ஏமன் தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்கு கரையில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சனா. இங்கு ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே உள்ளது ஒரு மர்மக் கிணறு. இந்த கிணறு 367 அடி ஆழம் கொண்டதாகவும், 30 மீட்டர் அகலம் கொண்டதாகவும் இருக்கும்.
உலகத்தின் நரக நுழைவாயில் என்று மக்களால் நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்தது. இந்த கிணறு மரண கிணறு என்றும் அழைக்கப்பட்டுவந்தது. மேலும் இதிலிருந்து துர்நாற்றம் வீசுவது மக்களின் பயத்தை மேலும் அதிகரித்து வந்திருந்தது.
இதன் அருகில் செல்பவர்கள் மரணத்தை தழுவுவார்கள். இப்பகுதிக்கு வந்தாலே கெட்ட நிகழ்வுகள் ஏற்படும் என்ற பல்வேறு வதந்திகளும் பல ஆண்டுகளாக உலாவருகின்றது. அதில் பேய்களும் பூதங்களும் வசிப்பதாகவும் பல்வேறு கட்டுகதைகள் பரவி வந்தன.அது கிணற்றின் அருகில் செல்வோரை உள்ளே இழுத்துச் செல்லும் என கதைகள் பரவி இருந்தது.
மேலும் பலர் இது ஆவிகளையும் பேய்களையும் அடைத்து வைக்கும் சிறை என்றும் நம்பி வந்தனர். கிணற்றின் சில அடிகளுக்கு மேல் சூரிய ஒளி படாததால் எப்போதும் இருளாகவே இருக்கும் இப்பகுதி தொடர்ந்து நீண்ட நெடுங்காலமாக மர்மமாகவே இருந்து வந்தது. ஏமனில் இதனால் தான் கடும் பஞ்சம் நிலவி வருவதாகவும் , அங்குள்ள மக்களுக்கு பல்வேறு துயரங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அங்குள்ள மக்களால் பரவலாக நம்பப்பட்டு வந்தது.
புவியியல் ஆய்வு மையத்தினர் கனிம வளத்துறையினர் ஏற்கனவே பலமுறை அதனை ஆராய முற்பட்டும் பல விசித்திர சப்தங்களும், விசித்திரமான நாற்றமும் வீசுவதால் ஐம்பது அடிவரை மட்டுமே அதன் உள்ளே செல்ல முடிந்தது என கூறிவந்தனர்.
ஆனால் ஏமன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் தற்போது அந்த மர்ம கிணற்றில் இறங்கி ஆராய்ச்சி செய்தனர். அதில் ஒன்பது பேர் அடங்கிய குழு ஒன்று மரண கிணற்றில் இறங்கியும், மேலே இருநபர்கள் நின்று அவர்களை கண்காணித்தும் ஆய்வு செய்தனர். அதில் பல்வேறு ஆச்சரியம் தரும் தகவல்கள் உலகிற்கு கிடைத்துள்ளன.
முதலில் அந்த துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் அங்கு பல்வேறு பறவைகள் மற்றும் விலங்குகள் இறந்து கிடந்ததே என்கிறார்கள். அந்த மரண கிணற்றில் ஏராளமான பாம்புகள் உயிர்வாழ்வதாக கூறியுள்ளனர். நீண்டு கொண்டே செல்லும் அந்த குகையில் ஒரு நீர்வீழ்ச்சியும் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும் குகை முழுவதும் பச்சை மற்றும் சாம்பல் நிற முத்துகள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
தற்போது அங்கு பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதில் மேலும் சில சுவராஸ்யமான தகவல்கள் இந்த உலகிற்கு கிடைக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
குகையின் உளளேயிருந்த தண்ணீர், பாறை , இறந்த விலங்குகள் பறவைகள் என பலவற்றையும் ஆய்வுக்கு கொண்டுவந்துள்ளனர் ஆராய்சியாளர்கள். இன்னும் முழுமையான ஆய்வுமுடிவுகள் வரவில்லை. ஆய்வு முடிவுகள் வந்ததும் மேலும் பல தகவல்கள் ஆச்சர்யங்கள் கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் ஏமன் நாட்டின் புதிய வரலாற்றை எழுதும் என நம்புகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஏமன் மரண கிணற்றின் குகைக்குள் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அவை பேய்பூதம் குறித்த பல்லாயிரம் ஆண்டு கட்டுக்கதைகளை சுக்கு நூறாக உடைத்து எறிந்திருக்கிறது.
எப்படியோ பல்லாண்டுகளாக உலவிவந்த கட்டுகதைகளும் , மூடநம்பிக்கைகளும், பேய்கதைகளும் தற்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது பலருக்கும் குறிப்பாக அங்கே வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகிறது என்பதில் வியப்பில்லை.