ஆடிப்பூரமும் ஆண்டாள் சிறப்பும்!

ஜூலை -22 ஆடிப்பூரம் 
ஆடிப்பூரமும் ஆண்டாள் சிறப்பும்!

மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணுபக்தையாக வாழ்ந்து சகலமும் அவனே என அவனுடன் ஐக்கியமாகி போற்றதலுக்குரிய ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண்ணின் பெருமையை நிலைநாட்டிய ஆண்டாள் தோன்றிய நட்சத்திரம் என்பதால் ஆடிப்பூரம் சிறப்பான அந்தஸ்தைப் பெறுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் அதாவது கலியுகம் பிறந்து 98 வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில் ஒரு செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார் எனும் விஷ்ணு பக்தரால் மகாலச்சுமியின் அம்சமாக  நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட தெய்வீக மங்கைதான் ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார். பக்தியிலும் தமிழிலும் சிறந்தவரான விஷ்ணு சித்தர் (பின்னாட்களில் இவரே பெரியாழ்வார் எனப் புகழப்பட்டார்) இறைவனால் தன் பொறுப்பில் விடப்பட்ட பெண் குழந்தைக்கும் பக்தியுடன் அருந்தமிழையும் ஊட்டி வளர்த்தார்.

சிறு வயது முதலே கண்ணனின் மீது பிரேமையுடன் வளர்ந்தாள் ஆண்டாள். மலர்களால் பூமாலை கட்டியும் தமிழால் பாமாலை இயற்றியும் கண்ணனைக் காதலித்த ஆண்டாளுக்கு வயது வந்ததும் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆண்டாளோ தெய்வமானாலும்  கண்ணனையே மணப்பேன் என்று உறுதி கொண்டு பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் ஏந்தி பாவை நோன்பு ஏற்று விரதம் இருந்தாள். பெரியாழ்வார் மகளின் முடிவைக் கண்டு குழப்பத்துடன் அரங்கனிடம் புலம்ப திருமணக் கோலத்தில் அரங்கனும் மகளுடன் திருவரங்கம் வருமாறு உத்திரவு பிறப்பித்தார். அதன்படி மேளதாளம் முழங்க பட்டுடுத்தி கண்களுக்கு மையிட்டு ஆபரணங்கள் மின்ன சர்வலாங்கார பூஷிதையாக கழுத்தினில் மலர் மாலையுடன் மணமகள் கோலத்தில் ஆண்டாளுடன் ஸ்ரீரங்கம் வந்தார் பெரியாழ்வார்.

அரச பட்டாளம் மற்றும் இந்த அற்புத சேதியை கேள்விப்பட்டு காத்திருந்த மக்கள் வெள்ளத்துடன் ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலதுகாலை எடுத்து வைத்த ஆண்டாளை அந்த திருவரங்கப் பெருமாள்  தன்னுடன் ஐக்கியமாக்கி கொண்டதாக வரலாறு. இந்த பூமியில் பிறக்கும் அனைத்து உயிர்களும் ஆண்டவனோடு கலக்க வேண்டுமென்பதே நியதி . ஜீவாத்மாவான  மனிதப்பிறவி இறுதியில் பரமாத்வோடு இணைவதை சுட்டிக்காட்டவே இறைவியானவள் ஆண்டாள் எனும் பெண் உருவம் எடுத்து பரமாத்மாவை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.  

ஆடியில் அவதரித்த ஆண்டாள் பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே திருப்பாவை. என்றழைக்கப்படுகிறது. இன்றும் நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டி பெண்களால் விரதமிருந்து பாடப்படுகிறது. ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத்தன்று பெரும்பாலான அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் நம்பிக்கையுடன் கலந்துகொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு புத்திரபாக்கியம் போன்ற நலன்கள் கிடைக்கும். ஆண்டாள் தோன்றிய செவ்வாயன்று துளசியை பூஜித்து விளக்கேற்றி வழிபட வாழ்வில் நல்ல துணை அமைவதுடன் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

ஆண்டாள் என்றாலே முத்துக்கள் பதித்து மிளிரும் சாய்ந்த கொண்டையும் அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் அனைவர் நினைவிலும் வரும். ஆண்டாள் கையில் உள்ள கிளி மாதுளம் பூக்கள்  மரவள்ளி இலைகள் நந்தியாவட்டை இலை செவ்வரளி போன்றவைகளுடன் வாழை நார் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. ஆண்டாளிடமிருந்து ரங்கனுக்கு தூது போன வியாச மகரிஷியின் மகனான சுகப்பிரம்மம் எனும் கிளிரூபம் கொண்ட முனிவரே ஆண்டாளின் கைகளில் கிளியாக அருள்புரிந்து பக்தர்களின் கோரிக்கைகளை கேட்டு  ஆண்டாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக ஐதீகம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு அனுதினமும் சாற்றப்படும் கிளிகளை முன்னமே சொல்லி பெற்று பூஜையறையில் வைத்து வணங்கி வந்தால் நினைத்த காரியங்கள் ஜெயிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் இங்கு பழங்காலம் தொட்டு நடைபெறும் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா பல மாற்றங்களைக் கண்டாலும் இன்றும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்ற கோவில்களில் பெருமாளுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி தேர்கள் இருக்கும் நிலையில் ஆண்டாளையும் ஸ்ரீ ரெங்கமன்னாரையும் பெருமையுடன் ஒன்றாக சுமந்து மக்கள் வெள்ளத்தில் நகரின் நான்கு மாடவீதிகளையும் ஆண்டாளே ஜீயர் கனவில் வந்து கேட்டு வடிவமைத்த தேக்கு மரத்தேர் சுற்றிவருவது பெரும் சிறப்பு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கோவிந்தா கோஷம் எழுப்பி மகிழும் ஆண்டாளின் அவதார தினத்தில் நாமும் அவர் தந்த திருப்பாவையைப் பாடி நன்மைகள் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com