நடிகர் ஃபகத் பாசில் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்!

ஃபகத் பாசில்
ஃபகத் பாசில்

ரு ஹீரோவின் பிம்பத்தை கற்பனை செய்யச் சொன்னால், நல்ல உயரம், நல்ல உடலமைப்பு, நெற்றியில் சுருண்டு விழும் தலைமுடி என வசீகர தோற்றம் கொண்டவரே, பெரும்பாலானவர்களின் மனக்கண் முன் வந்து செல்வார்கள். உண்மைதான், இந்த லட்சணங்களை கொண்டவர்கள் தான் திரையுலகில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வரமுடியும் என்கிற நம்பிக்கை திரை ரசிகர்களிடம் காலம் காலமாகவே உருவாக்கப்பட்டு வந்துள்ளதால் இப்படி தோன்றலாம்.

ஆனால், இப்படி எந்த கட்டமைப்புக்குள்ளும் பொருந்தாமல், சராசரி உயரத்துடன், சிக்ஸ் பேக் உடலமைப்பின்றி, பெரிய கண்களுடன் வழுக்கை தலையை கொண்ட ஒருவர், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், தாய் மொழி மட்டுமின்றி பிற மாநில படங்களிலும் கலக்குவதையும், திரைத்துறையினரால் THE GREAT ACTOR என வியப்போடு அழைக்கப்படவும் செய்கிறார் என்றால், அவர்தான் ஃபகத் பாசில் என சட்டென சொல்லிவிடலாம்.

1. மாமன்னன் ரத்தினவேலு

மாமன்னன்
மாமன்னன்

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் ரத்தினவேலு கதாபாத்திரல் மிரட்டியிருந்த ஃபகத், தமிழில் அதிக வசூல் ஈட்டிய 2வது படம் என்ற சாதனையை படைத்த விக்ரம் படத்தில் அமர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். அதேபோல், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பாவில், பன்வர் சிங் ஷெகாவத் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். விக்ரம், புஷ்பா என அடுத்தடுத்த படங்கள் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்ட PAN INDIA STAR-ஆக மாறியிருக்கிறார் ஃபகத் பாசில். 

2. இயக்குநர் ஃபாசிலின் மகன்!

Fahad family
Fahad family

திரைத்துறையில் அறிமுகமான இருபது ஆண்டுகளில், மம்முட்டி, மோகன் லால் போன்றவர்களுக்கு பிறகு மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் முக்கிய நடிகராக உருவெடுத்திருக்கிறார் ஃபகத் ஃபாசில். உலகில் எந்தவொரு துறையிலும் செல்வாக்கு கொண்டுள்ள நபரின் வாரிசுகள் அத்துறையில் முதன்மை இடத்திற்கு எளிதாக வந்துவிடமுடியும்.

அதிலும் திரைத்துறையில் பெயருக்கும் புகழுக்கும் சொந்தகாரராக உள்ள ஒருவரின் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு, வெள்ளித்திரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.ஆனால் ஃபகத் பாசில் விஷயத்தில் இது தலைகீழாக இருந்தது. மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையில், 80களின் காலகட்டத்தில் புகழ்பெற்ற இயக்குநராக அறியப்பட்டிருந்தார் இயக்குநர் அலெக்சா முகம்மது ஃபாசிலின் மகன்தான் ஃபகத் பாசில்.

3. கைகொடுக்காமல் போன முதல் படம்

Kaiyethum Doorath
Kaiyethum Doorath

1982ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்த ஃபகத் ஃபாசிலும் அவரது தந்தையை போல திரைத்துறையில் பணியாற்றுவதையே விரும்பினார்.  2002ம் ஆண்டு கையேத்தும் தூரத்தே ((Kaiyethum Doorath)) படத்தின் மூலம் ஹுரோவாக அறிமுகமானார் ஃபகத். ஆனால், இந்தப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெறவில்லை. படத்தின் தோல்வி காரணமாக கடும் விமர்சனங்களையும் ஃபாசில் சந்திக்க வேண்டியிருந்தது. கையேத்தும் தூரத்தே படம் தோல்வியை தழுவியதால், இனி சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்த ஃபகத், அமெரிக்காவில் பொறியியல் படிக்க சென்றுவிட்டார். அங்குதான், பாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த இர்ஃபான் கான் நடித்த ‘Yun Hota Toh Kya Hota’ படத்தை பார்க்கும் வாய்ப்பு ஃபகத்துக்கு கிடைத்தது. அதுவரை TALL AND HANDSOME ஆக இருப்பவர்களால் தான் ஹீரோவாக ஜொலிக்க முடியும் என முதல் பட தோல்வியை நினைத்து துவண்டு போயிருந்த ஃபகத்துக்கு நம்பிக்கையை கொடுத்தது இர்ஃபான் கானின் Yun Hota Toh Kya Hota படம்தான்.

2009ம் ஆண்டு பத்து இயக்குநர்களின் முயற்சியால், பத்து கதைகளை ஒன்றிணைத்து KERALA CAFE என்ற திரைப்படம் வெளியானது. இதில் Mrityunjayam என்ற எபிசோடில் துப்பறியும் JOURNALIST-ஆக நடித்திருந்தார் ஃபகத். அவர் நினைத்தது போலவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இந்த படம்.

4. முதல் கேரள அரசு விருது

அன்னயும் ரசூலும்
அன்னயும் ரசூலும்amazon.com

இதனைத்தொடர்ந்து, Pramani, Cocktail, Tournament படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புள்ள துணை கதாபாத்திரங்களில் நடித்தார். இதன்பின் வெளியான ச்சாப்பா குறிச்சு ((Chaappa Kurishu)) திரைப்படம் தான் ஃபகத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான கேரள அரசின் விருதை பெற்றுத் தந்தது.ஃபகத் பாசிலின் RE ENTRY மலையாள சினிமாவில் அவருக்கு ஒரு களத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ச்சாப்பாக் குறிச்சு படத்துக்காக மாநில அரசு விருதை பெற்றதன் மூலம் 2011, 2012 காலகட்டத்தில் கவனம் பெற்ற நடிகராக மாறியிருந்தார்.

ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியான 22 FEMALE KOTTAYAM திரைப்படம் ஃபகத்தின் நடிப்பில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.“டயமண்ட் நெக்லஸ்”, “ஃப்ரைடே”, “அன்னயும் ரசூலும்”, “நாதோலி ஒரு செறிய மீனல்ல” போன்ற படங்களில் நடிப்பில் தான் வித்தைகளை வெளிப்படுத்தினார் ஃபகத். 2013ம் ஆண்டு மட்டும் 12 படங்களில் ஒப்பதமாகியிருந்தார் ஃபகத் பாசில். குறிப்பாக அகம், ஆர்டிஸ்ட், நார்த் 24 காதம் போன்ற படங்கள் ஃபகத்தின் திரைப்பயணத்தில் முத்திரைப் படங்களாக அமைந்தன.

5. மலையாள சினிமாவின் பிரம்மாண்ட திருமணம்

ஃபகத் நஸ்ரியா
ஃபகத் நஸ்ரியா

ஃபகத் ஃபாசிலின் திரை வாழ்க்கையில் இருந்துதான் அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கையும் தொடங்கியது. 2014ம் ஆண்டு வெளியான “பெங்களூர் டேஸ்” திரைப்படம்தான் ஃபகத் பாசிலின் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே ஃபகத் மீது காதல் கொண்ட நஸ்ரியா தன்னுடைய காதலை தைரியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாவதற்கு முன்பே இருவருக்கும் இடையே திருமணம் முடிந்துவிட்டது. 

6. திருடன் பெற்ற முதல் தேசிய விருது

Thondimuthalum Driksakshiyum
Thondimuthalum Driksakshiyum

ஐயோபின்டே புஸ்தகம் ((Iyobinte Pusthakam)) ஃபகத்தின் லுக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து “மான்சூன் மேங்கோஸ், மகேஷிண்டே பிரதிகாரம், டேக் ஆஃப் போன்ற படங்களில் நடித்தார். மகேஷிண்டே பிரதிகாரம் படத்திற்கு பிறகுதான் மலையாள திரையுலகை தாண்டி தமிழ் தெலுங்கு என ஃபகத்தின் திரைப்பயணம் வேகமெடுத்தது. குறிப்பாக, தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும் ((Thondimuthalum Driksakshiyum)) படத்தில் திருடன் கதாபாத்திரம் ஏற்ற ஃபகத் ஒரு திருடன் போலவே மாறியிருந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஃபகத்துக்கு இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

7. தமிழில் ஃபகத் பாசிலின் முதல் ENTRY

வேலைக்காரன்
வேலைக்காரன்

2017ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஃபகத் ஃபாசில். வேலைக்காரன் படத்தில் ஒரு கார்ப்பரேட் வில்லனை ரசிகர்கள் கண்முன் நிறுத்தியிருப்பார். அதேபோல்,மலையாளத்தில் “கும்பலிங்கா நைட்ஸ், அதிரன்” ஆகிய படங்களிலும் மெர்சலான நடிப்பை வெளிப்படுத்தினார். வேலைக்காரனை தொடர்ந்து தமிழில் அடுத்த வாய்ப்பு கதவை தட்டியது. “ஆரண்யகாண்டம்” மூலம் தமிழ் சினிமா உலகையே புரட்டிப்போட்ட தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் உருவானது. இந்த படத்தில் முகில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் ஃபகத். 

8. ரசிகர் மன்றம் வைத்துக்கொள்ளாத நடிகர்

TRANCE
TRANCE

2020ல் வெளியான TRANCE திரைப்படத்தில் ஃபகத்தின் நடிப்பில் அவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஃபகத் ஃபாசில் எனும் நடிப்பு சூறாவளியை அனைத்து மக்களிடமும் கொண்டுசென்றது எதுவென்றால், அது கொரோனா ஊரடங்கின் போது அசுர வளர்ச்சிபெற்ற ஓடிடி தளங்கள்தான்.

இந்த நேரத்தில் ஓடிடியில் வெளியான ஃபகத் பாசிலின் C U SOON, IRUL, JOJI, MALIK போன்ற படங்கள், இவருக்கு pan india நடிகருக்கான அடிதளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்காமல், சக கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கும் கதையை தேர்ந்தெடுப்பதே அவரது SECREAT FORMULA-ஆக இருந்ததால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால், ஒருபோதும் அவர் ரசிகர் மன்றங்களை உருவாக்கவில்லை. 

9. மலையாள சினிமாவின் மாலிக்

PUSHPA 2
PUSHPA 2

ஜோஜி படத்தில் 25 வயது இளைஞாகவும், மாலிக் படத்தில் ஆறுபது வயது கிழவனாகவும் தோன்றி நடிப்பால் மிரட்டியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், 2021 டிசம்பரில் புஷ்பா திரைப்படம் வெளியானது. வசனங்கள் எதுவும் இல்லாமல் வெறும் பின்னனி இசையுடன் ஃபகத் அறிமுகமாகும் காட்சியே அவரின் வில்லத்தனத்தை வெளிப்படுத்த போதுமானதாக இருந்தது. புஷ்பா படம் மூலம் தெலுங்கு ரசிகர்ளுக்கு Bhanwar Singh Shekhawat IPS ஆக அறிமுகமான ஃபகத் பாசிலை அம்மாநில ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது ஃபகத்தின் 41வது பிறந்தநாளையொட்டி புஷ்பா படக்குழு ஃபகத் பாசிலின் புஷ்பா 2 போஸ்டர் வெளியிட்டுள்ளது.

10. FAFA என அன்போடு அழைக்கப்படும் ஃபகத்

கும்பளாங்கி நைட்ஸ்
கும்பளாங்கி நைட்ஸ்

நடப்பாண்டில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் black guards team-ன் தலைவனாக நடித்து நடிப்பில் பட்டைத் தீட்டிய வைரமாக ஜொலித்தார் ஃபகத் ஃபாசில். black guards team-ன் தலைவன், ஏஜெண்ட் விக்ரமின் ரசிகன், காயத்ரியின் காதலன், சந்தானத்தின் சாம்ராஜ்யத்தை அடியோடு அழித்த நாயகன் என கதைக்கு ஏற்றவாறு, முகபாவனைகளை வெளிப்படுத்தியது படத்தின் மையக் கதாபாத்திரமே ஃபகத் ஃபாசில் தான் என்கிற அளவுக்கு பேசவைத்தது. சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்திலும் ரத்தினவேலுவாகவே வாழ்ந்திருப்பார் ஃபகத். தன் அறிமுகப்படம் ஒரு தோல்விப் படமாக அமைந்துவிட்டிருந்தாலும், தன் தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடமே, அவரை நட்சத்திர நடிகராக உயர்த்தியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com