பாரதியின் தீபாவளிச் செய்தி

பாரதியின் தீபாவளிச் செய்தி

“நிலையாத பொய்களிலிருந்து

நிலையான சத்தியத்திற்கு

அறியாமையென்னும் இருளிலிருந்து

அறிவிலே தெளிவென்னும் ஒளிமயத்திற்கு

அற்ப மரணத் தன்மையிலிருந்து

அமர நிலைக்கு

இறையே! எங்களை ஏந்திச் செல்க!”

நம்முடைய மக்களுக்கு நம் நாட்டின் அருமை தெரியவில்லை. நாடே ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. நாட்டுப் பற்றும், சிந்தனையில் விழிப்புள்ளவர்களும் கூட நமக்கு சுதந்திரம் வருமென்னும் நம்பிக்கையின்றி வருந்தினார்கள். மொத்தத்தில், பாரத சமுதாயம் நைந்துபோய், தெம்பின்றி உழன்று கொண்டிருந்தது.

இதுதான் பாரதி வாழ்ந்த காலகட்டம்.

 ஆனாலும், அவன்மட்டும் எப்படியோ நம்பிக்கையோடிருந்தான்.

 “நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்"

 என்று பாடியவனல்லவா!

 நலிவே இயல்பாகிப் போயிருந்த ஓர் அவலமான சூழலில்,

 “நம்புவதே வழி என்ற மறைதனை

நாமின்று நம்பிவிட்டோம்!”

 என்று அவனால் கூரையேறிக் கொக்கரிக்க முடிந்தது. அவனுடைய அன்றாட வாழ்க்கையே எப்போதும் கொறளி வித்தை போல இருந்த போதிலும், அவனென்னமோ உலகக் குடிமகனாக நெஞ்சை நிமிர்த்தி நடந்து கொண்டிருந்தான். இந்த நம்பிக்கையை அவன் ஒரு தீபாவளிச் செய்தியாக வெளியிட்ட போது அவனுக்கு வயது 23!

‘இந்தியா’ பத்திரிகையில், 1906-ம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதியில் ஒரு தலையங்கமாக எழுதுகிறான்.

உலகில் இருக்கும் நீரெல்லாம் கங்கை நீரே என்றோர் ஐதிகம் உண்டு. கங்கைக் குளியல் என்பது அன்றாடக் குளியலைப் போலல்ல. அது ஒரு முக்கியமான முழுக்கு. அதாவது நம் மடமைகளுக்குப் போடுகின்ற முழுக்கு. ‘இனி நான் தீமைக்கு இடம்கொடுக்க மாட்டேன்' என்னும் உறுதியோடு எவன் கங்கையில் முழுக்குப் போடுகிறானோ, அவனுடைய தீய வினைகளின் விளைவுகளை கங்கா தேவி கரைத்து விடுகிறாள் என்பதே நம் நம்பிக்கை. இதை இன்னொரு விதமாகவும் சொல்வதுண்டு. ஒரு முழுக்கு – நாடு நலம் பெற. இரண்டாவது முழுக்கு - வீடு, உற்றார் நலம் பெற. மூன்றாவது முழுக்கு நாம் முக்தி பெற. இதுதான் சங்கல்பம். உறுதியான எண்ணத்திற்குப் பெயர்தான் சங்கல்பம்.

பாரதி, நாட்டு மக்களின் சார்பில் ஒரு சங்கல்பம் செய்து, அது பலித்தது என்று தலையங்கத்தில் எழுதுகிறான்:

“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம். சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்.”

புறந்தூய்மை நீரான் அமையும் என்னும் குறள் இங்கே நினைவுக்கு வருகிறதல்லவா? எங்கள் தமிழாசிரியர் சொல்வார், ‘குறளைப் படிக்கும்போது, குறளாசிரியரின் குரலைக் கேளுங்கள்,’ என்பார். இந்தக் குறளைப் படிக்கும்போது ‘நீரான்' என்றுதான் இருக்கிறது. ஆனால், அவர் குரலைக் கேட்கும்போது அது ‘நீரானே’ என்றுதான் ஒலிக்கிறது! ஆம், நீரால்தான் உடல் சுத்தமாகும். அறம் சார்ந்த சத்தியத்தால் மட்டுமே மனம் தூய்மையாகும். அப்படி பாரதி கேட்டதால்தான் இப்படி எழுதியிருக்கிறான்.

சங்கல்பத்தோடேயே ஒரு பிரார்த்தனையும் வருகிறது.

 ‘அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்

உச்சத்திற் கொண்டாரடி – கிளியே

ஊமைச் சனங்களடி’

 என்று அவன் வாழ்ந்த காலத்து இந்திய மக்களின் அவல நிலையைப் படம்பிடித்தானல்லவா? அவர்களுக்காக தீபாவளி நன்னாளில் வேண்டுகிறான்:

 “தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.”

 நாமெல்லோருமே அன்றாடம் எழுந்து படுக்கையை விட்டுப் பதறி எழுவதற்கு முன்னால் நாடு நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நம் நெஞ்சம் தெளிவாக, ஒளிமயமாக, தினந்தினம் தீபாவளியாக இருக்கும். நம்முடைய நலம் என்பது, முழுக்க முழுக்க நாட்டின் நலனைச் சார்ந்தே இருக்கிறது என்பதை மகாகவி பலவிதங்களில் நமக்கு உணர்த்தினான்.

 உப்பு, புளி, மிளகாய்க்கே உத்தரவாதம் இல்லாத காலத்தில், உப்பரிகையில் ஒரு ராஜகுமாரன் இடுப்பில் கைகளை வைத்து நிற்பது போல, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!” என்றல்லவா பாடினான்!

சுதந்திரம் எப்போது வரும்? வந்துவிட்டது என்று நம்பினால்தான்! அந்த நம்பிக்கைதான் அதை வருவிப்பதற்கான முறையில் நம்மைச் செயல்பட வைக்கும். தீபாவளிக்குப் பராசக்தி தந்த பரிசாக சுதந்திரத்தைக் கருதுகிறான் பாருங்கள்:

“நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.
பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை
கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள். நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து,  நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.”

 

ஆனந்தமயமான நேரத்தில், அதில் மூழ்கிவிடாமல் ஓர் எச்சரிக்கையும் தருகிறான். சுதந்திரம் என்பது ஒரு பேறு. அதைப் பெற்றுவிட்டோம். ஆனால் அதை நிர்வகிக்க வேண்டுமென்றால், அதற்கு முக்கியமான ஒரு மனநிலை தேவைப்படுகிறது. அதன் பெயர்தான் பொறுப்புணர்ச்சி.

“சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.”

 

இன்னும் எத்தனைக் காலம் மத்தாப்புக் கொளுத்திக்கொண்டு மகிழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம்? எதிரே இருக்கும் கடமைகளை, சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? சுதந்திரம் வந்ததால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடாது. நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புதான் சுதந்திரம். தினந்தோறும் புதுப்பித்துக் கொள்ளவேண்டிய தெய்வதம்தான் சுதந்திரம். அதைத்தான் சொல்கிறான்:

 “எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராட்சதர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள். அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை அழித்து விடாமையால் அவன் மறுபடியும் தளிர்க்கத் தொடங்குகிறான். ஆதலால் நாம் இனியேனும் நரகாசுரனுடைய மர்ம ஸ்தலத்தை நன்றாக அறிந்து அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.”

 தொடர்ந்து உழைக்க வேண்டும். பொறுப்புடன் வாழவேண்டும். இல்லையென்றால் வென்ற சுதந்திரத்தைத் தோற்று விடுவோம். சரி, நரகாசுரனின் மர்மஸ்தானம் என்று எதைக் குறிப்பிடுகிறான் பாரதி?

 “தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் ஈசுவரத் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் எவ்வாறு ஒழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?”

 வார்த்தையைக் கவனியுங்கள்! ‘ஈசுவரத் துரோகி!’ இன்றைக்கு இந்தக் கருத்தை எப்படிப் புரிந்து கொள்வது? வெளிநாட்டுப் பொருட்களை வாங்காதீர்கள் என்றா சொல்வது? அப்படியில்லை, “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?” என்று மிகவும் ஆதங்கப் பட்டானே! அந்த அடிமையின் மோகம் நமக்கு இன்னும் தீரவில்லை. மிகச் சிறிய எடுத்துக்காட்டொன்றைச் சொல்கிறேன். காலைச் சிற்றுண்டிக்குச் செவ்வரிசி அவல் என்றால் நமக்கு இளப்பமாக இருக்கிறது. கெல்லோக்ஸ் கார்ன்ப்ஃளேக்ஸ் என்றால் ஏற்றமாக இருக்கிறது. கொய்யா கசக்கிறது; ஆப்பிள் இனிக்கிறது. இப்படி எத்தனையோ!

 “முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்

பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்

என்ன கூறி மற்று எங்கண் உணர்த்துவேன்

இங்கிவர்க்கென் உள்ளம் எரிவதே!”

 என்று பொங்கிச் சொன்னானே, அது கற்றவர்கள், படித்தவர்கள் காதில் இன்னும் விழவில்லை. நம் நாட்டின் மேன்மைகள் என்னென்ன, அதன் உண்மையான வரலாறு என்ன, இன்றைய கீழ்மைகள் என்ன, அவற்றுக்கான தீர்வு நம்முடைய பண்டைய காலத்தில் எங்கே இருக்கிறது என்பனவற்றைக் கற்பதே கண்ணைத் திறக்கும் கல்வியாகும்.

 அந்தக் கல்விதான் தேசம் என்பது மண்ணல்ல, தெய்வம் என்பது கல்லல்ல, தாயென்பவள் வெறும் பெண்ணல்ல என்பதை நமக்கு வெட்ட வெளிச்சமாக்கும். அப்போதுதான், “நாமிருக்கும் நாடு நமது” என்னும் மகாகவி வாக்கின் மகத்துவத்தை நாமறிவோம். நாடும் நாமும் ஒருவர்க்கொருவர் உயிரான சொந்தம் என்பதை உணரும் போதில்தான் நாம் உண்மையான இந்தியக் குடிமகனாக விழித்தெழுவோம். அன்றைக்குத்தான்,

 “பாரத நாடு பார்க்கெலாம் திலகம்

நீர் அதன் புதல்வர்!! இந் நினைவகற்றாதீர்!”

 என்னும் மந்திரச் சொற்கள் நமக்கு விளங்கும்.

இவ்விதம், நாட்டின் மேன்மையை உணர்ந்து, நம் அன்றாட வாழ்வில் அறவழியை நாட்டி, ஊக்கத்துடன் கடமைகளைச் செய்து, ஆட்டமும் பாட்டமுமாய் ஆனந்தமாக வாழ்வதுதான் பாரதி சுட்டிக் காட்டும் தீபாவளிக் கொண்டாட்டம்.

 வாழ்க பாரதம்! வாழ்க பாரதி! தொடர்க தீபாவளி!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com