இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஒரு சாமானியனாகிய என்னுடைய பார்வையிலிருந்து சென்னையை பற்றிய புரிதல்!
தமிழ்நாட்டின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படக்கூடிய சென்னை ன்று தனது 385 ஆவது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1996 ஆம் ஆண்டு சென்னை என மாற்றப்பட்டு 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் மக்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2001 கணக்கெடுப்பின்படி சென்னையில் உள்ள மக்கள் தொகை 4.2 மில்லியன். 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் உள்ள மக்கள் தொகை 9.7 மில்லியன்.
சென்னைக்கு எவ்வளவோ வரலாறுகள் உள்ளன. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த சென்னைக்கு அப்படி என்னதான் ஸ்பெஷல் என்பதை இப்பதிவில் காணலாம்.
'வந்தாரை வாழவைக்கும் சென்னை' என்ற அடைமொழியை உண்மையாக்கி, மக்களை ஆலமரமாய் தாங்கி, அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்குகிறது சென்னை. வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் சென்னைக்கு பல சிறப்பம்சங்கள் உண்டு. தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தும், இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் உலகின் எந்த மூலையில் இருந்தும் மக்கள் சென்னைக்கு வந்தாலும் அவர்களை சிறப்பாக வரவேற்று வாழ்வளிக்கும் கருணை வள்ளல் என சென்னையை சொல்லலாம்.
பலதரப்பட்ட மக்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பலதரப்பட்ட வழிபாடு முறைகள், பலதரப்பட்ட பழக்கவழக்கங்கள், பலதரப்பட்ட உணவு முறைகள் இருந்தாலும் மக்களிடையே எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் எப்பொழுதும் சென்னை தான் நம்பர் ஒன்.
கோமணத்துணியோடு வருபவர்களையும் கோடீஸ்வரர்களாக மாற்றும் வல்லமை சென்னைக்கு உண்டு. காரணம் இங்கே கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
அடிப்படைக் கல்வி பெற்றவரையும் ஆளுமை மிக்கவர்களாக மாற்றும் ஆற்றல் சென்னைக்கு உண்டு. காரணம் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இங்கே வரம்பின்றி குவிந்துள்ளன.
கைத்தொழில் கற்றவர்களை எல்லாம் தொழில் முனைவோர்களாக மாற்றும் வல்லமை சென்னைக்கு உண்டு. ஏனெனில் இங்கே லட்சக்கணக்கான தொழில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.
அனைத்து கலைகளின் பிறப்பிடமாக விளங்குவது சென்னை என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமாவுக்கு என்று ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யமே சென்னையில் உள்ளது.
இலக்கியம் சார்பான படைப்புகளுக்கு சென்னையில் பஞ்சமே இருக்காது.
அதிகப்படியான ஐடி கம்பெனிகள், வர்த்தக மையங்கள், மருத்துவமனைகள், போக்குவரத்து வசதிகள், மால்கள், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள்... இப்படி சென்னையின் வளர்ச்சியை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதிகமாக வெளிநாட்டு தொடர்புகளை வைத்திருப்பதில் சென்னைக்குதான் முதலிடம். 4 நிமிடத்திற்கு ஒருமுறை விமானம் தரையிறங்கி வானில் பறக்கிறது.
ஒரு கால கட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக இருந்த கன்னிமார நூலகம் முதன் முதலில் சென்னையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதல் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படக்கூடிய மெட்ராஸ் யூனிவர்சிட்டி சென்னையில் தான் ஏற்படுத்தப்பட்டது.
நவ நாகரிக வாழ்க்கை முறை (modern lifestyle) எப்படி இருக்கும் என்பதை நாம் சென்னையை பார்த்து அறிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக உள்ளன.
எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அன்பாக பழகக் கூடிய மக்கள் அதிகமாக சென்னையில் இருக்கிறார்கள். இந்திய நாட்டில் செயல்படுத்தப்படும் எந்த ஒரு நகரமையமாக்கலும் சென்னையை மையமாக வைத்தே செயல்படுகின்றன.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் இடமாக சென்னை உள்ளது. உதாரணமாக (அரசியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம்,சினிமா, தொழில்துறை, தொழில்நுட்பம், வாணிபம் போக்குவரத்து). அப்படி பார்க்கும்போது சென்னை ஒரு மிகப்பெரிய பன்முகத்தன்மை கொண்ட நகரம்தான்.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் உள்ள வித்தகர்களை வெளியுலக்கு கொண்டு வந்து அவர்களை சாதனையாளர்களாக மாற்றி காட்டியது இந்த சென்னை தான். வாழ்க்கை என்னும் பாடத்தை முழுமையாக கற்றுக் கொடுப்பதில் என்றென்றைக்கும் சென்னைக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு.
பிரபலமான கானா பாடல் தோன்றிய இடமும் நம்ம சென்னை தான்!
சென்னையில் தான் அனைத்து கலாச்சார விழாக்களும் அதன் முழுமையான முறைகளைப் பின்பற்றி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஊருக்கு ஏற்ப, வட்டாரத்துக்கு ஏற்ப மாறுபடும் விழாக்களை தாண்டி சென்னையில் வாழும் மக்கள்தான் வருடத்தின் 365 நாட்களும் விழாவை கொண்டாடித் தீர்க்கிறார்கள்! சாதி, மதம், இனம், மொழிகள் கடந்து அனைவரையும் மனிதநேயம் ஒன்றால் கட்டி வைக்கும் மந்திரக்கலை சென்னைக்கு உள்ளது.
நல்ல அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, நல்ல மனிதநேயத்தை வளர்த்துக் கொள்வதற்கு மனிதனை மனிதனாக மட்டுமே நேசிப்பதற்கு கற்றுக் கொடுக்கும் இடம் தான் சென்னை.
இப்படி சென்னையின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் அதன் பெருமைகளை சொல்லும் எனக்கும், அதை பொறுமையாக கேட்கும் உங்களுக்கும் ஒரு மிகப்பெரிய கால அவகாசம் தேவைப்படும். எனவே காலத்தின் தேவை கருதி இதோடு முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்!
மேலே கூறிய அனைத்தும் ஒரு சாமானியனாகிய என்னுடைய பார்வையிலிருந்து சென்னையை பற்றிய புரிதல்! வந்தாரை வாழவைக்கும் சென்னை என்றும் வளமுடன் வாழ்கவே!