அரேபிய மண்ணில் மிக பிரமாண்டமாக எழும்பி வருகிறது, சுவாமி நாராயண் இந்து ஆலயம்! பிரதமர் மோடியின் துபாய் பயணத்தின்போது விழுந்தது இந்த கோவில் கட்டுவதற்கான தொடக்கப் புள்ளி விதை! அதையடுத்து அமீரகத்தின் அரச குடும்பத்தினர் துபாயில் இந்தக் கோயிலைக் கட்ட அனுமதி வழங்கியதுடன் மட்டும் நில்லாமல், அவ்வப்போது நேரிலும் குடும்பத்துடன் சென்று ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அப்படி இந்த கோவிலில், தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. அன்னக்கூட உத்ஸவம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த திருவிழாவில் பங்கேற்ற அனுபவத்தை விவரிக்கிறார் திருமதி.சுமிதா ரமேஷ்... திருச்சி திருவானைக்காவல்..பகுதியை சேர்ந்தவரான இவர். தொலைக்காட்சி.. ரேடியோ.. யூ ட்யூப்.. டிக்டாக் என அனைத்து தளங்களிலும் அசத்தி வருபவர்..
இதோ.. துபாயிலிருந்து கல்கி ஆன்லைனுக்காக..சுமிதா ரமேஷ்..
அரேபிய நாடான அமீரகம் எனப்படும் அபுதாபியை தலை நகராகவும், துபாயை வர்த்தக தலை நகரமாகவும் கொண்ட யூனைட்டெட் அரபு எமிரேட்ஸ் நாட்டில் அபுதாபிக்கும் துபாய்க்கு இடையில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது சுவாமி நாராயண் இந்து ஆலயம் இதை BAPS society என்ற அமைப்பு உருவாக்கி வருகிறது.
துபாயில் இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு பச்சைக்கொடி காட்ட, இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அஸ்திவார பூஜை செய்யப்பட்டு, முறைப்படி கோயில் கட்டிடப் பணி ஆரம்பிக்கப்பட்டது. நடுவில் கோவிட் கட்டுபாடுகள் காரணமாக ராஜஸ்தானில் இருந்து வரவேண்டிய கோவிலின் கலை நயமிக்க தூண்கள்..விதானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது சிறப்பாக வளர்ந்து வருகிறது.
இந்த கோவில் வளாகத்தில் தான் கடந்த வாரம் அன்னகூட உத்ஸவம் நடந்தது. அமீரகத்தின் மனித மத நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு. ஷேக் அல் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் அவர்கள் குத்துவிளக்கேற்றி இந்த உத்ஸவத்தை கோவில் வளாகத்தில் இடப்பட்ட கூடாரத்தில் துவக்கி வைத்தார்.
அது என்ன அன்னகூட உத்ஸவம்?!
துவாபர யுகத்தில் ஶ்ரீகிருஷ்ணரை பரமாத்மா என்று அறிந்துக் கொள்ளாத இந்திரன், தனக்கு விழா எடுக்காத மக்களை தண்டிக்க, மழையாக பெய்து மக்களை துன்புறுத்த நினைத்தார்.. ஆனால், கிருஷ்ணரது அபயகரம் இருக்க, மக்கள் துன்பபடுவது உண்டா !
ஒற்றை விரலில் கோவர்த்தன மலையையே குடையாகக் கொண்டு பர்ஸானா முதற்கொண்டு முழு ஆயர்பாடியையும் ஆவினங்களுடன் குடையின் கீழ் கொண்டு பெருமழையிலிருந்து அனைவரையும் காப்பாற்றினார். அதன்பிறகு, கண்ணனின் மகிமையை இந்திரன் உணர்ந்து அடி பணிந்ததும், ..அவரையும் காத்தார் என்கிறது பாகவதம்.
இந்த நிகழ்விற்கு பின், ஆயர்பாடி மக்கள் ஒவ்வொரு வருடமும் கோவர்த்தன மலைக்கு அன்னத்தை வண்டிகளில் ஏற்றிச் சென்று தங்களைக் காப்பாற்றிய அந்த கோவர்த்தன மலைக்கு முன் படையலிட்டு உத்ஸவம் நிகழ்த்தினார்கள் என்பது ஐதீகம். அதனால்தான், இன்றளவும் தீபாவளிக்கு பிறகு அன்னகூட உத்ஸவம்
வட இந்தியாவில் கிருஷ்ணரது ஆலயங்களில் தீபாவளிக்கு பிறகு அன்னகூட உத்ஸவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. கூடை நிறைய விதவிதமான உணவுவகைகளை இறைவனுக்கு படைத்து நன்றி கூறும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த அன்னகூட உத்ஸவம்தான் துபாய்க் கோவிலிலும் விமரிசையாக கொண்டாடப் பட்டது. துபாய் அமைச்சர் ஹெலிகாப்டரில் வந்திறங்கி, இக்கோயில் உத்ஸவத்தை குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார்.
‘’மனிதக்குலத்தின் அமைதியும்,அன்பும் சமாதானமும் என்றும் காக்கப்பட வேணடும். அந்த வகையில் துபாயில் இந்நாட்டு மக்களுடன் இணைந்து வாழும் இந்திய மக்களின் சிறப்பான பண்டிகையான, தீபாவளி சகல நன்மைகளையும் அருளட்டும்’’ என வாழ்த்திவிட்டு, ஹெலிகாட்பரில் பறந்துப் போனார்.
கோயிலில் ஆலய நிர்மாணம் தொடர்பான வீடியோ பக்தர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. அடிக்கல் நாட்டியதில் தொடங்கி, படிப்படியான கோவிலின் வளர்ச்சி..அமீரகவாசிகளும் ஆலயத்திற்கு செங்கல் எடுத்துத் தரும் சேவை என அந்த வீடியோ ஏற்பாடு ஆகியிருந்தது.
இந்த அன்னக்கூட உத்ஸவத்துக்கு சாத்வீக முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தலா இரண்டு லட்டுகளை பிரசாதமாக தந்து அனுப்பி வைத்தனர்.
கோவில் வளாகத்திலும் நம்மூர் திருவிழா மாதிரி கொண்டாட்டம்தான்! விதவிதமான ஸ்டால்கள் களைகட்டின. குஜராத்தி உணவு பொருட்கள், கைவினைப்பொருட்கள் என்று அந்த ஸ்டால்களில் கிடைக்காத விஷயமே இல்லை எனலாம்.
அதைக் கடந்து வந்தால், சிற்றுண்டி ஸ்டால்கள்.. குறைந்த பணத்தினை டொனேஷனாகப் பெற்றுக்கொண்டு, பானி பூரி,பேல் பூரி, சமோசா, இட்லி,சட்னி, குழந்தைகளுக்கு கேக், ப்ரௌனி வகைகள், கூட டீ என கொடுக்க, மக்கள் வெளுத்து கட்டினர்.
இன்னொரு பக்கம்.. BAPS society குருமார்களின் போதனைகளை விளக்கும் விதத்தில் டெண்ட் அமைக்கப்பட்டு, அதில் மைக் பிடித்தவாறு பள்ளிக் குழந்தைகள் விளக்கிக் கொண்டிருந்தனர்.
மொத்தத்தில், சொந்த நாட்டுக்கு திரும்பியது மாதிரி திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. மக்களையும் மனங்களையும் இணைப்பது ஆன்மிகமும்..பக்தியும் தானே !