன்பை நாளும் நாமனைவருமே

ஆழமாய் ஏற்று மூச்சுவிட்டால்

டெல்லியின் காற்று மாசினையும்

நீக்கக் கூட முடிந்திடலாம்!

இந்த கிறிஸ்துமஸ் இலங்கிடட்டும்!

இணைந்தே வாழ்க்கை தொடர்ந்திடட்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com